ஈழப் போர்களின் வரலாற்றிலேயே, நான்காவது கட்ட ஈழப்போர் தான், மிகத் தீவிரமான – மோசமான போர். ஐந்து கட்டங்களாக – சுமார் 30 ஆண்டுகளாக – அரசபடைகளுக்கு எதிராக ஆயுதப்போரை நடத்திய விடுதலைப் புலிகளை முற்றாவே இராணுவ ரீதியாகத் தோற்கடித்த போர் அது. இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்புகளையுமே ஒன்றுவிடாமல் பெயர்த்தெறிந்த போர். இந்தப் போரில், இருதரப்பும் குறுகிய காலத்தில் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.

இராணுவத் தலைமையகம் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு அண்மையில் வழங்கிய புள்ளிவிபரங்களின்படி, இராணுவத் தரப்பில் 217 அதிகாரிகளும், 5527 படையினருமாக மொத்தம் 5744 படையினர் ஈழப்போர்-4 இல் கொல்லப்பட்டனர். மேலும் 10 அதிகாரிகளும், 93 படையினருமாக மொத்தம் 103 இராணுவத்தினர் இந்தக் காலப்பகுதியில் காணாமற் போயினர். காணாமற்போனவர்களையும் சேர்த்து, ஈழப்போர்-4 இல் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் தொகை, 5847 ஆகும். இந்த மூன்று ஆண்டுகாலப் போரில், 158 அதிகாரிகளும், 18,120 படையினருமாக மொத்தம் 18,638 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

soosai_2009

தனது விரிவான ஆய்வில்,

கடற்படை தரப்பில், ஈழப்போர்-4 இல், 210 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 56 கடற்படையினர் காணாமற்போயினர். காணாமற்போனவர்கள் உயிருடன் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதால், கடற்படை தரப்பில், நான்காவது கட்ட ஈழப்போரில், 266 பேர் இழக்கப்பட்டனர். இதைவிட, இந்தப் போரில் 64 கடற்படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 54பேரும் ஓய்வுபெற்றுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான்காவது கட்ட ஈழப்போரில், விமானப்படை தரப்பில், 37 படையினர் கொல்லப்பட்டனர், 36 பேர் படுகாயமடைந்தனர். இந்தப் புள்ளிவிபரத்தின்படி, ஈழப்போர் 4இல் கொல்லப்பட்ட, காணாமற்போன முப்படையினரதும் எண்ணிக்கை 6150 ஆகும். அதேவேளை, முப்படைகளையும் சேர்ந்த 18,738 பேர் நான்காவது கட்ட ஈழப்போரில் படுகாயமடைந்தனர். இந்த மூன்றாண்டு காலப் போரில், படைத்தரப்பின் மரணமானோர் தொகைக்கும், படுகாயமடைந்தோர் தொகைக்கும் இடையிலான விகிதாசாரம் கடுமையாக மாற்றமடைந்திருந்ததை அவதானிக்கலாம்.

சரியாக 1இற்கு 3 என்ற விகிதத்தில் இது இருந்தது.

முதலாம் கட்ட ஈழப்போரில், படுகாயமுற்ற படையினரை விட மரணமானோர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமாக இருந்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போரில், கொல்லப்பட்ட படையினரை விட படுகாயமுற்ற படையினர் தொகை, கிட்டத்தட்ட பாதியாக இருந்தது.

மூன்றாவது கட்ட ஈழப்போரில், கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கையும், படுகாயமுற்ற படையினரின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தன.

ஆனால்,

நான்காவது கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட படையினரை விட மூன்று மடங்கு அதிகமான படையினர் படுகாயமடைந்தனர். இந்தப் புள்ளிவிபரங்களில் படுகாயம் என்று கூறப்பட்டது, பெரும்பாலும் செயற்பாட்டு நிலையை இழந்த- உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்த படையினர் தான்.

கடந்தவாரம், நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசல முதியான்சலாகே ஞானசிறி என்ற இராணுவச் சிப்பாய், மரணமானார். இவர் 1997 ஜுன் 19ம் திகதி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது ஓமந்தைப் பகுதியில் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர். முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக அவர், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணமாகியுள்ளார். போரில் படுகாயமடைந்த படையினரில் கணிசமானோர் இவ்வாறு செயலற்ற நிலைக்குச் சென்றுள்ளனர். இங்கு படுகாயமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் மீளவும் போர் முனைக்குத் திரும்ப முடியாதவர்கள் தான். நான்காவது கட்ட ஈழப்போரில், மரணமான படையினரை விட காயமுற்ற படையினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்குக் காரணம், புலிகளின் ஆட்டிலறிப் பலம் தான்.

புலிகள் நான்காவது கட்ட ஈழப்போரில் பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் படையினருக்கு கணிசமான ஆளணி இழப்புகளை ஏற்படுத்தியது. நான்கு கட்ட ஈழப்போர்களிலுமே, படைத்தரப்புக்கு மோசமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது, ஈழப்போர் -3 தான். ஆனால், கொல்லப்பட்ட, காயமுற்ற, காணாமற்போன படையினரின் மொத்த தொகை என்று வரும் போது, ஈழப்போர்-3 இற்கும், ஈழப்போர்-4 இற்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. சமமாகவே உள்ளது. (ஈழப்போர் -3இல், 25,732 படையினர் கொல்லப்பட்டு, படுகாயமடைந்து காணாமற் போயுள்ளனர், ஈழப்போர் -4இல் 24,888 படையினர் கொல்லப்பட்டு. காணாமற்போய், படுகாயமடைந்தனர்.)

ஆனால்,

மூன்றாவது கட்ட ஈழப்போர் 7 ஆண்டுகள் வரை நீடித்தது.

நான்காவது கட்ட ஈழப்போர் மூன்று ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை.

சரியாக சொல்வதானால், 2 ஆண்டுகள் 10 மாதங்கள் தான் இந்தப் போர் நடந்தது.

போர் நடந்த காலப்பகுதியை வைத்து ஒப்பிட்டால், ஈழப்போர்-4 மோசமானது, அழிவுகள் நிறைந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

அதேவேளை, போர்,

முடிவுக்கு வந்த பின்னர், 2009 மே மாதம் 22ம் திகதி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அளித்த பேட்டி ஒன்றில், 2006 ஜுலையில் மாவிலாறில் போர் தொடங்கியதில் இருந்து முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை என மொத்தம் 6261 படையினர் கொல்லப்பட்டதாகவும், 29,551 படையினர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, நான்காவது கட்ட ஈழப்போரில், 1க்கு 5 என்ற விகிதத்தில் படையினரின் மரணத்துக்கும், காயத்துக்கும் இடையிலான விகிதாசாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இராணுவத் தலைமையகம் அண்மையில் கொடுத்திருந்த புள்ளிவிபரங்களின்படி, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 829 அதிகாரிகளும், 18,835 படையினருமாக மொத்தம், 19,664 படையினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தனர். மேலும், 123 அதிகாரிகளும், 3308 படையினருமாக, மொத்தம் 3431 இராணுவத்தினர் இந்தக் காலப்பகுதியில் காணாமற்போயினர்.

ஆக,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை இராணுவம் மட்டும் 23,095 பேரை இழந்துள்ளது.

மேலும், இந்தக் காலப்பகுதியில், 1096 அதிகாரிகளும், 32,627 படையினருமாக, மொத்தம் 33,723 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

கடற்படை தரப்பில் ஒட்டுமொத்தப் போரிலும், கொல்லப்பட்டவர்கள் 717 பேர். காணாமற்போனவர்கள் 446 பேர். ஆக மொத்தம், 1163 கடற்படையினரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசதரப்பு இழந்துள்ளது. மேலும் 441 கடற்படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 352 பேர் தொடர்ந்து சேவையாற்ற முடியாதளவுக்கு காயமுற்றதால், ஓய்வில் அனுப்பப்பட்டனர்.

இலங்கை விமானப்படை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுமொத்தப் போரிலும், 435 பேரை இழந்த அதேவேளை, 234 விமானப்படையினர் படுகாயமடைந்தனர். இதன்படி, முப்படையினர் தரப்பிலுமாக, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 24,693 படையினர் கொல்லப்பட்டனர், காணாமற்போயினர். மேலும் முப்படைகளையும் சேர்ந்த 34,398 படையினர் படுகாயமடைந்தனர். இராணுவத் தலைமையகம் கொடுத்த இந்தப் புள்ளிவிபரங்கள் முற்றிலும் சரியானது என்று கூறமுடியாது. ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசதரப்பில் வெளியிடப்பட்ட மேலும் பல புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில், இதில் வேறுபாடுகள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை போர் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அளித்த பேட்டியில், 1981ம் ஆண்டு தொடக்கம் 2009 மே 19 வரை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுமொத்தப் போரிலும், 23,790 படையினர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புள்ளி விபரத்துக்கும், இராணுவத் தலைமையகம் கொடுத்த புள்ளிவிபரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டின் மொத்த எண்ணிக்கை சுமார் 900 பேராகும். அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச, முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப்படை என்பனவற்றைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியிருந்தார். ஆனால், இராணுவத் தலைமையக புள்ளிவிபரம் தனியே முப்படைகளையும் தான் உள்ளடக்கியது.

போரில் இறந்த பொலிஸ், சிவில் பொதுகாப்புப் படையினரையும் இராணுவத் தலைமையக கணக்குடன் சேர்த்தால், போரில் கொல்லப்பட்ட படைத்தரப்பினரின் எண்ணிக்கை அதிகமாகும். ஏனென்றால், போரில் பொலிஸ் தரப்பு கணிசமான இழப்புகளை சந்தித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை மட்டும், 462 பேரை இழந்துள்ளதாகவும், 792 அதிரடிப்படையினர் படுகாயமுற்றதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை இராணுவத் தலைமையக புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, போர் முடிவுக்கு வந்த பின்னர், அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட ஒரு புள்ளிவிபரத்தின்படி, இலங்கை இராணுவம் 2008இல் 2174 பேரையும், 2009இல், 2350 பேரையும் போரில் இழந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் 113 பேர் காணாமற்போனதாகவும் அவர் கூறியிருந்தார்.

சரத் பொன்சேகாவின் இந்தப் புள்ளிவிபரத்தின்படி 2009இல் வெறும் நான்கரை மாதங்களில், 235 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது போரின் இறுதிக்கட்டம் எந்தளவுக்கு கடுமையானதாகவும், இழப்புகள் நிறைந்த்தாகவும், இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதாவது 2008 இல், மாதம் ஒன்றுக்கு 181 படையினர் வீதம் கொல்லப்பட்ட அதேவேளை, 2009இல், மாதம் ஒன்றுக்கு 522 படையினர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி 2009ம் ஆண்டில், போரின் கடைசி 138 நாட்களில், நாளொன்றுக்கு சராசரியாக 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சு Humanitarian Operation – Factual Analysis (July 2006–May 2009) என்ற அறிக்கையை 2011 ஜுலையில் வெளியிட்டது. அதில், ஒட்டுமொத்தப் போரிலும், 19,282 படையினர் கொல்லப்பட்டதாகவும், 2609 படையினர் காணாமற் போனதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டமொத்தப் போரிலும் கொல்லப்பட்ட படையினர், 21,891 தான் கொல்லப்பட்டுள்ளனர். இது கோத்தாபய ராஜபக்ச கூறிய கணக்கை விடவும், சுமார் 1900 குறைவாகும்.அதேவேளை, இந்த அறிக்கையில், ஒட்டுமொத்தப் போரிலும், 82,104 படையினர் காயமுற்றதாக கூறப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த எண்ணிக்கை, காயங்கள் தொடர்பாக அரச அல்லது படைத்தரப்பில் வெளியிடப்பட்ட எந்தவொரு அறிக்கையை விடவும் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

மொத்தத்தில், மூன்று தசாப்த காலப்போரில் அரசபடைகள் மிகப்பெரியளவு இழப்புகளை சந்தித்தன. அதேவேளை விடுதலைப் புலிகளும், கடுமை சேதங்களை எதிர்கொண்டனர். ஆனால், இறுதிப்போரில், புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதால், அவர்களுடனேயே அதுபற்றிய விபரங்கள் அழிந்து போனதால், புலிகள் தரப்பு இழப்பு என்ன என்ற துல்லியமான விபரங்கள் இல்லை. அரசதரப்பு எல்லா வகையிலும் துல்லியமான போர் இழப்பு விபரத்தைக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்தாலும், அதை சரியாக செய்யவில்லை என்பதை, அவ்வப்போது வெளியான மாறுபட்ட புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

போர் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்ட போதும், இந்தப் போர் தொடர்பான சேதங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச அரசதரப்புத் தயாராக இல்லை என்பதையே, இந்த மாறுபட்ட புள்ளிவிபரங்கள் உணர்த்தி நிற்கின்றன.

சுபத்ரா