தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும்.
கடந்து செல்லும் இந்த வருடத்தில் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட 46/1 என்ற தீர்மானம் என்பது மேற்குலகத்தின் அனுசரணையுடன் அவர்களினால் திரட்டப்பட்ட நாடுகளின் ஆதரவுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான விவகாரம் காத்திரமாக இடம்பெற்றுள்ளதுடன், அதற்கான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற அரசியல் தீர்வை இந்தியா புகுத்தியுள்ளதுடன், அதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவும் செய்துள்ளது.

புலத்தில் இடம்பெற்ற இந்த விவகாரங்களில் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நிலையை நாம் எட்டவில்லை என்பதே உண்மையானது.

விமர்சனங்களை முன்வைத்துவிட்டு கடந்து சென்றுள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் தவறவிடுவதிலும் அவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

எனினும் இந்தியாவின் அழுத்தத்துடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதில் உள்ள சொற்ப அதிகாரங்களையாவது தமிழ் மக்கள் பெறுவதன் மூலம், எமது தாயகத்தின் இருப்பை உறுதிப்படுத்தத் தேவையான சிறிய பணியையாவது முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை தாயகத்தில் உள்ள கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021அதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதுடன், வரலாற்றில் முதல் தடவையாக மலையகம், மேல்மாகாணம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் என்பன ஒன்று சேர்ந்துள்ளதானது, கடந்து சென்ற ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால் அதில் புலம்பெயர் அமைப்புக்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடும்படியாக இல்லை என்பதுடன், அதனைச் சீர்குலைக்கும் பணிகளை புலம்பெயர் சில அமைப்புக்களும், ஊடகங்களும் செய்வது என்பது 2021 இல் நாம் சந்தித்த துன்பமாகும்.

தைத்திருநாளை மரபுரிமை வாரம் எனப் பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசம் காத்திரமான நகர்வை மேற்கொண்டிருந்தாலும், அது ஈழத்தமிழர்களின் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் அது. எமது மக்களின் அரசியலில் அது காத்திரமானதல்ல.

கனடாவில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை கற்கைவாரம் என்பது கனடாவில் வாழும் தமிழ் மக்களினாலும், அமைப்புக்களினாலும், அந்த நாட்டின் அரசில் அங்கம்வகிக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாகும். அது ஒரு காத்திரமான நிகழ்வாகவே இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அதற்கு அப்பால், 2021 ஆம் ஆண்டு கடந்து சென்ற நினைவு நாட்களானாலும், தமிழ் இனத்தின் முக்கியமான நிகழ்வுகளானாலும், பல அமைப்புக்கள் வழமைபோல அறிக்கைகளை வெளியிட்டன. புலம்பெயர் தேசத்தில் இயங்கும் அமைப்புக்கள் அனுசரணை வழங்கும் அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் வழமைபோல அறிக்கைகளையும், சமூகவலைத்தளங்களிலும் தமது பதிவுகளை வெளியிட்டனர். அதற்கு அப்பால் இலங்கை அரசு எந்தவிதமான அழுத்தங்களையும் அவர்களிடம் இருந்து எதிர்கொள்ளவில்லை.

தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021எமது போராட்டத்தைத் தற்போதும் உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கும், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தாயகத்தில் தொடர் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆனால் அது தொடர்பில் புலம்பெயர் தேசத்தில் எந்தவிதமான காத்திரமான செயற்பாடுகளையும் இந்த வருடத்தில் காணமுடியவில்லை.

அங்கு இருக்கும் அமைப்புக்களை ஒருங்கிணைத்து அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லும் பாரிய பொறுப்பு ஒன்று புலம்பெயர் தேசங்களில் வழும் தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை அல்லது அதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் எட்டப்படவில்லை என்பது வருத்தமானதே.

இலங்கை தொடர்பில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பூகோள மாற்றத்தை பயன்படுத்திக் கொள்வதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வழமைபோல காலத்தை தவறவிட்டதாகவே இந்த ஆண்டும் கடந்து சென்றுள்ளது.

ஒரு சீரான மற்றும் தெளிவான வெளிவிவகாரக் கொள்கைகள் அற்ற நிலையில் ஒவ்வொரு தேசங்களிலும் உள்ள அமைப்புக்களும், அதன் தலைவர்களும் தாம் வாழும் நாட்டில் தமது அமைப்புக்களையும், தமது நலன்களையும் பாதுகாப்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கைகள், விமர்சனங்கள் என்பன தமிழ் இனம் ஒரு தோல்விகண்ட வெளிவிகாரக் கொள்கையுடன் பயணிப்பதையே எடுத்துக் காண்பித்துள்ளது.

மிகப்பெரும் தேசங்கள் கூட எல்லா நாடுகளையும் அனுசரித்துப் பகைவர்களைத் தேடாது நண்பர்களைத் தேடி வரும் இந்த காலகட்டத்தில் எமது அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் தமிழ் இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யாத நாடுகளுக்காக பிராந்திய வல்லரசுகளை எதிர்க்கத் துணிவது என்பது தமிழினத்திற்கான அழிவை அவர்களே தேடித்தருவதாகவே இந்த ஆண்டில் நாம் பார்த்து நின்றோம்.

images 9 புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021ம் இணைந்துள்ளது - வேல்ஸ் இல் இருந்து அருஸ்விடுதலைப்போரின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, அடுத்த தலைமுறை அதனை நகர்த்த வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதில் ஏற்பட்ட தடைகளை ஒரளவு தணித்த வருடமாக நாம் இந்த வருடத்தை குறித்துக் கொள்ள முடியும்.

காத்திரமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் இளைய சமூகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதை நாம் இந்த வருடத்தில் அதிகம் கணக்கூடியதாக இருப்பதே எமக்கு ஆறுதல் தரும் விடயமாகும்.

அதற்கு அப்பால் புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் ஆவல் என்பது இந்த வருடத்திலும் கனவாகவே கடந்து போயுள்ளது. அது மட்டுமல்லாது, புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் எதனையும் முன்நகர்த்த முடியவில்லை என்பதும் வேதனையானது.

இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எமக்கு வேதனையைத் தருவதாக இருந்தாலும், அதனை உள்வாங்குவதன் மூலம் தான் அடுத்த வருடத்தில் நாம் என்ன நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவைப் பெறமுடியும். உண்மை என்பது கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் தான் நாம் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

– வேல்ஸ் இல் இருந்து அருஸ்


தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன்

தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என வர்ணிக்கப் பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டதைப் போல கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது. இருந்த போதிலும், இறுதியில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇதில் பெரும்பாலும் எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 11 கட்சித் தலைவர்களினதும் சம்மதத்துடன், வரைவு தற்போது இறுதியாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. எதிர்வரும் புதன்கிழமை இது கைச்சாத்திடப்பட்ட பின்னர் வார இறுதியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது அனுப்பி வைக்கப்படும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைந்து நடத்துவது என்பவற்றை உள்ளடக்கிய கோரிக்கைகளுடனான ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு கூட்டாக அனுப்பி வைப்பதை நோக்கமாகக் கொண்டே ரெலோ அமைப்பினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நவம்பர் முதல்வாரத்தில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இரண்டாவது சந்திப்பு இம்மாத முற்பகுதியில் கொழும்பில் இடம்பெற்றது. செவ்வாய்கிழமை மூன்றாவது சந்திப்பு இடம்பெற்றது. ரெலோ அமைப்பின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் இதில் இறுதியாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தமிழரசுக் கட்சி தனியாக மற்றொரு ஆவணத்தை முன்வைத்ததையடுத்து முரண்பாடுகள் உருவாகியது.

இறுதியில் இரண்டு ஆவணங்களையும் பரிசீலித்து இரண்டில் உள்ளவைகளையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் கேட்பதா?’ என முன்வைக்கப்பட்ட கேள்விகளையடுத்தே இந்த மாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறான மாற்றம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியே வலியுறுத்தியது.

தமிழ்க் கட்சிகளின் நகர்வு’13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்’ என்பதே ஆவணத்தின் தலைப்பாக முன்னர் இருந்தது. தற்போது அது, ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது. புதிய வரைவு தயாரிக்கப்படும் போது அதன் நோக்கம் உள்ளடக்கம் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைவாகவே இருக்கின்றது. இந்த வரைவை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது கைச்சாத்திடப்படும் என இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

செவ்வாய்கிழமை சந்திப்பில் உருவான முரண்பாடுகளையடுத்து புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. சிறிகாந்தா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகிய மூவரும் இன்றைய தினம் இரவே வரைவை இறுதியாக்கி, கட்சிகளின தலைவர்களுடைய பரிசீலனைக்காக இதனை அனுப்பிவைத்தார்கள்.

அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைவு தற்போது கட்சித் தலைவர்களின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளது. மேலும் திருத்தங்கள் இல்லையெனில வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்கள் இதில் கைச்சாத்திடுவார்கள் எனவும், அடுத்த ஒரு – இரு தினங்களில் இது இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கை என்ன என்பதை திட்டவட்டமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு தெரியப்படுத்தினால் மட்டுமே இவ்விடயத்தில் தம்மால் தலையிட்டு, கொழும்புக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும்’ எனவும் இந்தியத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்தே பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை ரெலோ முன்னெடுத்திருந்தது. ரெலோவின் முன்னெடுப்பில் தாமும் பின்னால் செல்வதா என்ற கௌரவப் பிரச்சினை தமிழரசுக்கு. அதனால், முன்னைய கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், சில திருத்தங்களுடன் தமிழரசுக் கட்சி நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது.

புதிய அரசியலமைப்பு ஒன்றைக்கொண்டுவருவதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலையும், மாகாண சபைகளையும் இல்லாதொழிப்பதற்கான திட்டத்துடன் கோட்டாபய ராஜபக்ச அரசு செயற்பட்டுவரும் நிலையில், இந்தியாவை அவசரமாக தலையிடச் செய்வதற்கான முயற்சிதான் இது.

13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்றது என்ற நிலையிலும், அது இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலமாகக் கொண்டுவரப்பட்டது என்ற முறையிலும், இவ்விடயத்தில் தலையிடுவதற்கான உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்ற நிலையில்தான் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய உடன்படிக்கைஇந்தியாவைப் பொறுத்தவரையிலும், இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை அது எதிர்பார்த்திருந்தது. இலங்கை – இந்திய உடன்படிக்கையைப் பயன்படுத்தி இவ்விடயத்தில் தலையிடுவது, சட்டரீதியான ஒன்றாக அமையும் என புதுடில்லியும் கருதுவதாகத் தெரிகின்றது.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த முயற்சியில் பல தடைகளை அவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க மனப்பான்மையால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. அதேபோல, 13 க்குள் தீர்வை முடக்கும் சதி எனவும், இந்தியாவிடம் மண்டியிடும் நிலை எனவும் இந்த முயற்சி விமர்சிக்கப்பட்டது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் சார்பில் அதற்குத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

11 தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகள் இணைந்திருப்பது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் அனுப்பிவைக்கப் போகும் கடிதம் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றியமைக்குமா?