இனிவரும் 50 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீன-அமெரிக்க போட்டி கடும் இறுக்கமடைவதை யாராலும் தடுக்கமுடியாது.

இந்த சீன- அமெரிக்க போட்டியில் இலங்கையும் சிக்குண்டுள்ளது.

இதில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற ஒரு கேள்வி இயல்பாகவே எழுகிறது.

புவிசார் நலன்,போரியல் பார்வையினூடாக எப்படி உலக ஒழுங்கின் இந்த சதுரங்க ஆட்டத்தை அணுகவேண்டும் என்பதை விளக்க முனைவதே இந்த பதிவு.

• பதிவின் அணுகுமுறை

சீன-அமெரிக்க போட்டியில் வெறுமனே இலங்கை மட்டும் சம்பந்தப்படவில்லை. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில் QUAD,AUKUS, Australia-India-Japan Strategic Triangle போன்ற பல பக்கங்கள் உண்டு.

நான் அந்த பக்கங்களை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை பக்கத்தை மட்டும் எடுத்திருக்கிறேன்.

அப்பொழுதுதான் இந்த சதுரங்க ஆட்டத்தை எளிமையாக உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.

• இந்த சதுரங்க ஆட்டத்தின் ஆட்டக்காரர்கள்

•2009 இற்கு முன்பு வரை

தமிழீழ பிரச்சினையை பொறுத்தவரை, 2009 வரை இந்த சதுரங்க ஆட்டத்தில் மூன்று தரப்பு பிரதான ஆட்டக்கார்களாக இருந்தார்கள்.

1. விடுதலை புலிகள்
2. இலங்கை
3. இந்தியா

இடைக்கிடையே மேற்குலகும் பங்குபற்றியது.

விடுதலை புலிகள் களத்தில் இருந்தவரை, இந்த சதுரங்க ஆட்டத்தில் தமிழர்களுக்கு எது வேண்டும் என்பதை ஆணித்தரமாக கேட்கக்கூடிய வகையில் இருந்தார்கள். மற்றைய ஆட்டக்காரர்கள் விடுதலை புலிகளை புறக்கணிக்க முடியாதவகையில் புலிகள் தங்களது இராணுவ ஆற்றலை வைத்திருந்தார்கள்.

•2009 இற்கு பிறகு

2009 இற்கு பிறகு, இந்த சதுரங்க ஆட்டத்தில் தமிழீழ மக்களிடமிருந்து ஆட்டக்காரர் என்ற பதவி பிடுங்கப்பட்டு அகற்றப்பட்டாகிவிட்டது. இன்று இந்த சதுரங்க ஆட்டத்தை பொறுத்தவரை தமிழீழ மக்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே.

அப்படியானால் இன்று இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடும் ஆட்டக்கார்கள் யார்?

1. அமெரிக்கா
2. இந்தியா
3. சீனா
4. இலங்கை

தமிழீழ மக்கள் பார்வையாளர் மட்டுமே. ஆட்டக்காரர் அல்ல.

இனி ஒவ்வொரு ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும் எப்படியிருக்கும் என்பதை வரிசையாக பார்ப்போம்.

• அதற்கு முன் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஆட்டவிதி

“There are no permanent friends or enemies but permanent interests in international relations.

இந்த உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. நமது நலன் மட்டுமே என்றுமே நிரந்தரமானது. ஒவ்வொரு நகர்வும் நமது நலனை நோக்கியதாகவே இருக்கவேண்டும்.”

உலக ஒழுங்கின் சகல ஆட்டக்காரர்களும் இதை மனதில் வைத்து மட்டும்தான் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடுகிறார்கள்.

தமிழர்கள் நீங்கள் குறுக்கே பாய்ந்து, கண்ணீர் கசிந்து, அறம், உயிர்நேயம் என டயலாக் பேசிக்கொண்டிருந்தால் உலக ஒழுங்கு உங்களை பார்த்து சிரித்துவிட்டு கடந்துபோய்விடும்.

இந்த சதுரங்க ஆட்டத்தின் விதியை உங்களால் மாற்றமுடியாது. பல நூற்றாண்டுகளாக இந்த சதுரங்க ஆட்டம் இப்படித்தான் ஆடப்படுகிறது.

• அமெரிக்கா

அமெரிக்காவின் மூலோபாயம் என்பது என்ன?
அமெரிக்காவின் மூலோபாயம் ( Grand Strategy) என்பது எப்போழுதுமே ஒன்றுதான்.

The central aim of U.S grand strategy is to preserve its current position for as long as possible.

அதாவது உலகின் super power என்ற அதனது நிலையை தக்கவைத்தல்.

அதன்படி அமெரிக்காவின் super power நிலையை அசைக்ககூடிய வகையில் சீனா வளருவதை அமெரிக்கா அனுமதிக்காது.

சீனா வளருவதை தடுப்பதற்காக உதவகூடிய சகல நாடுகளையுமே அமெரிக்கா தனது நண்பனாகவே அணுகும்.

அதேபோல் அதற்கு எதிர்நிலையில் இருக்கும் நாடுகளை எதிரியாக அணுகும்.

• சீனா

சீனாவிற்கு Malacca Dilemma என்ற சிக்கல் இருக்கிறது.

இதைப்பற்றி ‘அமெரிக்காவை வீழ்த்துவதற்கான சீனாவின் வியூகம்- பகுதி 5 ‘ எனும் குறுந்தொடரில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை முற்றிலும் அகற்றிவிட சீனா முயற்சிக்கிறது.

இதிலிருந்து மீள்வதற்கான சீனாவின் பல நகர்வுகளில் ஒன்றுதான் String of Pearls.

இந்து மா சமுத்திரத்தில் தனக்கான நட்புநாடுகளை உருவாக்கி, அங்கு துறைமுகங்களை கட்டுகிறது.அந்த துறைமுகங்கள் சீனாவின் கடற்படை தேவைக்கும் பயன்படக்கூடியவாறே கட்டப்படுகிறது (dual-use port projects).

இந்த புள்ளியில்தான் இலங்கையும் வருகிறது.

சீனாவின் முத்துமணி் மாலையில் (String of Pearls) இலங்கையும் ஒரு முத்துமணி.

• இந்தியா

சோவியத்-அமெரிக்கா Cold War காலகட்டங்களில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து இருந்தது.

இலங்கையை இந்தியாவின் செல்வாக்கிற்குள் கொண்டுவருவதற்காக, 1980 களில் உருவான தமிழ் போராளி குழுக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்தது.

இதன் மூலம் இந்தியா சொன்ன செய்தி இதுதான். தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை எடுத்தால், இலங்கையில் உருவான ஆயுத போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உனக்கு தலைவலி தருவேன்.

அதேநேரம் இலங்கையில் தமிழீழம் உருவாக இந்தியா அனுமதிக்காது. ஏன் இலங்கையில் தமிழீழம் உருவாக அனுமதிக்காது என்பது தனியாக எழுத வேண்டிய கட்டுரை.

அதன்பின்னர் நடந்ததெல்லாம் நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்.

இன்றைய சீனா-அமெரிக்க போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இது தெற்காசிய பிராந்தியத்தில் வேறொரு பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவை அகற்ற முயல்கிறது. அமெரிக்கா பல நாடுகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி containment strategy எனும் எதிர் நகர்வை செய்கிறது.

இந்த அமெரிக்காவின் எதிர் நகர்வில் மிக முக்கியமான நண்பர்கள் இந்தியாவும்,ஜப்பானும்.

ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை,இராணுவ வலிமையை கொண்ட நாடுகள்.

சீனா அமெரிக்காவிற்கு எதிரான நகர்வுகளை செய்யும்போது, இந்தியாவிற்கும் ஐப்பானிற்கும் எதிரான நகர்வுகளை செய்யவேண்டியது அவசியம்.

இந்தியாவும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சிறுநாடுகளை அதனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கிறது.

• இலங்கையில் மூக்கை நுழைக்க இந்தியாவிற்கு இருக்கும் ஒரே வழி

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தனது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்மக்களின் தொப்புள்குடி உறவாக இருப்பதால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் தார்மீக உரிமை தனக்கு இருப்பதாக வழமைபோல இந்தியா இந்த பிட்டை போடும்.

இந்த ஒரு காரணத்தை காட்டி மட்டுமே இந்தியாவால் நேரடியாக இலங்கையில் தலையிடமுடியும். அதை தவிர்த்து இந்தியா மூக்கை நுழைக்க வேறு வழி கிடையாது.

ஆக எப்பொழுதெல்லாம் இலங்கை தன் கையை விட்டு மீறிபோகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்தியாவிற்கு தமிழர் நலன் மீது ‘திடீர் அன்பு’ வரும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் இந்தியாவின் இந்த ‘திடீர் திடீர் அன்பு மழையில்’ நனைந்து பதிலுக்கு அன்பு மழையை பொழிந்தால் அது உங்களின் கூமுட்டைத்தனம். நீங்கள் உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தை ஆடுவதற்கு லாயக்கில்லாத இனம் என்று அர்த்தம்.

• இலங்கை

இலங்கையின் ராஜதந்திர நகர்வு என்பது சீன-அமெரிக்க போட்டியில் இரு தரப்புக்கும் நண்பனாக இருந்து தப்பிக்க நினைத்தது.

போனவருடம் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் Secretary of State ஆன Mike Pompeo சொன்னதை இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

“Sri Lanka Will Soon Have to Pick a Side in the China-US Rivalry”

சீன-அமெரிக்க போட்டியில் இலங்கை தான் யார் பக்கம் என்பதை முடிவு செய்யவேண்டும் என்று Mike Pompeo கூறினார்.

‘தான் யார் பக்கம்’ என்பதை தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாய நிலை இலங்கைக்கு உருவாகும் என்பதை நான் பல வருடங்களாக பதிவுகளில் சொல்லி வந்திருக்கிறேன்.

• தமிழீழ மக்கள்

நான் மேலே குறிப்பிட்டது போல, 2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் இந்த சதுரங்க ஆட்டத்தில் ஆட்டக்காரர் என்ற பதவியை இழந்துவிட்டார்கள்.

இப்பொழுது வெறும் பார்வையாளர் மட்டுமே.

• இப்பொழுது தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?

மேலே குறிப்பிட்ட நான்கு ஆட்டக்காரர்களும் தங்களுக்குள் மோதி கொள்ளட்டும். நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.

ஏனெனில் தமிழீழ மக்கள் இந்த சீன-அமெரிக்க போட்டியில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்த போட்டியில் சீன,அமெரிக்க,இந்திய நலன்கள் At Stake.

அதாவது யார் இந்த போட்டியில் தோற்றாலும் அவர்களின் நலன்கள்தான் பாதிப்படையுமே தவிர தமிழீழ மக்களின் நலன் அல்ல.

2009 இல் விடுதலை புலிகள் களத்தை விட்டு நீங்கிய பிறகு, தமிழீழ மக்கள் புலிகள் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்திற்கு (Pre- Ltte Era) போயிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நான் மேலே குறிப்பிட்டது போல, இந்த போட்டியில் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான தனது நகர்விற்கு உதவுகிற நாடுகளை நண்பனாக அணுகும். அதற்கு எதிராக உள்ள நாடுகளை எதிரியாக அணுகும்.

ஏதோ ஒரு புள்ளியில் இலங்கையை எதிரியாக அணுகவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு தோன்றலாம். சிலவேளை தோன்றாமல் கூட போகலாம்.

ஒருவேளை இலங்கையை எதிரியாக அணுகவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு தோன்றினால், அவர்களாகவே உங்களிடம் வருவார்கள்.

இந்தியாவும் பம்மிக்கொண்டு அமெரிக்காவின் பின்னால் வரலாம்.

ஆனால் தமிழீழ மக்கள் தாங்களாகவே கேணைத்தனமாக முந்திக்கொண்டு போய் ‘இந்தியா எனக்கு தந்தை தேசம் முந்திரி தேசம்’ என்ற சென்டிமென்ட் பாட்டெல்லாம் பாடக்கூடாது.

தமிழ்நாட்டு தமிழ்மக்கள் மட்டும்தான் தமிழீழ தமிழர்களின் நண்பனே ஒழிய இந்தியா தமிழீழ தமிழர்களின் நண்பன் அல்ல.

உலக ஒழுங்கின் ஆட்டவிதியை திரும்பவும் ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.

There are no permanent friends or enemies but permanent interests in international relations.

மேலேயுள்ள எந்தவொரு ஆட்டக்காரர்களும் உங்களின் மேல் இரக்கம் கொண்டு உங்களை ரட்சிக்க வரப்போவதில்லை.

அவர்களின் நலனுக்கு நீங்கள் தேவையென்பதால் அவர்கள் உங்களை நோக்கி வருவார்கள்.

ஏனெனில் அவர்களின் நலன்தான் At Stake.

தமிழீழ மக்கள் செய்யவேண்டியது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது.

ஏனெனில் நமது நலன் சீன-அமெரிக்க போட்டியில் இழக்கப்போவது ஒன்றுமில்லை.

அமெரிக்காவை வீழ்த்துவதற்கான சீனாவின் வியூகம்- பகுதி 5

• சீனாவிற்கு இருக்கும் Malacca Dilemma சிக்கல்

இந்த ‘Malacca Dilemma’ எனும் சொல்லாடல், 2003 ஆம் ஆண்டில் அன்றைய சீன அதிபர் Hu Jintao வினால் ராஜதந்திர வட்டாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ‘Malacca Dilemma’ எனும் சீனாவின் சிக்கலை நீங்கள் புரிந்து கொண்டால், இந்த நூற்றாண்டில் சீன-அமெரிக்க போட்டி ஏன் இறுக்கமடைவதை தவிர்க்க முடியாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக ஏன் சீனா ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை அகற்றுவதற்கான போரியல் நகர்வை செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

Malacca Dilemma என்பது என்ன?

அதற்கு முதலில் மலாக்கா நீரிணையை (Strait of Malacca) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

• மலாக்கா நீரிணை (Strait of Malacca)

இந்த மலாக்கா நீரிணை மலேசியா, சிங்கப்பூரிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான குறுகலான நீரிணை.

இந்து மா சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் நீரிணை இது.

உலக வர்த்தகத்தின் கடல் வழி போக்குவரத்தின் (world’s seaborne trade) 33% இந்த நீரிணை ஊடாகத்தான் நடக்கிறது. வருடந்தோறும் குறைந்தது 84000 கப்பல்கள் இந்த மலாக்கா நீரிணை ஊடாக செல்கின்றன. 2020 இற்குள் 122000 கப்பல்களாக அதிகரிக்கும் என உலக வங்கி கணிப்பிட்டிருந்தது.

• மலாக்கா நீரிணையை நம்பியிருக்கும் சீனா

சீனா தனக்கு தேவையான எண்ணையில் (crude oil) 60% ஐயும், இயற்கை வாயுவில் (natural gas) 32% ஐயும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

அமெரிக்க பென்டகன் அறிக்கையின்படி, சீனாவின் crude oil இறக்குமதியில் 51% மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே வருகிறது.

அதில் 43% மான எண்ணெய் மத்திய கிழக்கின் Strait of Hormuz ஊடாகவே வருகிறது.

அதே போல் கடல் வழியாக வரும் அதனது எண்ணெயில் 82% Strait of Malacca இனூடாகவே வருகிறது.

குறுகலான Strait of Hormuz உம் Strait of Malacca உம் energy chokepoints ஆக கருதப்படுகின்றன.

இவையிரண்டும் கீழேயுள்ள படத்தில் வட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனாவின் ஒட்டுமொத்த எண்ணெய்,இயற்கை வாயு வழங்கல் பாதையையும் கீழேயுள்ள படத்தில் காணலாம்.

• சீனாவின் Malacca Dilemma எனும் தலைவலி

இன்றைய உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( Global GDP- nominal value) சீனாவின் பங்கு 15%. அமெரிக்காவின் பங்கு கிட்டத்தட்ட 25%.

ஆனால் purchasing power parity (PPP) அளவுகோலின்படி 2014 லேயே , சீனாவின் GDP அமெரிக்காவின் GDP ஐ தாண்டியாகிவிட்டது.

nominal அளவுகோலின்படி, 2031 இற்குள் சீனாவின் GDP அமெரிக்காவின் GDPஐ முந்தலாம் என பரவலாக கருதப்படுகின்றது.

ஒரு Great Power தனது பொருளாதார வலிமையை அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப இராணுவ வலிமையையும் அதிகரிக்கும். இது கட்டாய தேவை.

இது ஏன் கட்டாய தேவை என்பதை பகுதி-3 இல் விளக்கியிருக்கிறேன். அதில் குறிப்பிட்டது போல இந்த International System என்பது அடிப்படையில் ANARCHIC SYSTEM.

ஆக சீனா தன்னைவிட பொருளாதாரத்திலும், இராணுவ வலிமையிலும் வளருவது அமெரிக்கா தன்னுடைய நலனுக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது.

இன்று நாம் காணும் உலக ஒழுங்கின் இயங்குவிதி என்பது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு மேற்குலகால் வடிவமைக்கப்பட்டது. அதனுடைய நலன் சார்ந்து வடிவமைக்கப்பட்டது.

குறிப்பாக சோவியத்-அமெரிக்காவிற்கு இடையிலான Cold War முடிவடைந்த பின்னர், அமெரிக்காவின் வர்த்தக நலனுக்கு ஏற்றதாகவும்,அதனுடைய புவிசார் நலனுக்கு ஏற்றதாகவும் இந்த உலக ஒழுங்கின் இயங்கு விதி எழுதப்பட்டிருக்கிறது.

ஆக அமெரிக்க நலன் சார்ந்த உலக ஒழுங்கின் இயங்கு விதியை, அமெரிக்காவை விட பலம் வாய்ந்த நாடாக சீனா மாறும்போது மாற்ற முனையும். இது தவிர்க்க முடியாது.

காரணம் உலகின் பலம் வாய்ந்த நாடுகளுக்கு ஏற்றாற் போலவே உலக ஒழுங்கின் இயங்கு விதி எழுதப்படுகிறது. உலக வரலாற்றை நீங்கள் பின்னோக்கி பார்த்தால் இதை தெரிந்து கொள்ளலாம்.

ஆக தனது நலனுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் சீனாவை தடுத்து நிறுத்துவதற்கான பல நகர்வுகளை அமெரிக்கா செய்து வருகிறது.

அந்த பல நகர்வுகளில் ஒன்றுதான் அமெரிக்கா செய்யக்கூடிய மலாக்கா நீரிணையின் போக்குவரத்தை முடக்குவது ( naval blockade).

• அமெரிக்காவின் மலாக்கா நீரிணை மீதான naval blockade

1990 ஆம் ஆண்டு சிங்கப்பூரும் அமெரிக்காவும் 1990 Memorandum of Understanding எனும் உடன்படிக்கையை செய்துகொண்டன.இந்த உடன்படிக்கையின் ஆயுட்காலம் 15 வருடம்.

பிறகு இந்த உடன்படிக்கை 2005 ஆம் ஆண்டு அடுத்த 15 ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது.

பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு அடுத்த 15 வருடங்களுக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்கா அதனது இராணுவ தேவைகளுக்காக சிங்கப்பூரின் விமான, கடற்படை தளங்களை பயன்படுத்தமுடியும்.

(facilitating US access to Singapore’s air and naval bases, as well as providing logistic support for their transiting personnel, aircraft and vessels)

இதன்படி அமெரிக்க கடற்படையின் 7th Fleet இன் நடமாட்டத்திற்குள் இந்த மலாக்கா நீரிணை வருகிறது.

அமெரிக்க கடற்படையால் இந்த மலாக்கா நீரிணை ஊடாக இந்து மா சமுத்திரத்தையும் அரபி கடலையும் 24 மணி நேரத்தில் அடையமுடியும்.

அமெரிக்கா நினைத்த மாத்திரத்தில் இந்த மலாக்கா நீரிணையின் கடற் போக்குவரத்தை அதனது naval blockade இனூடாக முடக்கமுடியும்.

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மலாக்கா நீரிணையில் naval blockade ஐ செய்தால் சீனாவின் எண்ணெய் வழங்கல் முற்றாக தடைப்படும்.

தற்போதைய கணிப்பின்படி, சீனா பிற வழிகளிலும்,மற்றும் தனது இருப்புகளில் (reserve) உள்ள எண்ணெயை பெற்றுகொண்டாலும் அதனால் கிட்டத்தட்ட 60 நாட்களே தாக்குப்பிடிக்க முடியும்.

ஆக எண்ணெய் இன்றி சீனாவின் பொருளாதாரம் அசையாது.
போர் என எடுத்துக்கொண்டால் கூட சீனாவினால் எண்ணெய் இன்றி இராணுவ தயாரிப்புகளை (military operations) முறையாக செய்வதில் சிரமம் ஏற்படும்.

• ஆக சீனா பொருளாதாரத்திலும் இராணுவ வலிமையிலும் வளர்வது உறுதி.

• தனது நலனுக்காக அமெரிக்கா அதை தடுக்க முனையும்.

• அப்படி தடுப்பதற்கான வழிவகைகளில் மிக முக்கியமானது மலாக்கா நீரிணையை அமெரிக்கா தனது கடற்படையினரை கொண்டு முடக்குவது.

இந்த சிக்கல்தான் சீனாவின் ‘Malacca Dilemma’.

• இந்த Malacca Dilemma இல் இருந்து விடுபட முயலும் சீனா

இதிலிருந்து மீள்வதற்கான சீனாவின் பல நகர்வுகளில் ஒன்றுதான் String of Pearls.

இந்து மா சமுத்திரத்தில் தனக்கான நட்புநாடுகளை உருவாக்கி, அங்கு துறைமுகங்களை கட்டுகிறது.அந்த துறைமுகங்கள் கடற்படை தேவைக்கும் பயன்படக்கூடியவாறே கட்டப்படுகிறது (dual-use port projects). பின்னர் சீன கடற்படையினூடாக எண்ணெய் வழங்கலுக்கான கடல் வழி பாதையை தக்கவைக்க முயல்கிறது.

அதுபோல மலாக்கா நீரிணையை மட்டுமே நம்பியிராமல், மற்றைய நாடுகளினூடாக எண்ணெய் வழங்கல் பாதையை உருவாக்குகிறது. அவற்றுள் சில

• China’s trans-Myanmar oil and gas pipelines

• பாகிஸ்தானின் Gwadar Port இல் அமைத்திருக்கும் Pakistan-China Economic Corridor.

• அதேபோல சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்று தாய்லாந்திலே ஒரு கால்வாயை உருவாக்க நீண்டகாலமாக சீனா ராஜதந்திரரீதியில் காய்களை நகர்த்தி வருகிறது.

தாய்லாந்திலே உருவாக்க நினைக்கும் இந்த கால்வாயின் பெயர் Kra Canal அல்லது Thai Canal. இது சுமார் 100 கிமீ நீளம் கொண்டது.

இந்த Kra Canal மட்டும் கட்டப்படுமாயின், சுமார் 1200 கிமீ பயண பாதையை சேமிக்கமுடியும். அத்துடன் மலாக்கா நீரிணையின் தேவை பெருமளவு குறைந்து போகும். இந்த Kra Canal வெட்டப்படுவதை சிங்கப்பூர் விரும்பவில்லை.

ஆனால் தாய்லாந்து Kra Canal இற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றது. இதற்கான படம் கீழே தரப்பட்டுள்ளது.

• அதைவிட முக்கியமானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை முற்றாக அகற்றுவது

இந்த Malacca Dilemma தலைவலியை முற்றாக நீக்குவதற்கான நிரந்தர தீர்வு ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை முற்றாக அகற்றுவது.

அதற்கேற்றவாறு அமெரிக்க இராணுவத்திற்கு சவால் விடக்கூடிய நிலைக்கு சீனாவின் இராணுவ பலத்தை விரைவாக நவீன மயப்படுத்துகிறது ( rapid modernization).

தனது செல்வாக்குட்பட்ட கடற்பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் பிரசன்னத்தை முற்றிலுமாக அகற்ற Anti-Access/Area Denial (A2/AD) எனும் military strategy ஐ கையாளுகிறது.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை அகற்றுவதற்கான சீனாவின் போரியல் நகர்வுகளை இந்த குறுந்தொடரின் இன்னொரு பகுதியிலே விபரமாக தருகிறேன்.

தமிழர்கள் முக்கியமாக அவதானிக்க வேண்டிய ஒரு விடயம் இங்கு உள்ளது. அதுதான் புவியியல்.

இங்கு சீனாவின் புவியியல் அமைவிடம் காரணமாகவே, சீனா மலாக்கா நீரிணை ஊடாக மட்டுமே இந்து மா சமுத்திரத்தை அடையமுடியும் என்ற கட்டாய நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இத்தகைய கட்டாய நிலை இல்லாவிடில் இந்த பதிவின் மையப்புள்ளியான Malacca Dilemma என்பதே இல்லாமல் போயிருக்கும். அதை சார்ந்த போரியல் அணுகுமுறைகளும் வேறொரு பரிமாணத்தை கொண்டிருந்திருக்கும்.

ஒரு சிறு நீரிணை சீன-அமெரிக்க போட்டியின் வடிவமைப்பில் பெரும் பங்காற்றியிருக்கிறது.

இதே புவியியலை வைத்து இன்னொரு ஆச்சரியமான பகுதி ஒன்றிருக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

க.ஜெயகாந்த்