புலம்பதிந்த தமிழர்களின் ஒருங்கிணைந்த பொதுவேலைத் திட்டத்தாலேயே இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம்

இலங்கைத்தீவில் பன்னிரு ஆண்டுகளாக, சிறீலங்கா முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனோநிலையை மாற்றாது, தனது அரசாங்கங்களின் மாறாத அரசியல் கொள்கையாகவும், ஈழத் தமிழர்களைப் பல வழிகளில் இனஅழிப்புச் செய்யும் திட்டங்களைச் சிறீலங்கா தனது அரசாங்கத்தின் செயற் திட்டங்களாகவும் தொடர்ந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் உலக இனப்படுகொலை நினைவேந்தல் நாளான மே18இல், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவேந்தல் செய்யும் அடிப்படை மனித உரிமை, ஒன்று கூடுதலுக்கான அடிப்படை மனித உரிமை, மத வழிபாட்டு உரிமை என்பவற்றைச் சிறீலங்கா மறுத்துள்ளது. இதன்படி மனித உரிமைகள் வன்முறையைத் தொடரும் சிறீலங்காவின் இனஅழிப்பு மனோநிலை மாறாது தொடர்வதை உலகு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வெசாக்கையொட்டி வடக்கில் பௌத்த விகாரைகள் இருந்தனவென வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, கழடுகந்த விகாரை,  யாழ்ப்பாணம் கதறுகொட விகாரை என மூன்று விகாரைகளுக்கு நினைவு முத்திரை வெளியிட்டு,  நயினாதீவு ரஜ விகாரையை மையமாகக் கொண்டு வெசாக்தினக் கொண்டாட்டங்களை தமிழர் தாயகப் பகுதிகளில் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்து, ஒருநாடு அது சிங்கள நாடு, ஒரு மொழி அது சிங்கள மொழி என்னும் தனது சிங்கள இன வெறியையும், ஒரு மதம் அது பௌத்த மதம் என்னும் தனது பௌத்த மத வெறியையும் வளர்க்க முனையும் சிறீலங்கா, ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமையான காலமானவர்களுக்குக் கல்நட்டு வழிபாடியற்றும் அடிப்படை மனித உரிமையைக் கொரோனாப் பரவலைக் காரணம் காட்டி மறுத்து வருகிறது.

உண்மையில் சிறீலங்கா கொரேனா அச்சத்திற்காக அல்ல, தனது அரச அதிபர் மேலும் அவரது முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலைகளைச் செய்த படைக் குழுவினர் மேலும் அனைத்துலக சட்டங்கள் வழி விசாரணைகள் நடத்தி முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்குமாறு ஈழத்தமிழ் மக்கள் உலக மக்களை நோக்கி எழுப்பும் சனநாயகக் குரலை, எழுப்பாதவாறு தடுத்து, அனைத்துலகக் குற்றங்களை இழைத்த அரச அதிபரையும், படையினரையும் பாதுகாப்பதே சிறீலங்காவின் நோக்காகவும், போக்காகவும் உள்ளது.

இதன் ஒரு அலகுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குரிய சின்னங்களைச் சிலைகளைச் சிதைத்தல் என்னும் சிறீலங்காவின் படைகளின் திட்டம். யாழ்.பல்கலைக்கழக போர் நினைவேந்தல் சின்னத்தை இவ்வருட ஆரம்பத்தில் சிதைத்து மகிழ்ந்த சிங்களப் படைகள் தற்போது முள்ளிவாய்க்கால் பொதுச் சின்னத்தைத் சிதைத்து அகற்றித், தங்கள் இன வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். கூடவே புதிதாக நடுவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த நடுகல்லையும் களவாடிச் சென்று எந்தச் சட்டத்தையும் மீறிச் சிங்கள பௌத்த இன மத வெறியை நிறைவு செய்வோம் எனவும் மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

போர் நினைவுச் சின்னங்களைச் சிதைப்பதும், அழிப்பதும் அனைத்துலகக் குற்றம். இன அழிப்புக்குச் சமானமான முறையிலே தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால் தனது ஈழத் தமிழின அழிப்பைத் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் தான் நிகழ்த்துவதை ஏற்றுக் கொண்டு வரும் உலகம், இதனையும் அவ்வாறே தனது இராணுவ சந்தை நலன்களுக்காக ஏற்றுத் தன்னைத் தண்டியாது அல்லது தண்டிப்பது போல கால இழுத்தடிப்புச் செய்யும் என்பது சிறீலங்காவுக்கு நன்கு தெரியும்.

ஆயினும் இத்தகைய செயல்கள் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் மனதையே உறுதியின் உறைவிடமாக்குகிறது என்பதை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அறிக்கை தெளிவாக்கியுள்ளது.

அவர் தன்னுடைய அறிக்கையில் “உண்மையிலேயே தமிழர்களுடைய உணர்வுகளை, நீங்கள், இவ்வாறான நினைவுச் சின்னங்களை இடித்து அழிக்க முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் சம்பவமாகத் தான் நான் பார்க்கிறேன். நீங்கள் எவ்வாறு தான் எங்களுடைய உணர்வுகளைத் தடுக்க முயற்சித்தாலும், நாங்கள் நடந்த எந்த விடயத்தினையும் மறக்க மாட்டோம். இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த அநீதியையும் நாங்கள் மறக்க மாட்டோம். விசேடமாக இந்த வாரம் 2009ஆம் ஆண்டு எத்தனையோ ஆயிரக் கணக்கான உறவுகளை நாங்கள் இழந்திருந்தோம். அந்த உறவுகள், உயிரிழந்த திகதியோ உயிரிழந்த இடமோ எங்களுக்குத் தெரியாத நிலையிலே கூட அனைவரையும் நினைவு கூருகின்ற இடமாக அந்த நினைவுச் சின்னத்தினை நாங்கள் கடந்த வருடங்களில் பயன்படுத்தி இருந்தோம். நீங்கள் தமிழர்களுடைய உணர்வுகளை அழிப்பதற்கு வேறு புதிய வழிகளைத் தேட வேண்டும். ஏனென்றால், எங்களுடைய உணர்வுகளை உங்களால் அழிக்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்க்கின்ற பொழுது, வட அயர்லாந்தில் 1974இல் பிரித்தானிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துப் பேரினதும் மரணம் கொலையென இவ்வாரத்தில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிரித்தானிய இன்றையப் பிரதமர் பொரிஸ் யோண்சன் அவர்கள் வட அயர்லாந்து மாநிலச் சட்டசபைத் தலைவரிடமும், துணைத் தலைவரிடமும் மன்னிப்புக் கோரிய போது, தாங்கள் வரலாற்றில் நடந்தது எதையும் மறக்க மாட்டோம் என வட அயர்லாந்துக்கான செயலாளர் கூறியது நினைவுக்கு வருகிறது.

வரலாற்றை யாராலும் மறக்க வைக்க முடியாது. கடந்தகால வரலாற்றை அனுபவமாகக் கொண்டு, நிகழ்காலத்தை அந்த அனுபவத்தின் அடிப்படையில் பலப்படுத்தி, எதிர்காலத்தைப் புதுமையுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதே வாழ்க்கை. எனவே ஈழத் தமிழர்களின் போர்க்கால நினைவுச் சின்னங்களை அழித்தல் என்பது அவர்களின் வரலாற்றை அழிக்கும் பண்பாட்டு இன அழிப்பாகவும் அமைகிறது.

மேலும் சிறீலங்காவின் இத்தகைய நினைவுச் சின்னங்களையே அழிக்கும் இன அழிப்பை தமிழர் பிரதிநிதிகள் என நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மிக உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார். தமிழ் மக்களே அவர்களையும் தெரிவு செய்தார்கள் எனவும், அந்தத் தமிழ் மக்களின் உறவுகள், நண்பர்கள் தான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் எனவும், அவர்களின் நினைவுத் தூபிகளை முழு அளவில் பாதுகாப்பது பிரதிநிதிகளின் கடமை. எனவே தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் தொகுதிக்கான பிரதிநிதித்துவக் கடமையாக சிறீலங்காவைக் கண்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் கோரியுள்ளார்.

அத்துடன் இன்றைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தனது இறுதி ஊர்வலத்திற்கான பயணத்தைத் தொடங்கி விட்டது எனச் சாணக்கியன் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் இந்த உறுதிக்குப் பக்கபலமாக உலக நீதியைத் துணை நிறுத்த வேண்டிய பொறுப்பு புலம்பதிந்த தமிழர்களுடையதாகிறது.

உலகம் சிறீலங்காவின் இந்த மாறாத முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மனோநிலையை இனங் கண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்கப் புலம்பதிந்த தமிழர்கள் ஒரு பொது வேலைத் திட்டத்தில் கால தாமதமின்றி இணைந்து, அழுத்தங்களை உருவாக்கினாலே சிறீலங்காவின் இன்றைய அரசின் இந்த இனஅழிப்பு மனோ நிலையை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதற்கான சரியான சனநாயகச் செயற்பாடுகளைச் சரியாகச் செய்தலை ஒவ்வொரு புலம்பதிந்த தமிழனும் தனது தாயகக் கடமையாக ஏற்றுத், தானும் பங்கேற்று தன் இளைய தலைமுறையையும் பங்கேற்ற வைக்க வேண்டும்.

– சூ.யோ. பற்றிமாகரன்

முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களை நினைவு கூருவது எங்களின் அடிப்படை விடயம் – அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்

“முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூருவதை தடுக்கின்ற நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது” என நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முப்பது ஆண்டுகாலப் போர் முடிவடைந்து, பனிரெண்டு ஆண்டுகளைக் கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும், அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப் போர்க் காலங்களிலே கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் அந்த நாள் மிக அண்மித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் பதினெட்டாம் நாளிலே, இந்த மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற அந்த நாள், இந்த கொரோனாவினுடைய பரவல் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையிலே எம்மை அண்டிவர இருக்கிறது.

கனத்த இதயங்களோடு தான் இந்த நினைவு கூருதலை நாங்கள் சந்திக்கின்றோம். எம்மை சூழ இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகின்றது. அத்துடன் எமது அயல் நாடாகிய இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முழு உலகமும், இந்த கொரோனா அலையினுடைய வேகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய மருந்துகள் தொடர்பாகவும், இவற்றிற்கு பின்புலத்தில் இருக்கக்கூடிய புதிய அரசியல் வியாபார நிலைகளுக்கும் மத்தியிலேயே தான், நாங்கள் இந்த பன்னிரண்டாவது ஆண்டை நினைவு கூருகின்றோம்.

அண்மையிலே கடந்த புதன்கிழமை (12) இரவு வழமையாக நாங்கள் நினைவு கூருகின்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி உடைக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய ஒரு தூண் சரித்து வீழ்த்தப்பட்டிருந்தது. இருந்த கைகள் முறித்து எறியப்பட்டிருந்தன. இது இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு அந்த பகுதி முழுவதும் சிதறடிக்கப்பட்ட எமது உறவுகளினுடைய உடலங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது.

கடந்த காலங்களிலே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பதில் ஒருசில குழப்பங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கடந்த இரு ஆண்டுகள் நாங்கள் முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியதன் பின்னர் இரு ஆண்டுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமாக நடைபெற்றுள்ளன. இந்த வருடமும் பொதுக் கட்டமைப்பு ஊடாகவே நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். இந்த பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதில் அனைத்து சமூகத் தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இனியும் வழங்குவார்கள்.

இந்தக் கட்டமைப்பு உருவாகிய சில காலத்தின் பின்னர் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 2020ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கடிக்குள்தான் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இம்முறையும் அதே போன்றதொரு நெருக்கடியில் நாம் உள்ளோம்.

பல தசாப்தங்களாக தமிழின மக்களாகிய நாங்கள், சிங்கள அடக்கு முறையினரால் இவ்வாறு பல்வேறு அசௌகரியங்களை சந்தித்த வண்ணம் தான் இருக்கிறோம். தமிழாராய்ச்சி படுகொலை, அதற்கான நினைவு கூருதல்கள் தடுக்கப்படுதல், நூலகம் எரிக்கப்படுதல், இது போன்ற பல நிகழ்வுகள் எமது கடந்தகால வரலாற்றிலே இருக்கின்றது. எமது மக்கள் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலை ஒன்றிற்கு ஊடாக கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டுக்கு பின்பும் பல்வேறு விதமான நிலைகளிலே அரசு இயந்திரம், மக்கள் மீது இவ்வாறான தொடர்ச்சியான, தொடரான பல அடக்கு முறைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

ஆகவே, இந்த நிலையிலும் நாங்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூருவது என்பது எமது தார்மீக கடமையாக இருக்கிறது.

இந்த நினைவு கூருதலை தடுக்கின்ற அந்த நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது. நிச்சயமாக இந்த நினைவு கூரப்படுகின்ற அந்த பகுதி சிதைக்கப்பட்டமைக்கு எதிராக உலக தலைவர்களும், மக்களும் கண்டனங்களை எழுப்ப வேண்டும். அது மீள கட்டப்படக் கூடிய வகையில் பலரும் இதற்கு ஒத்துழைப்புத் தர முன்வர வேண்டும் என்பதை இந்த வேளையிலே நாங்கள் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

கொரோனாவின் பரவலின் காரணமாக மக்கள் அனைவரும், இந்த நினைவு கூருதலை, தங்களுடைய இல்லங்களில் இருந்து மேற்கொள்ளுமாறு, அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

சிறப்பாக, ஒவ்வொருவரும் தங்கள் பிரதேசத்தில் இருக்கின்ற அனைத்து ஆலயங்களிலும், மாலை ஆறு மணிக்கு மணிகளை ஒலிக்கச் செய்து, மக்கள் அனைவரும் குடும்பமாக, ஒரு அகவணக்கத்தை செலுத்தும்படியும், சுகாதார நடை முறைகளை பின்பற்றி, அக வணக்கத்திலே பங்கெடுத்து, விளக்கொன்றை ஏற்றி, இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் அழைக்கின்றோம்.

அத்தோடு அன்றைய நாளிலே, ஒரு நேர உணவாக, முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாக உட்கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதன் ஊடாக, அந்த மக்களுடைய வலியையும், துன்பத்தையும் நாங்களும் சுமந்து, அதை கடந்து செல்லவும், கடத்திச் செல்லவும், வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஆகவே, இந்த விடயத்தை நாங்கள் அனைவரும் நினைவு கூருவோம். நினைவு கூருதல் என்பது, எங்களுடைய அடிப்படை விடயமாக இருக்கிறது. இதை அனைவரும் இணைந்து நினைவு கூருவதன் ஊடாக, நாங்கள் இன்னொரு தளத்துக்கு, எங்களுடைய வாழ்வை, எமது மக்களை, எங்களுடைய எதிர்காலத்தை, நகர்த்திச் செல்ல முடியும் என எண்ணுகின்றோம்.” என மேலும் தெரிவித்தார்.


மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் உலகத் தமிழருக்கு யஸ்மின் சூக்காவின் காணொளிச் செய்தி


இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம், அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையு தமிழ் மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளது:

12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக இந்த செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையிலே எனது மனதைத் தொட்டுள்ளது.

எனது சார்பாகவும் ,பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்திலுள்ள எனது அனைத்து சக பணியாளர்கள் சார்பாகவும் நான் இந்த செய்தியை அனுப்புகின்றேன்.

12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் சமூகத்துடன் நாம் இணைந்து கொள்கின்றோம்.

இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம் அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம்.
சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும்.

நாம் துக்கம் கடைப்பிடிக்கும் அதேவேளையில் தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிவரும் அத்துடன் இலங்கைப் பாதுகாப்பு படைகளால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினைக் அறிந்து கொள்வதற்காக ஏங்கிக்கிடக்கும் கணாமற்போனவர்களின் தாய்மார்களின் வேண்டுகோளையும் நாம் நினைவிற்கொள்கின்றோம்.

சித்திரவதைளும் மற்றும் அடக்குமுறைகளும் இலங்கையில் தொடர்கின்றன என்பது தொடர்ந்தும் மறுப்பவர்களை அவர்களது இந்த மறுப்பானது எங்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாய் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என நாம் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.

இந்த வாரம், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒரு நினைவுச் சி;ன்னத்தை நிறுவுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள், இந்தக் கருங்கல்லில் செய்யப்பட்ட நினைவுக்கல் இரவோடிராக காணாமற்போயுள்ளதுடன் 10 வருடகால பழைய நினைத்தூபியும் அழிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நினைவுத்தூபியானது வடக்கு மற்றும் கிழக்கில் 20000 இற்கும் மேலான கல்லறைகளைக் கொண்ட 25 பாரிய மயானங்கள் வேண்டுமென்று மிருகத்தனமாக அழிக்கப்பட்டதன் விளைவாக இந்த நினைவுத்தூபி கட்டப்பட்ட நிலையில் இந்த அழிப்பானது குறிப்பாக பாதிப்பு மிக்கதாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை தமது அன்புக்குரியவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கவும் , நினைவு கூருவதற்கும் மறுத்தல் ஒரு குற்றமாகும். அத்துடன் இது இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியுள்ள அடக்குமுறை நிலைமை காட்டுகின்றது. போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துவிட்டன.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய சர்வதேசக்குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்ஃ என அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த வருடம் மார்ச்சில் 46 ஆவது அமர்வில் மனித உரிமைகள் சபை ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையை மேற்கொண்டது.

உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தாம் அனுமதிக்கப்பட வேண்டும், என மனித உரிமைகள் சபையினை திருப்திப்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி மறுக்கப்பட்ட போது சர்வதேச சமூகமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய அடியைக் கொடுத்தது.

இலங்கை அரசாங்கம் மீதான ஆழமான அவநம்பிக்கை, கொலைகள் , வலிந்து காணாமற்போதல்கள், கூட்டான கொலைகள், சித்திரவதைகள் , மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் பற்றிய அவர்களது பொய்களை நிராகரித்து சர்வதேச சமூகமானது இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் உட்பட இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்குமாறு மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்திற்கு ஆணையிட்டது.

மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகமானது அங்குள்ள ஆதாரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்து இடைவெளிகளை அடையாளங்காண்பதற்கு 18 மாதங்களைக் கொண்ட ஆணையைக் கொண்டுள்ளது.

தமது தகவல்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு அவர்கள் பின்னர் ஆதாரங்கைளச் சேகரிப்பார்கள். வேறு சட்ட ஆட்சி எல்லைகளில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் சேகரிக்கின்ற ஆதாரங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச சட்ட எல்லையின் கீழ் உங்களுடைய நாட்டில் வழக்குகளைக் கொண்டுவருவதற்கு நீங்கள் அனைவரும் உங்களது அரசாங்கங்கள் மற்றும் போர்க்குற்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு தேடுவது அவசியம் என்பதையே இது கருதுகிறது.

உறுப்பு நாடுகள் தாம் போரின் போதும் அதன் பின்னரும் தாம் சேகரித்த ஆதாரங்களை மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவகத்தினை அணுகி அவற்றை வழங்க முடியும்.

அத்துடன் அவ்வாறான ஆதரங்களை அந்த அலுவலகத்திற்கு கிடைக்ககூடியதாக செய்ய முடியும்.ஃ அவர்களது போர்க்குற்ற வழக்கறிஞர்கள் தமது சொந்த நாடுகளில் வழக்குகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கு ஆதரவாக ஆதாரங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.ஃ நாங்கள் செய்யக்கூடிய இன்னுமொரு பயனுள்ள வேலையாக தடைகள் உள்ளன.

உங்களில் பலர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மக்னிட்ஸ்கி தடையை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

வெவ்வேறான அளவுகோலினைக் கொண்ட தடைகள் பல்வேறு நாடுகளிலுள்ளனஃ அத்துடன் குற்றஞ்செய்தவர்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாக எம்மால் தண்டனை வழங்கமுடியாது இருந்தல் அதன்பின்னர் பொறுப்புக்கூறலுக்கான ஏனைய வழிகளாக விசாக்களை வடிகட்டி ஆய்வு செய்தல் மற்றும் தடைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் அறிந்து கொண்டதைப் போல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு பயணம் செய்யமுடியாது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் ஆனது கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இலங்கைப் போரின் ஆரம்பக்கட்டத்திலும் இறுதிக் கட்டப் போரிலும் அவருடைய வகிபாகத்தை குறிப்பிடும் அவரைப் பற்றிய இரகசிய ஆவணக் கோவையைத் தயாரித்தது.

இந்த ஆவணக்கோவை அமெரிக்க அரசிற்கும் தடைசெய்யும் ஏனைய அமைப்புகளுக்கும் கிடைக்ககூடியதாகச் செய்தோம். அண்மையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகத் தடைகள் அமைப்பிற்கு அங்கும் சவேந்திர சில்லாவை தடை செய்வதற்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பித்திருக்கின்றோம்.

இது இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய உள்ளுர்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பற்றி எழுதுவது உட்பட பிரிட்டிஸ் அரசாங்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது அவசியமாகும்.

நீங்கள் வேறு நாடுகளில் வாழந்து வந்தால் நீங்கள் சவேந்திர சில்வாவையும் தடைசெய்யுமாறு கேட்டு உங்களது அரசாங்கங்களுக்கு எழுதமுடியும்.

இது ஒரு ஆரம்பம் மாத்திரமே , மோசமான சர்வதேசக் குற்றங்களைச் செய்த ஏனைய இலங்கைக் குற்றவாளிகளையும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் விதமாக ITJP ஆனது தொடர்ந்தும் ஏனைய ஆவணக் கோவைகளையும் தயாரித்து வருகின்றது. இலங்கையில் கொலைகள் உட்பட சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான கண்காணிக்கப்படல் , அச்சுறுத்தப்படுதல், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது உயிருக்கு அஞ்சுதல் என அடக்குமுறை தொடர்கின்றது.

ஆனால் அங்கு நடைபெறும் மீறல்களை ஆவணப்படுத்துவதற்கும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கவனத்தைச் செலுத்துகின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணிப்பது அவசியமாகும். அதேநேரத்தில் இரகசியம் காத்தல் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.

இலங்கையினுடைய சட்ட மா அதிபராக இருந்த போது வலிந்து காணாமற்போதல், கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை பொறுப்பக்கூறலுக்கு உட்படுத்தாமல் தவறிழைத்தமையால் மொஹான் பீரிஸை கௌரவமான ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்ட ஆணையகத்திற்கு நியமிப்பதை தடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு ITJP அழைப்புவிடுத்திருக்கிறது.

இது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் ,இவரது நியமனம் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்துவதாகவும் சட்ட ஆட்சி மீதான தாக்குதலாகவும் இருக்கும் என்பதால் இது இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உங்களுடைய அரசாங்கங்களுக்கு நீங்கள் அனைவரும் அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

நீதி தேடுவதையும் பொறுப்புக்கூறலையும் நாம் ஒருபோதும் மறக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அனைவரும் எமது சொந்த வழிகளில் ஆக்கங்கொண்டவர்களாகவும் துணிவு கொண்டவர்களாகவும் இருப்பது அவசியமாகும்.

12 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரத்திற்கான தேடுதலில் உயிரிழந்தவர்களின் இழப்பு வீண் போகமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழி இதுவாகும்.


உலகே பாடம் படி! இது மே 18 – முனைவர் கு.அரசேந்திரன்

நாங்கள் அழுத நாள். அழுது அழுது அழிந்த நாள். இல்லை அழிக்கப்பட்ட நாள். தாய்மார்கள் மார்பில் பால் குடித்து, ஆசை பொங்கப் பொங்க நாங்கள் ஊட்டியதால் மிகையாகப் பால் குடித்து வாய்வழியே பால் ஒழுகத் தாய்முகம் பார்த்துக் குழந்தை சிரிக்க அக் குழந்தை முகம் பார்த்து நாங்கள் பார்த்த காலம் கனவாய்ப் போன நாள். குண்டு வீச்சில் வாய்வழியே குருதி கொப்புளிக்கக் குழந்தை இறந்த கொடுமையில் தாயும் துடித்து இறந்த நாள். எங்கள் இனமே ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு நாலா பக்கமும் மட்டுமல்ல வான்பக்கமுமாகச் சேர்ந்து ஐந்து பக்கமுமாகக் கொலை மின்னல் கோர இடி சூழ நாங்கள் அழிக்கப்பட்ட நாள்.

எங்கள் ஓலத்தை உலகிற்கறிவிக்க ஏடகம், ஊடகம் எவையும் இல்லை. கதிரவன் எரிக்க மழை அடிக்க வயிற்றில் பசிக்கனல் வதைக்க யார் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்; யார் இறக்கிறார்கள்; யாம் எப்பொழுது இறக்கப் போகிறோம் என்று துடிதுடிக்க ஓடிப் பார்த்து ஒட முடியாமல் விழுந்து எழுந்து விழுந்து எழ முடியாமல், சுருண்டு அழுது அழுத ஒலி யாருக்கும் கேட்காமல் உயிரோடு உயிராகக் கரிந்தழுது கரைபுரண்ட கண்ணீரும் குண்டு வீச்சில் உடல் கிழிந்த செந்நீரும் சேர்ந்து உப்புநீரும் செந்நீரும் பெருக எம் தாய்நிலம் ஏர் உழுத கழனியாக – ஆடையின்றி மாற்று உடையின்றி இயற்கைக் கடனடக்கி அடக்க முடியாமல் அவமானப்பட்டு ஐயோ ஐயோ என்ற ஓலம் எங்கும் எங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும் மரண ஓலங்களுக்கு இடையில் எம் இனம் சிக்கி அழிந்த நாளை நினைத்து நினைத்து விம்முகிறோம்.

எங்கள் அழுகையையும் அவலத்தையும் ஆயிரம் பத்தாயிரம் இலக்கம் என்று தாண்டிச் சென்ற சாவினையும் கொண்டாடினான் பகைவன். அவனுக்கு ஆயுதம் கொடுத்துப் பணம் கொடுத்துக் கைகொடுத்து வேண்டிய வேண்டிய உதவிகள் புரிந்து தொண்டுகள் செய்தது உலகம். ஆண்டுகள் சென்றன. நாங்கள் கண்ணீர் சிந்தியது உண்மை என்று இன்று உலகம் கூறத் தொடங்கியிருக்கிக்கிறது. துண்டுக் காணியில் தூர தேசத்தில் அப்பொழுது நாங்கள் அழுத அழுகை இன்று உலகம் முழுதும் கேட்கிறது. வீடுகளில், தெருக்களில், மருத்துவமனைகளில் சுடுகாடாகப் பிணம் எரிக்கும் இடங்களில் எங்கும் எங்கும்.

நாங்களாவது அழுது அழுது இறந்தோம். இந்த கொரோனா அலையில் உலகம் அழாமலேயே இறக்கிறது. நாங்களாவது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இறந்தோம். இன்று பாருங்கள் கணவனைப் பார்த்து மனைவி அழ முடியவில்லை; மனைவியைப் பார்த்துக் கணவன் அழ முடியவில்லை. எங்கள் அழுகையை உலகம் பார்க்கவில்லை. உலகின் அழுகையை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு எவரும் மருந்து, மருத்துவர் அனுப்பவில்லை. இன்று எந்த மருந்தாலும் எந்த மருத்துவராலும் உலகத்திற்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

எங்கள் நாடு அன்று சுடுகாடாய் ஆனது. இன்று உலகமே சுடுகாடாகி எரிந்து கொண்டிருக்கிறது. எங்கள் மருத்துவமனைகளில் பகைவன் குண்டு வீசினான். பகைவனைப் பாராட்டிப் பக்கதுணை செய்தது உலகம். இன்று உலக மருத்துவமனைகள் செத்த பிணங்களாலும் சாகப் போகும் பிணங்களலும் பிதுங்கி வழிகின்றன. உலக அரசுகள் எல்லாம் எங்களை வேடிக்கை பார்த்தன. இன்று உலக அரசுகளை நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.

உலகம் கூடி எங்களை அழித்த போதும் எங்கள் தலைவர் எவரிடமும் மண்டியிடவில்லை. வல்லரசுகளும் அல்லரசுகளும் புல்லரசுகளும் இன்று நுண்நச்சுத் தொற்றியின் முன் மண்டியிட்டுக் கிடக்கின்றன. எங்களை அரசாக அன்று உலகம் ஏற்றிருந்தால், முழு உலகத்திற்கும்கூட நாங்கள் மருந்து கொடுத்துத் துணையாகியிருப்போம். ஏனென்றால் மக்களுக்கான அரசினை நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். இந்த உலகம் மக்கள் சாவில் தன்னை இன்று இயக்கிக் கொண்டிருக்கிறது. உலகத்திற்கு நாங்கள் பாடம் புகட்டவில்லை. உலகத்திற்குக் கொரோனா பாடம் புகட்டிக் கொண்டுள்ளது. உலகே பாடம் படி.

இலக்கின் முள்ளிவாய்க்கால் உலக இனப்படுகொலை தினத்தின் 12ஆவது ஆண்டுப் பிரகடனம்

ஈழத் தமிழரின் உரிமைகள் மீட்புக்காக அமைதி வழியில் சனநாயகத் தத்துவங்களின் அடிப்படையில் உழைப்பதற்கு உறுதி பூண்டவர்களாகிய நாங்கள், முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பு என்னும் 21ஆம் நூற்றாண்டின் முதலாவது உலகப் இனப் படுகொலைத் தினமான 18.05.2009 ஐ வலிசுமந்த நெஞ்சுடன் எண்ணிப் பார்க்கின்றோம். அந்நாளில் சிறீலங்கா தான் அறிவித்த யுத்த சூன்யப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயங்களை நோக்கி வந்து புகலிடம் தேடிய ஈழத் தமிழர்களை நிர்வாணப்படுத்தியும், அவமானப்படுத்தியும், கூட்டாகப் பாலியல் வன்முறைப்படுத்தி, உள்ளத்தையும் உடலையும் வருத்தியும், சித்திரவதைகள் செய்து துடிக்க வைத்தும், உயிருடன் புதைத்தும், சிதைத்தும், கொத்துக் குண்டு வீச்சுகளாலும், தொடர் ஏவுகணை வீச்சுக்களாலும், இராசயன ஆயுதப் பிரயோகங்களாலும் அழித்த இரத்தக்கறை படிந்த மனிதகுல வரலாற்றின் 12ஆவது ஆண்டான இன்று 18.05.2021 உலக இனப் படுகொலைத் தினமாக நினைவேந்தல் பெறுகிறது. இந்நாளில் பின்வரும் உறுதி மொழிகளை முன்வைத்து, நீதிக்காகவும், பாதுகாப்பான அமைதிக்காகவும் உழைக்கும் அனைத்து ஈழத் தமிழர்களுடனும்,  உலகத் தமிழர்களுடனும், அனைத்துலக மக்களுடனும், அமைப்புக்களுடனும், நாடுகளுடனும் இணைந்து பயணிக்க ‘இலக்கு’ இவ்வாண்டில் ஆயத்தமாக உள்ளது.

  • உலக வல்லாண்மையாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சி இலங்கையில் இருந்த 1833இல் கோல்புறூக் அரசியல் அமைப்பு மூலம், இரு தேசங்களாக இருந்த தமிழ் சிங்கள தேசங்களை ஒருநாடாக ஈழத் தமிழர்களின் விருப்பு அறியப்படாது இணைத்ததின் பின்னணியில் 1921ஆம் ஆண்டு சிங்களப் பெரும்பான்மை ஆட்சி மன்னிங் சீர்திருத்தத்தின் வழியாக ஏற்பட்டமையே ஈழத் தமிழின அழிப்புக்கான முதல் விதையாயிற்று. அவ்வாண்டு முதல் ஒரு நூற்றாண்டாக வளர்ந்து வரும் சிங்கள பௌத்த மேலாண்மை ஆட்சி முறைமையே இன்று வரையான ஈழத் தமிழின அழிப்புக்கான ஆற்றலைச் சிங்கள அரசாங்கங்களுக்கு அளித்து வருகிறது. எனவே ஈழத் தமிழர் பிரச்சினை என்பது காலனித்துவ காலத்து தீர்வு காணாத பிரச்சினையாகவே தொடர்கிறது என்பதை பிரித்தானியா உட்பட்ட அனைத்து நாடுகளுக்கும் எடுத்து விளக்கி ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் நிலை நிறுத்துமாறு உழைப்பது.
  • இந்தியா பிராந்திய மேலாண்மைக்குரிய தன்மையுடன் ஈழத் தமிழர் பிரச்சினையை அணுகி வருவதால் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான அமைதிக்கு உதவுவது இந்தியாவின் கடமையாக உள்ளது என்பதை இந்தியாவுக்கு எடுத்து விளக்கும் அணுகுமுறைகளை உருவாக்கி, ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் நிலை நிறுத்துமாறு இந்தியாவைக் கோரிட தமிழகத்திலும் மற்றைய மாநிலங்களிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து உழைப்பது
  • ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புரிமை நாடுகளுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை என்ற அவர்களின் பார்வையாலேயே ஈழத் தமிழின அழிப்பைச் சிறீலங்கா தொடர்கிறது என்பதை உணர்த்தி ஈழத் தமிழர் பிரச்சினை அனைத்துலகத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை வலியுறுத்த பொதுக் கருத்துக் கோளத்தை வளர்க்க வல்ல ஈழத் தமிழர்களுக்கான தேசிய ஊடக வளர்ச்சி மூலம் உழைப்பது.
  • உலகத் தமிழினத்தில் பெரும்பான்மையினராக உள்ள புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களை, தாயகத்தில் ஈழ மக்களுக்குச் சக்தியளிக்கும் வகையில் சமூக மூலதனங்களையும், அறிவாற்றல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கத் தக்க வகையில் இணைத்திட உழைப்பது. இதன்வழி ஈழத் தமிழர்களை உலகச் சந்தைகக்கு பங்களிப்புக்களைச் செய்யக் கூடிய சமுதாயமாக வளர்ச்சி அடைய வைப்பதன் வழியாகவே அவர்களுக்கான பிரச்சினைத் தீர்வுக்கும், உரிமைகள் மீட்சிக்கும் உலக நாடுகளும், அமைப்புக்களும் உதவிடுவார்கள் என்ற எதார்த்தத்தை உணர்ந்து அதற்கான கட்டமைப்புக்களை ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் உருவாக்கிட உழைப்பது.