வடக்கில் தொடரும் பஞ்சமா பாதகங்கள்!

jaffna youthsவடக்கில் அண்மைக்காலமாக சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளன. அதனால் பெற்றோர் மற்றும் பொது மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இளம் வயதினர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கோஷ்டி மோதல்கள், வாள்வெட்டுக்கள், போதைவஸ்து பாவனை, மதுபாவனையென சகலவிதமான பஞ்சமா பாதகங்களும் அதிகரித்து வருகின்றமையே வடபகுதி மக்கள் மத்தியில் தோன்றியுள்ள பாரிய அச்சத்துக்கான பிரதான காரணமாகும்.

வடக்கில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில்கூட இந்த விதமான படுபாதகச் செயல்கள் இடம்பெறவில்லை. நடுச்சாமத்தில்கூட ஒரு பெண் தனியாக செல்லக்கூடிய நிலைமையே காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.

அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பாரிய காயங்களுக்கு ஆளானார்கள். இதன்போது, மாணவர் ஒருவரின் கை துண்டாடப்பட்டது. ஏனைய இரு மாணவர்களும் பாரிய காயங்களுக்கு ஆளாக நேர்ந்தது.

அது மாத்திரமன்றி அடிக்கடி வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. எந்தவிதமான ஈவிரக்கமுமின்றி இவ்வாறான கொடூர செயல்களில் இளம் வயதினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களினாலோ கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன. இது மறுபுறம் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இதனிடையே, யாழ். நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். சாதாரணமாக கடையில் கிடைக்கும் அளவுக்கு இவை அதிகரித்துள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி சீரழிவதுடன் இளம் சமுதாயம் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கக்கூடும் என பெற்றோர் அஞ்சுகின்றனர்.

அண்மையில் மல்லாகத்திலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக பல்வேறு வகைகளில் போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் சுமுகநிலை தோன்றியுள்ள நிலையில், இளம் தமிழ் சந்ததியினர் மத்தியில் போதைப் பொருள் பாவனையை அதிகரிக்கச் செய்து அதன்மூலம் கலாசார சீரழிவை மேற்கொள்ள ஏதேனும் சக்திகள் முனைகின்றனவா எனவும் பெற்றோர் ஐயம் வெளியிடுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் இளம் வயதினர் தொடர்பில் பாடசாலை சமூகமும் பெற்றோரும் தொடர்ச்சியான கவனத்தை செலுத்த வேண்டியது அவர்களின் கடப்பாடாகும்.

இவை அனைத்துக்கும் மத்தியில் யாழ். புங்குடுதீவு பகுதியில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற வேளையில் காணாமற்போன மாணவி மறுநாள் புங்குடுதீவு 8ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகிலுள்ள பற்றைக் காட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடாநாட்டைப் பெரும் பீதிக்குள் இட்டுச் சென்றுள்ளது.

9ம் வட்டாரம் வள்ளன் பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (வயது 18) என்ற மாணவியே இவ்வாறு காணாமற்போன நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமற்போன மாணவியின் சடலத்துக்கு அருகிலிருந்து சைக்கிள் மற்றும் புத்தகப் பை என்பன மீட்கப்பட்டுள்ளன. பிள்ளையின் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியை அறுத்து கால்கள் இரண்டையும் மரத்துடன் கட்டி கழுத்து பட்டியை அவிழ்த்து கைகளை கட்டி பின்னர் வன்புணர்வு புரிந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மிகவும் கொடூர மனநிலையிலிருக்கும் குற்றவாளிகளினாலேயே இவ்வாறான குற்றங்களை புரியக்கூடியதாகவிருக்கும்.

இந்தியாவில் பஸ் வண்டி ஒன்றுக்குள் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தி ஆறு பேரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் குற்றுயிராய் வீதியில் வீசப்பட்டு அவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் பேசப்பட்டு வருகின்றது.

அதே பாணியில் இந்தியாவில் அடுத்தடுத்து பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதனையொத்த வகையில் தனியாக வந்த குறித்த பாடசாலை மாணவி இவ்வாறு கடத்தப்பட்டு மிகவும் பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் காரணமாக வடபகுதி மக்கள் தங்கள் இளம் பிள்ளைகள் தொடர்பில் பாரிய அச்சத்தை எதிர்நோக்கியவர்களாகக் காணப்படுகின்றனர்.

வடபகுதியை பொறுத்தமட்டில் கல்வியொன்றே பெரும் சொத்தாகக் கருதப்பட்டு வருகின்றது. அதன்பொருட்டு பெரும்பாலான பிள்ளைகள் பாடசாலைக்கும் அதனை தொடர்ந்து பிரத்தியேக வகுப்புகளும் தனியாகச் சென்று வருவது வழமையான விடயமாகும். பிரத்தியேக வகுப்புகள் அதிகாலை வேளையில் மாத்திரமன்றி, பின்னிரவு நேரங்களிலும் இடம்பெறுவதுண்டு.

அந்தவகையில் பிள்ளைகளின் பின்னால் பெற்றோரும் துணைக்கு செல்வது கடினமான காரியமாகும். எனினும் வடக்கில் தொடரும் நிலைமைகளை பார்க்குமிடத்து எந்தவொரு பிள்ளையையும் தனித்து எங்கும் அனுப்ப முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன.

குறித்த மாணவியை இவ்வாறு சித்திரவதை செய்து படுகொலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் போவதும், அவர்கள் சட்டத்திலிருக்கும் ஓட்டைகளை வைத்து தப்பித்து கொள்வதுமே குற்றச் செயல்கள் வகைதொகையின்றி அதிகரித்து செல்வதற்கான பிரதான காரணமாகும்.

எதையும் செய்துவிட்டு இலகுவில் தப்பித்து கொள்ளலாம் என்ற மனோநிலை தற்போதைய இளம் சந்ததியினர் மத்தியில் காணப்படுகின்றது. இந்தவிதமான போக்கை இல்லாமற் செய்யவேண்டுமானால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டியது அவசியமாகும்.

பெற்றோரை பொறுத்தமட்டில் வயது வந்த தமது பிள்ளைகளை வெளியில் அனுப்பும் சந்தர்ப்பங்களில் இரட்டிப்புக் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. இத்தகைய குற்றவாளிகளின் கழுகுக் கண்களிலிருந்து தப்புவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல என்பதையும் சகல தரப்பினரும் மனதில் கொள்வது அவசியமாகும்.

எவ்வாறெனினும், வடக்கில் தொடர்ந்தும் படையினர் செறிந்து போயுள்ள நிலையில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

அவர்கள் இத்தகைய குற்றச் செயல்கள் தொடராத வகையிலும் பாதுகாப்புக்கான தமது பொறுப்பை தட்டிக்கழிக்காத வகையிலும் செயற்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும்.

பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் எவ்வேளையும் விழிப்பாக இருப்பதுடன் கூடுமானவரை அவர்கள் தனிமையில் பயணம் செய்வதை தவிர்ப்பதும் அவசியமாகும்.

இன்றேல், இத்தகைய கொடூரமான பேர்வழிகள் மத்தியிலிருந்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதென்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Advertisements