முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை – நல்லாட்சி அரசின் நயவஞ்சக நல்லிணக்க அணுகுமுறை

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில், நாளை நடத்த திட்டமிட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை செய்துள்ளது.MAY-18-UNI Jaffna

2009ம் ஆண்டு, மே மாதம் 18ம் நாளுடன் முடிவுக்கு வந்த போரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் வகையில், நாளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முள்ளிவாய்க்கால் பகுதியில், வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முதலமைச்சர் மற்றும், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் சர்வமதப் பிரார்த்தனை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாலும், ஒரு நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பேரணியால், அமைதிக் குலைவு ஏற்படும் என்றும் அதனால், அதறைகுத் தடைவிதிக்குமாறு கோரியும், சிறிலங்கா காவல்துறை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இதன் அடிப்படையில், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவு காவல்துறைப் பிரதேசத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் பேரணியை, வரும் 14 நாட்களுக்குள் நடத்தக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், வடக்கு மாகாணசபையால், ஒழுங்கு செய்யப்பட்ட சர்வமதப் பிரார்த்தனையுடன் கூடிய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமா குறித்த கேள்விகள் எழுந்திருந்தன.

இந்தநிலையில், நேற்று இரவு வடக்கு மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரனின் இல்லத்துக்குச் சென்று முல்லைத்தீவு காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவைக் கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக, முல்லைத்தீவு காவல்நிலையப் பொறுப்பதிகாரியுடன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தொடர்பு கொண்ட போது, “பேரணி, ஆர்ப்பாட்டம் மட்டுமன்றி, அனைத்து வகையான நிகழ்வுகளையும் நீதிமன்றம் தடை செய்திருப்பதாகவும், குறித்த நாளில் எந்த ஒரு நிகழ்வு இடம்பெற்றாலும் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.” என்றும் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுக்கே, முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில குழுக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூரத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே, சிறிலங்கா காவல்துறையினர் இந்த தடை உத்தரவைப் பெற்றதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காகவே பிரதானமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், காவல்துறைபேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

முன்னதாக, வடக்கிலுள்ள மக்கள் தமது உறவுகளை நினைவு கூரத் தடையில்லை என்றும், அது அவர்களின் உரிமை என்றும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளரும், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கரு ஜெயசூரிய போன்றவர்களும், தெரிவித்திருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த சமிக்ஞைகளினால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக தமிழ்மக்கள் பெருதும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நயவஞ்சகமான முறையில் உள்ளூர் காவல்துறையை பயன்படுத்தி, நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்று இந்த நிகழ்வைக் குழப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின், இந்த நடவடிக்கை, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து தமிழ்மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

**
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகுத் நீதிமன்றம் தடை உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு தொடர்பான அனுமதி கோரி எம்மால் முல்லைதீவு காவல் நிலையத்தினில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையினில் முல்லைதீவு நீதவான் நீதிமன்றம் தடை பெற்று அதனை பொலிஸார் இன்று ஒப்படைத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை விடுமுறை நாள்காரணமாக மேன்முறையீடு செய்து நீதிமன்ற அனுமதியினை பெறமுடியாத இக்கட்டான நிலை முன்னணியினரிற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த தடையில்லையென அறிவித்துவிட்டு நீதிமன்றினூடாக தடைபெற்றுள்ளமை அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Advertisements