புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு கண்டனம்!

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியாவின் படுகொலைக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.vithya-01

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கம் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி சி.வித்தியாவிற்கு வணக்கம் செலுத்தியுள்ளது.

பழைய மாணவர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் பொன்.காந்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா மிக மோசமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சமூகமாகிய நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்.

எமது சமுதாயத்தில் எதிர்காலத்தில் நல்வாழ்வு வாழக்கூடிய ஒரு மாணவியின் எதிர்காலம் திட்டமிட்டு இரக்கமற்ற மிருகத்தனமான சிந்தனை உள்ளவர்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இது இருக்கின்ற ஏனைய மாணவ சமுதாயத்தின் மத்தியில் குறிப்பாக மாணவிகள், பெற்றார்கள் மத்தியிலும் அச்சத்தையும் உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் கல்வியில் முக்கிய அடையாளமாக கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகையதொரு மிலேச்சத்தனமான சம்பவம் இடம்பெற்றிருப்பது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எமது மாணவர்கள் எமது சமுகத்தின் மிகப் பெரும் சொத்துக்கள். எமது சமுதாயம் பெற்றார்கள் மாணவர்களை சுற்றி ஒரு பெரும் கனவை வளர்த்து வைத்துள்ளார்கள். அவர்கள் எமது சமுதாயத்தை புகழ்மிக்கதாக வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்து மாணவர்களுக்காக அல்லும்பகலும் பாடுபடுகின்றார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் புங்குடுதீவில் மாணவி சி.வித்தியாவிற்கு ஏற்ப்பட்டுள்ள கதி கவலை அளிக்கின்றது.

இந்த நிலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாடசாலை சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: வலுக்கும் போராட்டங்கள்

யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது.

வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம்

புங்குடுதீவின் மண்ணில் மகளாய் உதித்து பெற்றாரின் எண்ணங்களுடன் தன்னூர் சக மாணவமாணவிகளுடன் அதிபர் ஆசிரியர்களுடன் வாழும் காலத்தின் தொடர்ச்சியை வித்தியா அனுவிக்க முடியாமல் அவள் புன்னகைக்க முடியாமல் அவள் எதிர்காலக்கனவுகளை நிதர்சனம் ஆக்கமுடியாமல் வெறியர்களாய் பிறழ்வுள்ள பிறவிகளாய் கொடுர மிருகங்களாய் வந்து அவளை உடலை உயிரை சிதைத்து நாளின் கண்ணீர் ஊரெங்கும் பரவிக்கிடக்க அவளை கொன்ற பாவியர்மீது கோபம் கொப்பளிக்க இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வித்தியாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் மாணவர்கள் திரண்டுவந்து இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

யாழ் மாவட்ட பா.உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா சி.சிறீதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவின் இறுதி நிகழ்விற்கு வந்து இறுதி விடை கொடுத்தனர்.

**
புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.

பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி மற்றும் இடுப்புப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மோசமாக சிதைத்ததாகவும் , இதனால் வித்யாவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று தீவுப்பகுதியின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொலையாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பில் பல சமூக அமைப்புக்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், கொலையாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

**

வட பகுதியில் வாள்வெட்டு கலாச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு திட்டமிட்ட முறையில் செயற்படுகிறது:-

என்பன திட்டமிட்ட முறையில் செயற்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கயில்,

அன்று சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி எவ்வாறு இராணுவத்தினரால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாரோ அதேபோல இன்றும் அவ்வாறன செயல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

2009ம் ஆண்டுடன் போர் முடிவுக்கு வந்து விட்டது இனி எங்களுக்கு சமாதான கிடைக்கும் என்று இருந்தோம் அது மட்டும் இன்றி 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது இனியாவது நின்மதி கிடைக்கும் என்று இருந்தோம். ஆனால் இங்கு தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றது

இந்த நிலை ஒழிய வேண்டி பல்கலைகழக சமூகம் ஒன்றிணைந்து தொடர்ந்து ஜனநாயக ரீதியாக போராடும். இந்த நிலைமை வடபகுதியில் இருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவேண்டும். வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும்.

நங்கள் நினைத்து கொண்டு இருக்கின்றோம் அரசுகள் மாறும் போது எமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று ஆனால் வர வர துன்பங்கள் தான் அதிகரித்து செல்கின்றது.இந்த நிலையில் பல்கலைகழக சமூகம் ஒன்றிணைந்து வன்மையாக கண்டிக்கின்றோம்.

பொலிசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிசார் நடவடிக்கை எடுக்க்கா விடின் அவர்களும் இதற்கு உடந்தையா ? என்ற சந்தேகம் எமக்கு ஏற்படும். எனவே பொலிசார் விரைவாக நீதியாகவும் நேர்மையாகவும் செய்யபட்டு உயிரிழந்த பிள்ளைக்கு நீதி கிடக்க வழி செய்யவேண்டும்.

இப்படியான செயற்பாடு 2005 ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்று இருந்தால் எவ்வாறான செயற்பாடு நடைபெற்று இருக்கும் என்பதனை சிந்தித்து பாருங்கள்

அவ்வாறான சில தண்டனைகளை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் ஏனெனில் சிலர் திருத்த முடியாதாவர்களாகவே இருக்கின்றனர்.

அவர்களை திருத்த இவ்வாறான சட்டங்களை அமுல் படுத்தவே வேண்டும் இனி வரும் காலத்தில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற கூடாது.

இவ்வாறான வன்முறைகள் இனி நடந்தால் இதனை விட ஆக்கிரோசமான ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

Advertisements