முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: முன்னோக்கி பாய்தல்

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்களாகின்றது. ஏழு தசாப்த காலத்தைத் தாண்டிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்களில், மூன்று தசாப்த காலம் ஆயுதப் போராட்டத்தினால் பெரும் முனைப்புப் பெற்றிருந்தது.mulliwaikal-01

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து மே 18, 2009இல் முற்றுமுழுதாக அகற்றியது. விடுதலைப் புலிகளின் அகற்றத்தோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

ஆயுதப் போராட்டத்தின் முடிவு மற்றும் வெற்றி தோல்விகள் குறித்து ஆயிரத்தெட்டு முறை பேசப்பட்டுவிட்டது. பெற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று முன்னோக்கி நகர வேண்டிய கட்டத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

ஆனால், அடுத்த கட்டம் நோக்கி நகர்தலுக்கான தீர்க்கமான புள்ளியை தமிழ் மக்களும், அவர்களது அரசியல் தலைமைகளும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல் உரிமைப் போராட்டங்களின் வடிவங்கள் உலக அரசியல் போக்கினை உள்வாங்கி அதற்கேற்ப தன்னை மெருகேற்றிக் கொண்டு நகர வேண்டும். இல்லையென்றால், பேரழிவுகளை தந்துவிடும்.

ஆயுதப் போராட்டத்தின் முடிவு அதற்கான பெரும் சான்று. அப்படிப்பட்ட நிலையில், யதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு உரிமைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது. ஆனால், தமிழ்ச் சூழலில் சிந்தனை மற்றும் கருத்தியல் என்பது பெரும் குழப்ப நிலைக்குள்ளேயே இருக்கின்றது. அது, போர் சிதைவு மனநிலை போன்றது.

தமிழ் மக்கள், வட மாகாண சபைத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்ததில் புறக்காரணிகளின் அழுத்தங்கள் இருந்த போதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததிலும் குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், இவை முன்னோக்கி பாய்வதற்கான தீர்க்கமான புள்ளி அல்ல. தமிழ் அரசியல் தலைமைகள் இவற்றை தீர்மானம் மிக்க புள்ளிகளாக காட்டிவிட்டு கரைந்துவிடப் பார்க்கின்றனர்.

அது, 1970களுக்கு முந்தையை கால கட்டத்தை நோக்கி பின்நகர்வதற்கு ஒப்பானது. இப்படியான நிலை அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கருத முடியாது. மாறாக, பெரும் விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வைத்து, எமது போராட்டங்களை நீர்த்துப் போக செய்துவிடும்.

தமிழ் மக்களும் அரசியல் தலைமைகளும் இரண்டு விடயங்களில் தெளிவாக இருக்க வேண்டிய தருணம் இது. இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட உள்ளக அரசியலில் தொடர்ந்தும் தீர்மானம் மிக்க சக்திகளாக வலம் வருவதுடன், உலக அரசியலை உள்வாங்கி அதனை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி சிந்தித்து செயலாற்றுவது.

ஏனெனில், இரண்டில் ஒன்று கைமீறிச் சென்றாலும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும். உள்ளக அரசியலில் நம்பிக்கை கொள்ள முடியாது என்று, அதனைத் தவிர்த்துவிட்டு சர்வதேசத்திடம் முழுமையாக மண்டியிடுவதோ, உலக அரசியலின் போக்கினை உணராமல் இருப்பதோ நல்லதல்ல.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை வழங்குவதற்கே, இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை சர்வதேசம் அதிகம் பயன்படுத்தியது.

அதன்மூலம் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி கிடைத்துவிடும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது. அதுபோல, அவற்றை அரசியல் மாற்றங்களின் போக்கில் கையாளும் வல்லமையையும் பெற்றிருக்க வேண்டும்.

இறுதி மோதல்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளை நினைவு கூருவதற்கே இன்னமும் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ள போதிலும், அரசு இயந்திரத்தின் போக்கில் அவ்வளவு மாறுதல்கள் ஏற்படவில்லை. அப்படி ஏற்படும் என்றும் நாம் நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில், இலங்கை அரசு இயந்திரம் என்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

இன்னொரு புறம், தமிழ் பெரும் அரசியல் தலைமைகள் இளைஞர்களின் அரசியல் ஆர்வத்தை ரசிக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. ஏனெனில், தமிழ் அரசியல் உரிமைப் போராட்டக்களத்தின் அனைத்துக் கடிவாளங்களையும் தாமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

அதுதான், தம்மை தொடர்ந்தும் தலைமைகளாக வைத்துக் கொள்ளும் என்று நம்புகின்றார்கள். கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டங்களினூடு இளைஞர்கள் கொண்ட எழுச்சி என்பது, பெரும் அரசியல் தலைமைகளை போராட்டக் களத்திலிருந்து முற்று முழுதாக அகற்றியிருந்தது. அப்படிப்பட்ட நிலையில், அவர்கள் தமது இருத்தலுக்கான அச்சுறுத்தலை மீண்டும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

இளைஞர்களைப் பொறுத்தவரை, அரசியல் மீதான ஆர்வத்தை அடிப்படையில் கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட இழப்புக்களும் அது கொடுத்துள்ள வலியும் பெருமளவில் இருப்பதால் முன்னோக்கி நகர்வது தொடர்பில் தமக்குள் அதீத சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையளித்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான வழிகாட்டிகளாக இருக்க வேண்டி பெரும் அரசியல் தலைமைகள் அச்சுறுத்தலாக உணர்ந்து விலகி நிற்கின்றனர். இந்த நிலைமை என்பது அடுத்த கட்டத்துக்கான நகர்வினை நிறையவே காலம் தாழ்த்தி வைத்திருக்கின்றது.

தேர்தல்களில் வாக்களிப்பு என்கிற விடயத்தை பிரதான விடயமாக கருதும் இளைஞர்கள், அரசியல் போராட்டங்களின் செயற்பாட்டுத் தளத்துக்கும் நகர வேண்டும்.

அது, வன்முறை ரீதியாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு, கருத்தியல் ரீதியான அரசியலுக்குள் அவர்கள் வர வேண்டும். கருத்தியல்- சிந்தனை ரீதியான அரசியலின் வெற்றிடம் தான் எமது தொடர் தோல்விக்கான காரணமாகவும் கொள்ளப்படக் கூடியது.

தமிழ் பெரும் அரசியல் தலைமைகள் ஒற்றைப்படைச் சிந்தனையிலிருந்து பல் சிந்தனைகளைக் கொண்டவர்களை உள்வாங்க வேண்டும். அதுதான், தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களை தொடர்ந்தும் உயிர்ப்பாக வைத்திருக்கும். மாறாக, நெகிழ்வுப் போக்கின் பக்கம் நகர்வதை மட்டும் இலக்காக்கி செயற்பட முடியாது.

ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற விடயத்தை பெரும்பான்மையான தமிழ் இளைஞர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தனித்த நாடு என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்கிற போது, அடுத்த நிலை தொடர்பில் இளைஞர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்றில்லை.

இலங்கையின் உள்ளக அரசியல் மாற்றங்களில் தமிழ் இளைஞர்கள் பெருவாரியாக பங்களித்ததும் அதன் போக்கில் தான். அப்படியில்லையென்றால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சில புத்திஜீவி அமைப்புக்கள் வலியுறுத்தியது போன்று தேர்தல் புறக்கணிப்புக் கோசங்களின் பக்கம் அவர்கள் சென்றிருப்பார்கள்.

ஆயுத போராட்டத்தின் முடிவு, தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களில் தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பது எவ்வளவு உண்மையோ. அதேயளவுக்கு இன்னொரு உண்மையும் இருக்கின்றது.

அது, புலம்பெயர் தமிழர்களுக்கும்- புலத்திலுள்ள தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை பெருமளவு அதிகரித்திருக்கின்றது. அந்த இடைவெளி கடந்த ஆறு ஆண்டுகளில் இரு வேறு சமூகங்களின் கூறுகள் போன்று சிந்திக்கும் நிலைக்கு நகர்ந்து விட்டது.

புலம்பெயர்வு என்பது சமூகமொன்றின் வாழ்வியலை மட்டுமல்ல பாரம்பரியம் உள்ளிட்ட அடிப்படைக்காரணிகளையே அகற்றிவிடும் என்பது உலக வரலாறுதான். அதன் அண்மைக்கால உதாரணமாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களையும் சொல்ல முடியும்.

ஆனால், அதை குறையாக கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அரசியல் போராட்டங்கள் சார்பிலான முடிவுகளை புலத்திலுள்ளவர்கள் மீது புலம்பெயர்ந்துள்ளவர்கள் திணிக்கும் போது, அது வேறுமாதிரியான வடிவங்களை எடுத்து இடைவெளியின் அளவை அதிகரித்துவிடுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புத்திஜீவிகளில் அதிகமானோரின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை உள்ளூர் புத்தஜீவி அமைப்புக்கள், கட்சிகள், முக்கியஸ்தர்கள் சிலரும் பிரதிபலித்தார்கள்.

ஆனால், சாதாரண தமிழ் மகன் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலைமையும் கூட அரசியல் போராட்டங்கள் அச்சுறுத்தலான நிலையை நோக்கி செல்வதற்கான தருணங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் புத்திஜீவிகளும் அடிப்படையில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் புலத்திலுள்ள (இங்குள்ள) தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டே அடுத்த கட்டம் நகர வேண்டியிருக்கின்றது. ஆனால், அந்தப் புள்ளியை புரிந்து கொள்வதில் தொடர் சிக்கல் இருக்கின்றது என்பதை கடந்த கால நடவடிக்கைகள் காட்டி நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்கள் தொடர்பிலான பார்வைஃகருத்தியல் கொழும்பு, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு என்கிற பிராந்தியங்களாக பிரிந்து நிற்கின்றது.

புலத்துக்குள்ளேயே புரிதலிலும் சிந்தனையிலும் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்ற நிலையில், நிலத் தொடர்புகள் அற்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கின்றவர்களுடனான கருத்தியல் வேறுபாடு இயல்பானதுதான்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதை மட்டுமே இப்போது இலக்காக்கிக் கொண்டிருக்க முடியாது. மாறாக, இழக்கப்பட்டுவரும் கல்வி, பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

ஆயுதப் போராட்டங்களின் கோலொச்சுகை தமிழ் மக்களின் பொருளாதாரம், கல்வி எனும் பெரும் சொத்துக்களை குறிப்பிட்டளவில் அழித்துவிட்டது. அதனை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பிலான அக்கறையை புலத்திலுள்ளவர்களும் புலம்பெயர்ந்துள்ளவர்களும் கொள்ள வேண்டும்.

மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துவிட்ட போதிலும் மீள் எழுச்சி தொடர்பில் நாம் சிந்தித்தாலும், செயற்பாட்டளவில் தொடர்ந்தும் பின்னோக்கியே இருக்கின்றோம்.

‘அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களின் போது இழப்பு சகஜமானதுதான்’ எனும் கருத்தியல் தமிழ் மக்களிடையே பலமாக இருக்கின்றது. ஆனால், அந்த இழப்புக்கள் இனமொன்றின் அடிப்படையையே ஆட்டம் காண செய்யும் அளவுக்கு இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தும்- அதற்குள் சிக்கியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். அவர்களை மனதார நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது பெரும் கடமை. அந்தக் கடமையை ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டும்.

அதேபோல, எந்தவித தொய்வுமின்றி அரசியல் உரிமைகள், அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்களின் அடுத்த கட்டம் நோக்கி முன்னோக்கி பாயவும் வேண்டும். அதுதான், இழக்கப்பட்ட உயிர்களுக்கு நாம் செலுத்தும் பெரும் காணிக்கையாக இருக்கும்.

[ தமிழ் மிரர் ]

Advertisements