மே-18 நினைவேந்தல்! எம் உணர்வுகளால் உறவுகளுக்கு அஞ்சலி: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

கொத்துக் கொத்தாக எம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப்போரின் ஆறாத ரணங்களைச் சுமந்ததாக மீண்டும் எம் கண் முன்னே விரிந்துள்ளது. இந்த வலி சுமந்த வாரம். இழப்புக்களையும் ஈவுகளையுமே நிலையாகப் பெற்ற எம் இனத்தை ஒரே வட்டத்துக்குள் அடக்கி, தொடர்கிறது அடக்குமுறை நெருப்பு.

எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இன்றளவும் நியாயப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் தான் ஆண்டுதோறும் வந்து செல்கிறது வலி சுமந்த வைகாசி.MAY-18-UNI Jaffna

மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டுப் பெறுவது மனிதத்தனம். அதைக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம். ஆனால் நீதி கோரிய எம் உறவுகளை நிற்க வைத்துச் சுட்டதும், அடைக்கலம் காணாத மக்களை அடக்கி வைத்து அழித்ததுவும் இவ்வுலகு கண்ட ஆறாத கொடுமை.

எம் நெஞ்சிலே விழுந்த இந்தப் பேரிடி ஜென்மங்கள் கடந்தாலும் பரிணாமம் அடையாது. எம் சந்ததிகளின் இதயங்களிலே என்றென்றும் இருக்கத்தான் போகிறது.

அந்த வகையில் எம் உறவுகளின் இழப்பினையும், ஈவினையும் தாங்கியதான இந்த வலி சுமந்த வாரத்தின் இறுதி நாளினை எங்கள் நெஞ்சத்தில் சுடரேற்றி, அகமுருகி உணர்வுகளால் அஞ்சலிக்கப்பட வேண்டும்.

எம் இரத்த உறவுகளை நினைவுகூருவது எமது கடமை. எமக்காய் மாண்டவர்களை நெஞ்சிருத்துவது எமது உரிமை.

அன்புக்குரிய எமது உறவுகளே, அழுவதற்குக் கூட உரிமை மறுக்கப்பட்டு அடக்கி அழிக்கப்பட்ட எம் சொந்தங்களை நினைந்து சுடர் ஏந்துவோம். இதில் எந்தவொரு அரசியல் சாயங்களுக்கும் இடமில்லை.

அந்த வகையிலே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே-18ஆம் திகதி திங்கட்கிழமை மாபெரும் ஒருங்கிணைப்பாய் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் நினைவேந்தலில் உதிர்க்கப்பட்ட எம் உதிரத்து உறவுகளுக்கு உணர்வுகளால் அஞ்சலி செலுத்த அனைவரையும் உரிமையோடு மாணவர் ஒன்றியம் அழைக்கின்றது.

இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements