படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்

அண்ணாவின் 6ம் ஆண்டு நினைவு நாள்.

Col Vasanthan 2

தாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான்அன்பழகன் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார்.

தமிழ் மக்கள் படும் இன்னல்கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை தெரிந்தெடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த அன்பழகன் வசந்தன் என்ற பெயருடன் பலகளம் கண்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் ,அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.
பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாதுகாப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார். யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது. சத்தமின்றி எதிரியை கொல்லுவது. உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.

தலைவனுக்கு பக்கபலமாய் நிற்க பல போராளிகளை பயிற்சி கொடுத்து உருவாக்கிவிட்ட ஒரு பெருமைக்குரிய ஆசான் வசந்தன். இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் மாஸ்ரர் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார். தமிழீழத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானாக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக அந்த பயிற்சியின் திறண்களை அந்த திரைப்படத்தின் மூலம் காட்டி நின்றார்.

இப்படியாக தன் திறமைகளை வெளிக்காட்டி பல போராளிகளை வளர்த்தெடுத்த அந்த ஆசானுக்கும் ஒரு துணையினை தேடிக்கொடுக்க தலைவர் அவர்கள் முடிவெடுக்கிறார். தாயகமண்ணின் விடுதலைக்காய் களமாடும் மங்கையவள் சத்தியவதியை தேர்ந்தெடுத்த தலைவர் அவர்கள் வசந்தன் மாஸ்ரருக்கு திருமணம் முடித்து வைக்க முடிவெடுத்தார். 2001 ஆண்டு அன்பழகன் என்ற வசந்தனுக்கும் சத்தியவதி என்ற சத்தியாவுக்கும் இனிதே திருமணம் முடிந்தது.

இல்லறத்துள் நுழைந்தாலும் தாயகமண்ணின் பற்றுக்குறையாத வசந்தன் அவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்ததைவிட போராளிகளுடன் வாழ்ந்த நாட்களே அதிகம். தன் வாழ்வைவிட தாயக விடுதலைக்காய் பெரிதும் பாடுபட்டார். இல்லற வாழ்வின் மகிழ்வில் இனிதான இரு பெண்குழந்தைகளுக்கு தந்தையானார். குடும்பப்பாரத்தை தன் துணைவியிடம் கொடுத்துவிட்டு தேசத்தின் சுமையை தன் தோள்மீது சுமந்து நடந்தவர் வசந்தன் மாஸ்டர்.

இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு இறுதிவரைக்கும் உறுதிதளராது போராடிய மாவீரன். 2009 அந்த இறுதி நாள் ஏன் வந்ததோ.இறுதி நாட்களிலும் தன் மனைவியையும் குழந்தைகளையும் உறவுகளுடன் அனுப்பிவிட்டு தன் கடமையில் கண்ணாயிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரிவர செய்து அந்த வெடிமருந்து தளத்தை காக்க போராடி இறுதிப்போரில் 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.

இன்றும் அவரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய தேசபக்தியுடன் அவர் வாழ்கின்றார். எங்கள் ஆசானே ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோ உங்கள் முகம் மலர்ந்திடும்.