இதயத்தைக் கருக்கும் மரணச் செய்திகள்

இழப்புகளைத் தாங்கும் வல்லமையை இழந்து போனவர்கள் நாங்கள். அந்த அளவிற்கு யுத்தக் கொடூரம் கடந்த முப்பது ஆண்டுகளாக எங்களை வதம் செய்தது.

செல் வீச்சில் விமானக் குண்டு வீச்சில், இராணுவம் சுட்டதில் படகில் வந்தவர்களை கண்டபாட்டில் கடற்படையினர் வெட்டியதில் காடையர்கள் எரியூட்டியதில் தமிழர்கள் பலி என்ற செய்திகளையே மிக நீண்டகாலமாக நாம் அனுபவித்து வந்தோம்.

இது தவிர, இனம் தெரியாத சூட்டுச் சம்பவங்களும் கடத்தல் நாடகங்களும் தமிழர்களின் இதயங்களைக் கருக்கி கருவாடாக்கியது. இந்த வேதனைக்கு எல்லாம் குறியீடு வைப்பது போல, வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த நெட்டூரம் அமைந்து போயிற்று.

இப்படியாக இழப்புக்களையும் அது பற்றிய செய்திகளையும் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போன எமக்கு போருக்குப் பின்பான காலமாவது ஆறுதலைத் தரும் என்றால், அந்தோ கொடுமை! மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் துடிதுடித்துப் பலி, வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு, நீரில் மூழ்கி இளைஞர் பலி, தாய் மரணம், புகையிரத வண்டி மோதி நால்வர் சாவு என்ற அவலச் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

இந்தச் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் இறைவா! ஏன்? இப்படி. யுத்தத்தால் அழிந்தோம். இப்போது வாகன விபத்தால், மின்தாக்கத்தால் கடவுளே! எங்களைக் காப்பாற்று என்று ஏங்கி அழுவதைத் தவிர வேறு எந்த வழியும் தெரிவதாக இல்லை.

இவை ஒரு புறம் நடக்கும் அதேவேளை, வாள்வெட்டுக் கலாசாரமும் எங்கள் இயல்பு வாழ்வுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகி வருவது கண்டு வேதனைப்படாமல் எங்ஙனம் இருக்க முடியும்?

ஒட்டுமொத்தத்தில் எங்கள் வடபகுதி மண்ணில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் எங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றில் இருந்து எங்கள் இனத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமானதாயினும் இதனைச் செய்வது யார்? என்ற கேள்வி எழும்.

வடக்கில் தமிழர் அரசு உள்ளது என்று சொல்வதைத் தவிர, வேறு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அந்த அரசால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

மாறாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதாவது நம்பிக்கை வைக்கலாம் என்றால், அங்கு நடக்கின்ற திருகுதாளங்களை நினைக்கும் போது, தமிழ் இனம் நிம்மதியாக வாழ்வதற்கான எந்த அறிகுறிகளும் அடையாளங்களும் தெரியவில்லை.

சுருங்கக்கூறின் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் பதவிகளைத் தக்க வைப்பதற்காக தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களுக்கும் இனவாத சாயம்பூசி அத்திட்டங்களைக் கந்தறுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.

தங்கள் குடும்பங்களை வெளிநாடுகளில் இருத்தி விட்டு, இங்கு வந்து, இங்கிருக்கும் மக்களைக் குழப்பி தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதில் இவர்கள் காட்டும் அக்கறையை நினைக்கும் போது நெஞ்சம் வெடிக்கும்.

போரினால் அவலப்பட்ட தமிழ் மக்கள் இப்போது விபத்துகளாலும் கலாசார பிறழ்வுகளாலும் பல்வேறு அவலங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்நியன் படத்தில் வருகின்ற ஒரு காட்சிக்கு ஒப்பானதாக இருப்பதைக் காணமுடிகிறது.

இத்தகைய துன்பங்கள் களையப்பட வேண்டும். இதற்காக ஒரு சமூகப் பாதுகாப்புத் தளம் கட்டி எழுப்பப்படுவது அவசியம்.

இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமையும் அரச நிர்வாகிகளும் இணைந்து செயற்பட வேண்டும். இவற்றை விட்டு தேவையற்ற விடயங்களை கதைத்தால் அவலமான செய்திகளை தமிழ் இனம் கேட்கின்ற, அனுபவிக்கின்ற துன்பம் தொடரவே செய்யும்.

Advertisements