மணலாறு என்கிற வரலாறு!

பிரபாகரன் – என்று எழுத ஆரம்பித்துவிட்டால், அதன்பிறகு வேறெந்தப் புறமும் திரும்ப முடியாது போய்விடுகிறது. மன்னார் பிரபாகரனின் 75வது அகவை பற்றி அகமகிழ்வுடன் எழுதி முடித்த வேகத்தில், மணலாற்றுப் பிரபாகரன் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது எனக்கு!

பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை தான் இன்று அவரது அடையாளமாக ஆகிவிட்டது. உண்மையில், 4ம் வகுப்பிலிருந்துதான் வல்வெட்டித்துறையில் படித்தார் அவர். பிரபாகரன் பிறந்தது யாழ்ப்பாணம் இணுவில் மருத்துவமனையில்! அது ஒரு இயல்பான செய்தி. ஆனால், அந்த மனிதன் மணலாற்றில் மறுபிறப்பு எடுத்தது, ஒரு வரலாறு.Brigadier Aathavan , praba

பிரபாகரன் என்கிற ஒற்றை உயிரைக் கவர்வதற்காக, இந்திய அமைதி காப்புப்படையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை என்கிற முப்படைகளும் மணலாற்றை முற்றுகையிட்டன.

பிரபாகரனை சுற்றிவளைத்துப் பிடிப்பது, அல்லது சுட்டுக் கொல்வது….. இதுதான் இந்தியப் படையின் பூவா தலையா லட்சியமாக இருந்தது.

“மணலாற்றில் இந்தியா ‘கார்பெட் பாமிங்’ செய்யப் போகிறது…. அப்படித் தாக்கத் தொடங்கினால் பிரபாகரனின் சாம்பல் கூட கிடைக்காது” என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்த பிரபாகரனின் தோழர்களிடமே பீதியைக் கிளப்பியது இந்திய உளவுத் துறை.

மணலாற்றை முற்றுகையிட்ட இந்திய அமைதி காப்புப்படையினரின் எண்ணிக்கை ஏறக்குறைய 40,000. இருபதுக்கும் மேற்பட்ட வானூர்திகள், மணலாற்றுக் காட்டின்மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசிக் கொண்டிருந்தன. இவ்வளவு கடுமையான முற்றுகைக்குள் இருந்த புலிகள், பிரபாகரனுடன் சேர்த்து சில நூறுபேர் மட்டுமே!

‘பிரபாகரன் சாவதற்கு இரண்டே வழிதான் இருக்கிறது. இந்தியப் படைகளின் குண்டுவீச்சில் சாக வேண்டும். இல்லையென்றால் குப்பி கடித்துச் சாக வேண்டும்’ என்றெல்லாம் செய்தி பரப்பி, தங்கள் பங்குக்கு சலங்கை கட்டிக்கொண்டு ஆடின இலங்கை ஊடகங்கள். (தமிழ்நாட்டு ஊடகங்கள் சில இதைக்காட்டிலும் மோசமாக ஆட்டம்போட்டன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!)

உண்மையிலேயே மணலாற்றில் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.

மணலாற்றுக்குள் இருந்த பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் உணவு மற்றும் மருந்துகள் கொண்டுசெல்லப்படுவது கூட தடுக்கப்பட்டிருந்த நிலை. அடர்ந்து படர்ந்த அந்தக் கானகத்தில் மறைந்திருந்தவர்கள் பட்டினியாலும் நோயாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஒருபுறம் – மணலாறு முற்றுகையை வலுப்படுத்திக் கொண்டே, மறுபுறம் – தமிழகத்திலிருந்த பிரபாகரனின் நண்பர்களிடம் பேரம் பேசியது இந்தியா.

‘பிரபாகரன் சரணடைய வேண்டும். இந்திய அமைதி காப்புப் படையிடம் பெயரளவுக்கு ஆயுதங்களை ஒப்படைத்தால் போதும். ராஜீவ் – ஜெயவர்தன இடையிலான ஒப்பந்தத்தை ஏற்பதாக அவர் அறிவிக்க வேண்டும்.

புனர்வாழ்வுப் பணிகளுக்காக 500 கோடியும், புலிகள் இயக்கத்துக்கென 200 கோடியும் விடுதலைப் புலிகளிடம் வழங்கப்படும். பிரபாகரனும் தளபதிகளும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்’ – இதுதான் இந்தியா பேசிய டீல்.

பிரபாகரனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சிய புலிகளின் பிரதிநிதிகளில் சிலர், இந்த பேரத்துக்கு உடன்படுவதைத்தவிர வேறு வழியில்லை என்று நினைத்தனர். இந்த பேரத்தை ஏற்பது புத்திசாலித்தனம் – என்று நினைத்தவர்களும் இல்லாமலில்லை.

அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த ஆயுதங்களின் மொத்த மதிப்போடு ஒப்பிட்டால், 200 கோடி என்பது அதைப்போல பல மடங்கு. ‘இந்த பேரத்துக்கு ஒப்புக்கொள்வதால் நமக்கு எந்த இழப்பும் இல்லை.

இந்தியாவுடன் மோதவேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டால், இந்த 200 கோடியைக் கொண்டே ஆயுதங்களை வாங்கிக் குவிக்கமுடியும்’ என்று மணலாற்றுக்குள் மறைந்திருந்த வேதாளனுக்குத் தகவல் அனுப்பினார்கள் அவர்கள்.

இந்தியப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவி, சுற்றிவளைத்தாவது மணலாற்றுக்குள் போய்வந்து கொண்டிருந்த தளபதிகள் சிலர், வேறொரு யோசனையை பிரபாகரனுக்குத் தெரிவித்தனர். ஒரு குறிப்பிட்ட பாதை வழியாக பிரபாகரனைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றுவிட முடியும் என்பது அவர்களது திட்டம். பிரபாவின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பது அவர்களது வாதம்.

தப்பிச் செல்லும் யோசனை, 200 கோடி வாங்கிக்கொண்டு சரணடையும் யோசனை – இரண்டையுமே பிரபாகரன் ஏற்க மறுத்துவிட்டதுதான் மணலாற்றின் வீரஞ்செறிந்த வரலாறு.

பணம் சலுகைகளை விட, தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள்தான் முக்கியம். அதை உறுதி செய்யும் வாக்குறுதியை இந்தியாவிடம் எழுத்துமூலம் கேளுங்கள் – என்கிற பிரபாகரனின் பதில் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா அதை ஏற்கமறுத்தது.

பணத்தையும் கொடுக்கிறோம்…. அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரும் வேலையையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பது இந்தியத் தரப்பின் பதிலாக இருக்க, பிரபாகரன் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

தப்பிசெல்ல தெரிவிக்கப்பட்ட யோசனையை ஏற்க மறுத்தபோது பிரபாகரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கோடி பெறுமதி மிக்கது. (அதனுடன் ஒப்பிட்டால், இந்தியா கொடுப்பதாகச் சொன்ன தொகை ஜுஜூபி.)

“ஒரு கோழையைப் போல நான்மட்டும் தப்பிச் செல்வதைக் காட்டிலும், ஒரு வீரனாகப் போரிட்டுச் சாவதையே விரும்புகிறேன். இந்த மணலாறு, பண்டார வன்னியன் உலவித் திரிந்த கானகம். இங்கிருந்தபடி போராடி வெல்வேன்…. அல்லது, வீரச் சாவடைவேன்… எனக்குப் பிறகும் இந்த விடுதலைப் போர் தொடரவேண்டும். ஒரு பிரபாகரனோ பிரபாகரியோ அதனைத் தலைமையேற்று நடத்த வேண்டும்” என்கிற பிரபாகரனின் வார்த்தைகள் முதுகெலும்பு இருக்கிற எவரையும் நிமிர்ந்தெழச் செய்வது.

மணலாற்று முற்றுகையை மேலும் இறுக்கிய இந்தியா, ‘உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் பிரபாகரனை பேரத்துக்கு உடன்படச் சொல்லுங்கள்’ – என்று மிரட்டியது. அது சர்வநிச்சயமாக ‘பிளாக் மெயில்’.

திரைப்படங்களில் வருகிற ஒரு மூன்றாம்தர வில்லன், நம் வீட்டுக் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தபடி, ‘ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து போடுவியா மாட்டியா’ என்று மிரட்டுவான் பாருங்கள்….. அந்தக் கேவலமான அயோக்கியனின் கோழைத்தனத்துக்கும் இந்தியக் கோழைத்தனத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பிளாக் மெயில் அரசியலை ஒருபோதும் ஏற்காத மகாத்மா காந்தியின் தேசமா இது – என்கிற கேள்வியோடு நின்றுவிடப் போவதில்லை வரலாறு. ‘இது ஒரு தேசமா’ என்று கேட்கவேண்டிய நிலையைக் கூட ஏற்படுத்திவிட்டுத்தான் நமது ‘நேத்தா’க்கள் ஓய்வார்கள் போலிருக்கிறது.

இந்தியாவின் பேரம் குறித்து தமிழகத்திலிருந்து தனக்குத் தகவல் தெரிவித்து வந்தவர்களுக்கு பிரபாகரன் அனுப்பிய முத்தாய்ப்பான செய்தி மற்றெல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானது.

தங்களுக்கு சலுகைகளையும் பணத்தையும் கொடுத்துவிட்டு, லட்சோப லட்சம் தமிழர்களின் இடுப்புத் துணியை உறுவ ராஜீவின் இந்தியா முயற்சிப்பதைத் தனது தோழர்களுக்கு உணர்த்த, அந்தச் செய்தியை அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

“நான் செத்தபிறகு யாரென்றாலும் மொத்தமாகவும் சில்லரையாகவும் இயக்கத்தையும் இனத்தையும் யாரிற்கும் விற்கலாம்” என்பது அந்தச் செய்தி. அதன் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், ஈழத் தமிழினத்தின் வாழ்க்கை இருந்தது.

பிரபாகரனும் அவனது தோழர்களும் மணலாற்றிலிருந்து தப்பித்ததும், பிரபாகரனை பிளாக் மெயில் செய்ய முயன்ற ராஜீவின் படை தப்பிப் பிழைத்து இந்தியா திரும்ப வேண்டியிருந்ததும் இந்த வரலாற்றின் பிந்தைய பகுதி. இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.

பிரபாகரனும் அவனது தோழர்களும் தங்கள் சொந்தத் தாய்மண்ணுக்காகப் போராடினார்கள், இந்திய ராணுவம் ராஜீவ் என்கிற வரலாற்று அறிவற்ற ஒரு மனிதரால் கூலிப்படை ரேஞ்சுக்கு சிறுமைப்படுத்தப்பட்டு இலங்கைக்காகப் போராடிக் கொண்டிருந்தது.

ஒரு அரசியல்வாதியின் அறியாமையின் காரணமாக என் தேசத்தின் ராணுவம் அதன் பண்டைப் பெருமைகளையெல்லாம் இழந்து எவ்வளவு அவமானப்பட்டு இலங்கையிலிருந்து திரும்ப நேர்ந்தது என்பதை, இப்போதுகூட வேதனையுடன்தான் நினைத்துப் பார்க்கிறேன் நான்!

பிரபாகரன், தமிழர்களின் அடிப்படை அரசியல் விருப்பங்களையும் அவர்கள் அடைய விரும்பிய உரிமைகளையும் முழுமையாக அறிந்துவைத்திருந்தார். அதனால்தான், அந்த விருப்பங்களைக் குழிதோண்டிப் புதைப்பதுடன் நின்றுவிடாது, ‘உடன் பால்’ வைக்கவும் வகை செய்த ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தார்.

அவரது ஒழுக்கம் – கட்டுப்பாடு – கொள்கையுறுதி ஆகியவற்றை அறிந்த தமிழீழ மக்கள், அவரைத்தவிர வேறெவரையும் தங்கள் பிரதிநிதிகளாக ஏற்க மறுத்தனர். அடிப்படையில் பிரபாகரன் மீது ராஜீவுக்கு ஏற்பட்ட வெறுப்புக்கு இதுதான் காரணம்.

வெள்ளைக்கொடியுடன் இந்திய முகாமுக்கு வரும் பிரபாகரனைச் சுட்டுக் கொல் – என்று இந்திய ராணுவத்துக்கு உத்தரவிடும் அளவுக்கு ராஜீவின் இந்தத் தனிமனித வெறுப்பு போய்விட்டதெல்லாம் பழைய கதை. நல்லவேளையாக, இந்திய ராணுவ அதிகாரிகள் அந்த நயவஞ்சகத் தாக்குதலுக்கு உடன்பட மறுத்துவிட்டனர்.

ஒருவேளை ராஜீவின் உத்தரவுக்குப் பயந்து, இந்திய அதிகாரிகள் நயவஞ்சகமாக பிரபாகரனைச் சுட்டுக் கொன்றிருந்தால், இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்குமா? இந்தக் கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு.

பிரதமர் பதவியில் இருந்த ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக போட்ட ஒரு உத்தரவை நிராகரித்தன் மூலம், இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றிய ராணுவ அதிகாரிகளுக்குத் தான் தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இதைப் பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருப்பவர், வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங். அன்னா ஹசாரே ஜோதியில் ஐக்கியமாகி பேசிக் கொண்டேயிருந்த வி.கே.சிங், மோடியின் கோட் பித்தானாய் மாறிய பிறகு கூட உளறலை நிறுத்தவில்லை. (கோட் மாதிரிதானே பித்தானும் இருக்கணும் – என்கிறீர்களா? நோ கமென்ட்ஸ்!)

இந்திய அமைதிப் படையினர் பலமுறை பிரபாகரனை அழிக்கும் அளவுக்கு நெருங்கியிருந்ததாகவும், ஆனால் அவரைத் தப்பிச் செல்ல விடும்படி ஒவ்வொரு முறையும் உத்தரவிடப் பட்டதாகவும் வி.கே.சிங் கூறியிருப்பதுதான் அவரது உளறல்களில் லேட்டஸ்ட்!

வேறு எந்த அமைச்சரின் உளறலாக இருந்தாலும் இதை நாம் அலட்சியப்படுத்திவிட முடியும். முன்னாள் ராணுவத் தளபதியாகவும் இருந்தவர் என்பதால் அப்படிச் செய்ய முடியவில்லை.

வி.கே.சிங்கின் உளறல் தொடர்பான செய்திக்கட்டுரை ஒன்றை, கொழும்பிலிருந்து வெளிவரும் ‘வீர கேசரி’ வெளியிட்டிருக்கிறது. ‘பிரபாகரன் மட்டுமே ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததால் அவர்மீது இந்தியாவுக்குக் கடும்கோபம் இருந்தது… அவரை அழிப்பதே இந்தியப் படையின் நோக்கமாக இருந்தது….

பிரபாகரனை அழித்துவிட்டால் மற்ற இயக்கங்களைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று இந்தியா நம்பியது….. மணலாற்றில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் பிரபாவைக் கொல்லும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டன…. அவரைத் தப்பவைக்க ஒருபோதும் இந்தியா நினைத்திராது’ என்றெல்லாம் விலாவாரியாக விவரிக்கிறது அந்தக் கட்டுரை.

பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனை நயவஞ்சகமாகவோ, 40ஆயிரம் படையினரை ஏவியோ கொல்ல ராஜீவ் முயன்றதுதான் உண்மையான வரலாறு. இந்த உண்மையை மறைத்து பொய்க் கயிறு திரிக்க வி.கே.சிங் என்கிற பொறுப்புள்ள அமைச்சர் முயல்வது ஏன்? இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எங்கள் தொப்புள்கொடி உறவு மட்டுமில்லை பிரபாகரன். எம் இனத்தைத் தலை நிமிர்த்திய மனிதன். 40 ஆயிரம் படையினரால் கட்டப்பட்ட இரும்புச் சமாதியை உடைத்துக் கொண்டு வெளியேறிய மாவீரன்.

எல்லா வகையிலும் அவனைக் கொல்ல முயன்ற இந்தியா தான் அவனுக்கு உயிர்ப் பிச்சை போட்டது என்கிற பச்சைப் பொய்யைப் பரப்ப எவர் முயன்றாலும், அவர் ஆகப் பெரிய அமைச்சராகவே கூட இருந்தாலும், அவரது சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

அந்த உரிமையுடன் கேட்கிறேன்….

மிஸ்டர் சிங்….

பிரபாகரனைத் தப்பவைக்க இந்தியா உத்தரவிட்டது – என்கிற உங்களது வாதத்துக்கு என்ன ஆதாரம்? அதை உடனே வெளியிடுங்கள்….! அதை வெளியிட முடியாதென்றால், இப்படியொரு பச்சைப் பொய்யை அமைச்சரவையில் இருந்துகொண்டே பரப்புவதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, பதவியிலிருந்து வெளியேறுங்கள்!

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com