கடற்கரும்புலி மேஜர் கதிரவன்

BT Maj Kathiravanஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்….

வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள் கொடுக்க, சின்னவன் இவனின் விளையாட்டுத்தனமும் குழப்படிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தன.

வேலையால் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் அம்மாவுக்கு வீட்டில் ஏதாவது புரளி செய்து வைத்திருப்பான் அவன்.

மரத்தில் ஏறி விழுந்து காலை உடைத்திருப்பான். அல்லது கத்தியால் கையை வெட்டி வைத்திருப்பான். அதுகும் இல்லையேல் யாருடனும் சண்டை பிடித்து அடிபட்டிருப்பான். இப்படியான குழப்படிக்காரன் அவன்.
ஒரு இடத்தில் ஒரு நிமிடம் என்றாலும் வெறுமனே ஓய்ந்திருக்க அவனால் முடியாது.

இந்தியப்படைகள் நமது மண்ணை வல்வளைப்புச் செய்திருந்த காலம் அது.

இந்தியப் படைகளின் கண்ணில் சிக்காது தலைமறைவாய்ச் செயற்படும் புலி வீரர்களிற்கு பாதை காட்டி இந்தியப்படைகளின் நடமாட்டம் இருக்கின்றதா? இல்லையா? என அவதானித்துச் சொல்லும் பெரும் பணியையும் அவன் செய்து கொண்டிருந்தான்.

இவனது அண்ணனும் ஒரு போராளி. ஒருமுறை அண்ணனுக்கு வீதியில் இந்தியப்படைகள் நிற்கின்றார்களா? இல்லையா? என அவதானித்து வந்தவன் இந்தியப்படைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வீதி கடக்க உதவிய போது திடீரென்று அந்த இடத்திற்கு இந்தியப் படையினன் வந்து விட்டான்.

இவர்கள் இருவரும் அவர்களைக் கவனிக்காதவர்கள் போல் சென்று கொண்டிருக்க இந்தியப் படையினன் அண்ணணை அழைத்தான். அண்ணனிடம் எதுவும் இல்லை. அண்ணன் செல்ல இந்தியப் படையினன் தன் கையில் வைத்திருந்த சுடுகருவியால் அண்ணனுக்கு அடிக்க இவனுக்கு சினம் தலைக்கு ஏறிவிட்டது. ஓடிப்போய் அந்த இந்தியப் படையினன் வைத்திருந்த சுடுகருவியைப் பறித்து இந்தியப்படையினனுக்கு அடித்துவிட்டு அண்ணணையும் கூட்டிக்கொண்டு ஓடி விட்டான்.

அன்றிலிருந்து அவன் தலைமறைவாய் வாழவேண்டிய சூழல்.
இந்தச் சூழலில் தான் தேச விரோதக் கும்பல்களால் வலுக்கட்டாயமாகப் பிடிபட்டு பயிற்சிக்கு என விடப்பட்டிருந்தான் அவன். அவனோடு கூடவே இன்னும் பலர்.

சுடுகருவிகள் கொடுக் கப்பட்டு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த போது
எப்படித் தப்பிச்செல்ல………… என்ற சிந்தனையில் அவன்.
அவனைப் போலவே இன்னும் சிலர்…………..

தக்க நேரம் பார்த்து சுடுகருவிகளோடு தப்பி ஓடி விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போதுதான் அவனுக்குள் மகிழ்வு துளிர் விட்டது.
விடுதலைப் புலியான போது மாவீரன் தன் அண்ணன் கதிரவனின் பெயரையே அவன் தனக்கும் சூட்டிக் கொண்டான்.

இப்போது அவன் ஒரு கடற்புலி.
அதுவும் நீரடி நீச்சல் கரும்புலி.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் திறவு கோல்களில் ஒருவனாக அவன்.

தன் நேசமக்களிடம் – தேசத் தலைவனிடம் தன் உறவுகளிடம் என எல்லோரிடமும் இறுதி விடை பெற்று இப்போது இலக்கிற்காக அவன் நகர்ந்து கொண்டிருக்கின்றான்.

இருள் சூழ்ந்த அந்தப் பொழுதில், இடியும் மின்னலும் முழங்க மழைதூவ கடலோடு கடலாய் அவர்கள் எதிரியின் கண்காணிப்புப் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து எதிரி விழிப்படைந்து விடா வண்ணம் நீரின் கீழ் நீந்தி தங்கள் இலக்குகளை இனங்கண்டு விட்டார்கள்.

இன்னும் 30 நிமிடங்கள்……

மிக நிதானமாக எதிரி விழிப்படையா வண்ணம் கப்பலின் அடியில் ஒருவாறு குண்டுகளைப் பொருத்தியாயிற்று இன்னும் 20 நிமிடங்கள்…………..

தம் சாவுக்கான ஒவ்வொரு நிமிடங்களையும் எண்ணியபடி தேசத் தலைவனையும், மக்களையும் மனதில் நினைத்தபடி கப்பலின் அடியில் குண்டை அணைத்தபடி அவர்கள்.

ஆடாமல், அசையாமல், விலகாமல் குண்டைப் பிடித்தபடி கடல் நீரில் தம்பிடித்தபடி ஒவ்வொரு நிமிடங்களையும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடைசி மணித்துளி………..

திருமலைத் துறைமுகம் அதிர்ந்தது…… கப்பல் தாண்டது.
ஒரு நிமிடம் ஓய்ந்து போய் இருக்க முடியாதவன். நம் தேச விடுதலைக்காக, போரியலில் ஒரு திருப்பு முனைக்காக 30 நிமிடங்கள் தன் சாவுக்கான ஒவ்வொரு நொடியையும் எதிர்பார்த்துப் பார்த்துக் காத்திருந்து வீரவரலாற்றைப் படைத்தான்.

நினைவுப்பகிர்வு:- பிரமிளா.
விடுதலைப் புலிகள் (04.09.08) இதழிலிருந்து………..

Advertisements