அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டிவை என்ன ?

‘ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் ” இது வள்ளுவர் வாக்கு.சம்பந்தன் ஜயா 1977 இல் அரசியலுக்குள் வருவதற்கு முதல் பிரபலமான வழக்கறிஞராக விளங்கியவர்.சட்டம் சம்பந்தமாகக் கரைத்துக் குடித்தவர்.முழுக் கவனமும் அதிலேயே இருந்ததனால் பாவம் அவருக்கு தமிழைக் கரைத்துக் குடிக்க குறிப்பாகத் திருக்குறளைப் படிக்க அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.அது அவரது தவறல்ல எல்லாம் தமிழினத்தின் தலைவிதி. குறிப்பாகத் தமிழ் அரசியல் கைதிகளின் தலைவிதி.sampanthan_sumanthiran traitors

இரண்டாவது விடயம் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறிய கூற்று ‘ இவர்களை விடுதலை செய்ய வேண்டாமென தமிழ்த்தரப்பு என்னைக் கேட்டுக்கொண்டது.அவர்களின் பெயரைச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது.”

மூன்றாவது விடயம் 19 ஆம் அரசியல் யாப்புத் திருத்தம் மீதான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறும் இத் திருத்தச் சட்டம் நிறைவேறியதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறியிருப்பது.

இம் மூன்று விடயங்களும் தெரிவிக்கும் ஒரே விடயம் கசப்பான விடயம் அரசியல் கைதிகள் விடுதலை ஆறப்போடப்பட்டுள்ளது.ஏன் நாறப்போடப்பட்டுள்ளது என்பதைத்தான்.இதில் முதலாவது விடயம் ஒரு விடயத்தைச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலுடைய ஒருவரிடமே அவ்விடயத்தைக் கையாளும் பொறுப்பைக் கையளிக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் வழிமுறை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை மக்களால் தெரிவு செய்யப்படாத — எமது மக்கள் மத்தியில் வாழாத — தமிழரின் போராட்டங்களின் போது அடிவாங்காத இழப்பின் வழி தெரியாத எதிரிக்குத் திருப்பியடிக்காத சுமந்திரனிடம் ஏகபோகமாக சம்பந்தன் ஜயா கையளித்து விட்டார்.கருணை இல்லத்தின் தலைவராக கசாப்புக் கடைக்காரர் நியமிக்கப்பட்டது போன்ற நிலை இது.இந்த விசயத்தை சீரியஸாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இந்த நியமனம் அப்பட்டமாகக் காட்டுகிறது.இப் பொறுப்பைக் கையேற்ற பின்னர் சுமந்திரனால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்று சொல்வதை விட அசைக்க அவர் விரும்பவில்லை என்பதே கசப்பான உண்மை.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தமக்கென்று வழக்கறிஞர்கள் அணியை வைத்துள்ளன .தமது இனத்தின் நலன் கட்சியின் நலன் தொடர்பாக இந்த அணி கட்சிக்கு வழிகாட்டும். ட்றயல் அட் பார் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது மிகப்பெரிய வழக்கறிஞர் அணியொன்று திரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கப் போராடியதை எமது வரலாற்றிலும் நாம் கண்டோம். ஆனால் இன்று ஏன் இந்த வறுமை ?

தென்னிந்தியத் திருச்சபை தொடர்பான வழக்கொன்று கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்றது.இதில் ஒரு தரப்பினருக்காக வழக்காடிய சுமந்திரன் மறு தரப்பினரை ‘ இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் ” என்று சுட்டிக்காட்டினார் நீதிபதியிடம். அப்படிப்பட்டவரிடம் தான் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.சுமந்திரன் மூலமாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்ப்பது பட்டமரத்தில் பால் எடுக்கும் கருவாட்டில் இருந்து இரத்தம் எடுக்கும் முயற்சியாகும்.அவர் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் படம் காட்டியதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

நான் அரச தரப்புடன் கிரிக்கெட் ஆடியது ராஜதந்திரம். நான் கோத்தபாயவுடன் டின்னருக்குப் போவதுண்டு. அவர் சில விடயங்களைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். வழக்கை எதிர்நோக்கியிருப்போர் தண்டனை பெற்றோர் விபரங்களை என்னிடம் தாருங்கள் என்று ஏதோ வெட்டி முறிக்கப்போவது போலக் கூறுவார். அதையும் அப்பாவித்தனமாக நம்பி விபரங்களையும் கடிதங்களையும் அரசியல் கைதிகள் சமர்ப்பிப்பர். அந்தக் கடிதங்கள் விபரங்கள் அவருடைய வீட்டு மேசையைத் துடைக்கத் தான் பயன்பட்டிருக்கின்றன என்றே கருதவேண்டியுள்ளது. எமது குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்குச் சிரமப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எமது உறவுகள் மூலம் அவர்களின் துயர் துடைக்க ஏதாவது வழிவகை செய்யலாம் தானே என மகசீன் சிறை ஏச் வாட் கைதிகள் கேட்டபோது முந்தி புலி இருந்த போது எல்லோரும் காசு கொடுத்தார்கள். இப்போது எவரும் கொடுப்பதில்லை. நாங்களே தேர்தலுக்கு செலவழிக்க காசு இல்லாமல் கஸ்ரப்பட்டோம். கட்சியிலும் காசு இல்லை என்று சொல்கிறார் என்றால் அவர் இந்தப் பிரச்சினையை எவ்வளவு தூரம் புரிந்து வைத்துள்ளார் என்பது விளங்கும்.

மைத்திரி ஜனாதிபதியான பின்னர் கூட்டமைப்பினர் ‘ கைவீசம்மா கைவீசு மைத்திரி கடைக்குப் போகலாம் கைவீசு ” என்று கையை ஆட்டிக் கொண்டு சந்திக்கப் போனார்களாம். அவர் முதலில் அரசியல் கைதிகளின் விபரங்களைத் தாருங்கள் என்று கேட்டாராம். அப்படியே ஆகட்டும் தலைவா என்று வழிமொழிந்து விட்டு ‘ போனால் கிடையாது பொழுது பட்டால் கிடையாது.உடனே விபரங்களைப் பதியுங்கள் என்று ஆளாளுக்கு இவர்கள் அறிக்கை விட்டார்களாம்.அவ்வப்போது பொழுது போகாவிட்டால் எங்காவது பஸ் நிலையப் பகுதிகளில் ‘ அரசியல் கைதிகளை விடுதலை செய் ” என்று மட்டையில் எழுதிக்காட்டுவார்கள். இதெல்லாம் நாளாந்தம் படித்துப் படித்துச் சலித்த விடயங்கள். மைத்திரி நினைத்தால் பத்து நிமிடங்களுக்குள் சிறைச்சாலைத் திணைக்களம் நிதி அமைச்சு பொலிஸ் திணைக்களம் என்பவற்றில் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கூட அறியாத அப்பாவிகளுக்குத் தான் நாம் வாக்களித்து வருகின்றோம். தடுப்பிலுள்ளோர் விபரத்தை நீங்கள் வெளியிடுங்கள் என்று மனோகணேசன் கேட்டது போலக் கேட்கத் தெரியவில்லை இவர்களுக்கு.எந்தெந்த உள்ளுராட்சிச் சபையில் யாரை எப்படிக் கவிழ்ப்பது என்று யோசனை சொல்வதை விட இவ்வாறான விபரங்களைத் திரட்ட உள்ளுராட்சி உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சிச் செயற்குழு உறுப்பினர்களைக் கேட்டிருந்தால் இத்தனை வருடத்தில் கட்சிக்குத் தேவையான விபரங்கள் இருந்திருக்குமே. இவர்களிடமுள்ள கணினிகளை இவர்கள் சினிமாப் படம் பார்க்கவா பயன்படுத்துகிறார்கள்.?

வன்னி மாவட்ட எம்.பி சிவசக்தி ஆனந்தன் ‘ உங்கட விடயம் சுமந்திரனிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இப்ப வேலை கூடத்தானே ” என்று அநுராதபுரம் சிறைக்குச் சென்று கூறினார்.அலை ஓய்வது எப்போது ? மீன் பிடிப்பது எப்போது ? சுமந்திரனின் அனுமதியில்லாமல் உங்களைச் சந்திக்க வரமுடியாதுள்ளது என்று தமது பரிதாப நிலையைக் கைதிகளிடம் சொன்ன தமிழ் எம்.பி க்களும் உள்ளனர்.அவர்களின் பெயரைக் குறிப்பிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு ரிக்கெட் கிடைக்காது.இரண்டாவது விடயம் மஹிந்தவின் கூற்று தொடர்பானது.அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டாம் என்று டக்ளசோ கருணாவோ சொல்லியிருந்தால் மஹிந்த இவ்வாறு கூறியிருக்கமாட்டார்.புலிகள் சமூகத்தில் இணைவது தமது அரசியல் வாழ்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதும் அந்தப் புண்ணியவான்கள் யார் ? சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.அதற்காக மஹிந்தவை அரிச்சந்திரன் என்று சொல்வதாக எண்ணத் தேவையில்லை. இப்படிச் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று அடித்துக் கூறமுடியாத அளவுக்குத்தான் எமது அரசியல்வாதிகளும் உள்ளனர்.

மூன்றாவது விடயம் தற்போதைய ஜனாதிபதியின் கூற்று. 20 ஆம் திகதிக்குப் பின்னர் ஜீலைக்குள் தேர்தல் நடத்தப்படும் என்பது தெளிவாகிறது.சிராணி பண்டார நாயக்காவுக்கு பழையபடி பிரதமர் நீதியமைச்சர் பதவியை எவ்வகையில் கொடுக்கலாம் என்று ஆராய நேரமிருக்கிறது.இது வரவேற்கத்தக்க விடயம் தான்.மாகாண சபையின் சில அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராகத் தீர்ப்புச் சொன்னதன் பின்னர் அவர் டக்ளஸ் அங்கம் வகித்த அப்போதைய ஆளும் கட்சியினரால் பழிவாங்கப்பட்டவர்.அந்த வகையில் அவரது மீள் நியமனம் வரவேற்கத்தக்கதே.யுத்த வெறிபிடித்த சிங்களவரின் கதாநாயகன் சரத்பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பட்டம் கொடுத்து அவரைக் கௌரவிக்க என்னென்ன செய்ய வேண்டும்என்று அரசுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தத்தான் நேரமில்லை.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் அடுத்த தேர்தலில் பௌத்த சிங்களவரின் வாக்குகளை எப்படிப் பெறுவது என்பது குறித்துத்தான் பெரும்பாண்மை இனக் கட்சிகள் சிந்திக்கும்.

தான் நீதியமைச்சராக இருந்த போது செய்யத் தவறியவற்றை தமிழருக்குத் தான் செய்த துரோகங்களுக்குப் பிராயச்சித்தமாகத்தானும் செய்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவ ரவூப் ஹக்கீமும் முயற்சிக்கப் போவதில்லை. தனது கணவரைக் கொன்ற ஜே.வி.பி யினரை இணைத்து நன்னடத்தை அரசாங்கம் ஒன்றை நிறுவிய சந்திரிக்கா சிறையிலிருந்த அனைத்து ஜே.வி.பி யினரையும் விடுவித்தார்.ஆனால் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரகுபதி சர்மா அவரது துணைவியார் வரதராஜா போன்றோரை இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் விடுவிக்க முயற்சி எடுக்கப்போவதில்லை. தனது கணவர் விஜேகுமாரணதுங்காவின் உயிரின் பெறுமதியை விட தனது உயிரின் பெறுமதி உயர்ந்தது என அவர் கருதுவதாகத் தான் எண்ண வேண்டியுள்ளது. என்ன செய்வது அவரின் ராசி அப்படி. அவர் சாட்சியாகக் கையொப்பமிட்ட சனத்ஜெயசூரியா கமுது திருமணம் பிரபாகரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் போன்று தற்போது அவர் ஏற்படுத்திய ரணில் தலைமையிலான ஆட்சியும் அற்ப ஆயுளில் முடியப்போகிறது.

சுதந்திரதினத்தன்று குறிப்பிட்ட தொகை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என ரணிலைப் புரியாது அறிக்கை விட்ட விஜயகலாவும் இதனை மறந்து விட்டார் போலும்.அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பெரும் தடையாக இருப்பது அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம். முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவைக் கொலை செய்யச் சதி செய்ததாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டு வதனி என்பவருக்கு கேகாலை உயர்நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. அவர் இப்போது கியூ 34066 என்ற இலக்கத்துடன் கண்டியிலுள்ள தும்பற சிறைச்சாலையின் ஏ வாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதே நீதிமன்றம் சண்முகம் சூரியகுமார் என்பவருக்கு 30 வருட சிறைத்தண்டணையை வழங்கியுள்ளது.இதனை விட அவர் கொழும்பில் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா தொடர்பான வழக்கொன்றையும் எதிர்நோக்கியுள்ளார்.இதற்காக மகசீன் சிறையில் ஏச் வார்ட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.திருமலையைச் சேர்ந்த தங்கன் என்றழைக்கப்படும் வீரக்குட்டி கமலநாதனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் ஒரு வருட புனர்வாழ்வு அளித்தும் தீர்ப்பளித்துள்ளது.அநுராதபுரம் உயர்நீதிமன்றம் தொடர்ந்து திருமலை உயர் நீதிமன்றமும் இதே ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்குச் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

வலம்புரி பத்திரிகையில் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய கணேசரத்தினம் சாந்ததேவன் என்பவர் வழங்கியதாகக் குறிப்பிடத்தக்க ஒப்புதல் வாக்குமூலத்தை வவுனியா மேல் நீதிமன்றம் நிராகரித்தது.இதனடிப்படையில் இவர் மீது தொடரப்பட்ட 2012 — வி.ஏச்.சி 2394 எண் வழக்கிலிருந்து நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் கடந்த வருடம் இவரை விடுதலை செய்தார்.எனினும் இதே வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொழும்பு ஆறாம் இலக்க நீதிமன்றில் தொடரப்பட்ட 6175 எண் கொண்ட வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல் கஜன் என்றழைக்கப்படும் குணரத்தினம் கஜேந்திரன் என்பவர் மீது தொடரப்பட்ட 2012— வி.ஏச்.சி 2411 இலக்க வழக்கு ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டதால் கடந்த வருடம் மார்ச் 2ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அதே வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொழும்பு முதலாம் இலக்க நீதிமன்றில் 5231– 2010. 5232–2010 என்னும் இலக்கங்களில் இரு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.நாவரசன் என்றழைக்கப்படும் தர்மலிங்கம் முரளிதரன் என்பவருக்கு எதிராக வி.ஏச்.சி 2227 எண்ணில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து கடந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றம் அவரை விடுவித்தது.எனினும் கொழும்பு ஏழாம் இலக்க நீதிமன்றில் 5639 எண்ணில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

இந்த நாட்டில் தமிழ் முதலமைச்சரின் அதிகாரங்கள் பதவி கௌரவம் என்பனவற்றை ஏற்றுக்கொள்ள நாட்டின் பிரதமர் தயங்குகிறார்.உயர்நீதிமன்றங்களில் உள்ள தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தென்பகுதி நீதிமன்ற நீதியரசர்கள் தயங்குகின்றார்கள். மக்கள் மட்டுமல்ல உயர்நீதிமன்ற நீதியரசர்களே மனதளவில் பிரிந்தேயுள்ளனர் என்பது தான் யதார்த்தம்.

கனேடியப் பிரதமர் முன்பொரு முறை தனது நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.அதைக் கூட சிங்களத்தரப்பினர் ஆட்சேபித்தனர். அது தமிழ் சிங்கள புதுவருடம் இவர் எப்படி தமிழருக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்பது அவர்களின் முனகல். இப்படியான மனப்பான்மை உள்ள சிங்களவர்களிடம் இருந்து தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கௌரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் தான் சமாதானம் பற்றிய எண்ணம் தலையிலிருந்து அல்ல மனதிலிருந்து உருவாக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தமது வழக்குச் செலவுகளுக்காக கைதிகள் படாதபாடு படுகிறார்கள். தமிழ் அரசியல் தலைமை இதற்கான ஏற்பாட்டைச் செய்யத் தவறியதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.அதற்கு ஒரே வழி இந்த விடயத்தை கையாளும் சுமந்திரனை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து முன்னாள் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கருதாத தவராசா அன்ரன் புனிதநாயகம் மணிவண்ணன் சிறீக்காந்தா றெமிடியஸ் போன்றோரை உள்ளடக்கிய வழக்கறிஞர் குழாம் ஒன்றை உருவாக்கி அவர்கள் வசம் இவ் வழக்குகளைக் கையாளும் பொறுப்பைக் கையளிக்க வேண்டும்.இதில் கட்சி நலனை விட கைதிகளின் நலனே முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்குகளை அந்தந்த வழக்கறிஞர்களே கையாளவேண்டிய நிலைமையும் உண்டு. எனவே அவற்றுக்கான செலவைப் பொறுப்பேற்க புலம்பெயர்ந்த உணர்வுள்ள தமிழர்கள் முன்வர வேண்டும்.எல்லாவற்றுக்கும் முதல் இவ்வாறான வழக்கறிஞர் அணியை முதலில் தமிழ்த் தலைமை உருவாக்க வேண்டும்.அதில் எவ்வாறேனும் சுமந்திரனின் தலையீடு இல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.ஜயா சம்பந்தன் அவர்களே விரைந்து இந்த நடவடிக்கையை எடுங்கள் எப்படியும் இந்த அரசு கவிழப்போகிறது.அதன் பின்னர் நிலைமைகள் என்னவாகுமோ தெரியாது. இவர்கள் தயங்கினால் வடக்கு முதல்வர் இவ்வாறான வழக்கறிஞர் அணியை உருவாக்க சுயமாக முடிவெடுக்க வேண்டும். ட்றயல் அட்பார் வழக்குக்கு தமிழினம் ஒன்று திரண்டதைப் போல இந்த விடயத்தையும் சீரியஸாகக் கையாள வேண்டும்.

பகலவன்

Advertisements