தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு

தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.ltte cemetries

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘சுலோச்சனா ராமையா மோகன்’ எழுதியுள்ள Live soldiers and dead rebels What happened to LTTE cemeteries? கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘எனது சகோதரன் இறந்துவிட்டார். ஆனால் புதைகுழியை அழிப்பதன் மூலம் அவருடைய நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. ஒரு இராணுவ முகாமின் கீழேயே எனது சகோதரனின் புதைக்கப்பட்ட உடல் உள்ளமை மிகவும் வலி நிறைந்த சம்பவமாகும்’

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் உயிர்நீத்த பின்னர் அவர்கள் துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டார்கள். இந்த இல்லங்களை மக்கள் அனைவரும் நேசித்தனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் புலிகளின் உயிர் நீத்த போராளிகள் புதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் சிறிலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட துயிலுமில்லம் அழிக்கப்பட்டு தற்போது இதற்கு மேல் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

போர் முடிவடைவதற்கு முன்னர் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களை அடக்கம் செய்வதற்கும் அவர்களை நினைவுகூருவதற்காகவும் 25 வரையான துயிலுமில்லங்கள் காணப்பட்டன, ஆனால் அவை எல்லாம் தற்போது எங்கே?

இவை புல்டோசர்களால் துடைத்தழிக்கப்பட்டு இந்த நிலங்களில் இராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான நோக்கம் என்ன?

நாட்டில் இடம்பெற்ற அசிங்கமான யுத்தம் மற்றும் தனிநாடு கோரிப் போராடிய வீரர்கள் நினைவுகூரப்படக் கூடாது என்பதற்காகவும் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்ட சில நிலங்கள் அரசிற்குச் சொந்தமானது என்பதாலுமே தாங்கள் இவற்றை அழித்ததாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

ஆனால் உளவியல் ரீதியாக நோக்கில் தமது அன்பிற்குரியவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் இராணுவத்தால் அடியோடு நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் அதிகம் ஆத்திரமடைந்துள்ளனர். தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட இந்தக் கல்லறைகள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது.

1980களின் பிற்பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த வீரர்கள் துயிலுமில்லங்களில் அடக்கம் செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று மாவீரர் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டு வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களால் நினைவுகூரப்பட்டனர்.

அன்றைய தினம் தமிழ் மக்கள் துயிலுமில்லங்களுக்குச் சென்று அன்றைய நாளை எவ்வாறு அனுஸ்டித்தனர் என்பதற்கு சாட்சியமாக இருந்த இந்த இல்லங்கள் இன்று அழிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ‘இராணுவத்தை’ ஒரு சாதாரண இராணுவக் குழுவாகக் கருதி போரில் உயிர்நீத்த தமது உறுப்பினர்களுக்காக கல்லறைகளை உருவாக்கினார்கள்.

மேற்குலக நாடுகளில் பாரம்பரியமாகக் காணப்படும் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகள் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகவும் அழகாக, ஒரேவடிவத்தில் துயிலுமில்லங்களை அமைத்திருந்தனர்.

பளிங்குக் கற்கள், சீமெந்துக் கற்கள் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கல்லறைகளில் மிக வரிசையாகவும் நேர்த்தியாகவும் குறியீடுகள் இடப்பட்டு, விபரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சில கல்லறைகளில் இறந்தவர்களின் படங்கள் கண்ணாடிகளால் உறையிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

மேற்குலக நாடுகளில் போரின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களின் உடல்களை அடக்கம் செய்து அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளின் வடிவத்தில் புலிகளின் துயிலுமில்லங்களிலும் கல்லறைகள் அமைக்கப்பட்டமை சிறந்த கலைப்படைப்பாகக் காணப்பட்டது.

இவ்வாறான ஏற்பாடுகள் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போரில் இழந்த போதிலும் அவர்களின் நினைவுகளை மீட்கக்கூடியதாக இருந்ததால், வடக்கு மற்றும் கிழக்கில் தமது அன்பிற்குரியவர்களை புலிகள் அமைப்பு ஆட்சேர்ப்புச் செய்த போது கூட, மக்கள் அவர்களை ஒருபோதும் வெறுக்காததற்குக் காரணமாகக் காணப்பட்டது.

சிலர் புலிகளால் பலவந்தமாகவும் சிலர் தமது சொந்த விருப்பின் பேரிலும் புலிகள் அமைப்புடன் இணைந்து போரிட்டு மடிந்தனர்.

இந்துக்கள் இறந்தவர்களின் உடலங்களைத் தகனம் செய்வது வழக்கமாக உள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தனது அமைப்பிலிருந்து மரணித்த இந்துக்களாயினும், கத்தோலிக்கர்களாயினும் அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களது உடல்களை துயிலுமில்லங்களில் புதைத்தனர்.

இவர்கள் அனைவரும் போரில் இறந்ததால் இவர்களது உடலங்களை கல்லறைகளில் அடக்கம் செய்து மரியாதை செய்வது தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித்த அடையாளமாகக் காணப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் போரின் போது தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களை மதித்து அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக அவர்களை நினைவுகூர்வதற்காக இவ்வாறான துயிலுமில்லங்களை அமைக்கவில்லை.

புலிகளுடன் இணைந்து போரில் உயிர் நீத்தவர்களின் அன்புக்குரியவர்கள், இவர்களது தாய்மார், மனைவிமார், தந்தைமார் மற்றும் பிள்ளைகளும் தமது உறவுகளை நினைவுகூருவதற்காக இவ்வாறான துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டன.

போரில் இளையோரை இணைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறான கவர்ச்சிமிக்க துயிலுமில்லங்களைப் புலிகள் பராமரித்தாகவும், போரில் கொல்லப்பட்ட தமது பிள்ளைகள் புதைக்கப்பட்டிருந்த இடங்களைப் பார்வையிடும் குடும்பத்தினருக்கு புலிகள் மீது கோபத்தை உண்டுபண்ணியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

போரின் போது தமது பிள்ளைகள் காணாமற் போகவில்லை என்கின்ற நிச்சயத்தை இவ்வாறான கல்லறைகள் கொடுத்ததாகவும் இதனால் பெற்றோர்களும் உறவினர்களும் நம்பிக்கை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தமது பிள்ளைகள் இறந்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தமது வேதனைகள் மற்றும் வலிகளைக் கொட்டித் தீர்ப்பதற்குமான ஒரு இடமாகப் பெற்றோர்கள் துயிலுமில்லங்களைக் கருதினர்.

ஒவ்வொரு ஆண்டும் புலிகள் அமைப்பிலிருந்து போரிட்டு உயிர் நீத்தவர்கள் குறித்த ஒரு தினத்தில் நினைவுகூரப்பட்டனர். அதாவது நவம்பர் 27 மாவீரர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றைய தினம் போராடி மரணித்த தமது பிள்ளைகளை நினைவுகூருவதற்காகப் பெற்றோர்களும் உறவினர்களும் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்வர். இவர்கள் துயிலுமில்லங்களில் ஒன்றுகூடுவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து முதன் முதலாக லெப்ரினன்ட் சங்கர் (சத்தியநாதன் அல்லது சுரேஸ்) நவம்பர் 27, 1982ல் உயிர்நீத்திருந்தார். இவர் உயிர் நீத்த நவம்பர் 27 மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பெற்றோர்கள், பெற்றோரற்ற பிள்ளைகள், கணவன்மாரை இழந்த பெண்கள், சகோதரிகள், சகோதரர்கள் என எல்லோரும் பெரியளவில் புலிகளின் துயிலுமில்லங்களில் நவம்பர் 27 அன்று ஒன்றுகூடி மரணித்தவர்களை நினைவுகூருவதை முன்னர் காணலாம்.

அன்றைய தினம் அனைத்துத் துயிலுமில்லங்களும் மிகவும் அழகாக பல்வேறு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒலிபெருக்கிகளில் புலிகளின் சோகப் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.

மலர்மாலைகள், நெய் விளக்குகள், மெழுகுதிரிகள், கற்பூரங்கள், ஊதுபத்திகள் போன்றவற்றைக் கொண்டு தமது அன்புக்குரியவர்களை ஆராதிப்பதற்காக வருகை தரும் பெற்றோரை உறவினரை வரவேற்பதற்காக துயிலுமில்லங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

மாவீரர் நாட்கள் மூன்று நாட்கள் அனுட்டிக்கப்படும். இம்மூன்று நாட்களும் பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும். இந்த நாட்கள் நவம்பர் 27 அன்று முடிவடையும்.

‘எனது அம்மா தனது மகனின் கல்லறையைப் பார்வையிடுவதற்காக ஓடோடிச் செல்வார். தனது மகன் தனக்காகக் காத்திருப்பது போல் அவர் அங்கு விரைவாகச் செல்வார்’ என தனது பெயரை வெளியிட விரும்பாத யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

‘அவர் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார். ஆனால் தற்போது அவரால் நவம்பர் 27 அன்று எதையும் செய்ய முடியாது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று அவர் தனது மகனை நினைப்பார். ஆனால் தனது வேதனைகளை வெளிப்படுத்தி பழைய நினைவுகளை மீட்டுவதற்கான இடம் தற்போது காணப்படவில்லை.

இவர் வெறுமனே வீட்டிலிருந்தவாறு தனது மகனை நினைப்பது கல்லறையில் சென்று கதறியழுவதற்கு ஈடாகாது. மக்கள் தமது இறந்தவர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூருவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு இடத்தை நாம் கொண்டிராதது மிகவும் வேதனைக்குரியது. இதன்மூலம் எமக்கான மனித உரிமை மீறப்படுகிறது’ என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார்.

‘எவரும் மரணித்த தமது அன்புக்குரியவர்களை மறக்க முடியாது. கல்லறைகளை நிர்மூலமாக்குவது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். இது மட்டுமே என்னைக் கோபமுறச் செய்கிறது. எனது சகோதரன் மீது மக்கள் பயங்கரவாதி என முத்திரை குத்த முன்னர் இவர் ஒரு சாதாரண மனிதராவார். பயங்கரவாதியும் மனிதனாவான். ஒருவர் வேறொன்றாக மாறுவதற்கு ஏதாவதொரு காரணம் இருக்கும்’ எனவும் அவர் மேலும் கூறினார்.

‘எனது சகோதரன் இறந்துவிட்டான். இவனது புதைகுழியை அழிப்பதன் மூலம் இவன் தொடர்பான நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. இவரது உடலம் இராணுவ முகாம் ஒன்றின் கீழ் புதைக்கப்பட்ட போதிலும் இவரது நினைவுகளை எம்மிலிருந்து அழிக்க முடியாது. இது மிகவும் வேதனை மிக்கது’ என அவர் சுட்டிக்காட்டினார்.

‘இவ்வாறான துயிலுமில்லங்கள் இருந்த இடத்தில் தாவரவியல் பூங்காக்களை அமைக்க முடியும். ஆனால் இங்கே இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? இந்நிலையில் போர் முடிவடைந்து விட்டது எனக் கருதலாமா’ எனவும் இவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கோப்பாயிலிருந்த துயிலுமில்லம் தனது மகனது நினைவுகளை மீட்டியதாக கோப்பாயைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளால் 25 வரையான துயிலுமில்லங்கள் நிர்மாணிக்கப்பட்டன. திருகோணமலை – ஆலங்குளம் துயிலுமில்லத்தில் 147 கல்லறைகளும், 137 நினைவுக்கற்களும், வவுனியா – ஈச்சங்குளம் துயிலுமில்லத்தில் 192 கல்லறைகளும் 315 நினைவுக்கற்களும், காணப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இருந்த நான்கு மிகப் பெரிய துயிலுமில்லங்களுள் கோப்பாய் துயிலுமில்லமானது 40 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பாரிய துயிலுமில்லமாகவும் இருந்தது.

கோப்பாய் துயிலுமில்லத்தில 168 கல்லறைகளும் 1148 நினைவுக்கற்களும் காணப்பட்டன. இதேபோன்று கொடிகாமம் துயிலுமில்லத்தில் 463 கல்லறைகளும் 505 நினைவுக் கற்களும், வல்வெட்டித்துறை துயிலுமில்லத்தில் 309 கல்லறைகள் மற்றும் 486 நினைவுக்கற்கம் காணப்பட்டன. சாட்டி துயிலுமில்லத்தில் நான்கு கல்லறைகளும் 150 நினைவுக்கற்களும் காணப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உடலங்கள் தகனம் செய்யப்பட்ட தீருவில் துயிலுமில்லமானது தற்போது விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தின் மூலையில் கல்லறைகளின் இடிபாட்டு எச்சங்கள் உடைந்த சிலைகள் போன்றன காணப்படுகின்றன.

1987ல் இந்திய அமைதிப் படை சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்ட 1987 காலப்பகுதியில் தமிழர் தாயகத்திற்குச் சொந்தமான கடலைத் தாண்டிச் சென்றதன் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறியதாகப் புலிகள் அமைப்பின் தளபதிகள் குமரப்பா மற்றும் புலேந்திரனுடன் பத்து புலி உறுப்பினர்கள் சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது சயனைட் உட்கொண்டு மரணித்தனர். தீருவில் துயிலுமில்லத்திலும் ஆரம்பத்தில் புலிகளது உடலங்கள் தகனம் செய்யப்பட்டன.

பின்னர் 1993ல் மூத்த புலி உறுப்பினர் கிட்டு லண்டனிலிருந்து மலரவன், குட்டிசிறி மற்றும் மாலுமிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இவர்களது படகு அனைத்துலகக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் இடைமறிக்கப்பட்ட போது உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத் தாமே படகுடன் சேர்த்து வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து கேணல் கிட்டு மற்றும் அவரது தோழர்களின் நினைவாக தீருவிலில் நினைவுக்கற்கள் வைக்கப்பட்டன. தற்போது இவை தீருவிலில் காணப்படவில்லை.

தீருவில் துயிலுமில்லத்தில் காணப்பட்ட எச்சங்களை ஒளிப்பதிவு செய்த போது எம்மைத் தாண்டிச் சென்ற இளம் மனிதர் ஒருவர் ‘இவை வெறும் கற்கள். கவலைப்பட வேண்டாம். இவர்கள் எமது இதயங்களில் வாழ்கிறார்கள்’ எனக் கூறினார்.

விடுதலைப் புலிகளின் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் தொடர்பாக எந்தவொரு ஊடகங்களும் முதன்மைப்படுத்தவில்லை. யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைக்கப்பட்டிருந்த துயிலுமில்லம் அழிக்கப்பட்டு தற்போது அங்கே சிறிலங்கா இராணுவத்தின் மிகப்பெரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி, உடுப்பிட்டியிலிருந்த எள்ளங்குளம் துயிலுமில்லமானது தற்போது சிறிலங்கா இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாயில் அமைக்கப்பட்ட புலிகளின் துயிலுமில்லம் 1995ல் புல்டோசரால் நிர்மூலமாக்கப்பட்டது. இதேபோன்று வேலணை, சாட்டித் துயிலுமில்லம் 1995 இலும், தென்மராட்சி, கொடிகாமம் துயிலுமில்லம் 1996 இலும், வடமராட்சி, எள்ளங்குளம் துயிலுமில்லம் 1996 இலும் அழிக்கப்பட்டன.

இக்கல்லறைகள் மீண்டும் 2002 பெப்ரவரியில் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீள்வடிவமைக்கப்பட்டன.

போரில் மரணித்த கிட்டத்தட்ட 4000 புலி உறுப்பினர்களின் உடலங்கள் விசுவமடுவில் புதைக்கப்பட்டன. கடந்த கால வன்முறைகள் மறக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புலிகள் அமைப்பின் கல்லறைகளை அழிப்பதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்.

எனினும், தமிழ் மக்களால் தமது ஆதங்கங்களை அச்சத்தின் காரணமாக முற்றுமுழுதாக வெளிப்படுத்த முடியவில்லை.

‘அரசியல் கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படும் மிகச் சிறிய இனமானது நாட்டின் அரசியல் அமைப்பைக் குழப்பி உறுதித்தன்மையை நிலைகுலையச் செய்ய முடியும். பெரும்பான்மை இனமானது போரை வெல்வதற்கான அனைத்துச் சாத்தியங்களையும் கொண்டிருப்பினும் சிறுபான்மை இனத்தால் அதன் அரசியல் யாப்பை பலவீனப்படுத்த முடியும்.

இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கமானது ‘தமிழ் மக்களின் இதயங்களை வென்றுள்ளதா?’ என வினவப்படுகிறது. இது இன்னமும் நடைபெறவில்லை’ என தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறி அரசிற்கு எதிராப் போராடியவரும் தற்போது மீளிணக்க முயற்சியில் அரசாங்கத்திற்கு ஆலோசகராகவும் செயற்படும் கலாநிதி ஐவர் ஜென்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

புதினப்பலகை- நித்தியபாரதி

Advertisements