அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.US Tom Malinowski mullivaikal  Apr 05, 2015

இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார்.

இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் தான், மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார்.

போரில் உயிரிழந்தவர்களுக்காக தான் அஞ்சலி செலுத்தியதை, அவர் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதும் கூறியிருந்தார்.

அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்தப் படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும், இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில், இந்தச் செய்தி அவ்வளவாக இடம்பிடிக்கவில்லை.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத் தும் படம் கூட, பல ஊடகங்களில் வெளியாகவில்லை.

அமெரிக்கா சார்பில், அந்த நாட்டின் உயர்நிலை அதிகாரி ஒருவர், முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செலுத்தியது முக்கியத்துவமற்றதாகி விட்டதா? அல்லது, முள்ளிவாய்க்காலே முக்கியத்துவம் அற்றதாகி விட்டதா?

பொதுவாகவே, முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவது என்பதைவிட, போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் விடயத்தில், கூட, இலங்கைத் தீவைப் போலவே, ஊடகங்களும் இரண்டுபட்டு நிற்பது உண்மை.

சிங்கள ஊடகங்கள், போரில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த முயன்றால், அதனை விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சித்திரித்து சர்ச்சை யைக் கிளப்புவது வழக்கம்.

ஆங்கில ஊடகங்களில் சிலவும், அதே கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பது வழமை. அதேவேளை, தமிழ் ஊடகங்களோ, போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு- புலிகளாக இருந்தாலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என்றே கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றன.

ஆனால், அமெரிக்கா சார்பில், முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டதை பெரும்பாலும் மூன்று மொழி ஊடகங்களுமே முக்கியத்துவம் கொடுக்காதமை ஆச்சரியமளிக்கும் விடயம் தான்.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான இடம்.

அரசாங்கத்தையும், அரச படைகளையும் பொறுத்தவரையிலும் அது முக்கியமான தொரு இடம்தான். ஆனால், இருதரப்புக் கும் அது வேறு வேறு வகைகளில் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஒருவருக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்த இடம் அது. இன்னொருவருக்கு தோல்வியையும், துன்பங்களையும், வரலாற்றுப் பாடத்தையும் கொடுத்த இடம் அது.

எவ்வாறாயினும், ஆயிரக்கணக்கானோரை பலியெடுத்த பூமி என்ற வகையில், அது எல்லோருக்கும் பொதுவான இடம். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான படையினரும், இரத்தம் சிந்திய நிலம் அது.

அந்தவகையில் தான், முள்ளிவாய்க்காலில், மலர் அஞ்சலி செலுத்தியிருந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை, இலங்கையில் ஒரு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

முல்லைத்தீவுக்கும் சென்ற அவர், போரில் உயிரிழந்த அனைவ ரையும் நினைவு கூரும் வகையில், முள்ளி வாய்க்காலில் மலர்வளையம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார்.Injured civilians are seen in a make-shift hospital in this photo released by the pro-Tamil Tiger group "Mercy Mission to Vanni" showing what they allege are injured civilians that were fleeing

அதுகுறித்து அரசாங்கத்துக்குத் தகவல் தெரிந்ததும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும், அவருக்கு அழுத்தம் கொடுத்தன.

அவ்வாறு அஞ்சலி செலுத்தினால், அது பக்கசார்பாகவே கருதப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் இருந்து நவநீதம்பிள்ளைக்கு எடுத்துக் கூறப்பட்டது.

தனது பயணத்தின் நோக்கம், நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு நவநீதம்பிள்ளை, அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்றாலும், நவநீதம்பிள்ளை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றதாகவும், அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், சிங்கள, ஆங்கில ஊடகங்கள், அப்போது பரபரப்பாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தளவுக்கும், நவநீதம்பிள்ளை, தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில், போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களால் பலியானோருக்காக அஞ்சலி செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஒருவர் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.

அதே நடைமுறையை அவரால், இலங்கையில் அப்போது கடைப்பிடிக்க முடியாமல் போனது. இந்தச் சர்ச்சை ஓய்ந்து இன்னொரு சர்ச்சை எழுந்தது.

2013ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்தார், கனடாவின் இணையமைச்சராக இருந்த தீபக் ஒபராய்.

அவர் தனது இலங்கைப் பயணத்தின் போது, வடக்கிற்கும் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அவர், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பும் வழியில், தனது வாகனத்தில் எடுத்துச் சென்றிருந்த மலர் வளையம் ஒன்றை, ஆனையிறவில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வெள்ளை நிறப்பட்டியுடன், அந்த மலர் வளையத்தை வைத்திருந்தார்.

அவர் தனது மலர் வளையத்தில், போரில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக் கும் என்று குறிப்பிட்டே, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இருந்தாலும், அவர், விடுதலைப் புலிகளுக்கே ஆனையிறவில் அஞ்சலி செலுத்தியதாக, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

அதுபோலவே, முள்ளிவாய்க்காலிலோ அல்லது, வடக்கு கிழக்கு மாகாணத்தின் எந்த இடத்திலோ, மரணமான பொதுமக்களுக்குக் கூட அஞ்சலி செலுத்த முடியாத நிலையே, முன்னைய ஆட்சியில் இருந்து வந்தது.

மட்டக்களப்பில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் நிகழ்வைக் கூட பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனால், இப்போது அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அதுவும், அவர் போரில் மரணமான இரண்டு தரப்பினருக்கும், மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததும், தெரிந்தோ தெரியாமலோ, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கூக்குரலிடாமல் இருந்ததும், முக்கியமானதொரு மாற்றமே.

ரொம் மாலினோவ்ஸ்கி கூட, தான் ஒரு ஆண்டுக்கு முன்னர் இங்கு வந்திருந்தால் பல விடயங்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது என்றும், ஆட்சிமாற்றத்தின் விளைவாக பலவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அவ்வாறு குறிப்பிட்டதற்கு, மலரஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால், இதையே பெரிய விவகாரமாக்கி, அமெரிக்காவுடன் ஒரு மோதலுக்குச் சென்றிருக்கும்.

அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருக்கு அளிக்கப்பட்டது போன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தும் உரிமை, தமிழ்மக்களுக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

தற்போதைய அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, நல் லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறி வருகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், போரில் மரணமானவர்களை நினைவு கூருவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நாள் இன்னும் இரண்டு மாதங்களில் வரவுள்ள நிலையில், அந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் இடமளிக்குமா என்று பார்க்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்த முடியுமாயின், தமிழ் மக்கள் சார்பில் ஏன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படக் கூடாது என்ற கேள்வி நிச்சயம் எழும்பும்.

அதேவேளை, முன்னைய அரசாங்கமே, இந்தகைய நினைவு கூரல்களை திசை திருப்பும் வகையில், செயற்பட்டுள்ளது, ஊடகங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

அதுபோன்று தற்போதைய அரசாங்கமும் செயற்படாதிருக்குமா அல்லது வழக்கம் போலவே, தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கபில்

*************War-Crime-sri-lanka-5

அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலையைக் கண்காணிப்பதிலும், இலங்கை தொடர்பான தனது நிலைப்பாடு நடுநிலையானது என்பதை வெளிப்படுத்துவதிலும் அமெரிக்கா இப்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் தொழிலாளர் விவகாரம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவர் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதுபோலவே வரும் ஜூன் மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை இலங்கை மீதான அமெரிக்காவின் ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை.

உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தனது இலங்கைப் பயணத்தின் போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள் தொடர்பாக, பரந்துபட்டளவு கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

அதன் ஒரு கட்டமாக அவர் போரில் உயிரிழந்த இரண்டு தரப்பினருக்காகவும் முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலியும் செலுத்தினார். போர் முடிந்து, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகப் போகின்ற நிலையில், இதுவரை இலங்கை வந்த அமெரிக்க உயர் அதிகாரிகள் எவரும் போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த முனையவில்லை.

ஆனால், இப்போது அமெரிக்கா சார்பில் ரொம் மாலினோவ்ஸ்கி அஞ்சலி செலுத்தியிருக்கிறார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் வாய்ப்பு இல்லாதது ஒரு காரணமாகக் கூறப்படலாம்.

என்றாலும், தற்போதைய நிலையில் அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் செய்ய முடியாமல் போனதை மட்டும் ஒரு காரணமாகக் குறிப்பிட முடியாது.

அதற்கும் அப்பால், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையைப் பிற்போட்ட விவகாரத்தில் தமிழர்களுக்கு அநீதி இழைத்து விட்டதான உறுத்தல் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அல்லது இந்த விவகாரத்தினால் அமெரிக்கா மீதான நம்பிக்கையை தமிழர் தரப்பு இழந்து போய் இருப்பதை உணர்ந்து கொண்டு தமிழர் மத்தியில் தன் மீதான நம்பகத் தன்மையை மீள் சமநிலைப்படுத்த முயன்றிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்கா தெரிவு செய்தது தமிழர்களின் இதயங்களைத் தொடுவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதனை தனது அதிகாரம் செல்வாக்கு என்பனவற்றைப் பயன்படுத்தி ஆறு மாதங்களுக்குப் பிற்போடச் செய்தது அமெரிக்கா. ஐநா வினதும் அமெரிக்காவினதும் இந்த நகர்வு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் விசனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில், போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக் கூறல் முயற்சிகள் பழைய உத்வேகத்துடன் தொடருமா என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது.

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இலங்கைத்தீவில் தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்தின. இந்த மேற்குலக நலன்சார் நகர்வுக்குள் தமிழர்களின் நலன் நசிபட்டுப் போனது உண்மை. இதனை அமெரிக்கா உணர்ந்திருக்கக் கூடும்.

ரொம் மாலினோவ்ஸ்கி போன்ற அமெரிக்க இராஜதந்திரிகள் தமது பயணங்களின் போதும், கலந்துரையாடல்களின் போதும் இதனை அறிந்து கொண்டிருக்கவும் கூடும்.

இத்தகைய நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வையும் அவநம்பிக்கையையும் களையும் நோக்குடன் அமெரிக்கா செயற்பட எத்தனித்திருக்கலாம்.

ஆனால், முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்ட விவகாரம் முக்கியமானதொன்றாகவே இருந்தாலும், இது தமிழ் மக்களால் பெரியதொரு விவகாரமாகப் பார்க்கப்பட்டது என்று கருத முடியாது.

ஏனென்றால் அதற்கும் அப்பாற்பட்ட நடவடிக்கையைத் தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதாவது ஐநா. வின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான நியாயமான சர்வதேச பொறுப்புக் கூறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்தகையதொரு முயற்சியே ஆரம்பத்தில் முடக்கி விட்டது அமெரிக்கா. வரும் செப்டம்பரிலாவது அந்த முயற்சிகள் தொடர்வதை உறுதிப்படுத்திக் கொள்வதைத் தான் தமிழர் தரப்பு எதிர்பார்க்கிறது.

இந்தநிலையில் தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் ரொம் மாலினோவ்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்த போது அவரிடம், ஜெனிவாவில் வரும் செப்படம்பர் மாதம் இலங்கை குறித்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு அவர் செப்டம்பருக்குப் பின்னர் என்னவென்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

செப்படம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா அறிக்கையில் என்ன கூறப்படும் என்று தம்மால் எதிர்வு கூற முடியாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ரொம் மாலினோவ்ஸ்கி கூறியிருந்தார்.

இருந்தாலும் செப்டம்பருக்குப் பின்னர் கூட, இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா நடந்து கொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், அமெரிக்க நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டிய தேவை வாசிங்டனுக்கு உள்ளது.

எனவே, சர்வதேச அரங்கில், இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து, அதனுடனான உறவுகளை அந்நியப்படுத்த அமெரிக்கா முனையாது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கை முக்கியமானதொரு கேந்திரமாக உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவுக்கு, இலங்கை சவாலானதொன்றாகவே இருந்து வந்தது.

முன்னைய அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கத்தினால், அமெரிக்க – இந்திய நலன்கள் பாதிக்கப்பட்டன.

அந்தநிலையைக் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் மாற்றியமைத்து விட்டது.

அந்த ஆட்சி மாற்றத்தில் கூட அமெரிக்காவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.

மாறியுள்ள இந்தச் சூழலில் தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில், அழுத்தம் கொடுத்தோ நெருக்கடி கொடுத்தோ அந்நியப்படுத்த அமெரிக்கா விரும்பாது.

அவ்வாறனதொரு நிலை ஏற்பட்டால் மீண்டும் சீனா, ரஷ்யாவை நோக்கி இலங்கை ஓடிவிடும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.

இதனால் வரும் செப்டம்பருக்குப் பின்னர் கூட, இலங்கைக்கு எதிரான பாரிய நகர்வுகள் எதையும், அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு ஐநா வெளியிடப் போகும் அறிக்கையின் உள்ளடக்கம் தெரிந்திருக்கலாம், தெரியாமல் போயிருக்கலாம்.

அதன் உள்ளடக்கம் அமெரிக்காவுக்கு இப்போது தேவையில்லை.

அதாவது அடுத்த நகர்வு குறித்து தீர்மானிப்பதற்கு ஐநா விசாரணை அறிக்கை அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஏனென்றால் அமெரிக்கா எடுக்கப் போகும் தீர்மானம் அதனைச் சார்ந்த ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் இலங்கையில் எல்லா மக்களையும் திருப்திப்படுத்திக் கொளவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.

அதற்காகவே மலர் அஞ்சலி செலுத்தி தான் உங்களின் பக்கம் நிற்கிறேன் என்று காண்பிக்க முயன்றிருக்கிறது.

எவ்வாறாயினும் இதன் உள்நோக்கம் என்ன என்பதை வரும் செப்டம்பர் மாதம் வெளியாகப் போகும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மீதான அமெரிக்காவின் நகர்வில் தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.

ஹரிகரன்

Advertisements