யாழ். சுன்னாகம் கிணற்று நீரைப் பருகவேண்டாம் – மத்திய அரசு

bad-waterயாழ். சுன்னாகம் பிரதேசததில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவோயில் எண்ணைப் படிமங்களும் கலந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டமையால் அந்த நீரைப் பருகுவதைத்; தவிர்த்துக் கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்குழு மேற்படி கிணறுகளில் மாசுக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்படி கிணறுகளில் படிந்துள்ள படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இக் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்பட்டு வருகிறது. இவ்வறிக்கையை நான் கோரிய போதிலும் இதுவரையிலும் அதனை கண்ணிலும் காட்டவில்லை.

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் போது இடம்பெற்ற ஆய்வில் 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்கள் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இப்படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருகின்றன. மேற்படி மின் உற்பத்தி நிறுவனத்தை சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது.

இதனால் தான் நாம் அப்பிரதேச மக்களுக்கு தினமும் ஆறு பௌசர்களில் நீர் விநியோகித்து குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம். இதற்கான செலவை நாம் அந்த மின்சார சபையிடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்தப் பிரச்சினை உருவானது. இந் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மேலும் இன்று (நேற்று) காலை பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் மேற்க்கொள்ளப்படும். நீர் விநியோகத் திட்டத்தில் சுன்னாகம் பகுதியை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2 வருடங்களில் நடைமுறைக்கு வரும்.

எனவே குறித்த பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய், கிறீஸ் படிமங்கள் இருப்பதனால் மக்கள் அக் கிணற்று நீரை அருந்தக் கூடாது. அத்துடன் நாம் எமது ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம். அப் பகுதியிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக மக்களிடமிருந்து பணம் எதுவும் அறவிடுவதில்லையென தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் வடக்கு மாகாண சபை நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் குறித்த பகுதி கிணறுகளில் கழிவு எண்ணெய் கலக்கவில்லையென்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹக்கீம்,

கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக கூறப்பட்ட கிணறுகளில் கழிவு எண்ணெய் கிறீஸ் படிமங்கள் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே அக் கிணற்று நீரை மக்கள் அருந்தக் கூடாது. அத்துடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிபுணர்குழுவின் ஆய்வு முறை வேறு வடமாகாண நிபுணர் குழு ஆய்வு முறை வேறு. மத்திய அரசின் நிபுணர் குழு கழிவு எண்ணெய் கலந்திருப்பதை உறுதி செய்கின்றது.

ஆனால் வடக்கு மாகாண சபை நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அதனை எனக்கு அனுப்புமாறு கோரிய போதும் இதுவரை என் கண்களில் கூட அறிக்கை காட்டப்படவில்லை.

சுன்னாகம் பிரதேசத்திற்கு மேலதிக நீர் தேவைப்பட்டால் அதனை வழங்கத் தயாராக இருக்கின்றோம் – என்றார்.

Advertisements