யாழ். ஊடகவியலாளர்கள் மூவர் மீது சிவில் பொலிஸார் கொலை அச்சுறுத்தல்!

யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் 3 பேர் சிவில் உடை தரித்த பொலிஸாரினால் கொலை அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்கள் மூவரும் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.jaffna journalists threats

கடந்த 7ம் திகதி யாழ்.நல்லூர் பகுதியில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டமை தொடர்பிலான செய்தி சேகரிப்பின் பின்னர் யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அண்மித்ததாக வைத்து குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு சிவில் உடை தரித்தவர்கள் ஊடகவியலாளர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் அளவுக்கு குறுக்கு மறுக்காக ஒடினர்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் தேவை என்ன என வினவிய போது சிங்கள மொழியில் சிரித்துக் கொண்டே அந்த இரு நபர்களும் தாங்கள் பொலிஸார் என கூறிக்கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அதற்கு நீங்கள் பொலிஸாராக இருந்திருந்தால் முதலில் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணியவில்லை. மேலும் சீருடையும் இல்லை. இதற்கு மேல் பொலிஸாராக இருந்தாலும் எங்களை மறிக்க வேண்டிய தேவை என்ன? என கேட்டதற்கு சிங்கள மொழியில் மீண்டும், சிரித்துக் கொண்டு தீய வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் குறித்த இரு நபர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் தனது காற்சட்டை பொக்கட்டிலிருந்து கத்தி ஒன்றை (இராணுவ தேவைக்குப் பயன்படும் கத்தி) எடுத்து ஊடகவியலாளர்களை 3ற்கு மேற்பட்ட தடவைகள் குத்த முற்பட்டார்.

எனினும் அங்கிருந்து தப்பித்துக் கொண்டு ஊடகவியலாளர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடிய நிலையில், நல்லூர் ஆலய பகுதியிலிருந்து யாழ்.நகர் வரையில் குறித்த நபர்கள் ஊடகவியலாளர்களை துரத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சரணடைந்து அங்கு சென்ற போது குறித்த இரு நபர்களும் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு முன்பாக தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்த சீருடை அணிந்த பொலிஸாரிடம் கத்தியை கொடுத்ததை ஊடகவியலாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் இந்த விடயம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்திய போது, அவர் ஒரு சார்ஜன்ட் தர அதிகாரியை ஊடகவியலாளர் ஒருவருடன் அனுப்பி அவர்கள் யார்? என்பதை பார்த்து வருமாறு கூறினார்.

இதனையடுத்து அங்கு சென்று அவர்களை பற்றி கூறிய போது குறித்த சார்ஜன்ட முன்பாகவே சீருடை அணியாத அந்த நபர் ஊடகவியலாளரை தாக்க முயன்றார்.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் த.வினோஜித் (யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்), ஹிரு தொலைக்காட்சி செய்தியாளர் த.பிரதீபன், சுயாதீன ஊடகவியலாளர் ஸ்ரீ.மயூதரன் ஆகியோர் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாடும் மிகுந்த சிரமத்தின் பின்பாகவே செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த ஊடகவியலளர்கள் 3பேருடனும் எஸ்.எஸ்.பி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தி இந்த விடயத்தை சமாதானமாக முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர்.

எனினும் ஊடக அமைப்புக்களுடன் பேசியே இந்த தீர்மானத்தை எடுக்க முடியும். என ஊடகவியலாளர்கள் பொலிஸாருக்கு கூறியததையடுத்து நாளைய தினம் அவ்வாறு பேசிவிட்டு எழுத்து மூலம் சமாதானம் செய்யுமாறு பொலிஸார் கூறினர்.

எனினும் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லாததுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றிணை பதிவு செய்திருக்கின்றனர்.

இதேவேளை ஊடகவியலாளர்களுடைய கோரிக்கை இது தங்கள் மீதான முதலாவது அச்சுறுத்தல் சம்பவம் அல்ல. இதற்கு முன்பாகவும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இந்தச் சம்பவத்திற்கு பின்னர் உள்ள காரணம் என்ன?

பொலிஸாருடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் பொலிஸ் பரிசோதகர் எனவும் மற்றயவர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தியிருக்கவில்லை. என பொலிஸார் ஒத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பொலிஸ் சேவையில் தொடர்ந்தும் இருப்பதனால் அவர்கள் மனநோயாளிகளும் இல்லை. எனவே மது பாவிக்கவில்லை. மற்றும் மனநோயாளிகளும் இல்லை. எனவே இந்தச் சம்பவத்தின் பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது.

அந்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பது விசாரிக்கப்படவேண்டும். என பொலிஸாருக்கும், மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிற்கும் வழங்கியுள்ள முறைப்பாட்டில் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.