காத்திரமான போர்க்குற்ற விசாரணை சிறிலங்காவின் பழைய காயங்களை குணப்படுத்தக் கூடும்

no fire zoneகாணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறு ஐபிஎஸ் செய்தி ஊடகத்தில், ‘அமந்த பெரேரா’ எழுதியுள்ள Effective War Crimes Inquiry Could Heal Sri Lanka’s Old Wounds

கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

23 வயதான ஜெசி யோகேஸ்வரன் எம்முடன் சிரித்த முகத்துடன் உரையாடினார். உலகெங்கும் வாழும் இளம் பெண்களைப் போலவே ஜெசியும் பல்வேறு கனவுகளுடன் வாழ்கிறார்.

‘நான் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். நல்லதொரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என எம்மிடம் கூறினார். தனது கனவுகளை எல்லாம் நனவாக்குவேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பெண் வாழ்கிறார்.

இந்த அடிப்படையில், இவருடைய வாழ்க்கையும் மிகச் சாதரணமானதாகும். இவர் போர் வலயத்தில் வளர்ந்த பெண்ணாவார்.

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் மற்றும் தேசிய மீளிணக்கப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜெசி சிந்திக்கும் அதேவேளையில் இவர் தனது சொந்த எதிர்காலம் தொடர்பாகவும் அதிகம் கனவு காண்கின்றார்.

ஜெசி என்ற இந்த இளம்பெண் சிறிலங்காவின் வடக்கில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட போர் இடம்பெற்ற வன்னியில் பிறந்து வளர்ந்தவர். 2006ல் ஜெசிக்கு 14வயதாக இருந்தபோது இவர் தனது சொந்தக் கிராமமான மன்னார் மாவட்டத்திலுள்ள ஆண்டாங்குளத்திலிருந்து இடம்பெயர்த்தப்பட்டார்.

சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்த போது ஜெசியும் தனது சொந்தக் கிராமத்தை விட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

‘நாங்கள் மூன்று ஆண்டுகளாக அதாவது யுத்தம் 2009ல் நிறைவடையும் வரை துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் எறிகணைகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு கணமும் இறப்பு என்பது சாத்தியமான ஒன்றாக இருந்தது’ என ஏப்ரல் 2009ல் யுத்தத்தின் கொடூரத்திலிருந்து குடும்பத்தாருடன் தப்பிச் சென்ற ஜெசி கூறினார்.

போர் முடிவடைந்த பின்னரும் கூட, வன்னியின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. போரில் அகப்பட்டுத் தவித்த கால் மில்லியன் வரையான மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களது சுதந்திர நடமாட்டம் தடுக்கப்பட்டது. இவர்கள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் போன்றே வாழ்ந்தனர்.

இந்த நிலை 2010 பிற்பகுதி வரை நீடித்தது. போரின் பல்வேறு கட்டங்களில் அதிலிருந்து தப்பிப்பிழைத்த 400,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்துள்ளனர். போரின் அழிவுகளிலிருந்து இவர்கள் தம்மை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய நிலையேற்பட்டது.

தமது உறவுகளைப் போரில் பலிகொடுத்தவர்கள், காணாமற்போனவர்கள் போன்றோரின் நினைவுகளுடன் இவர்கள் இன்றும் போரின் வடுக்களைத் தாங்கி வாழ்கின்றனர். வீடிழந்தவர்கள், வடுக்கள் மற்றும் பயம் போன்றவற்றின் பாதிப்புக்களைத் தாங்கி நிற்பவர்களின் துயரங்கள் நீடித்தன.

இந்த நிலை கடந்த ஜனவரியில் சிறிலங்கா அதிபர் தேர்தல் இடம்பெற்று புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மாற்றமடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்த வெற்றி மமதையில் சிறிலங்காவைத் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

ஜனவரி 08 அன்று இடம்பெற்ற தேர்தலிலேயே ஜெசி யோகேஸ்வரன் முதன்முதலாக வாக்களித்துள்ளார். கடந்த காலத்தில் இவரது சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு எதிராகப் பல்வேறு பாரபட்சங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், புதிய தேசிய அரசாங்கம் மீது இவர் முற்றிலும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

‘நாங்கள் நீதி மற்றும் சமாதானத்திற்காக வாக்களித்தோம்’ என ஜெசி கூறினார். உண்மையில் இது ஒரு எளிமையான அவாவாகும்.

ஆனால் கடந்த காலத்தில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக 80,000 தொடக்கம் 100,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இதனால் இந்த விரோதம் ஒருபோதும் முடிவடையாது என சிலர் கருதினர்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதல் 60 நாட்களும் குறிப்பாக வடக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் பல்வேறு விடயங்களைக் கொண்ட ஒரு அனுபவமாகும். இக்காலப்பகுதியில் போக்குவரத்துத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் நடமாட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

ஆனால் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முழுமையான விசாரணை உட்பட சிக்கலான சில விடயங்கள் இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. போரின் இறுதி நாளில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போரின் போது 100,000 இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட ‘Palmyra Fallen’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் பங்குபற்றிய சிறிலங்கா அரசாங்கப் படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிநாட்டின் தலையீட்டை சிறிலங்காவின் முன்னாள் ராஜபக்ச அரசாங்கம் தடுத்தது. இதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கியது. ஆனால் இதன் பரிந்துரைகள் பெரியளவில் நிறைவேற்றப்படவில்லை.

காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைத் தீவு முழுமையிலும் விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அனைத்துலக நியமங்களுக்கேற்ப போர்க்குற்றங்கள் தொடர்பாக புதியதொரு விசாரணை மேற்கொள்ளப்படும் என சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது.

உள்நாட்டில் நம்பகமான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் காலஅவகாசம் தேவையாக உள்ளதாக அனைத்துலக சமூகத்தை நம்பச் செய்வதற்கான முயற்சியில் சிறிலங்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர பதவியேற்ற பின்னர் பல நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இதுவரையில் இவரது வசீகரப் பேச்சுக்கள் பயனளித்துள்ளது போல் தெரிகிறது. சிறிசேன அரசாங்கம் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை காலதாமதமாகும் எனவும் இதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரியே மங்கள சமரவீர வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.

இவரது வசீகரப் பேச்சின் பயனாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் தற்போது இது தொடர்பில் தமது சம்மதத்தை வழங்கியுள்ளன. இந்த அறிக்கை மார்ச் மாதம் கையளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது செப்ரெம்பர் வரை இது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பாகக் கவனத்திலெடுக்கப்படுவதாக மார்ச் 18ல் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவித்தல் மூலம் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் 700,000 வரையான இலங்கைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதே மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நோக்கம் எனப் பலர் கருதுகின்றனர்.

‘சிறிலங்கா அதிபர் சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கமானது மீளிணக்க முயற்சிகள் தொடர்பாக மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதன்மூலம் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லீம்கள் என்ற பேதமின்றி அனைவரும் நாட்டின் மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டும்’ என மங்கள சமரவீர மார்ச் 18 அன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பானது புலம்பெயர் மக்களுக்கு விடுக்கப்பட்டிருப்பினும், சாத்தியமான போர்க்குற்றங்களுக்கான விசாரணைப் பொறிமுறையானது வெளிச்சக்திகளின் தலையீடின்றி, ஆரோக்கியமானதாகவும், தேசிய முயற்சியாகவும் இருக்கவேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

‘எமது பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்பட வேண்டும். ஆனால் இது உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமே கையாளப்பட வேண்டும். இதனை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்’ என சிறிலங்காவின் சக்தி எரிபொருட்துறை அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க பெப்ரவரியில் வெளிநாட்டு ஊடக சங்கத்திடம் தெரிவித்திருந்தார்.

‘ஐ.நாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நம்பகமான, பயன்மிக்க, உண்மையான சுயாதீனப் பொறிமுறையை அபிவிருத்தி செய்வதில் அனைத்துலக வல்லுனர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என சிறிலங்கா அதிகாரிகளை அனைத்துலக மன்னிப்புச் சபையும் ஏனைய நிறுவனங்களும் வலியுறுத்தியுள்ளன.

அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக சிறிலங்காவில் முன்னர் எடுக்கப்பட்ட முயற்சிகள் தடுக்கப்பட்டன’ என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரதி இயக்குனர் டேவிட் கிறிபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையும் ஏனைய அனைத்துலக நிறுவனங்களும் விரும்புகின்றன.

போரின் இறுதியில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித ஈவிரக்கமுமின்றி சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமை, இவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை போன்ற விவகாரங்கள் இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் சிறுவர்களைப் படையில் இணைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

‘அனைத்துலகச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா மீதான அனைத்துக் குற்றங்களும் முற்றாக விசாரணை செய்யப்பட வேண்டும். இதற்கான போதியளவு ஆதரங்கள் காணப்படுகின்றன. குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் நேர்மையான முறையில் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற நீதிமன்றங்களின் முன்நிறுத்தப்பட்டு அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு அவர்கள் சந்தித்த துன்பங்கள் மற்றும் பாதிப்புக்களுக்கு ஈடாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்’ என கிறிபித்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஏற்கனவே சில சாதகமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் INFORM என்கின்ற மனித உரிமை அமைப்பின் ஆய்வாளர் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ ஆளுநர் நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக சிவில் ஆளுநர் நியமிக்கப்பட்டமை மற்றும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டமை போன்றன எதிர்காலத்திற்கான நல்ல சமிக்கைகளாகக் காணப்படுவதாக ருக்கி பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

‘நான் இது தொடர்பில் சாதகமான, நம்பிக்கையான மனப்பாங்கைக் கொண்டுள்ளேன். ஆனால் இதற்கு இன்னமும் நீண்டதூரம் செல்ல வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘நாங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர், மிகப் பயங்கரமான எமது கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம்’ என ஜெசி யோகேஸ்வரன் கூறுகிறார்.

புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

Advertisements