முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவின் அஞ்சலி: உள்நோக்கம் என்ன?

US Tom Malinowski was sworn in as Assistant Secretary of State for Democracy, Human Rights and Laborremember mullivaikal Tom Malinowski Apr 05, 2015முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்காக அமெரிக்கா அஞ்சலி செழுத்தியதாகவும், அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் ஜனாநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி அதைச் செய்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்காலில் மாபெரும் மனித அவலம் நடந்து ஆறுவருடத்துக்குப் பிறகு, இத்தனை ஆண்டுகளாக அந்தப் பகுதியை எட்டியும் பார்க்காத அமெரிக்கா இப்போது இந்த அஞ்சலியை செய்திருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பித்திருக்க வேண்டிய அறிக்கையை, செப்ரெம்பர் மாதம்வரை ஒத்திவைத்தது அமெரிக்காதான் என்பதால் தமிழ் மக்கள் அமெரிக்கா மீது அதிருப்தியோடு இருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச அதிகாரத்தோடு இருந்தபோது அமெரிக்கா தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்பதுபோல் பல அழுத்தங்களை மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு கொடுத்தது. அமெரிக்காவை தமிழ் மக்களும் அளவுக்கு அதிகமாக நம்பினார்கள்.

இப்போது மகிந்தர் அரசியல் அரங்கில் இல்லாததால் அமெரிக்காவும் தமது அணுகுமுறையில் திடீரென ஒரு தளர்வுப்போக்கை கொண்டுள்ளது. இதனால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள். ஏமாற்றியது அமெரிக்கா.

தமிழ் மக்கள் அமெரிக்காவையோ, சர்வதேச சமூகத்தையோ நம்பிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது இலாபங்களிலிருந்தே பிரச்சனைகளை அணுகுவார்கள் என்ற கருத்துக்கள் தற்போது தமிழ் மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதி ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செழுத்தியதாக கூறுவது, தமிழ் மக்களை சமாதானம் செய்யவா? அல்லது தமிழ் மக்களின் உணர்வுகள், வலிகளை அமெரிக்காவும் பங்கெடுத்துக் கொள்கின்றது என்பதற்காகவா?

அமெரிக்காவின் அத்துமீறிய மற்றும் அராஜக நடவடிக்கைகளால், உலகத்தின் பல நாடுகளில் நாளாந்தம் பல அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஈராக்கில், ஆப்கானிஸ்தானில்,வியட்நாமில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் இலட்சக்கணக்கான அப்பாவிகள் பலியாகி இருக்கின்றார்கள்.

பயங்கரவாதிகளை அரசுகளுக்கு எதிராக வளர்த்துவிட்டதன் காரணமாகவும், அரசுகளுக்கும், வன்முறையாளர்களுக்கும் மாறி மாறி ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது காரணமாகவும் உலகில் எத்தனை உயிர்கள் அவலச் சாவடைந்துள்ளனர். அதற்கெல்லாம் சுயவிமர்சனம் செய்து ஒப்புக்காகவேனும் ஒரு பூவை வைத்து அஞ்சலி செலுத்தாத அமெரிக்கா முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செழுத்துவதன் மர்மம் புரியவில்லை.

முள்ளிவாய்க்கால் அவலம் தற்செயலாக நடந்ததல்ல. முழு நாடும் பார்த்திருக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புக்கள் கையாலாகாத தனத்தோடு தமது உயிரைக் காப்பாற்ற ஓடியிருந்தன. சர்வதேச உதவி நிறுவனங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகப் போகின்றார்கள் என்பது சர்வநிச்சயமாக தெரிந்தபோதும் அமெரிக்காவோ, வேறு நாடுகளோ அதைத்தடுக்க முன்வரவில்லை.

அந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அமெரிக்கா, மட்டுமல்லாது சட்டலைட் வசதியுள்ள பிற நாடுகளும் தமது இரகசிய அறைகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்திருக்ககூடும். என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள். அந்த அவலத்தை அப்பாவிகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பது தொடர்பான புள்ளிவிபரமோ, ஆவணமோ பக்கச்சார்பற்று தயாரிக்கப்படவில்லை.

அதற்காக எவரும் முயற்சிக்கவும் இல்லை. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாயகத்தில் தமிழ் மக்களிடம் விடைதேட வேண்டிய பல கேள்விகள் இருந்தபோதும் வாய் திறக்க அச்சமாக இருந்தது. ஆனால் அமெரிக்கா போன்ற வல்லமை படைத்தவர்களும் வாய் திறக்காமல் இருந்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்.

அமெரிக்கா உதவினாலும் இல்லாவிட்டாலும் இறுதிப் போரில் என்ன நடந்தது?, அந்த மனிதப் பேரவலம் எத்தனை பேரை பலியெடுத்தது, இறந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கான விடையை ஒரு நாள் காணவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், வலிகளையும் அமெரிக்கா புரிந்து கொள்கின்றது என்று காட்ட முற்படுமானால், அதற்காக கடல் மணலில் மலர்கள் தூவுவதை விடவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகவும், கௌரவமான வாழ்விற்காகவும் அமெரிக்கா ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் நிறையவே இருக்கின்றது.

– ஈழத்துக் கதிரவன் –

Advertisements