சுன்னாகம் கிணற்று நீரில் ஒயில் மட்டுமல்ல, அரசியலும் கலந்துள்ளது

save the water jaffna 2தமிழர்கள் தமக்கென ஒரு சாதனையைப் படைக்க முடியாமைக்குக் காரணம் என்ன? என்பது பற்றி டாக்டர் மு.வரதராசனார் ஓர் ஆய்வு செய்தார்.அந்த ஆய்வின் பெறுபேறாக

போட்டி, பொறாமை, காட்டிக் கொடுத்தல் என்ற மூன்று கயமைகளுமே

தமிழர்களின் பின்னடைவுக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.

டாக்டர் மு.வரதராசனார் திருக்குறளுக்கு பொருள் எழுதியவர். மிகச் சிறந்த தமிழ் அறிஞர். அவரின் ஆய்வு முடிவுகள் தமிழகத்துக்குப் பொருந்துமோ இல்லையோ நமக்குத் தாராளமாகப் பொருந்தும். தமிழர்களாகிய எங்களிடம் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

இப்போது கூட, சுன்னாகம் பகுதியில் கிணற்று நீரில் கலந்த கழிவு ஒயில் என்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளதா? இல்லையா என்ற உண்மையை வெளிப்படை யாகக் கூறுவதற்குக் கூட எங்களிடம் ஆளில்லாத அவலநிலை ஏற்பட்டுவிட்டது.

ஒரு தரப்பு கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளது. இதனால் அந்த நீரைப் பருகுவது மற்றும் புறச் சுத்தத்திற்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிறது. இன்னொரு தரப்பு ஐயோ! கிணற்று நீரில் ஒயில் கலந்திருந் தாலும் உடல் நலத்திற்கு எந்தக் கேடுமில்லை என்று வாதிடுகிறது.

இதில் அதிசயம் என்னவெனில், இரண்டு தரப்புமே ஆய்வு அறிக்கைகளை தமது வாதத்திற்கான நியாயப்பாடுகளாக முன்வைக்கின்றன. எனினும் பொதுசனங்கள் எந்த ஆய்வு அறிக்கையையும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இதில் இன்னுமொரு வேடிக்கையும் வேதனையும் என்னவெனில் இரண்டு தரப்பிலும் மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதுதான்.

கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளது. இது ஆபத்தானது என்று கூறுகின்ற தரப்பில் இருக்கின்ற மருத்துவர்களும், சுன்னாகம் கிணற்று நீரில் ஒயில் கலக்கவில்லை
அல்லது சில கிணறுகளில் ஒயில் கலந்திருந்தாலும் அதனால் உடல் நலத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறுகின்ற தரப்பிலும் இருக்கக் கூடிய மருத்துவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உருவானவர்கள் என்ற செய்தியையும் இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

வடபுலத்தில் நடந்த மிகமோசமான யுத்த சூழ்நிலையின் போது கூட மருத்துவர்கள் இப்படியானதொரு பேதப்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கவில்லை.

வைத்தியசாலை மட்டத்தில்-நிர்வாக ரீதியான விடயங்களில் மருத்துவர்கள் முரண்பட்டதான பதிவுகள் இருந்தாலும் சுன்னாகம் கிணற்று நீரில் கலந்த கழிவு ஒயில் என்ற விடயத்தில் எங்கள் மருத்துவர்கள் கன்னை பிரிந்து நின்று கருத்து வெளியிடுவதைப் பார்க்கும்போது இறைவா! எங்கள் இனத்தை எப்படி? எங்ஙனம்? காப்பாற்றப் போகிறாய் என்ற ஏக்கமே ஏற்படுகிறது.

இதற்கு மேலாக சுன்னாகம் கிணற்று நீரில் கழிவு ஒயில் என்ற விடயத்தில் அரசியலும் கலந்து விட்டது என்பதை இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும். கிணற்று நீரில் ஒயில் கலந்த விடயத்தில் அரசியலும் கலந்து போனதால் எதிர்கால நிலைமை மோசமான தாகவே இருக்கும்.

கிணற்று நீரில் கலந்த ஒயிலை பிரித்து எடுக்கலாம். ஒயிலில் இருக்கக் கூடிய ஆபத்தான பதார்த்தங்களை உடைத்து எடுக்கலாம். ஆனால் அரசியல் கலந்த கிணற்று நீர் விவகாரத்தை பிரித்து எடுப்பது என்பது முடியாத காரியம் என்பதால், எமது எதிர்காலம் போர்க்குற்ற விசாரணையோ, இனப்பிரச்சினைக்கான தீர்வோ, போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வோ அல்ல; கிணற்று நீரில் கலந்த ஒயில் என்பதே எங்களின் பேசுபடு பொருளாக இருக்கும்.

வலம்புரி

********

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

வடக்கு மாகாணசபையிடம், கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

அவர்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகள் தொடர்பாகவும், பதிலளிப்பதற்கு வரும் 12ம் நாள் வரை காலஅவகாசம் தரும்படியும், முதலமைச்சர் தரப்பில் கோரப்பட்டது.

எனினும், அதனை நிராகரித்த போராட்டக்காரர்கள், முதலமைச்சரை அவமரியாதைக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர் திரும்பிச் சென்றிருந்தார்.

இன்று, காலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராட்டக்காரர்களுக்கு சாதகமாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அமைச்சர் டெனீஸ்வரன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட அந்தக் கடிதம், திருத்தங்கள் கோரி ஐந்து முறை திருப்பி அனுப்பட்டதுடன், கடைசியில், அது தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று போராட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும், போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

இதன் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, தமக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு ஆளுனர் தரப்பில் கோரப்பட்டது.

அந்த வாய்மூல உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள், தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்ற போது, அதற்கு இடமளிக்காதமை-
முதலமைச்சர் முன்வைத்த சாதகமான விடயங்களை பரிசீலிக்காதமை-
முதலமைச்சர் கோரிய ஐந்து நாள் காலஅவகாசத்தை கொடுக்க மறுத்து விட்டு, ஆளுனருக்கு ஏழு நாள் காலஅவகாசத்தை வழங்கியமை-
வடக்கு மாகாணசபையை உதாசீனப்படுத்தும் வகையில், ஆளுனரை முன்னிலைப்படுத்த முற்பட்டமை-

போன்ற விடயங்கள், இந்தப் போராட்டத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களையும் விசனங்களையும் தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கான- வடக்கு மாகாணசபையை நசுக்குவதற்கான புதிய சதித் திட்டத்துக்கு தூயநீரூக்கான போராட்டம், பயன்படுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வடக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்களைக் கோரும் நிலையில், அதனை மறுப்பதற்காக, இருக்கும் அதிகாரங்களையே வடக்கு மாகாணசபையால், பொறுப்பாக பயன்படுத்த முடியாதளவுக்குச் செயலற்றதாக உள்ளது என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

**
சுன்னாகம் குடிநீர் போராட்டம் ஏன் முடித்து வைக்கப்பட்டது? அம்பலமாகியது சங்கதி!!

சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான போராட்டம் சர்ச்சைக்குரிய வகையினில் முடிவுறுத்தப்பட்டமை பல்வேறு தரப்புக்களிடையேயும் சந்தேகங்களினை தோற்றுவித்தேயுள்ளது.கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக்கொண்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் 72மணித்தியாலத்தினுள் தீர்வெனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் வெறும் 30மணித்தியாலத்துடன் அதனை முடித்துக்கொண்டனர்.அதன் போது மயக்கமுற்று சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மக்கள் முழு அளவினில் நம்பி ஆதரவு தெரிவித்து இணைந்து போராடியபோதும் அம்மக்களது காதில் பூவைப்பது போன்று ஈபிடிபி பிரமுகர்களான சுந்தரம் டிவகலாலா மற்றும் சிவச்சந்திரனது ஏற்பாட்டினில் இலங்கை அரசின் ஆளுநரது உறுதி மொழியுடன் உண்ணாவிரதத்தினை முடித்துக்கொண்டனர்.
எனினும் தமக்கான சுயவிளம்பரத்திற்காகவே சிலர் போராட்டத்தினில் இணைந்துகொண்டமை அம்பலமாகியுள்ளது.

போராட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு அவர்கள் நேற்றிரவு 46 வயதான அம்மணியொருவரது பிறந்த தினத்தினில் கலந்து கொண்டமை அம்பலமாகியுள்ளது. மக்களது நம்பிக்கைகளினை சிதறடித்து அவர்கள் நேற்று கொண்டாடிய நிகழ்வு மற்றும் போராட்டகள புகைப்படங்கள் சமூக ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements