சம்பந்தனின் கூற்று பயனற்றது !

sampanthan_sumanthiran traitorsசந்திரிகா தலைமையில் ஜனாதிபதி செயலணி ஊடாக தமிழர்களுக்கான தீர்வு என்ற சம்பந்தனின் கூற்று பயணற்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தலைமையில் ஜனாதிபதி செயலணி ஊடாக தமிழர்களுக்கான தீர்வு எட்டப்படும் என்ற சம்பந்தனின் கூற்று பயணற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்திரிகா தலைமையில் ஜனாதிபதி செயலணிக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அது தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக அந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டிருப்பதாக சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார்.

சந்திரிகா தொடர்பாக சம்பந்தன் ஐயா மிகவும் ஒரு நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல 1994 ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவர் மிக நேர்மையாக தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தொடர்பாக செயற்பட்டு தீர்வு காண்பதற்கு முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. துரதிஷ்டவசமாக அந்த முயற்சி முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது என்று சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.

இது தொடர்பாக நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருக்க சம்பந்தன் ஐயாவும் அவர் அப்போது சார்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் அம்மையாருடைய அரசாங்கத்தினோடு எவ்வளவு ஒரு நெருக்கமான உறவை வைத்திருந்தார் என்பது எங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அது அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட செயற்பாட்டில் செயற்பட்டது என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். சந்திரிகா அம்மையார் மக்கள் மட்டத்தில்; வாக்குகளைப் பெற்றமையானது தமிழர்களுக்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இன்று மைத்திரிபால சிறிசேன, மக்கள் முன் வாககு பெற்றுக்கொண்டதைப் போன்று அல்ல. அவர் சொன்னது தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வு வழங்க முடியாது. 13ம் திருத்தம் மட்டும்தான். ஒற்றையாட்சிக்குள்ளே தான். இங்கு போர்க்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை. இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

இப்படியல்ல அன்று சந்திரிகா வாக்குப் பெற்றமை. தமிழர்களுக்கு நியாயமான ஒரு பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர்கள் வாக்குகளைப் பெற்றனர் அந்தக் கருத்துக்களுக்கு தமிழ் மக்களும் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.

அன்று சந்திரிகா அம்மையார் இலங்கைத் தீவில் இருக்கக் கூடிய மக்களின் 62 வீதம் வாக்குகளைப் பெற்றார். இற்றை வரைக்கும் வேறெந்த ஒரு தலைவரும் அந்தளவுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பெறவில்லை என்பது உண்மை.

ஆகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான் உண்மையான நோக்கம் என்றால் அன்றைய சந்திரிகா அம்மையாருடைய அரசாங்கம் அந்தத் தீர்வைக் கண்டிருக்கலாம். அதிலே மாற்றுக்கருத்து இல்லை. ஆக என்ன நடந்தது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு பேசிக் கொண்டு இருக்கும் வரையில் எந்தவிதமான தீர்வையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

இதை ஏற்கனவே பாலசிங்கம் ஐயாவும் தன்னுடைய ஒரு “பொலிடிக்ஸ் ஒவ் டுப்ளிஷிட்’’ என்ற புத்தகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் சந்திரிகா அம்மையாருக்கும் இடையே பரிமாற்றப்பட்ட கடிதங்கள் அனைத்தையும் பதிவு செய்திருந்தார். ஆதில் இருந்து மிகத் தெளிவாக விளங்குகின்றது.

உண்மையிலே நம்பிக்கை கொடுக்கக் கூடிய வகையிலே விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை மீறிக்கொண்டு திட்டமிட்ட வகையிலே மக்களின் நலங்களை கவனிக்காமல் ஒரு பக்கம் இருக்கத்தக்கதாக இன்னொரு பக்கத்தில் தன்னுடைய இராணுவ பலத்தை பலப்படுத்திக் கொண்டு இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி செயற்படுவதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் ஒரு பிரச்சினை தொடர்பில் இறுதித் திகதி விடுத்தனர். அந்த நேரத்தில் இனப்பிரச்சினை தொடர்பாக சந்திரிகா அம்மையார் எந்தவிதமான யோசனைகளையும் முன்வைக்கவில்லை.

ஆனால் 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேச்சுவார்த்தை முறிந்த கையோடு அந்த அம்மையார் தன்னுடைய வரவுகளை முன்வைக்கிறார். அப்போது விடுதலைப்புலிகள் ஏமாற்றப்பட்டு, தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு போர்நிறுத்தம் போக்கடிப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு போர் ஆரம்பித்த கையோடேயே இந்த யோசனைகளை முதற்தடவையாக முன்வைக்கிறார்கள். யோசனைகளை முன்வைத்த பொழுது அதற்குப் பக்கபலமாக இருந்ததே இந்த சம்பந்தன் ஐயா உட்பட இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்.

அதற்குப் பிற்பாடு விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் மட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும்தான் தீவிரவாதிகள், அவர்கள் குழப்பவாதிகள் அவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை. அவர்கள் மட்டும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பை தடை செய்வதற்கும் இதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மிகத் தீவிரமாக ஒத்துழைத்தமை உண்மை. ஆரம்பத்தில் 1995ம் ஆண்டு இயக்கத்தைப் பலவீனப்படுத்தி ஓரம் கட்டுவதற்காக வெளியிடப்பட்ட முதல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதாவது சம்பந்தன் ஐயா உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முழு ஆதரவைப் பெற்றுத்தான் ஓரங்கட்டும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உண்மையிலேயே சந்திரிகா அம்மையார் தமிழருடைய பிரச்சினைகள் தொடர்பாக பேசியமையானது வெறுமனே உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஓரங்கட்டுவதற்கு மட்டும்தான் என்பதே எல்லோரும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டிய விடயம்.

உண்மையில் அப்படி இல்லை எனில் அந்த அம்மையாருடைய இன்றைய கருத்துக்கள் கூட வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கும் ஒரு சமஷ்டி பற்றியோ சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு தீர்வு பற்றியோ ஒருவரும் பேசுவதாக இல்லை. இன்றைக்குப் பங்காளிக் கட்சியாக சந்திரிகா அம்மையார் ஆதரித்திருக்கிற வேட்பாளர்களும் கூட ஒற்றையாட்சியைப் பற்றித்தான் பேசுகின்றார்கள் – என்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது குரலெழுப்புவார்கள்- சந்திரிக்கா

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலகமாக மாற்றவுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மோசமான ஆட்சிக்காகவே மக்கள் அவரை தோற்கடித்தார்கள். மகிந்த ஆட்சியில், அவரது குடும்பத்தின் ஊழல்கள், மனித உரிமை மீறல், பல கொலைகள் மற்றும் ஒட்டுமொத்தத்தில் சுதந்திரம் இல்லாதநிலையே இலங்கையில் காணப்பட்டது.

கடந்த அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முற்றாக சீர்குலைத்துள்ளதை தொடர்ந்து அதனை சரி செய்து, இந்தியாவுடனான நல்லுறவை மீள கட்டியெழுப்புவதற்கு இலங்கை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். அவரது விஜயத்தின் மூலம் நட்புறவு பற்றிய வலுவான செய்தியொன்றை அவர் இலங்கைக்கு வழங்கியுள்ளார். ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாங்கள் அனுபவிக்கின்ற சுதந்திர உணர்வு மிகப்பெரியது என அவரது ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்களே தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையில் மைத்திரி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் சுமூகமான உறவு நிலவுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக்குரலெழுப்புவார்கள். எனினும் எங்கள் மத்தியில் சிறந்த உறவு ஒன்று காணப்படுகின்றது. விமுக்தி குமாரதுங்க அரசியலுக்குள் நுழைவாரா என்று எனக்கு தெரியாது அவர் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.

Advertisements