சிறிலங்கா புலனாய்வு பிரிவினால் எந்நேரமும் கண்காணிக்கப்படும் முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், எந்தவொரு அரச விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடாத போதிலும், தாம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, கண்காணிக்குக்குள்ளாக்கப்படுவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.SL Army Jaffna

தாம் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, எஸ். யோகேஸ்வரன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் காணாமற்போனதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் இவர் பங்கெடுத்து வருகிறார்.

இவரது கணவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் பணியாற்றியவர்.

2009 மே 18ம் நாள், அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளாருடன், இவருக்கு முன்பாகவே, அவர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.

ஆனால், அதற்குப் பின்னர் அவர் என்னவானார் என்று கேள்விப்படவில்லை.

“எனவே, இந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கிறேன். தீவிரவாத புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் அடிக்கடி எனது வீட்டுக்கு வருகின்றனர்.

மாலை நேரங்களில், அவர்கள் வரும் போது, நானும், எனது பிள்ளைகளும் அச்சமடைகிறோம்.” என்கிறார் 45 வயதுடைய, அந்த மூன்று பிள்ளைகளின் தாய்.

இந்தப் பகுதிகளில் “அடையாளம் தெரியாத நபர்”களால், நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் காரணமாக அச்சமாக உள்ளது.

எனது பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வதில்லை. பாடசாலைக்கும் நானே கூட்டிச்சென்று திருப்பி அழைத்து வருகிறேன்” என்றார் யோகேஸ்வரி.

சிறிலங்கா படையினர், கல்வித் தகுதியற்ற பெண்களுக்குக் கூட 30 ஆயிரம் ரூபா ஊதியத்துடன், வேலை வாய்ப்புக் கொடுத்துள்ளனர்.

ஆனால், எனக்கு கல்வித் தகைமை மற்றும் எழுதுனர் பணி அனுபவம் இருந்தும், என்னை அந்தப் பணிக்கு கருத்தில் கொள்ளவில்லை.

மாதம் 6 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் போரிடும் அணியில் இருந்தவரான ஜெபநேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 2009இல் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு, மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய இவர், பின்னர் குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் கொண்டுள்ள, நெருக்கம் காரணமாக, அரச புலனாய்வு அமைப்புகளால், கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

“என்னை இன்னமும் தீவிரவாதியைப் போலவே, பார்க்கின்றனர். இங்கு அசம்பாவிதங்கள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் விசாரணை செய்யப்பட்டேன்.

எனது வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.நான் ஒரு கேபிள் தொலைக்காட்சி வர்த்தகத்தை ஆரம்பித்த போது, அதனை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

கரும்புலிகள் அணியில், ஆண்களுடன் பெண்களும் இருந்தனர். ஆனால், 12,077 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது சமூகத்தில் அமைதியாக வாழ்கின்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான கரும்புலிகள் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், எவரும், குற்றங்களிலோ, வன்முறைகளிலோ ஈடுபடவில்லை.

எனினும், புனர்வாழ்வுக்குப் பின்னர், சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில், ஆண், பெண் போராளிகளுக்கு இடையில் சிக்கலான வேறுபாடுகள் உள்ளன.

ஆண்களை சமூகம் ஏற்றுக் கொண்டாலும், விடுவிக்கப்பட்ட 2269 பெண் போராளிகள், சமூகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கரும்புலிகளின் மனோநிலையை, மாற்றுவது ஒன்றும் இலகுவான காரியமில்லை. அவர்களை விடுதலைப்புலிகள் மிக கவனமாகத் தெரிவு செய்து பயிற்சி அளித்துள்ளனர்.

சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்பணர்வு ஊட்டப்பட்டுள்ளது. உயிர்த் தியாகம் செய்வது, விடுதலைப் புலிகளின் போராட்டத்தில், மிகச் சிறந்த செயல் என்று நம்பிக்கையூட்டப்பட்டுள்ளது.

இப்போது, முன்னாள் போராளிகள் வன்முறையை நிராகரிக்கின்றனர். இவர்களில் 8 வீதமானோர் மட்டுமே, காவல்துறை அல்லது, பாதுகாப்புப் படைகளில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முன்னாள் போராளிகள், ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ, ஏந்த விரும்பவில்லை.

அரசாங்க உதவியுடன் ஆண் போராளிகள், வேலை தேடிக் கொண்டுள்ளனர் அல்லது சிறு வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில் 29 வீதமானோர், அரசாங்க கடன்களைப் பெற்று சிறிய வியாபாரம் போன்ற சுயதொழில்களில் ஈடுபடுகின்றனர்.

16 வீதமானோர், பயிற்சி பெற்ற, பயிற்சி பெறாத தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். 11 வீதமானோர், விவசாயத்திலும், 7 வீதமானோர் தனியார் துறையிலும், 4 வீதமானோர் அரசாங்கத்துறையிலும், 8 வீதமானோர் மீன்பிடியிலும், ஏனைய 8 வீதமானோர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலும் பணியாற்றுகின்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 2269 பெண் போராளிகளில், சிலர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், பெண் போராளிகள் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் பிந்திய அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்களும், சிறுவர்களும், சமூகத்தில் மரியாதையை இழந்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பெண்களில், 25 வீதமானவர்கள், கணவனை இழந்தவர்கள் அல்லது உடல் உறுப்புகளை இழந்தவர்களாவர்.

2172 முன்னாள் போராளிகள் இன்னமும், புனர்வாழ்வு பெறாமல் உள்ளனர். அவர்கள் மீண்டும் ஆயுதமேந்தும் ஆபத்து உள்ளது. அவர்களைப் பிடித்து புனர்வாழ்வு அளிக்க சட்டரீதியான செயல்பாடுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements