பிரிவினை பேசுவது தமிழர்களா ?

இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது.srilanka flag

தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன.

இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு ஏற்படுகின்ற செல்வாக்குகள் தாக்கங்கள் என்பன இலங்கையிலும் எதிரொலித்தன. இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிராக நிகழ்ந்த எதிர்ப்பு போராட்டங்களும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் இலங்கைக்கும் பரவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துரைப்பார்கள். எப்போதும் இந்தியாவில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அதன் தாக்கம் உடனடியாக ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இது இலங்கை இந்தியதேசம் அருகருகில் இருப்பது மாத்திரமன்று. இருநாட்டிற்கும் இடையில் காணப்படுகின்ற ஆத்மீகமான உறவு என்றும் சொல்லலாம்.

இவ்வாறான தாக்கங்கள், மாற்றங்கள் மன்னர்கள் காலத்திலிருந்து உண்டு. அதன் விளைவுகள் தான் இலங்கை இந்திய கலைமரபுகளும் கூட இந்திய தேசத்தில் காணப்படுகின்ற அஐந்தா எல்லோரா குகை ஓவியங்களைப் பின்பற்றி இலங்கையில் காசியப்ப மன்னனால் சிகிரியா குன்றினையும் ஓவியங்களையும் சாண்றாக குறிப்பிடலாம். இவ்வாறு இலங்கை இந்திய கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றித்திருக்கும் தேசமானது ஐரோப்பியர்களுக்கு எதிரான போராட்டத்தின் தாக்கத்தின் விளைவால் இலங்கையிலும் ஐரோப்பியர்களுக்கு எதிரானபோராட்டம் வலுப்பெறலாயிற்று.

மக்களின் மனதில் தேசபக்தியை விதைக்கும் பொருட்டும் மக்களை பிரித்தானியர்களுக்கு எதிராக கிளர்தெழச் செய்யவும் விடுதலைப்பாடல்கள் அதிகம் எழுதப்பட்டன. பிற்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் இன விடுலைப்போரட்டத்தை இளைஞர்கள் மத்தியில் விதைப்பதற்கும் விடுதலைப்பாடல்கள் அதிகம் புலிகளால் வெளியிடப்பட்டன என்பது இங்கு நோக்கத்திற்குரிய ஒன்று.

ஒரு இனத்தின் உணர்ச்சிகளை மனதில் இருக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பவல்லது பாடல்கள். அதனை நினைவில் கொண்டே எப்போதும் விடுதலை உணர்வுகள் கொண்ட பாடல்கள் அதிகம் எழுதப்படுகின்றன. இந்திய தேசம் விடுதலை அடைந்தகையோடு இலங்கை தேசமும் 1948 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 4ம் திகதி சுதந்திரத்தை சுவீகரித்துக்கொண்டது. ஆனந்த சமரக்கோன் என்பவரால் 1940ம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட பாடலான நமோ நமோ மாதா என்ற பாடலும் பி.பி. லங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இரு கவிஞர்கள் சேர்ந்து எழுதிய ஸ்ரீலங்கா மாதா பலய சம ஹிமா என்று தொடங்கும் பாடலும் இலங்கையின் முதல் சுதந்திர தினமாகிய 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி வானொலி வாயிலாக ஒலிபரப்பபட்டது.

எனினும் இதன் பாடலாசிரியர்கள் அப்போதைய தெரிவிக்குழுவில் இருந்தமையினால் இத்தெரிவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த சுதந்திர தின நிகழ்வுகளிலும் 1950 ஆண்டு நிதியமைச்சராயிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆலோசனைப்படி ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்கின்ற தேசியகீதம் இசைக்கப்பட்டு வருக்கின்றது. இதற்கான உத்தியோக பூர்வமான ஆணை 1951 ஆம் ஆண்டு கிடைத்ததோடு அதற்கான இசையினையும் ஆனந்தசமரக்கோன் வழங்கியிருந்தார்.

இதன் அடுத்த கட்டமாகவே சிங்களத்தில் ஆனந்த சமரக்கோன் எழுதிய பாடலை தமிழில் தமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி அவர்கள் தமிழில் 1950 ஆண்டு எந்தவித வார்த்தைப் பிழையுமின்றி மொழிபெயர்த்தார்.

இவ்வாறு ஒரு நாட்டின் தேசிய கீதம் மக்களின் தேசிய உணர்வினையும் அவர்களின் நாட்டுப்பற்றையும் ஏற்படுத்தும் முகமாகவும் பாடப்படுகின்றது. என்றபோதும் இலங்கை தேசியகீதம் இசைக்கப்படும் போதெல்லாம் தமிழ்மக்களுக்கு அதில் துளியளவும் மரியாதை உண்டாகிற்று என்று கூறுவதற்கில்லை. அதற்கு ஆட்சியாளர்கள் செய்கின்ற செய்து கொண்டிருக்கின்ற திட்டமிட்ட வகையிலான செயல்பாடுகள் என்றும் கூறலாம்.

நாங்கள் இலங்கையர்கள் என்கின்ற எண்ணத்தினை இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மனங்களில் விதைக்கத் தவறியதே காரணம். தமிழர்களை எப்போதும் எதிரிகளாக பார்க்கும் அரசதரப்பும் கடும்போக்கு சிங்களத்தரப்பும் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துக்களும் அடக்கு முறைகளும் நாட்டின் மீதும் இலங்கை எங்கள்நாடு இலங்கை தேசியகீதம் எங்களது தேசியகீதம் என்று உணர்வு பூர்வமாக தமிழ்மக்களினால் இசைக்க முடியவில்லை, முடிவதில்லை.

ஆனால் 120 கோடி மக்கள் தொகையினைக் கொண்ட இந்திய தேசத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்கிற கவிஞரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தேசிய கீதத்தினை அத்தனை பேரும் உணர்ச்சியோடு உணர்வு பூர்வமாக இசைக்கின்றார்கள் எனில் அவர்கள் தம்மை இந்தியர்கள் என்று உணர்கின்றார்கள் என்று கூறின் அது மிகையாகாது. இத்தனைக்கும் மேலாக இந்திய தேசியகீதமானது இந்திய தேசத்தின் சிறுபான்மை மக்கள் பேசுகின்ற மொழியில் இயற்றப்ப்பட்டுள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்டதுமில்லை பாடமறுத்ததுமில்லை.

ஆக, பாரத தேசத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை எப்போதும் உள்வாங்கும் இலங்கைதேசம் தேசியகீதத்தில் அடம்பிடிப்பது விநோதமானதாகவுள்ளது. தேசிய கீத்த்தினை தமிழில் பாடுவதற்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாயினும் இவ்வாறான கடும்போக்கு அமைப்புக்களின் கருத்துக்களை தடை செய்யவேண்டும். அல்லது சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும். இலங்கையர்கள் நாங்கள் என்று என்றைக்கு தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்றார்களோ அன்றைக்கே இலங்கை தேசம் உண்மையான தேசியகீத்தினை இசைக்கும்.

அதைவிடுத்து இலங்கை தேசிய கீதத்தினை சிங்களத்தில் பாடவேண்டும் தமிழில் பாடக்கூடாதுதென்று சிங்களத்தரப்பின் ஒருபகுதி தெரிவிக்குமாயின் நாங்கள் பிரிந்து செல்வது சரியானது என்று தமிழ்மக்கள் கூறுவதும் ஏற்புடையது என்று தமிழ்த்தரப்பில் வாதாடுவதற்கும் பலர் உள்ளனர் என்பதை குறித்த தரப்பினர் கருத்தில் கொள்ளவேண்டும்.

தவிர இன்று பிரிவினையை தமிழ்மக்கள் ஏற்படுத்துகின்றார்களா சிங்களத் தரப்பினர் ஏற்படுத்துகின்றார்களா என்பதை ஆட்சியை ஏற்றிருக்கும் புதிய அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும். பிரித்துப்பார்ப்பதும் பிரித்து ஆட்சி செய்வதும் யாராக இருக்கிறார்கள் என்று விவாதம் நடக்குமாயின் விவாதத்தின் முடிவில் ஏன் இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஏற்பட்டது என்றும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கியமைக்குமான காரணங்களுக்கும் தெளிவான விடைகிடைக்கும்.

இவை தவிர தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என்கின்ற கருத்து மேலோங்குமாயின் தமிழர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் இல்லையா என்கின்ற கேள்வி எழுவது நியாயமானதே அவ்வாறான கேள்வி எழுமாயின் தமிழர்கள் தமிழீழம் கேட்டு போராடியது நியாயமானது என்கின்ற விடையும் கிடைக்கின்றது.

எதுவாயினும் தேசிய கீதத்தினை தமிழில் இசைத்தாளும் சிங்களத்தில் இசைத்தாளும் தமிழ் மக்களுக்கு இரண்டும் ஒன்று தான் எனினும் இருக்கும் சின்னச்சின்ன உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்று இலங்கை பெரும்பான்மை தரப்பினர் கருதுவார்களாயின் நாடு இன்னும் பிரிவினையை நோக்கி நகரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அந்த பிரிவினையை ஏற்படுத்துவது தமிழர் தரப்பன்றி அது இலங்கையின் பெரும்பான்மை தரப்பு என்பதே உண்மை

எஸ்.பி. தாஸ்

Advertisements