ஒதுக்கப்பட்டவர்களைப் போல் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகளை நடத்துகின்ற அவலம்!

ex ltte prisonerவிடுதலைப் போராளிகளின் விடியாத எதிர்காலம்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் என்போரின் எதிர்காலம் தொடர்பாக எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டமும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட புள்ளிவிபரத்தின்படி சுமார் பன்னிரெண்டாயிரம் முன்னாள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அரசு கூறியது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உறவினர்களிடமும், பெற்றோர் மற்றும் குடும்பத்துடனும் சில நூறு பேரே விடுவிக்கப்பட்டனர். பன்னிரெண்டாயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறியபோதும், அந்த எண்ணிக்கையை தமிழ் மக்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அப்படியொரு பெயர்ப்பட்டியலை அரசோ, படைகளோ வெளியிடவில்லை. எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், யாரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள் என்பதை வெளிப்படுத்த கோட்டபாய ராஜபக்ஷவால் முடியுமா?

பன்னிரெண்டாயிரம் பேரை கைது செய்ததாக கோட்டபாய கொம்பனி கூறியிருக்கின்றது என்றால் அவர்களில் பல பேர் உயிரோடு விடுதலை செய்யப்படவில்லை என்பதை மட்டும் நிச்சயமாக நம்பலாம்.

புனர்வாழ்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றவர்களுக்கு சுய தொழில் பயிற்சிகளை வழங்கியதாக மகிந்த ராஜபக்ஷ அரசு கூறியது. தொழில் பயிற்சியை வழங்கியதைத் தவிர புனர்வாழ்வு என்பதே உளவியல் ரீதியாக முன்னாள் போராளிகளை பாதிப்படையச் செய்வதுதான்.

புனர்வாழ்வு பெற்றுக் கொண்டவர்கள் இதுவரை புனர்வாழ்வு பெற்றுக் கொண்ட காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக யாரிடமும் கூறியதில்லை. ஊடகங்கள் கூட புனர்வாழ்வு என்பதன் பொருளை ஆராய்ந்து வெளிப்படுத்தவில்லை.

எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் கூட புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை சந்தித்து அங்கு என்ன நடந்தது என்று கேட்கவில்லை. புனர்வாழ்வு வழங்கப்படும் முகாம்களுக்குச் சென்று நேரடியாக தெரிந்து கொள்ளவுமில்லை.

மனித உரிமை அமைப்புக்களோ, ஐ.நா சபை பிரதிநிதிகளோ கூட புனர்வாழ்வளிக்கப்படும் முகாம்களுக்குச் சென்று உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்களின் உரிமை தொடர்பாகவும், விடுதலை தொடர்பாகவும் பேசுகின்றவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது? தமிழ் இனம் எவ்வாறு மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றது? என்பதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அந்தத் தேவையும் அவர்களுக்கு இல்லை.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை பல வடிவங்களில் படையினர் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், சிலர் வீட்டில் உறங்குகின்றார்களா? என்று இரவில் மர்ம நபர்கள் எட்டியும் பார்க்கிறார்கள் என்றும் சிலர் கூறியிருக்கின்றனர்.

தொழில் பயிற்சி பெற்றவர்கள் தொழில் ஒன்றை செய்வதற்கு முதலீட்டை கடனாகக் கூட வழங்கவில்லை. சுய தொழிலுக்கான உபகரணங்களை வழங்கவில்லை. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் இன்னொரு புனர்வாழ்வளிக்கப்பட்டவரை சந்திப்பதை விரும்புவதில்லை.

அப்படிச் சந்திப்பதுகூட ஆபத்தானதாக மாறிவிடும் என்று அஞ்சுகின்ற நிலைமையில், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை தமிழ் தொழில் நிறுவன உரிமையாளர்களே இணைத்துக் கொள்வதில்லை.

அவர்கள் போராளிகளாக இருந்தபோது, ‘தம்பி வாங்கோவன், சாப்பிடுங்கோவன்’ என்று வலிந்து உபசரித்தவர்கள் இப்போது, முன்னாள் போராளிகள் வீட்டுக்கு வருவதையே விரும்புவதில்லை. தொழில் வழங்குவதில்லை.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களைப்போல் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகளை நடத்துகின்ற அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணிக்கத் துணிந்து இயக்கங்களில் சேர்ந்து கொண்ட அனைவருக்கும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் தொடக்கம் தற்போதைய ஈ.பி.டி.பிவரை சமூக வாழ்க்கைக்குத் திரும்பிய அனைத்துப் போராளிகளுக்கும் இதே நிலைதான்.

தலைமை வெறியற்ற இயக்கத் தலைமைகள் இலலாமல் போனதும், போராட்டம் சரியாக திட்டமிடப்படாமல் முன்னெடுக்கப்பட்டதும், ஆயுதங்களை ஏந்தியதும், எந்த மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்டார்களோ, அந்த மக்களுக்கு எதிராகவே அந்த ஆயுதங்களை கொஞ்சமும் சிந்திக்காமல் நீட்டியதும், தமிழ் மக்களின் விடுதலை உணர்வை இந்த கையறு நிலைக்கு தள்ளிவிட்டது.

புனர்வாளிக்கப்பட்ட ஆண் ஒருவருக்கு பெண் கொடுக்கத் தயங்குவதும், புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மாப்பிள்ளை கொடுக்கத் தயங்குவதும் இன்று தமிழர்களிடையே ஒரு கலாசாரமாக வளர்ந்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை போராடி மடிந்திருந்தால் மாவீர்களாக கொண்டாடுகின்றவர்கள், அதே போராளிகள் வாழ்வதற்கு விரும்புவதை புறக்கணிக்கின்றார்கள்.

இன்னும் சுமார் ஆயிரத்து ஐநூறு முன்னால் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக முன்னைய அரசு கூறியிருந்தது. அவர்களின் விடுதலை ஏன் தாமதிக்கின்றது?

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னால் போராளிகளின் பெயர் விபரங்களை தற்போதைய அரசு வெளியிட வேண்டும். அவர்களின் விடுதலைக்கு ஆவண செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும், விசாரணைகள் செய்யப்படாமலும், சந்தேகத்தின் பெயரிலும் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளுக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.

இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னால் இயக்கப் போராளிகளாக இருந்து சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கம் அனைவருக்குமாக பொதுவான உதவித் திட்டமொன்று உருவாக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் இலங்கையில் முன்னெடுக்கும் போராட்டம் சரியானது, போராடுகின்ற முறை தவறானது என்பதை ஒவ்வொரு தமிழனும், விருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்தித்து உணரவேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கான பாதையை தமிழ் மக்கள் சரியாக வகுத்துக் கொள்ளமுடியும்.

– ஈழத்துக் கதிரவன் –

Advertisements