பாலைவனமாகும் யாழ்குடாநாடு குறித்து விழிப்புணர்வு

1967ல் ஆய்வினை மேற்கொண்ட இஸ்ரேலிய நிபுணர்கள் ‘இன்னும் இருபத்தைந்நு வருடங்களில் யாழ்குடாநாடு பாலைவனமாகும்’ என எச்சரித்துச் சென்றுள்ளனர். அவர்கள் எவ் எண்ணத்தினடிப்படையில் கூறினார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது முன்னோர்கள் இவ் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவே 45 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட நாம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதவர்களாக இருக்கின்றோம். அத்துடன் இன்று சுன்னாகத்தில் இயங்கி வந்த எண்ணெய் எரிபொருட்கள் ஊடான மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே நீர் மாசு ஏற்பட்டுள்ளது. இவ் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்தில் விடப்பட்ட கழிவு ஒயில் தற்போது; சுன்னாகம், உடுவில்,ஏழாலை,மல்லாகம், தெல்லிப்பழை, இணுவில்,கட்டுவன்,அளவெட்டி,இளவாலை,சண்டிலிப்பாய் பிரதேசங்களில் இந்நிலை பரவியுள்ளது. குறிப்பாக உடுவில் சுகாதாரப்பிரிவில் 16 கிhரம அலுவலனர் பிரிவில் மட்டுமே கிட்டத்தட்ட 1400 கிணறுகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் , ஆதி மனிதன் தனக்கு பசியெடுக்கும் போது மட்டுமேஉணவை பற்றி சிந்தித்தான் தவிர நீரினைப் பற்றி சற்றேனும் சிந்தித்ததாக அறியப்படவில்லை. அவர்களது நீர்த் தேவையானது இன்றைய காலகட்டம் போல் முக்கியம் பெறாவிட்டால் கூடஅவர்கள் நீரினை விண்விரயம் செய்யவோ, அதனை மாசுறச் செய்யவோ இல்லை. காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல சனத்தொகை அதிகரிப்பு, தேவைகளின் பெருக்கம் என்பன நீருக்கான கேள்வியை தூண்டிவிட்டதுடன் மனிதனின் இயற்கை மீதான ஆதிக்கம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது. இதனால் நவீன மனிதனோ நீரினைப் பெற அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றான். அன்று அவனுக்கு உணவைப் பெறுவதற்கான மூலங்கள் இருந்தும் அது தொடர்பான அறிவு குறைவாகவிருந்தது. ஆனால் தற்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்பங்கள் இருந்தும் சுத்தமான நீரைப் பெறமுடியவில்லை. மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.இதற்கு மனிதனே முழுமையாகப் பொறுப்புடையவனாக இருக்கின்றான். jaffna drought

நீரானது உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றதுடன் நீரின்றி உலகமே இல்லை என்றாகிவிட்டது. அது யாவரும் அறிந்த உண்மை.உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்று என்பதுடன் அனைத்து வளங்களுக்கும் மூலவளம் நீரே. பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என்கின்றது எமது விஞ்ஞானம். வேற்றுக் கிரகங்களில் மரம், செடி கொடி, ஆறு, குளம்,ஓடைகளும் இல்லை. இதன் காரணமாகவே அந்த கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன. நீர் இல்லை எனில் இந்த உலகில் உயிருள்ள ஜீவன்கள் ஒன்றுமே இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் கூட அதனை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லையெனில் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.மனித சமுதாயத்துக்கு பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது நீர். நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

பூமிப்பரப்பின் 71 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளதுடன் 29 சதவீதம் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. பூமியின்;பெரும்பகுதி சமுத்திரங்களிலும், ஏனைய நீர், பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6 சதவீதப் பகுதி நிலத்தடி நீர்ப் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டலத்தில் 0.001 சதவீத நீர் வாயு வடிவில் உள்ளது. பூமியிலுள்ள நீரின் 97 சதவீதம் உப்பு நீராகவும் 2.4 சதவீத நீர் பனி, ஆறுகள் மற்றும் துருவ பனிமலைகளிலும், 0.6 சதவீத நீர் ஏனைய நீர் நிலைகளான ஆறுகள்,ஏரிகள், குளம் குட்டைகளிலும் நிறைந்திருக்கின்றன. கடல் நீரை தவிர்த்து பனிமலைகளிலும், பனி ஆறுகளிலும்,நீர்ப்படுகைகளிலும், ஏரிகளிலும் இருந்து கிடைக்கும் நீரே பூமியிலுள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நீர் ஆதாரமாகப் பயன்படுகின்றன. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 சதவீதம் நிலக்கீழ் நீராகவும் 3 சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு பிரதேசங்களிலுமுள்ளது. 45 ஆயிரம் பெரிய அணைகள் உலகில் உள்ளன. 130 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26 சதவீதம்) உள்ளன. 30 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் 6,675 அணைகள் (14 சதவீதம்) உள்ளன. உலக அளவில் மக்கள் தொகையில் (121 கோடி) இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவில் வெறும் 4,300 பெரிய அணைகள் உள்ளன. உலக அளவில் இது 9 சதவீதமாகும். அதேபோல் எமது நாட்டிலும் ஒருசில அணைகள் உள்ளன.

இவ்வாறு அதிகளவான நீர் (¾ பங்கு) பரந்து இருப்பினும்; உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர். உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது அதிகமாகன நீர்; விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. கிட்டத்தட்ட 85 சதவீதம் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள இவ் நீர் வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையும்.; சனத்தொகையானது வருடாந்தம் 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். உலகளாவிய விழிப்புணர்வு ரியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டிலும், 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மாநாட்டிலும் இவ் நீர் வளம் பற்றி ஆராயப்பட்டது.1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ம் தேதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 23 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதாவது அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்துடன்;; 2003-வது ஆண்டை ‘சர்வதேச நன்னீர் ஆண்டு’ என அறிவிக்கப்பட்டதுடன். உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து; ஐ.நா. உறுப்பு நாடுகள் செயல்பட்டன. அது மட்டுமின்றி, 2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டுகளை ‘வாழ்வதற்குத் தேவையான குடிநீர்’ (றுயவநச கழச டகைந) என்ற குறிக்கோளை உறுப்பு நாடுகளிடம் ஐ.நா. மையப்படுத்தியது.ஆனால் இன்றும் எத்தனை வீதமானோர் இதனை உணர்கின்றனர் என்பது கேள்விக்குறியே. இதன் விளைவே தினம் தினம் நன்னீரை பெற பிளாஸ்ரிக் வாளிகளுடனும், போத்தல்களுடனும் அலைவதுடன் காசுகொடுத்து போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை வாங்கி குடிப்பதனையும் காண்கின்றோம்.இதனால் பல பின்விளைவுகளும் நிகழ்ந்த வண்ணமுள்ளன.

அதாவது உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக அறிய வருகின்றது. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. அத்துடன் நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடாயில்லை.இன்றுவரை உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. ஒரு குடம் நீர் வேண்டி பல மைல் கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. ஆபிரிக்க நாடுகளில் இவ் அவலம் தொடர்ந்த வண்ணமுள்ளது.எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை.

அதேபோல் 2014 நவம்பர் 7ஆம் தேதி சாவ் பாவ்லோ நகரம் குறித்து பி.பி.சி. செய்தி நிறுவனம் அளித்த தகவில் பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவ் பாவ்லோவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனால் அப் பகுதி மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கிருந்த 03 பெரிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்பட்டதனால் மழை கணிசமாகக் குறைந்து வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. ஏன செய்திகள் வெளியாகின. கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் இப் பிரச்சினையை சந்தித்துள்ளனர்.

அத்துடன் டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வெர்மன்ட் சட்ட பள்ளி மற்றும் சிஎன்ஏ (கடற்படை பகுப்பாய்வு மையம்) கார்ப்பரேஷன் ஆகிய வற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி இப்போது உள்ள எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி முறையை மாற்றி அமைக்காவிட்டால் 2040-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதாகும்.இதனால் பிரான்ஸ், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 4 வௌ;வேறு வகையான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது குடிநீர் மற்றும் எரிசக்தி தேவைக்கு நடுவே கடுமையான போட்டி நிலவுவதுடன் பெரும்பாலான நாடுகளில் மின் உற்பத்திக்கு நீர் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. மின் உற்பத்தி நிலையங்களின்கூலர்கள்செயல்படுவதற்கு நீர் தேவை.இருந்தும் ஏவ்வளவு நீரைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கூட மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிக முக்கியமான விடயமும் கூட. பருவநிலை மாற்றம் காரணமாக நீர் வளம் குறைந்து வரும் நிலையில் மின் உற்பத்தித் துறையினர் பெரும் பகுதி நீரை எடுத்துக்கொண்டால், 2020-ல் அளவில் உலகில் உள்ள 30 முதல் 40 சதவீத நாடுகளில் சுத்தமாக குடிநீர் கிடைக்காது. இந்த நிலை நீடித்தால் 2040-ம் ஆண்டளவில் உலகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.எனவே, எதிர்காலத்தில் தண்ணீரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை உடனடியாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவதா, அல்லது குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.இதற்குத் தீர்வாக மின் உற்பத்திக்கான பழைய முறையை மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக, கூலிங் முறை தேவைப்படாத மின் உற்பத்தி முறைகளான காற்றும் மற்றும் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நீரை சிக்கனப்படுத்தி இயன்றளவு சேமிக்க முடியும்.

ஒரு காலத்தில் எமது நாட்டை விட அபிவிருத்தியில் பின்தங்கி நின்ற நாடு சிங்கப்பூர். அங்கு நீர் வளம் மிகவும் மட்டுபடுத்தப்பட்டுள்ளதுடன் குடிநீர் வளம் இல்லை. மலேசியாவிலிருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு நில வளமும் நீர் வளமும் மட்டுப்படுத்தப்பட்டதால் விவசாயச் செயற்பாடுகள் மிகவும் குறைவு.எனினும் சிங்கப்பூர் நீர் வளத்திற்காக எந்த ஒரு நாட்டிலும் தங்கியிருக்ககூடாது என்ற தூர நோக்குடன் பல்வேறு வகையான தொழிநுட்பங்களை உட்புகுத்தி பல திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதாவது மழைநீர் சேமிப்பு, கடல் நீரிலிருந்து உப்பை நீக்கி குடிநீராக்கல், கழிவு நீரைச் சுத்திகரித்து மீளப்பயன்பாட்டுக்கு உட்படுத்தல், மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரைச் சுத்திகரித்து சிக்கனமாக குடிநீராக மாற்றல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது மழை நீரைக் கடலில் சேரவிடாது சேமித்து வைக்கும் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
ஆனால் சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது எமது பிரதேசத்தில் ஓரளவு நீர்வளம் உள்ளது. ஆனாலும் அதனைத் தூர நோக்குடன் சிக்கனமாக பாவிக்கிறோமா என்பது கேள்விக்குறியே. எமது நிலத்தடி நீர் வளம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனை அளவுக்கதிகமாகப் பாவித்தால் ஒரு காலத்தில் எமது பிரதேசம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயமுள்ளது.

1967ல் ஆய்வினை மேற்கொண்ட இஸ்ரேலிய நிபுணர்கள் ‘இன்னும் இருபத்தைந்நு வருடங்களில் யாழ்குடாநாடு பாலைவனமாகும்’ என எச்சரித்துச் சென்றுள்ளனர். அவர்கள் எவ் எண்ணத்தினடிப்படையில் கூறினார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது முன்னோர்கள் இவ் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவே 45 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட நாம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதவர்களாக இருக்கின்றோம். அத்துடன் இன்று சுன்னாகத்தில் இயங்கி வந்த எண்ணெய் எரிபொருட்கள் ஊடான மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே நீர் மாசு ஏற்பட்டுள்ளது. இவ் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்தில் விடப்பட்ட கழிவு ஒயில் தற்போது; சுன்னாகம், உடுவில்,ஏழாலை,மல்லாகம், தெல்லிப்பழை, இணுவில்,கட்டுவன்,அளவெட்டி,இளவாலை,சண்டிலிப்பாய் பிரதேசங்களில் இந்நிலை பரவியுள்ளது. குறிப்பாக உடுவில் சுகாதாரப்பிரிவில் 16 கிhரம அலுவலனர் பிரிவில் மட்டுமே கிட்டத்தட்ட 1400 கிணறுகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

அதேபோல் வலி வடக்கு சுகாதாரப்பிரிவில் 800க்கு மேற்பட்ட கிணறுகளிலும் இப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்;சினை இன்னும் முறையாக தீர்வுகாணப்படாமையால் அதற்கு தீர்வு காண்பதுடன் இவ்வாறான பாதிப்புக்கள் இனிவருங்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எமது பிரதேசத்தில் முன்பு காணபட்ட பல குளங்கள் மழைநீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீரை வளம் செய்தன. ஆனால் இன்று அவற்றில் பல குளங்கள் தூர்ந்து விட்டன. அவற்றை நாம் மீளப் புனரமைக்க வேண்டும். எமது கடல்நீர் ஏரிகளுடாக கடலில் கலக்கும் மழைநீரை இயன்றளவு மட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களிலும், வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவேண்டும்.

குடிநீர் தேவைக்காக முழுக்க முழுக்க நிலத்தடி நீரில் தங்கியிராது நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைச் சுத்திகரித்து வழங்கும் நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். அப்போதாவது இப்பிரச்சினைக்கு ஒரளவாவது தீர்வு காணமுடியும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தமிழகத்தில் கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை நீக்கி, அந்நீரை பலநிலைகளில் சுத்திகரித்து, குடிப்பதற்குரிய நீராக மாற்றும் தொழிற்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் – மகாபலிபுரம் அருகேயுள்ள நெம்மேலி எனும் ஊரில் கடல்நீரைக் குடிநீராக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியப் பணமதிப்பின்படி 871 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 15 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்தோம். ஆனால் இன்று நீரையே சுத்தம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். எனவே அனைத்து வளங்களுக்கும் தாய்வளமாகும் நீரை வீண் விரயம் செய்வதும், எல்லை மீறிப் பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிலவவே வழி செய்யும்.நாமே கரிசனை கொள்ளாத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. எனவே நீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு,சிக்கனமாக நீரைப் பகிர்ந்தளித்தல்,கடல்நீரை குடிநீராக்குதல், இயற்கை வளங்களை சேமித்தல்,நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். அத்துடன் ஒரு துளி நீரை ஒரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். எனவேநீர் வளம் காப்போம் என இத் தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

காயத்திரி.வி

Advertisements