விஜய் டிவி சுப்பர் சிங்கர் ஜுனியர் பாடல் போட்டி – சிறுவர் உரிமை மீறல்?

‘ஈழத்துக் குயில்” என்ற அடைமொழியுடன் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் தற்போது அறிமுகமாகியுள்ள யசிக்கா ஜுட் தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சி ஒரு வருட காலமாக நடாத்திய ‘சுப்பர் சிங்கர் ஜுனியர்” என்ற பாடல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.vijay tv supersinger cheating 2

போட்டியில் வென்றமைக்காக தனக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ நிறையுள்ள தங்கத்தை சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கும் ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் வழங்கப் போவதாக அறிவித்து மனித நேயம் மிக்க அனைவரது மனத்திலும் இடம் பிடித்துக் கொண்டார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பருத்தித்துறை நகரில் பிறந்து கனடாவின் ஒன்ராறியோ மார்க்கம் நகரில் வசிக்கும் 15 வயதுப் பெண்ணான அவர் தான் தாயகத்தை விட்டுத் தொலைவில் இருந்த போதிலும் தாயகச் சொந்தங்களுக்கு தனக்குப் பரிசாகக் கிடைத்த பாரியதொரு தொகையை வழங்கி புலம்பெயர் இளைய சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக மாறியிருக்கின்றார்.

பாரட்டப்பட வேண்டிய விடயம். புலம்பெயர் நாட்டில் ‘காலம் செய்த கோலம்” என்ற பாணியில் தாயக உறவுகளை மறந்து வாழ்ந்து வரும் இளையோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில் யசிக்காவின் அறிவிப்பு அனைவரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

யசிக்காவைப் பாராட்டும் இந்த வேளையில் அவர் இத்தகைய முடிவை எட்டுவதற்கான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்கிய அவரது பெற்றோரையும் சுற்றத்தவரையும் மறந்து விடலாகாது. அவர்களது ஊக்கம் மற்றும் ஆதரவு என்பவையே யசிக்கா பரிசுபெறக் காரணமாக இருந்தன என்றால் தான் பெற்ற பரிசை தனது உறவுகளுக்குப் பகிர்ந்தளிக்க அவர் எடுத்த முடிவிற்கு அவர்கள் துணைநின்றமை அதனிலும் மேலானது.

ஆனாலும் இந்த வேளையில் இந்தப் போட்டி நிகழ்ச்சி தொடர்பாகவும் அது தொடர்பில் ஈழத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவும் சில விடயங்களைப் பேசியே ஆக வேண்டும்.

‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்” என்ற அடைமொழியுடன் விளம்பரம் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழும் யசிக்கா எவ்வாறு பொருந்தி வந்தார் என்ற கேள்வி சாமான்யனுக்கும் எழக் கூடும்.

இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் திரைத்துறையினதும் தென்னியந்திய முன்னணி தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களினதும் மிகப் பெரிய சந்தையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழர்களே. அதில் கணிசமானோர் ஈழத் தமிழர்கள் என்பது சொல்லாமலேயே புரியும்.

தமிழ்த் திரைப்படங்கள் இந்த புலம்பெயர் தமிழர்களை மனதில் கொண்டு எடுக்கப்படுவதைப் போன்று தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இவர்களை இலக்கு வைத்தே திட்டமிடப் படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே யசிக்காவுக்கு பாடல் போட்டி நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி இடம் வழங்கியிருந்தது.

யசிக்கா பாடுவதில் திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் நடுவர்களின் தீர்ப்பு அவரை முதற் கட்டத்தில் போட்டியில் இருந்து வெளியே அனுப்பி இருந்தது. இரண்டாவது சுற்றில் ரசிகர்களின் வாக்கு அடிப்படையிலேயே அவர் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றார். இந்தச் சுற்றில் அவருக்கு 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருந்தன. இறுதிப் போட்டியில் அவருக்கு ஒன்றரைக் கோடி வாக்குகள் அளிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இங்கேதான் யசிக்காவின் திறமை தொடர்பில் சந்தேகம் எழுகிறது. பொதுவில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் வெற்றி பெறுவது உண்மையான திறமையினாலா அன்றி நடுவர்களின் பக்கச் சார்பு ஊடக நிறுவனத்தினால் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு அனுசரணை வழங்கும் நிறுவனத்தின் நலன் மற்றும் வர்க்க நலன் என்பவற்றின் அடிப்படையிலா என்ற கேள்வி பன்னெடுங் காலமாகவே விடையின்றி தொடர்கின்றது. இந்த நிலைமை மாறக்கூடிய அறிகுறிகள் எவையும் இப்போதைக்குத் தென்படவே இல்லை. மாறாக இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் அறிகுறியும் இன்றைய நிலையைவிட மோசமான நிலையை நோக்கிச் செல்லும் பாங்குமே தென்படுகின்றது.

இதற்கும் அப்பால் யசிக்காவை தொடர்ந்து போட்டியில் பங்குபற்றச் செய்வதற்கும் இறுதிப் போட்டியில் அவர் தோற்றுவிடாமல் தடுப்பதற்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதே இங்கு நான் பேச விழைகின்ற விடயம். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை யசிக்காவிற்காக வழங்கி இருக்கிறார்கள். ஒருசிலர் 500 வாக்குகள் வரை தாம் அளித்தாக பெருமை பேசிக் கொண்டதைக் காதால் கேட்கக் கூடியதாக இருந்தது.

இத்தனைக்கும் அவர்கள் சங்கீத ரசிகர்களோ அன்றி யசிக்காவின் குரல் வளத்திலும் பாடும் திறமையிலும் மயங்கி நின்றவர்களோ அல்ல. அவர்கள் யசிக்காவுக்கு வாக்களிக்கக் காரணம் அவர் ஈழத் தமிழர் என்பதுவே. எமது சொந்த வீட்டுப் பிள்ளை வெல்ல வேண்டும் என்ற விருப்பே அவர்களை இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டி இருந்தது.

ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாகத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் எந்த முனையிலாவது வெற்றி என்ற உளவியல் தேவை ஒன்று எழுந்துள்ளது. அதற்காக அறம் சார்ந்த விடயங்களைத் தள்ளி வைத்துவிட்டு அவர்கள் சகல வழிகளிலும் வெற்றிக்காகப் போராடுகிறார்கள். தமிழ் மொழியின் மற்றும் தமிழரின் மகிமை தொடர்பாக அன்றாடம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் இந்த உளவியல் தேவைக்கான ஆதாரங்களாக அமைகின்றன.

இத்தகைய சமூக நோய்க்கு எதிராக ஒரு நாகரீக சமூகத்தில் இருந்து எழ வேண்டிய குரல்களை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் காண முடிவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுகின்ற குரல்கள் கூட அமுக்கப்பட்டு விடுகின்றன.

சிறுவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டிராத காலகட்டத்தில் அவர்களை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டிய தேவையை உலகிற்கு உணர்த்திய அறிஞர் பிளேட்டோ ‘சிறுவர்கள் நந்தவனத்தில் பறந்து திரியும் பட்டாம் பூச்சிகளுக்கு ஒப்பானவர்கள். அவர்களைச் சுதந்திரமாகப் பறக்க விடுங்கள்” எனக் கோரிக்கை முன்வைத்தார்.

ஆனால் விஜய் தொலைக்காட்சி பாடல்போட்டி நிகழ்ச்சியைப் பார்த்த போதில் போட்டி என்ற அடிப்படையில் சிறுவர்களை சமூகம் எவ்வாறு ‘வதை செய்கிறது” என்பதை அவதானிக்க முடிந்தது.

நந்தவனத்தில் பறந்து திரிய வேண்டிய பட்டாம் பூச்சிகளைப் பிடித்து வந்து அவற்றின் சிறகுகளை உடைத்துவிட்டு பயிற்சி என்ற பெயரில் அவர்களின் இளமைக் காலத்தைச் சிதைக்கும் செயற்பாடுகளை உலகம் எங்கும் உள்ள தமிழ் மக்கள் ‘பார்த்து ரசிக்கிறார்கள்” என்றால் அவர்களின் மனோநிலையை எந்த வகையில் அடக்குவது?

இத்தகைய செயற்பாடுகளை முற்றாகவே தடுத்து நிறுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக சென்னையில் உள்ள சிறுவர் நலன் காப்பு அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக வெளிவந்த செய்தி எத்தனை பேரின் பார்வைக்கு எட்டியதோ தெரியவில்லை.

மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் நாம் சிறுவர் உரிமையைச் சிதைக்கும் நடவடிக்கைக்குத் துணை போவது எந்த வகையில் நியாயம் என்பதை எம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி?

சண் தவராஜா

Advertisements