தமிழர்களைக் கொன்று குவித்தது குற்றமில்லை! விசாரணைதான் அபகீர்த்தி ?

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் எவரும் வெளிநாட்டு விசாரணையை விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருப்பது இங்கு நோக்குதற்குரியது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தக் கருத்தைக் கூறியதன் மூலம் தமிழர்கள் அழிக்கப்படலாம்; ஆனால் அது பற்றி எவரும், எதுவும் கேட்க முடியாது என்ற போக்கை கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.jaffna_protest

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு என்பவற்றின் பின்னர், 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் மீளக்குடியமர்ந்த போது, இளைஞர்கள் பலர் காணாமல்போன சம்பவங்கள் நடந்தன.

செம்மணி, உரும்பிராய் ஆகிய இடங்களில் இளம் பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட கொடூரம், உலகம் முழுவதையும் நடுங்க வைத்தது. இக்கொடூரச் செயல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது நடந்தவை. இதற்குப் பின்னர் மகிந்தவின் ஆட்சியில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடத்தப்பட்ட பெரும் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட மிலேச்சத்தனமும், வட புலத்தில் நடந்த இனந்தெரியாத படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் என்ற ஈனச் செயல்களும் இந்த மண்ணில் நடந்த நிட்டூரம்.

பெளத்த சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தம் என்ற வெறித்தனத்தில் தமிழினத்தை அழித்தொழிக்கும் சங்காரத்தைச் செய்தபோது; இது இலங்கைக்கு அபகீர்த்தி என்று உணராத சந்திரிகா அம்மையார், வெளிநாட்டு விசாரணை நடந்தால் அது இலங்கைக்கு அபகீர்த்தி என்று சொல்வதன் பொருள்தான் என்ன?

இலங்கை மண்ணில் தமிழர்கள் எப்படியும் அழிக்கப்படலாம், கொல்லப்படலாம், ஆனால் சர்வதேச விசாரணை என்பது நடக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் அது இலங்கைக்கு அபகீர்த்தி என்று சொல்லும் சந்திரிகாவின் மேற்போந்த கருத்து மைத்திரி அரசு சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை திட்டவட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது.

அவ்வாறு சர்வதேச விசாரணை நடந்தால், மைத்திரியின் ஆட்சியில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்ற பொருள்பட சந்திரிகா எச்சரிக்கை செய்துள்ளார்.

வெளிநாட்டு விசாரணை இடம்பெற்றால் அது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்று சந்திரிகா கூறுவது எங்ஙனம் பொருந்தும்? என்று நோக்கும் போது, போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடந்தால்; அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை நிரூபணமாகும். கூடவே குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி இன அழிப்பு நடந்துள்ளது. இன அழிப்பை படைத்தரப்பு ஊடாக இலங்கை ஆட்சியாளர்கள் அரங்கேற்றியுள்ளனர் என்ற உண்மை வெளிப்படும். ஆம் இது சிங்கள நாட்டுக்கு அபகீர்த்தி தானே!

ஆகவே, வெளிநாட்டு விசாரணையைத் தடுத்து உள்நாட்டு விசாரணை என்ற பேரில்; இன அழிப்பு-தமிழ் மக்களின் உயிர் பறிப்பு, என அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு, விடுதலைப் புலிகள் மட்டுமே போரில் கொல்லப்பட்டனர் என்று கதையை முடிக்கவேண்டும் என்பது சந்திரிகாவின் நோக்கம் என்பது வெளிப்படையாகியுள்ளது.

என்ன செய்வது? ஆட்சிப் பீடத்தில்; அதிகாரத்தில் இடம்கிடைத்துவிட்டால் போதும். தமிழரை தாரை வார்ப்பது என்று சிங்களப் போரினவாதம் முடிவு எடுத்து விடும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் நல்ல சாட்சியம்.

வலம்புரி

Advertisements