மோடியின் இலங்கைப் பயணமும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

MODI VISIT LANKAஇந்து மாக்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணித்து திரும்பியுள்ளார். இதில் அவரது இலங்கைப் பயணம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

30 ஆண்டுகள் போரில் சீரழிந்துபோன ஈழத்தமிழர்கள் மோடியின் பயணம் தங்கள் வாழ்வில் விளக்கேற்றும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றபின் ஏற்பட்டுள்ள அரசியல் சாத்தியக்கூறுகளுக்கும் இடையே தற்சமயம் நிலவும் இடைவெளியை களைந்து இப்பிரச்சினையின் அடி ஆழத்திற்கு செல்ல முடியாது.

இன்னொருபுறம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கேள்விக்கு இப்பயணத்தால் ஏதேனும் தீர்வு கிட்டுமா என்ற விஷயமும் முன்னுக்கு வந்துள்ளது.

இவற்றையும் மீறி இந்துமாக்கடல் பகுதியில் இந்திய அரசு தங்கள் மேலாண்மையை நிறுவுவதற்கான நீண்டநாள் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இப்பயணம் அமைந்துள்ளது.

ராஜபக்சவின் ஆட்சியில் இந்திய எதிர்ப்பும் சீன சார்பும் பாகிஸ்தான் உறவும் அரங்கேறின. அதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நூற்றாண்டுகளாய் நிலவி வந்த பாரம்பரிய கலாசார உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. ஈழ தமிழர்களையும் இந்திய அரசையும் ஒருசேர வைத்து சிங்களர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ராஜபக்ச ஓரளவு வெற்றியும் பெற்றார்.

ஆனால் அவர் நடத்திய அப்பட்டமான ஜனநாயக அத்துமீறல்கள் குடும்ப சர்வாதிகாரம், ஊழல் போன்றவற்றை அவர் கிளப்பிவிட்ட இனவெறியையும் தாண்டி அவரால் மூடி மறைக்க முடியவில்லை.

தோல்விக்குப் பின்பும் இந்திய உளவுப்பிரிவு, அமெரிக்க – ஐரோப்பிய உளவுப்பிரிவுகளுடன் இணைந்து தன்னை தோற்கடித்தது என்ற பழைய துருப்புச் சீட்டையே பயன்படுத்துவதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பிரதமராக நிறுவிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய பிரதமரின் வருகையை ஒட்டி அவர் இதனை கூறியுள்ளார்.

மறுபுறம் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களைச் சுட்டு தள்ளுவோம் என்று இடைக்காலப் பிரதமர் ரணில் உறுமியுள்ளார். இதெல்லாம் வரவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகைகள்.

ராஜபக்ச ஒருவேளை பிரதமராக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் மோடி அவரைத் தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தில் சந்தித்ததும் ஒத்திகையின் ஒரு பகுதியே.

இந்தப் பின்னணியில், ஈழத் தமிழர்களிடம் புதிய அரசு பெரிய அளவில் கரிசனம் காட்ட முடியாது. ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைகளின் அடி ஆழத்திற்கு தற்போது செல்ல முடியாது என்பதை இரு அரசுகளும் உணர்ந்துள்ளன. வலுவிழந்த நிலையில் ஈழத்தமிழர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் ஈழத்திற்கான தேவை குறித்து பேசுவதை அவர்கள் அதனாலேயே தவிர்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள தீவிர ஈழ ஆதரவாளர்களும் தற்போது அடக்கி வாசிப்பது இதனால்தான். அடிப்படையான தீர்வு கிட்டாவிட்டாலும் ஈழத் தமிழர் சுதந்திர மூச்சை சற்றேவிட புதிய அரசு வழி வகுத்துள்ளது.

இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து முழுமையாக விடுவிப்பது இராணுவம், இராணுவம் கைப்பற்றிய நிலங்களை மீட்டெடுப்பது, 1987இல் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தப்படி தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் 13வது சட்டத்திருத்தத்தை அமலுக்கு கொண்டு வருவது, தமிழர்களின் அதிகாரப் பகிர்வை நிலைநாட்டுவது போன்ற பல அடிப்படை பிரச்சினைகளில் புதிய அரசு உடனடியாக எந்தத் தீர்வுக்கும் வந்துவிட முடியாது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதிய அரசு செயல்படுகிறது என்று கூறி சிங்கள மத இனவெறியைத் தூண்ட ராஜபக்ச காத்து கொன்டிருக்கிறார். ராஜபக்ச மீண்டும் பிரதமராவது ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பலத்த சேதத்தைத்தான் தரும். எனவே இவற்றிற்காக காத்திருப்பத்தைத் தவிர வேறு வழி இல்லை.

ஆனாலும் பிரதமர் மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியபோது 13வது சட்டத் திருத்தம், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுகுவது போனறவற்றை குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர்களிடையே பேசும்போது அவர்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இப்பயணத்தின்போது முக்கியமற்ற நான்கு விடயங்களில் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தவிர முக்கிய பிரச்சினைகளின் மீது எந்த ஒப்பந்தத்திற்கும் வர முடியவில்லை. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவை உணர்த்துகிறது.

இலங்கை ரயில்வேதுறையின் வளர்ச்சிக்கும் இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கவும் ஏற்கனவே வழங்கிய நிதியுதவிக்கும் மேலே தற்போது 1.5பில்லியன் டொலர் தரவும் இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

பதிலுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த உறுதிப்பாடும் பெறப்படவில்லை. இந்துமாக்கடல் பகுதியில் தங்கள் மேலாண்மையை நிறுவ ஒரு செயல்படையை உருவாக்குவது, ஒரு ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டை கட்டுவது, திருகோணமலையில் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தி மையத்தை நிறுவுவது போன்று இந்தியா முன்வைத்த எந்த பிரச்சினையிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை.

காத்திருந்து பார்ப்பது என்ற இலங்கை அரசின் கொள்கை இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பதிலும் தொடர்கிறது. போருக்குப் பின்னும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீட்டெடுப்பில் இந்திய அரசின் நிதியுதவிதான் பயன்படுத்தப்படுகிறது.

இதில் இலங்கை அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. வடமாநில முதல்வர் விக்னேஸ்வரன் புதிய அரசின் வருகையால் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்பதைப் பதிவு செய்துள்ளார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதை கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்களின் சம உரிமை உறுதிப்படுத்தப்படவில்லையெனில் தனி ஈழம் என்ற கோரிக்கைக்கான போர் மீண்டும் மூளும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவு நிச்சயம் கிட்டும் என்ற எச்சரிக்கை மணி இலங்கையில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

உலகில் எந்த தேசிய இனமும் தானே விரும்பி அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இதனை இந்திய அரசும் உணர வேண்டும்.

பெரும்பாலும் இந்துக்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்பால் கரிசனம் காட்ட மோடி அரசின் தெற்காசிய மேலாண்மை அரசியல் தடையாக உள்ளது. இலங்கையில் கோலோச்சும் புத்த மதவெறியை மென்மையாக அணுகி, இந்து, புத்த மதங்களில் மோடி இறங்கியுள்ளது சரியா என்பதை, மோடி தலைமையிலான பி.ஜே.பி.யும் தமிழக பி.ஜே.பி. யும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை தற்போது இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் மறுக்கப்படுகிறது. பாக்கு நீரிணை பகுதியை சர்வதேச கடல் சட்டத்தின் கீழ், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சமதூரத்தில் பிரிக்காததால் இலங்கையிலிருந்து 18கி.மீ. தூரத்திலும், இந்தியாவிலிருந்து 12கி.மீ. தூரத்திலுமுள்ள கச்சதீவு இலங்கையிடம் இந்திய அரசமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 1976இல் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து 1974 ஒப்பந்தத்தில் கச்சதீவை சுற்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்ற உறுதி, 1976 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

கச்சதீவு மீட்பு என்பது தீர்வுக்கான மூலகாரணி. வாஜ்பாய்கூட கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்த்துள்ளார். இது குறித்து வன்மையாக முழங்கிக் கொன்டிருந்த தமிழக பி.ஜே.பி.யினர் தற்போது அடக்கி வாசிப்பதுதான் புரியவில்லை.

கச்சதீவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 1976 ஒப்பந்தம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் பி.ஜே.பி. அரசின் நிலைப்பாடு எப்படி என்பதற்கு பதில் இல்லை. ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டது. அதை அமுல்படுத்துவது என்று உறுதி செய்யும் உரிமை இந்திய அரசுக்கு இல்லையா?

தெற்காசியா மற்றும் ஆசிய பசுபிக் பகுதிகளில் சீனாவைக் கட்டுப்படுத்தி, தனது மேலாண்மையையும் பொருளாதார நலன்களையும் நிறுவும் அமெரிக்காவின் திட்டத்தில் இளைய பங்காளியாக இணைந்துள்ள இந்திய அரசால் ஈழத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் வலுவான நிலையை எடுக்க முடியாது.

இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் செலுத்த, ஈழப்போராளி குழுக்களையும் அவர்களின் தனி ஈழத் தாகத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்த இந்திராகாந்தியின் அமெரிக்க எதிர்ப்பு கோட்பாட்டிலிருந்து.

1991 சோவித் வீழ்ச்சிக்குப்பின் இந்திய அரசின் வர்க்க குணம் அமெரிக்க சார்பு நிலைக்கு மாறிய பின்பு, ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் பாக்கு நீரினைணைப் பகுதியில் ஆழமாக புதைக்கப்படும்.

– குமுதம் சஞ்சிகை –

Advertisements