மோடியின் வருகை, பழைய அரங்கமும் பழகிய காட்சிகளும்!

இலங்கையில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான(!) அமுலாக்கமே இறுதித் தீர்வு என இந்தியா உறுதியாக நம்புகின்றது.

ஏனெனில், 13ஆவது திருத்த சட்டத்தின் அறிமுகம் என்பது இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமைய தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. அதிலிருந்து விலகுவதை தன்னுடைய பிராந்திய ஆளுகையின் தோல்வியாகவும் இந்தியா கருதுகின்றது.

இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அண்மைய விஜயமும் உறுதி செய்திருக்கின்றது.

இந்தியாவை காங்கிரஸ் ஆண்டாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆண்டாலும் இலங்கை தொடர்பிலான வெளியுறவுக் கொள்கைகளிலோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பிலோ மாற்றங்கள் ஏற்படுவதில்லை.

அதிகபட்சம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தில், தமிழக கட்சிகளின் வகிபாகம் என்ன என்பதைப் பொறுத்து சில நிகழ்வு மாற்றங்கள் சாத்தியப்படுவதுண்டு. மற்றப்படி இந்திய பிராந்திய வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் காண முடியாது.

அது, ஆளும் அரசாங்கங்களைத் தாண்டி வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் புலனாய்வுத்துறையினால் தீர்மானிக்கப்படுவது.

நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எவ்வளவு ஆர்வத்துடன் எதிர்கொண்டிருந்ததோ, அதேயளவு எதிர்பார்ப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்புக்களும் எதிர்கொண்டிருந்தன.

ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கள் அவ்வளவுக்கு சாதகத்தன்மைகளை வழங்கவில்லை. மாறாக, அழுத்தங்களின் அளவை அதிகரித்துவிட்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டின் ஆரம்பம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்த மாபெரும் மாற்றமொன்றை நிகழ்த்தியது.

அது, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது. மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தல் என்பது இந்தியா, மேற்குலகம் உள்ளிட்ட தரப்புக்களின் பெரும் விருப்பம் என்றாலும், அதனை நாட்டு மக்களில் 54 சதவீதமான மக்களும் சிறுபான்மை மக்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்களும் விரும்பியிருந்தார்கள் என்பது வெளிப்படை உண்மை.

மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதும் அமையும் புதிய அரசாங்கம், குறிப்பிட்டளவு நெகிழ்வுப்போக்கைக் கொண்டிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதியது. அதில் குறிப்பிட்டளவு உண்மையும் உண்டு.

அந்த நெகிழ்நிலை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலவற்றுக்கான தீர்வினை வழங்கும் என்றும் எதிர்பார்த்தது. உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மாகாண சபையின் ஆளுநர் தலையீடற்ற ஆட்சி என்பன அவற்றில் சில.

இந்த விடயங்கள் தொடர்பிலான சாதகத்தன்மைகள் காணப்பட்டாலும் இலங்கை அரசின் தேசிய கொள்கை ரீதியாக, தமிழ் மக்களை அச்சுறுத்தலாக உணர்வதிலிருந்து எந்தவொரு புள்ளியிலிலும் நெகிழ்விக்கவில்லை.

அது, தமிழ் மக்களை மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதிகம் எரிச்சலூட்டியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமும் அமைந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்பு என்றாலும், அதற்குள், முன்னாள் ஆயுத போராட்ட அமைப்புக்கள் இருக்கின்றன என்கின்ற போதிலும் ஒப்பீட்டளவில் அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள, ஜனநாயக வழியில் ஒப்புரவு செய்யும் தலைமைகள் அதிகம்.

அது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அளவுக்கு உரிமைகள் என்கிற விடயத்தை ஒட்டுமொத்தமாக பௌத்த தேசியவாத அரசாங்கங்களோடு ஒத்திசைவதினூடு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆதரிக்கவில்லை. மாறாக, தனித்த அரசியல் செயற்பாட்டினை ஜனநாயக ரீதியில் பற்றிக்கொள்வது என்பதாகும்.

அதுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை, இந்தியாவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளும் குறிப்பிட்டளவில் அரவணைத்துச் செயற்படுவதற்கு காரணம். இங்கு அரவணைத்துச் செயற்படுதல் என்பது தமது தேவைகளுக்காக இந்தியாவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஒரு கருவியாக கையாள்வதைக் குறிக்கும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் போக்கிடமற்ற நிலையில் இந்த நாடுகளின் கையாளுகைக்கு உடன்பட வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது. இதுதான், தொடரும் வரலாற்றுச் சோகம்.

இப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் இந்தியாவும், மேற்குநாடுகளும் குறிப்பிட்டளவு தூரத்தில் வைத்துக் கொண்டன.

அதற்கான மாபெரும் சாட்சிகளாக அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கையாளப்பட்டது என்பதை பார்த்தாலே புரியும்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது அமெரிக்காவினால் முன்னின்று நடத்தப்பட்டது.

அதனை, நிஷா தேசாய் பிஸ்வால் தன்னுடைய இலங்கை விஜயத்தின் போதே வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியிருக்கும் விடயங்களை மேலோட்டமாக பார்த்தால் நியாயமான விடயங்கள் இருப்பது போன தோன்றும்.

அது, மூன்றாம் தரப்பின் போக்கில் சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் தரப்புக்கு அது, மோசடியை வழங்கும் என்பது காலம் காலமாக உணர்ந்ததொன்று.

நரேந்திர மோடி தன்னுடைய இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை முக்கிய விடயமாக முன்னிறுத்தியிருந்தார். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ஒருவர் வடக்குக்கு சென்றிருக்கின்றார்.

அது, கவனம் பெறும் ஒன்றுதான். ஆனால், மோடியின் விஜயத்தினை மொத்தாக கவனிக்கும் போது தமிழ் மக்களுக்கு சாதகமான தன்மைகள் என்று எதனையும் கருத முடியாது.

மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை கொழும்பில் சந்தித்துப் பேசிய போது ‘அவசரப்படாமல் பொறுமை பேணுங்கள்’ என்று வலியுறுத்திய விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்களை மாத்திரமல்ல, இரா.சம்பந்தனையே குறிப்பிட்டளவில் எரிச்சலூட்டியிருக்கின்றது.

அதுபோக, 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை. அதிகாரப் பரவலாக்கம் என்பதே இறுதித் தீர்வாக இருக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், மோடியோ, இந்தியாவோ அதனை பொருட்டுக்கும் கருத்தில் எடுக்கவில்லை என்பது பெருமத்த ஏமாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றது.

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தான் இடும் ஆணைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்கிற அதிகாரத் தொனியை இந்தியா மாற்றிக் கொள்வதில்லை.

அதே தொனியிலான பேச்சை நரேந்திர மோடி தன்னுடைய யாழ். விஜயத்தின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், 13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல என்று இந்தியாவை கொஞ்சம் எரிச்சலூட்டும் பதிலை சி.வி.விக்னேஸ்வரன் மோடியிடம் வழங்கியிருக்கின்றார். இதனை மோடி ரசிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயத்தை இரண்டு காரணங்களுக்கான மேற்கொண்டார். முதலாவது, இந்தியாவோடு கொஞ்சம் முரண்பட்டு சீனாவோடு ஒத்திசைந்து இயங்கிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை நட்பு ரீதியாக கையாள்வது.

இரண்டாவது, தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வல்லரசு என்கிற நிலையை மீண்டும் ஆதிக்க மனநிலையோடு நிறுவுவது.

குறித்த இரண்டு காரணங்களையும் மோடி தனக்கேயுரிய பேச்சாற்றல் மற்றும் அடக்கியாளும் மனநிலையோடு கையாண்டார். மோடியின் நாடாளுமன்ற உரை, ‘இலங்கை சுயாதீன நாடாக இருந்தாலும் இந்தியாவின் பிரிக்க முடியாத நீட்சி என்பது போலவும், இந்தியாவின் பாதுகாப்புக்கோ, பொருளாதாரத்துக்கோ அச்சுறுத்தலான நடவடிக்கைகளுக்கு இலங்கை ஒத்துழைத்தால் எந்தவித இரக்கமும் இன்றி தண்டிக்கப்படும்’ என்பது போலவும் இருந்தது.

இந்திரா காந்திக்குப் பின்னர் தனியாளுமையுள்ள இந்தியப் பிரதமராக நரேந்திர மோடியை உலகம் பார்க்கின்றது. தன்னுடைய முடிவுகளில் மிகவும் இறுக்கமான நபராக மோடி அடையாளம் காணப்படுகின்றார். அவரின் முடிவுகளை நிகராகரிக்கும் அல்லது மீறும் நபர்களையோ, நாடுகளையோ அவர் அவ்வளவுக்கு ரசிக்கவில்லை.

அவர் தன்னுடைய எரிச்சல் மனநிலையை வெளிப்படையாகவே காட்டுகின்றார். சர்வதேச இராஜதந்திர அரசியலின் போக்கில் அவர் ஓரளவுக்கு இணங்கினாலும், தன்னுள் இருக்கும் ஆதிக்க மனநிலைக்காரரை அவ்வளவுக்கு அடக்கி வைக்க முடியவில்லை.

இலங்கை விஜயத்தின் போதும் இலங்கை அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அப்படித்தான் கையாண்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீனாவின் பக்கம் இலங்கை அரசாங்கம் சாயக்கூடாது என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13ஆவது திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயங்களை அவர் இறுதியான வடிவமாக இரண்டு தரப்பிடமும் சொல்லியிருக்கின்றார்.

இந்த விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு அல்லது தலையாட்டி வைத்திருக்கின்றன. இது, தவிர்க்க முடியாமல் பெரியண்ணனுக்கு தலையாட்டும் நிலை. இன்னும் சில மாதங்களுக்குள் நாடளுமன்றத் தேர்லொன்று நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலை இலங்கையின் புதிய அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெரும் எதிர்பார்ப்புக்களோடு எதிர்கொள்கின்றன.

அந்தத் தேர்தலின் பின்னர் அமையும் அரசாங்கம் குறைந்தது 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அது, மீண்டுமொரு தேசிய அரசாங்கமாக இருந்தாலும், தனிக்கட்சி அரசாங்கமாக இருந்தாலும் அந்த அரசாங்கம் தான் தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படையாகவும், உறுதியாகவும் வெளியிட முடியும்.

ஆனாலும், அந்த அரசாங்கமும் இந்தியாவையோ, மோடியையோ எதிர்த்து செயலாற்றும் திரணியுடன் இருக்குமா?, என்று கருத முடியாது
.
அதுபோலத்தான், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவிடமே சரணாகதியாக வேண்டியிருக்கும். அப்போதும், இந்தியா, இலங்கை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பிலான தன்னுடைய கொள்கைகளில் விடாப்படியாக இருக்கும்.

மற்றப்படி மாற்றங்களோ, பெரும் தீர்வுகளோ அவசரமாக சாத்தியமில்லை. இருதரப்பு விஜயங்களும், பேச்சுவார்த்தைகளும் தொடரும். காட்சிகளின் நிறங்கள் மட்டும் மாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் ஒரே நாடகம் அரங்கேற்றப்படும். அந்த நிற மாற்றங்களின் மீது பொய்யான நம்பிக்கைகளை நாம் கொள்ள வேண்டியிருக்கும்!

தமிழ் மிரர்

Advertisements