மலையகத்திற்கு இந்தியப் மோடி செல்லாமைக்கு காரணம் யார்?

கடந்த வாரம் இலங்கை மட்டுமல்லாது, முழு உலகமே மோடியின் இலங்கை விஜயத்தை மிக ஆவலாக எதிர்பார்த்தது. அதைவிட தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் அனைவரும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் மோடி என்ன சொல்லப் போகின்றார் எதை கொடுக்கப் போகின்றார் என்று.Narendra Modi

இதை விட மேலாக சீன அரசும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது எனலாம். ஆகா என்ன ஒரு மகிமை இந்த நரேந்திர மோடியின் இலங்கை வருகை.

மோடியின் வருகை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு முழுகாரணங்கள் இலங்கையின் அரசியல் மாற்றம்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்தியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் விஜயம், இலங்கையில் உள்ள உயர் ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளின் நடவடிக்கைகள், அதனை தொடர்ந்து வெளிவிவகார அமைச்சரின் வருகை, இவைகள் அனைத்துமே இலங்கையில் மாத்திரம் அல்லாது முழு தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் முன் உரிமை அடிப்படையில் மக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் பிரச்சாரம் செய்துக் கொண்டே இருந்தன.

இது கிராமங்களில் தேர்த்திருவிழா நடைபெறும் முன் ஏற்படும் சுறுசுறுப்பு நடவடிக்கைகளாகவே தென்பட்டது. ஆகவே இவரின் வருகை உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மக்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்த விடயமாகவே இருந்தது.

அது மாத்திரமா? இலங்கை அரசியல் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையிலும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தெரிந்து விடயமே.

இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வருகை இந்தியாவின் நலன் சார்ந்த விடயமாக இருக்கின்றது என்பது தெரிந்தும், அடுத்த வீட்டில் எந்த வகையில் எப்படி வரவேற்புடன் செல்லலாம் என்பதற்கு மூலதனமாக இந்திய அரசு இந்த தமிழ் இனத்தை பயன்படுத்தியது என்பது மறைக்க முடியாத உண்மை.

ஆம்,இலங்கைக்கு இருக்கும் சகல நெருக்கடிகளுக்கும் காரணம் தமிழ் இன பிரச்சினையே. இந்தியாவும் இதையே பயன்படுத்தி இந்த விஜயத்தை மேற்கொண்டது.

இது புதுமையல்ல, உண்மை இலங்கையின் வரலாற்றில் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டுவந்த பிரித்தானியா, அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசுக்கும் இப்படி இந்தியாவின் வம்சாவளி மக்கள் இலங்கையில் அதுவும் மத்திய, தென் பகுதிக்கு தொழில் நிமிந்தம் இருப்பது என்ற விடயம் பிரதமர் மோடிக்கு தெரியாதிருப்பது வேதனையா அல்லது சோதனையா? அல்லது நாடகமா?

மோடி அவர்கள் இலங்கையை இங்குள்ள மக்களின் வரலாற்றை எப்படி பார்த்தார் என்பது அவரின் பாராளுமன்ற உரையில் இருந்து நாம் நன்கு அறிவோம்.

அதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு கூறிய மறைமுகமான அறிவுரை என்ன?

இவைகளை ஆராய்ந்து கூறுவதைவிட நாம் இங்கு தெரிவிப்பது தென் பகுதியில் வாழும் இந்தியா தோட்ட தொழிலாளியாகிய இந்திய வம்சாவளி மக்களை பற்றியதாக இருக்கட்டுமே என்ற நோக்கிலேயே சில விபரங்களை முழு தமிழ் சமூகத்திற்கும் கூற வேண்டிய பொறுப்பின் ஓர் பங்காக எனது கருத்தை இந்த தமிழ் சமூகத்தின் சிந்தனைக்கும் எதிர்கால செயல்பாடுகளுக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்.

காரணம் எதிர்காலம் இந்த தமிழ் மக்கள் மலையகத்துடன் மங்காது இலங்கையிலும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியமும் கடமையும் இந்த மோடியின் விஜயம் சொல்லாமல் சொல்கின்றது என்பதை எடுத்துக் கூறவே.

இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகள் சரித்திரம் உண்டு என்பது வரலாறு. இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த 200 வருட கால பகுதியி்ல தென் இந்தியா வம்சாவளியான தோட்ட மக்களை அழைத்து வந்தவர்கள் பெரிய கங்காணிகள் என்றும் அவர்களின் வம்சாவளியினரே இன்றுவரை இம்மக்களை வழிநடத்தும் வியாபாரத்தை (வியாபாரமாக இருந்தாலும் அரசியல் தலைமைகள் என்றாலும் பணத்திற்கான நோக்கத்தையே கொண்டவர்கள்.) நடாத்தி வருகின்றார்கள்.

இதில் அனேகமானவர்கள் இரட்டை பிரஜா உரிமையை கொண்டவர்கள். இன்றுவரை பணம், பதவி, பட்டம் சுயபோக வாழ்க்கை இதற்காக இந்த மக்களின் பெயர்களில் அவர்கள் நடாத்தும் அமைப்புக்களோ ஏராளம் அனுபவிப்பதும் அனேகம்.

இந்த மக்களின் உண்மையான வாழ்க்கை நிலை பொருளாதார நிலை எதிர்காலம் இவைகளைப்பற்றியே நாம் இங்கு குறிப்பிட வேண்டும். ஆகவே இந்தியா அரசு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரைப் பற்றி அறியாமல் இல்லை.

ஆனால், ஏன் நரேந்திர மோடி அவர்கள் மலையக தலைமைகளை கொழும்பில் சந்தித்த போது இந்த மக்களை பற்றிய தரவுகளை தற்பொழுது சேமிப்பதாகவும் இவர்களை பற்றிய விபரங்களுடன் தன்னை புதுடெல்லியில் வந்து சந்திக்குமாறு குறிப்பிட்ட விடயம் இந்திய வம்சாவழி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது எனலாம்.

காரணம்

1) இந்தியா அரசின் உதவி தூதரகம் மலையக தலைநகரான கண்டியிலேயே முதன் முதல் இந்த இந்திய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என தெரியவருகின்றது.

2) ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்திய மக்களை ஓர் அமைப்பாக செயற்பட அறிவுரை கூறியதாகவும், அதன் நிமித்தமே இலங்கை-இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (இன்று இந்த அமைப்பு பல பிரிவுகளாக பிரிந்து விட்டது)

3) சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் இந்த மக்களை குடிபெயரவைத்து உறவுகளை பிரித்தது.

4) இந்தியா வம்சாவளி மக்களுக்கான புலமை பரிசுகள் இந்தியா அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.(அனுபவிப்பது யாரோ)

5) உலகில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பான இயக்கம்.) வருடா வருடம் உலகில் வாழும் இந்தியா வம்சாவளியினரின் மகாநாடுகள் இந்த அமைப்பால் நடாத்தப்படுகின்றது அங்கு இந்தியா வம்சாவழி மக்களைப்பற்றி ஆராயப்படுகின்றது. ஆனால் மலையக மக்களைப் பற்றி?.

(6) இலங்கையில் வடபகுதிக்கு இந்திய நிதியில் கட்டப்படும் வீடுகள் போல் மலையக மக்களுக்கும் வீடுகளை கட்ட ஏற்பாடுகள், இது போன்று எத்தனையோ சான்றுகளையும் நாம் சொல்லலாம்.

ஆனால் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டதாக இன்று ஊடகத்திலிருந்த செய்திகளை பார்த்தால் இலங்கையில் இந்திய வம்சாவளியினர் பெருந்தொகையானோர் ஏழைகளாக பொருளாதார சிக்கலில், உரிமையற்ற மக்களாக வாழ்வதை இந்திய ஸ்தானிகராலயமோ அல்லது ஏனைய மலையக தலைமைகளோ இதுவரை இம்மக்களின் பெயரில் சுகத்தை அனுபவிப்பவர்களாக இருந்துள்ளார்களேயன்றி, இந்த மக்களின் உண்மை நிலையை இந்திய அரசுக்கு விபரங்களுடன் தெரிவிக்காது மறைத்துள்ளார்கள் என்பதே உண்மை.

நரேந்திர மோடியின் இந்த விஜயம் மலையக மக்களுக்கு மிக தெளிவாக ஒன்றை கூறிவிட்டது. அதுதான் கடந்த காலத்தில் இந்த மக்களை வழி நடாத்திய அத்தனை தலைமைகளும் இம்மக்களை பற்றிய உண்மையான நிலையை இந்திய அரசுக்கு மறைத்துள்ளது என்பதாகும்.

இதை பிரதமர் மோடி அவர்கனே உறுதிப்படுத்திவிட்டார். அதே போல் இம் மக்களின் வாக்குகளை சூறையாடி தங்களின் குடும்பங்களை வாழ வைத்துள்ளது மலையக தலைமைகள். இந்த மக்களை ஏனைய தமிழ் மக்களுடன் இணையாமல் பிரதேசவாதம் பேசி இவர்களின் அறியாமையை தங்களுக்கும் தங்களின் உறவுகளுக்கும் சாதகமாக்கியதோடு இந்திய அரசை தவறான வழியில் வழி நடாத்தியுள்ளது.

இதற்கு இந்திய உயர் ஸ்தானிகர்கள், உதவி ஸ்தானிகர்கள், அதிகாரிகள் அனைவரையும் தங்களின் கவர்ச்சி ஆசைகளில் வசப்படுத்திக்கொண்டு அரசியல் வியாபாரிகளாக செயற்பட்டுள்ளார்கள்.

அதற்கு இந்திய வம்சாவளி கல்விமான்களும் காரணகர்த்தர்களாக இருந்துள்ளார்கள். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி ஏழை மக்களின் உண்மை நிலை இன்னும் இந்தியா அரசுக்கு முழுமையாக தெரியாது இருந்துள்ளது என்பது பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையில் இருந்து தெரிகின்றது.

எனவே இதற்கு முழுமையான காரணமான மலையக தலைமை அரசியல் வியாபாரிகள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையே இந்திய பிரதமர் மோடி அவர்கள் விஜயம் கோடிட்டு காட்டியுள்ளது.

இதை மலையக தமிழ் சமூகம் மிகவும் அவதானத்துடனும் கவனத்துடனும் கண்காணித்து எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.

கல்வியை மலையகம் எதிர்கால சந்ததியினர் மூலதனமாக்கி ஏனைய பகுதி வாழ் தமிழ் மக்களுடன் அரசியல் தலைமைகளுடன் ஒன்றினைந்து செயற்பட தாயாராக வேண்டும்.இதற்கு ஏனைய பகுதி வாழ் தமிழ் இனம் உதவ வேண்டும்.

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடபகுதி தமிழ் தலைவர்கள் உதவி செய்தபின்பே இன்று அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சொந்தக்காணியுடனான வீடுகள் கிடைக்கப் போகின்றது.

ஊடகத்துணையுடன் கொண்டு செல்லப்பட்டவிதம் முழு உலகில் வாழும் தமிழ் உறவுகளின் பிராத்தனை இந்த நிலையை ஏற்படுத்தியது எனலாம். அதே போல் வட கிழக்கு தமிழ் தலைமைகள் மலையகப் பகுதியிலும் தங்களின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

ஒரே நாடு, பல இன மக்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்தியாவிற்கும் உலகத்திற்கும் எடுத்துக்கூற வேண்டும்.

மலையக மக்களை வைத்து அரசியல் நடாத்தி அம் மக்களை ஏமாற்றும் நிலையை தடுக்க எதிர்காலத்தில் இந்திய பிரதமரை தமிழ் தலைமைகள் கூட்டாக சந்தித்து நமது ஒற்றுமையை வெளிபடுத்தி இந்தியாவின் உதவியை பெற வேண்டும்.

இதுவே நரேந்திர மோடி அவர்களின் மறைமுக வேண்டுகோளாக நான் பார்க்கின்றேன். இது காலத்தின் கட்டாயமாகும்.

மகா

Advertisements