கடற்புலி மேஜர் இமையவன்

சோலைகளில் கண்ணின் இமையாக கூட இருந்து தோழர்களை, வளங்களை காத்த இமையவன்.

ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளான்குளம் வனப்பகுதியில் ஓர் அடிப்படை பாசறையில் தன் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று ஓர் போராளியாக வளர்தெடுக்கப்பட்ட சோலைத்தென்றல்.BT Maj Imaiyavan

அரசியல் தேவைகளுக்கான போராளிகள் தேர்வின் அவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டு காலம் தூயவன் அரசியல் கல்லூரியில் சில காலம் அங்கே புடமிடப்படுகிறான். அங்கே அவனில் இருந்த கலைத்திறமையால் பொறுபாளர்கள், போராளிகள் மத்தியில் நன்மதிப்புடன் அனைவர் மனதிலும் ஓர் இடம் பிடிக்கிறான்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் பாசறைகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் சோலைத்தென்றலில் குரல் அரங்கத்திலே கேட்காமல் இருந்ததில்லை. அப்படியாக நிறைய நண்பர்களையும் உறவுகளையும் நாளும் சம்பாதித்தான்.

தேசக்கடமைகள் விரிந்து மக்களுடன் ஒன்றிய அரசியல்துறையில் நல்ல பேச்சாளனாக, போராட்டம் பற்றிய கருத்துக்கள் சக தோழரின் கள வாழ்வுகள் பற்றிய கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து போராட்டத்தில் பக்கம் அனைவரையும் ஈர்த்தல் போன்ற பணிகளை தேசத்திற்காக முழு வீச்சுடன் ஏனைய போராளிகளுடன் தானும் ஒருத்தனாக செய்கிறான்.

நாளடைவில் அவன் கடற்புலிப் பிரிவுக்கும் மாற்றம் உண்டாகிறது. வட்டக்கச்சியில் ஓர் வனப்பகுதியிலிருந்து கடற்புலிகளில் முல்லைத்தீவு பாசறைக்கு ஓர் நாள் அழைத்து வந்து அங்கே இருந்த போராளிகளுடன் இணைக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபடுகிறான்.

அங்கே தனது பெயரை மீண்டும் ஓர் முறை மாற்றுகிறான் இமையவனாக…..

இமையவன் திறம்பட கடல் சார் பயிற்சிகளை “இரும்பொறை 02″ல் பெற்று பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் ஓர் தனி இடத்தையும், போராளிகள் மத்தியில் தன் பேச்சினால் கவரபடுகிறான்.

ஓர் பறவையில் கூட்டிலிருந்து குஞ்சு வளர்ந்து இறக்கை முளைத்தது ஒவ்வொரு திசையாக பறந்து பிரிந்து போகுமே அதைப்போல கண்நீர்களுடன் ஒவ்வோர் போராளியின் விடைபெறுதல்களும் வெவ்வேறு பணிகளுக்காக…..

அன்று கவலைகள் இருந்தாலும் வேறு கடமைகள் ஒவ்வோர் போராளிகளையும் அழைக்கும் சந்தோசத்தில் மிதந்தாலும், இனி எப்படியான சர்ந்தப்பங்களில் காண்போம் என்ற ஏக்கமும்தான் அனைவர் மனதிலும் இருந்தது.

இமையவனின் துடிப்பும் அவனிடம் இருந்த தூடிப்பாலும் விநியோக பிரிவுக்கு தேர்வாகி அங்கிருந்து மன்னார் மாவட்டத்துக்கு சென்று அங்கு அந்த கடமையில் திறம்பட செய்கிறான்.

வ்நியோகத்திலும் பல இடர்களுக்கு மத்தியில் இலுப்பக்கடவை, கிராஞ்சி, வலைபாடு, நாச்சிக்குடா என மாறி மாறி தன் கடமைகளை செய்து இராணுவக் கட்டுபாட்டுக்குள்ளும் சில கடமைகளை செய்து தேசத்திற்காக நாளும் உழைத்தான்.

அந்த உழைப்பில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது போல் அதற்கான பலனாக ஓர் நாள் முல்லைத்திவிற்கு விநியோகப் பிரிவு கடற்கரும்புலிகள், போராளிகள் அழைக்கப்பட்டு தேசியத்தலைவர் அவர்களும் சிறப்புத்தளபதியும் சந்தித்து பல விடயங்கள் கதைத்து தேசியத் தலைவரின் பாராட்டுதல்கள் பெற்று தேசியத் தலைவருடன் படங்கள் எடுத்தனர் அதிலே ஒருவனாக இமையவனும் இருந்தான்.

அன்றுதான் அவனின் வாழ்வில் பொன்னான நன்னாள் என நினைக்கிறேன்.

பின்பு கிராஞ்சியில் செந்தாழன் அவர்களின் பொறுப்பின் கிழ் இருந்த லெப்.கேணல் கங்கை அமரன் நினைவு மண்டவம், டேவிட் படகு கட்டுமானம் உள்ள கடற்புலிகளின் முகாமிற்கு பொறுப்பாக நியமிகபட்டு அங்கே சில தருணம் அவன் மட்டும் இருக்க வேண்டிய தருணமும் வந்தது.

மற்றைப் போராளிகள் வேறு கடமையாக செல்ல நேரிட்டால் அவன் மனதின் வேதனையைக் கூறுவான். ஒரு காலம் எப்படி பல பேர் கூடி பாடி ஒன்றாக கடமைகள் இங்கே செய்தோம் இன்று சில எம்முடன் இல்லை சிலர் மாற்றம் ஏற்பட்டு இப்படியாக என எந்த பிரிவையும் தாங்கிக்கொல்லாமல் தோழ – தோழியரின் பிரிவில் தினம் தினம் வாடித்துடிக்கும் ஓர் நட்பாளன்.

பலபேருக்கு அவனின் முகாம் காடுபோல்தான் தோற்றமளிக்கும் அவன் எப்படியான வற்றை இரவும் பகலும் பாதுகாத்தான் என்பதை அவனை அறிந்தவர்கள் அன்றி வேறுயாருக்கும் தெரியாது.

அந்த முகாமில் இரவு நேரம் யாரும் சென்றால் சாப்பாடு இல்லாட்டி உடனே துப்பாக்கியை தூக்கி தோளில் சுமந்து சென்று ஓர் அரைமணி நேரத்தில் ஏதாவது ஓர் காட்டுப் பிராணியுடன் வந்து வந்த போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பான்.

சில தருணம் கிராஞ்சி கடற்கரையில் நின்று பார்த்தால் இரணைதீவு வெளித்திருக்கும் உடனே சொல்லுவான் மஞ்சான் இப்ப பார் அவன் இதுவரைக்கும் வந்து செல்கிறான் எம்மிடம் சில பொருட்கள் இல்லை இருந்தால் இவனுக்கு ஓர் பாடம் கற்பிக்கலாம் என்பான்.

இமையவனின் குறி பொருத்தும் திறனை பலமுறை பார்த்தேன் மிக அருகாக ஓர் நாள் மாலைப் பொழுது நிலவு எம் தேசத்தை அலங்க்கரிக்க வேட்டைக்கு போவம் என்று முகாமின் வேலியோரம் நடந்து கடற்கரையில் ஏறினோம். கடற்கரை வற்றியிருந்தது. மச்சான் இதில மறைவாக இருப்பம் சில நேரம் பன்றி இதால வரலாம் என்றான். நானும் சரியெனக் கூறி இருந்தோம். சிலமணி நேரம் கழித்து பன்றிக் கூட்டமாக வந்தது சொன்னான்.

மச்சான் பன்றியைப் பற்றிதெரியும் தானே குறி வடிவாக படனும் இல்லாட்டி காயப்பட்டும் பன்றி ஓடிவிடும் என்றான்.

அப்ப நீயே சூடு என்றேன்…

உடனே கூறினான் மக்ஞ்சான் 9 இவைதான் உள்ளது என்றான்.

சற்று நேரத்தில் நிலை எடுத்து சுட்டான் எனக்கு சத்தம் மட்டும் கேட்டது 3பன்றி இறந்து கிடந்தது.

கொஞ்சத் தூரம் தள்ளி எமக்கு நன்கு அறிமுகமான மீனவர்கள் சிலர் நின்றனர். என்ன தம்பிகளா நல்ல விஷயம் என்னனர்.

இல்லை ஐயா தெரியும் தானே நல்ல நிலவு அதுதான் சும்மா பன்றி….

ஒ…. அப்படியா எத்தனை.

மூன்று எமக்கு பாதியை தந்துவிட்டு நீங்கள் எடுங்கள் ஐயா என்று இமையவன் அவர்கள் இடத்தில் கொடுத்து விட்டான்.எதையும் பகிர்ந்து உண்ணும் நிலையையும் அவனில் இருந்தது.

இமையவனுடன் தோழமையாகி திரிந்து உலவிய நினைவுகள் இன்றும் கண்முன்னே.

சில காலம் கடமை மாற்றம் ஏற்பட்டு இமையவன் இடத்திலிருந்து பிரிவு இறுதியாக கடல் ஏறும் தருணத்தில் இமையவனுக்கு கைகாட்டும் போதும் கிராஞ்சி பாலத்திலிருந்து சோலைகளுக்கு மத்தியில் ஒருவனாக தெரிந்தான். இன்று தென்றலாக தமிழீழக் காற்றுடன் கலந்தவனாய்….

இறுதித் தருணத்தில் சிங்களத்தின் ஆதிக்கம் படரும் தருணத்தில் பொறுப்பாளருடன் தன்னை சண்டைக்கு விடும்படி வாக்குவாதப்பட்டு களம் சென்றான்.

களத்தில் தன் உதிரத்தால் சரிதம் வரைந்து சென்றான்.

உன் கல்லறைக்கு என் பாதம் வரவில்லை வேதனையில் துடிக்கிறேன் முடியவில்லை. சுவரில் ஆடும் படத்தின் முன் நின்று தலைவணங்குகின்றேன்.

எம்மக்களின் வாழ்வை நேசித்து ஆயிரம் ஆயிரம் கல்லறைத் தெய்வங்கள் வரிசையில் நீயும் ஒருத்ததாக எம் தேசத்தை கண்ணை இமை காப்பதுபோல் காத்திடுவாய்…..

இப்போதும் என் கண்முன்னே சோலை தென்றலாக என் மனதை நிறைத்தவனே உன் பேச்சில் கலந்திருந்த எம் தேசவிடியல் நீ சென்ற பாதைகளினூடே மலரும் எம் தேசம் தமிழீழம் என் தோழன் இமையவனே…!

தோழமையாளன் அ.ம. இசைவழுதி.

Advertisements