சிங்கள மொழி நோ பயர் சோன்- காணொளி

இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார்.no fire zone

சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

இதன்போதே இலங்கையின் தொலைக்காட்சிகள் இந்த படத்தை காண்பிக்க வேண்டும் என்று மெக்ரே கோரிக்கை விடுத்தார்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார்.

இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மெக்ரே குறிப்பிட்டார்.

சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் உண்மையை அறிந்துவிடக்கூடாது என்பதை பிழை செய்தோர் எண்ணம் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் மெக்ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் பல்லாயிரக்கணகக்கான தமிழ் மக்கள் கொல்லப்படக் காரணமாகவிருந்த பாரிய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மற்றும் மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான உண்மைச் சம்பவங்களை அடக்கிய No Fire Zone என்ற ஆவணப்படம் இன்று சிங்களத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சானல் 4 வினுடைய அனுசரணையில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் கலம் மக்ரே இன்று சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டுவைத்தார்.

பல்வேறு பிரசித்திபெற்ற சர்வதேச விருதுகளைப் பெற்ற, அமெரிக்காவின் எமி போன்ற விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இலங்கை மீதான ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு அடித்தளமிட்டது என்று தெரிவித்த கலம் மக்ரே, இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் இந்த ஆவணப்படத்தினை இலங்கைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதனூடாக இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றினூடாகவே இலங்கையில் இனங்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கம் ஏற்படமுடியும், இதனூடாகவே நிலையான சமாதானத்தினை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இலங்கையின் முன்னைய ராஜபக்ஷ அரசு உண்மைத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை உள்நாட்டில் தடைசெய்திருந்தது. அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினூடாகப் பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு இலங்கையில் ஊடக சுதந்திரம், நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தப்போவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் தற்போது எம்மால் சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

“இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் இது சென்றடைய வேண்டும். மக்கள் மத்தியில் ஒரு தேசிய கலந்துரையாடலொன்று ஏற்படவேண்டும். இதனூடாகவே அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர்வினைக் காண்பதற்குரிய வழியேற்படமுடியும். உள்நாட்டில் இதனை ஒளிபரப்பவிரும்பும் எந்த தொலைக்காட்சி நிறுவனத்துடனுடம் எந்தவிதமான நேரடிக்கலந்துரையாடலிலும் பங்குகொள்ள, இதனைத் தயாரித்தவன் என்ற ரீதியில் நான் தயாராக இருக்கிறேன். பெரும்பான்மையான சிங்கள மக்கள் நீதிக்காகவும், பொறுப்புக் கூறலுக்காகவும், இனநல்லிணக்கத்திற்காகவும் குரல்கொடுப்பவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார்.

இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையோர் இந்த ஆவணம் குறித்து எவ்விதமான அச்சத்தினையும் கொண்டிருக்கத்தேவையில்லையென்று கூறிய அவர், தற்போது லண்டனில் தங்கியுள்ள ஜனாதிபதி சிறிசேன இலங்கையில் இது ஒளிபரப்பப்படுவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் விரைந்து எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய இந்த நிகழ்வில், ஆளும் பழமைவாதக் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சொபெய்ன் மக்டொனாவும் கலந்துகொண்டு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைப்பதனை உறுதிசெய்ய பிரிட்டன் அர்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், அந்த வகையில், இந்த ஆவணப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தனர்.

“ஐ.நா வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டெம்பர் வரைக்கும் பிற்போடப்பட்டிருப்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க வழங்கப்பட்டுள்ள இந்த தயவுகாலத்தில், அதாவது எதிர்வரும் செப்டெம்பர் மாதமுடிவிற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படவில்லை என்றால், இலங்கைப் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பிரித்தானிய அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் போரில் கொல்லப்பட்ட அனைவரையும், போரின்போது காணாமற்போன மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கைவிட்டதையே அது எடுத்துக்காட்டும். ஏனவேதான், அந்த நீதி மக்களுக்குக் கிடைப்பதனை உறுதிசெய்ய நாம் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிப்போம்,” என்று கூறினார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட்.

அவரது கருதினை முழுமையாக ஆமோதித்துப் பேசிய தொழிற்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சொபெய்ன் மக்டொனா: “இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பது இன்றியமையாதது. அந்த வகையில், சர்வதேச சமூகத்தின் எண்ணப்பாட்டையும், சர்வதேச அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் மாற்றும் பணியில் இந்த ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. இலங்கையில் சரித்திரத்தில் நீதியினை வழங்கும் போராட்டச் சரித்திரத்தில் அது இடம்பிடிக்கும்,” என்று தெரிவித்தார்.

வீடியோ செய்திமூலம் தனது கருத்தினை இங்கு வெளியிட்டிருந்த இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பின் பாஷன அபேவர்த்தன, இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை முழுமையாக மறுதலிப்பதனூடாக நாம் ஒரு தேசத்தைக் கட்டிக்காப்பதாக ஒரு சாரார் கருதுவது என்பது இன்னொரு தேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையான சம்பவங்களை மூடிமறைப்பதற்கும் ஒரு வன்மையான செயல் என்று தெரிவித்தார்.

ஆகவே இடம்பெற்ற ஈனத்தனமான குற்றங்களை வெளிக்கொண்டுவருவதனூடாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அனைவரும் அர்பணிப்புடன் செயற்படுவது அவசியம் பாஷன அபேவர்த்தன கூறினார்.