தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்….. – சென்று வருக மருத்துவப் பெருமானே!

d_kengatharan

தீயுடன் சங்கமமானது கங்காதரனின் புகழுடல்!!

வைத்திய கலாநிதி தி. கங்காதரனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழினில் நடந்திருந்தது. அவர் கடந்த 02ம் திகதியன்று இயற்கை எய்தியிருந்தார்.

ஈழத் தமிழ் மண்ணில் கொடிய போர் நடந்த வேளை நான்கரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த வன்னிமண்ணில் ஓய்வடையும் வயதில் பதின்நான்கு வருடகாலமாக ஓய்வின்றி சேவையாற்றினார்!

மகப்பேற்று நிபுணர்கள் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் எவருமற்ற ஐந்து மாவட்டங்கள் இணைந்த வன்னிப்பெருநிலத்தில் தனித்து நின்று தன் இளம் தமிழீழ வைத்தியர் குழாமின் ஆசானாகவும் ஆலோசகனாகவும் தனது மக்களுக்குச் சேவை செய்தார்.

கட்டாய ஓய்வெடுக்கவேண்டிய 80 வயதில் கூட பளிச்சிடும் முழுப்பல்வரிசைகள் தோன்றும் புன்னகையுடன் அழைத்த இடமெங்கும் சென்று தாய் சேய் உயிர்காக்கும் சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளையும் அனைத்துப் பெண்நோயியல் அறுவைச் சிகிச்சைகளையும் காது மூக்கு தொண்டை அறுவைச் சிகிச்சைகளையும் பொது மருத்துவ சிகிச்சைகளையும் செய்து பல இலட்சம் நோயாளர்களுக்கு சிகிச்சை செய்தார்.

மலேரியாவில் நடுங்கியபடி வந்து அவசர பிரசவ சத்திரசிகிச்சையில் அவர் காப்பாற்றிய பல தாயும் பிள்ளையும் இன்று உலகில் ஏதேனும் ஓர் மூலையில் இச்செய்தி அறிந்து கலங்குவர்.

நூற்றுக்கணக்கான மாணவர் வகுப்புகளையும் பயிற்சிகளையும் கொடுத்து தனது இடத்தை நிரப்ப ஒரு மருத்து குழாமையும் வளர்த்தார்.

கைகள் நடுங்காமல் மிகவும் வேகமாகவும் சரியாகவும் சத்திரசிகிச்சை செய்து முதுமைக்கு சவாலாக இயங்கினார். தனது சேவையை முழுமையாகவும் இலவசமாகவும் செய்தார். பசுமை ஆசையும் தோட்டமும் செய்து பல குடும்பங்களுக்கு வாழ்வளித்தார். பல தென்னங்கன்றுகளையும் விதைகளையும் மக்களுக்கு வழங்கி பசுமையை ஊக்குவித்தாரென அவரது சேவைகள் நினைவு கூரப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிச்சடங்களில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியர் கெங்காதரனால் உருவாக்கப்பட்ட வைத்தியர்கள், வைத்திய தொண்டர்கள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இருந்து வைத்திய கலாநிதி கெங்காதரன் மருத்துவப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பூதவுடன் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் இறுதிச்சடங்களில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியர் கெங்காதரனால் உருவாக்கப்பட்ட வைத்தியர்கள், வைத்திய தொண்டர்கள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இருந்து வைத்திய கலாநிதி கெங்காதரன் மருத்துவப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ப்பணிப்பும் ஆற்றலும் அனுபவமும் பொதுநோக்கும் கொண்ட ஒரு மாமனிதராம் வைத்திய கலாநிதி கங்காதரன் நம்மிடமிருந்து விடைபெற்று விட்டார்.

இந்த நீண்ட வரலாற்றுப் பெருவெளியில் அந்த மனிதர் ஒரு தனி நட்சத்திரமாக மின்னுகின்றார் என மறைந்த மருத்துவ கலாநிதி கங்காதரனுக்கு மக்கள் சார்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரங்கலும் வணக்கமும் செய்துள்ளார்.

மேலும் அவரின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

1929ல் பிறந்து தன் வாழ்வு முழுதும் மக்களின் மருத்துவத்துக்காகவே அர்ப்பணித்த இந்த பெருமனிதர் தமிழ் மக்கள் சுமந்த அத்தனை இடர்களையும் சுமந்தவர். அகதி வாழ்வையும் அதில் எழும் வலிகளையும் பொறுத்து பெரும் இடப்பெயர்வுகளை எமது மக்கள் சந்தித்த போதெல்லாம் அருகிருந்த மருத்துவக்கரங்களால் ஆறுதல் அளித்த இனிய புன்னகையாளன் வைத்தியர் கங்காதரன்.

1995ல் யாழ் மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார். இடர்காலத்தில் தன் குடும்பத்தையும் மக்கள் சேவைக்காக பயன்படுத்தினார்.

மிகவும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் வன்னியில் பொருளாதார தடை, போஷாக்கு இன்மை, மலேரியா என மக்கள் துவண்ட பொழுது தன் சீடர்களான ஏராளம் மருத்துவ மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் துயர் களைந்தார் இந்த கருணையாளன். அதனால் தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரியவராக எப்பொழுதும் இருந்தார். தலைவரால் அவரது சேவை மதிப்பளிக்கப்பட்டது.

நான்கரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தனி ஒருவராக நின்று பிரசவ மருத்துவராகவும் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகவும் இரவு பகலாக ஓய்வின்றி சேவையாற்றினார் வைத்தியர் கங்காதரன் என்ற பெருமனிதர்.

அழைத்தபோதெல்லாம் அவருக்கே உரிய இனிய புன்னகையோடும் மெல்லிய வார்த்தைகளோடும் மற்றவர்களின் சோர்வகற்றி கடமை செய்தவர் வைத்தியர் கங்காதரன் அவர்கள். போர்க்காலத்தில்
அவரது ஆலோசனைகளும் ஏனைய இளம் மருத்துவர்களுக்கு எப்போதும் தேவையாகவும் உறுதுணையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்தது என வைத்தியர் கங்காதரனின் ஆற்றலையும் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் மெய்சிலிர்க்க மீட்டுகின்றனர் போர்க்கால தமிழ் மக்கள்.

முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதிப்போர் வரை தன் முதுமையையும் பொருட்படுத்தாது குண்டு மழையில் நடுவே மருத்துவ பணி செய்த மாமனிதனின் இந்த இறுதிக்கணங்களில் அவரது அற்புதமான மருத்துவ சிகிச்சை பெற்ற உலகலொம் வாழும் எண்ணற்ற தமிழ் உள்ளங்கள் கண்ணீர் சிந்தும் காட்சி விரிகின்றது.

ஒரு மருத்துவனாக மட்டுமன்றி ஒரு புல்லாங்குழல் இசைக்கலைஞனாகவும் உள்ளங்களில் குடிகொண்ட கலைஞனையும் நம் காற்று இழந்துவிட்டது. இதமான புல்லாங்குழல் கச்சேரிகளால் இளைய தலைமுறைக் கலைஞர்களோடு அன்பும் நட்பும் கொண்டு நம்மிடையே வாழந்த உயர்ந்த உள்ளம் தமிழ்த் தேசியத்தின்பால் தீராத தாகம் கொண்டு மருத்து வரம் விடைபெற்றுள்ளது.

தமிழ் தம் வரலாற்றில் வைத்திய கலாநிதி கங்காதரன் அவர்கள் தனித்துவமானவர் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் மக்கள் சார்பில் விடுத்துள்ள அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சென்று வருக மருத்துவப் பெருமானே!

உழைப்பாளன் ஒருவன் உறங்கிக்கிடக்கின்றான்
எண்ணற்ற இதங்களின் இதயத் துடிப்பின் ஓசைகளை கேட்டு
உயிரின் பயணத்துக்கு பக்குவம் சொன்ன கங்காதரன்
பயணம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார்.
பூமித்தாயின் இதயத்தில்
பூவில் உறைந்திருக்கும் காற்றில்
மூங்கில் காட்டில்
இன்று டெதஸ்கோப் வைத்துப் பார்த்தேன்
கண்ணீர்துளிகள் சொட்டும் ஓசை.

ஈழத்தமிழனின் புறநானூற்றுப் பயணத்தில்
விழுப்புண்களுக்கு மருந்திடும் வித்தை தெரிந்தவர்கள்
களத்திலே காயங்களுடன் குருதி சிந்தவரும்
வீரனுக்கு மடியிலே வேதம் சொல்லி
விடியலை காட்டும் கால வைத்தியன்கள் கடவுள்தான்.
மாமனிதன் கங்காதரன் கடவுள்.
புன்னகையும் பொறுமையும் மென்மையும்
வேகமும் தாகமும் கொண்ட உயிரின் காவலன்.
விடுதலைப்பயணத்துக்காக அறுபது கடந்த பின் கங்காதரன்
இளைஞனாய் பிறப்பெடுத்தார்.

நந்திக்கடல் வீதிகளிலும் வன்னிக்கானகத்தின் படை
வீடுகளிலும் நொந்துபோனவர்களின்
வருடலாய் திரியும் மருத்துவப்படையின்
வழியாய் விழியாய் விரிந்தது கங்காதரம்.
கங்;காதரனின் யாக சாலை அற்புதமானது.
எப்பொழுதும் திறந்திருக்கும் இதயமாய் இருந்தது.

அவர் கைபட்டதுமே காய்ச்சல் மாறியவன் எத்தனை பேர்
அவர் பெயர் சொன்னதும் வலிகுறைந்து மகிழ்ந்த
சுகப்பிரசவங்கள் எத்தனை எத்தனை
நீ மருந்திடுவாயெனில் மேனி முழுக்க களத்தில்
காயம் தாங்குவேன் என்று கங்கணம் கட்டியன் எத்தனை பேர்
கங்காதரனின் குளிசைகள் மனதுகளுக்கு
கற்பூரமும் ஊதிபத்திகளும் போல பரவசமானவை.

எல்லாம் வாசல்களும் மூடப்பட்ட வன்னிக்குள் உள்ளதை வைத்து
உயிர்காத்த வல்லமை முன் மண்டியிடும் தருணம் இது.
ஒரு கையில் டெதெஸ்கோப்பும் மறுகையில்
காட்டு மூங்கிலுமாக வாழ்வுக்கு அர்த்தம் சொன்ன கங்காதரா
உன் ஆவிக்கொரு மருத்துவம் இல்லை என்பதும்
உன் கற்பூர தேகத்தை காவிச்செல்லும்
அந்த கந்தர்வதேவர்கள் இம்மண்ணில் மௌனித்து இருப்பதும் கால நியதி.

தாயகம் முழுதும் தோளில் சுமந்து அஞ்சலிக்க வேண்டிய
சந்தணமேனி பூமியின் ஒரு மூலையோடு அடங்கிடுமோ ஐயகோ!
வீழ்ந்தவர்கள் கண்ட கனவு வென்று
வேங்கைக்கொடி பறக்கும் தேசத்தில் உன் ஆவி பிரிந்திருந்தால்
இன்று ஓடி வந்திருப்பான் முதலில் கரிகாலன்
உனக்குரிய உயர்ந்த கௌரவத்தை கொடுத்திருப்பான்.

போரின் உக்கிர காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு
தமிழனுக்குள்ளும் கங்காதரனின் விம்பம் கடவுளாய் இருக்கின்றது.
மானுட தேகத்தின் சூட்சுமங்கள் பற்றிய
கங்காதரனின் கணக்கை கற்றவர்கள்
இப்பொழுது எந்த நாட்டில் இருந்தாலும்
வைத்தியத்துறை அவர்களுக்கு வசியப்பட்டிருக்கும்.
இசையும் ஒரு மருத்துவம் என்பதாலோ என்னவோ
புல்லாங்குழல் ஏந்திய பெருமானாகவும் கங்காதரன்
நம் மண்ணில் உலவி உள்ளம் சிலிர்க்கவைத்தார்.
இது உண்மையில் உதடுகளை பிரிந்து
தவித்துக் கொண்டிருக்கும் புல்லாக்குழலுக்கும் சேர்த்து
எழுதும் அஞ்சலியின் பல்லவி
எம் தாய் பெற்றெடுத்த வண்ணங்களில்
ஒன்று வானவில்லாகி கரைகின்றது.

எம் மண்ணை வருடித்திரிவதே வாழ்கையென்றிருந்த
காற்றொன்று நேற்றோடு கங்காதரன் வடிவில் நின்றிற்று.
உன் வாழ்கையில் நாடி நரம்புகளை ஒவ்வொன்றாய் எழுதலாம் ஐயனே!
ஒவ்வொன்றிலும் மண் வாசமும் மகத்துவமும் ஒட்டியிருக்கும்.
அன்பனே!
விண்ணைத் தாண்டியும் விடைபெற்றுப்போகலாம்.
அங்கேயும் காத்திருக்கும் நீ கைநாடி பிடிக்க ஆசுவாசப்பட ஒரு உலகம்.
சென்று வருக மருத்துவ பெருமானே!

பொன்.காந்தன்

Advertisements