தமிழரின் நீதியை மீள் வலியுறுத்திய இராப்போசன விருந்து

கனடியத்தமிழர் தேசிய அவையினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற ‘இராப்போசன விருந்து’ நிகழ்வு கடந்த 28ம் திகதி அன்று டெல்டா ஹோட்டலில் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.ncct dinner

கனடிய மத்திய, மாநில, நகர அரசுகளின் மூன்று பிரதான கட்சிகளில் இருந்தும் பல அரசியல் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து சிறப்புரை ஆற்றிய பொழுது தாமும் தமது கட்சிகளும் கனடிய அரசும் கனடிய தமிழர்களோடு என்றும் தோள் கொடுத்து நிற்போம் என்றும் நீதி வேண்டிய நீண்ட தொடர் போராட்டங்களில் வலிமையான இனமாக கனடிய மண்ணில் இருந்து போராடும் தமிழர்களுக்கு தமது ஆதரவும் தோள்
கொடுப்பும் எப்பொழுதும் இருக்கும் என்றும் 2009 இல் நடைபெற்ற தமிழ் இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு தாம் துணை நிற்போம் எனவும் கூறினார்கள்.

கனடிய அரசியல் பிரதான கட்சிகள் மூன்றினதும் பிரதிநிதிகள், மற்றும் பல்லின சமூக பிரதிநிதிகள் 30 க்கும் மேற்பட்டோர் நிகழ்வுச் சிறப்பிதழுக்கு வாழ்த்துச் செய்தியும் நம்பிக்கையூட்டும் செய்தியையும் வழங்கி இருந்தார்கள்.

கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ கிரிஸ் அலெக்சாண்டர், எதிர்கட்சி தலைவர் கௌரவ டொம் மக்ளையர், ஒன்ராறியோ என். டி. பி. கட்சியின் தலைவர் கௌரவ அன்றியா ஹாவர்த் மற்றும் 40 க்கும் மேற்பட்ட அரசியல் பிரதிநிதிகள் பல்லின சமூகப் பிரதிநிதிகள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.

ஆளும் கட்சியான கொன்செர்வேடிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் உரையாற்றுகையில் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்கட்சி தலைவர் கௌரவ டொம் மக்ளையர் அவர்கள் ‘தானும் தனக்கு முன்பு தலைவராக இருந்து மறைந்த கௌரவ ஜக் லேடன் அவர்களும் தமது கட்சியும் என்றும் தமிழ் மக்களுக்காக வலிமையாக தமிழ் மக்கள் உரிமை, மற்றும் நீதிக்காக குரல் கொடுப்போம், அந்த வகையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தாமும் குரல் கொடுக்கின்றோம்’ என உரையாற்றினார்.

அதே போல் ஒன்ராறியோ என். டி. பி யின் தலைவர் கௌரவ அன்றியா ஹவர்த் அவர்களும் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்திருந்தார்.

மார்க்கம் நகரின் நகரபிதா கௌரவ பிரான்க் ஸ்கர்பிட்டி உரையாற்றுகையில், மார்க்கம் நகரமே வட அமெரிக்காவில் முதன் முதலாக இலங்கை மண்ணில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை பிரகடனப் படுத்தியதும், தமிழர் மரபுத் திங்களை அங்கீகரித்ததும் என மண்டபம் நிரந்த கரவொலி நடுவே உரையாற்றினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அனைத்து அரசியல் தலைவர்களும் தமிழர்களின் தோழமைகளாக தொடர்ச்சியாக தமது பயணம் தோள் கொடுத்தபடியே தொடரும் என உறுதியளித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சமூகத்தில் சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.

“சிறப்பு மதிப்பளிப்பு விருது’:- முன்னை நாள் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜோன் பெயார்ட் — கனடிய மண்ணின் ஆளுமையை உலகப் பரப்பெங்கும் நிலைநாட்டியதுடன், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வலிமையாக, துணிகரமாக, ஓங்கி ஒலித்தமைக்காக வழங்கப்பட்டது.

‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – பேராசிரியர் செல்வா கனகநாயகம் — தமிழ் மொழிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளை பாராட்டுமுகமாக வழங்கப்பட்டது.

‘திரை கலை விருது’ – திரு. லெனின் எம். சிவம் — கனடிய திரைப்பட தயாரிப்பாளரான இவர் தனது தயாரிப்புக்களூடாக எம் இன வலியை நேர்த்தியாக உலகெங்கும் கொண்டு சென்றமைக்காக வழங்கப்பட்டது.

‘சிறுவர்கள் ஆளுமை அதிகரிப்பு பணியாற்றும் இளையவர் விருது’ – ஆண்ட்ரிஸ்டா ராஜீவ்–மாற்று வலு திறநாளிக் குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் பணியை சிறப்பாக ஆற்றி அவர்கள் குரலாக ஒலித்து வந்தமைக்காக.

*’இளம் எழுத்தாளர் விருது’ – செல்வி. சாருதி ரமேஷ்– பதின்மூன்று வயதில் பலரும் பாராட்டும் வகையில் ஆங்கில நாவல் எழுதியமைக்காக வழங்கப்பட்டது.

‘இளம் பாடகர் விருது’ – செல்வன் சுபவீன் பவானந்தன்– கனடாவில் இருந்து சென்று தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற இசை போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றமைக்காக வழங்கப்பட்டது.

கனடியத் தமிழர் தேசிய அவையின் விருந்துபசார, விருது வழங்கும், அரசியல் உரைகள், கலை நிகழ்வுகளையும் உள்ளடக்கிய இந்த நிகழ்வு தமிழ் மக்களின் வெற்றி நிகழ்வுகளில் ஒன்றாக பல்லின சமூகத்தாலும் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ncctcanada.ca/

https://www.facebook.com/ncctonline

Advertisements