மிருகத்துக்கு எதற்கு முருக பக்தி?

mahinda in thirppathiஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன், புகழ்பெற்ற இரண்டு கோயில்களுக்குப் போய், ஜெயித்தால் இதைச் செய்கிறேன்’ ‘அதைச் செய்கிறேன்’ என்றெல்லாம் கடவுளுடன் பேரம் பேசிப் பார்த்தது – மகிந்த மிருகம். ஒன்று, திருப்பதி கோயில். இன்னொன்று, கதிர்காமம் முருகன் கோயில். ராஜபக்சேவின் போறாத காலம்… இரண்டு இடத்திலுமே பேரம் படியவில்லை.

இந்த வாரம், மீண்டும் கதிர்காமத்துக்குப் போய் முருகனைத் தரிசித்திருக்கும் ராஜபக்சே, தங்கமுலாம் பூசிய திரிசூலம் ஒன்றை முருகனுக்குக் காணிக்கை செலுத்தியதாக செய்தி வந்திருக்கிறது. இது, 3 மாதத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான டிரெய்லர். இலங்கையில், போர்க்கடவுளாக வணங்கப்படுகிற முருகனை வழிபட்டிருப்பது, ‘தேர்தலுக்கு நான் ரெடி’ என்று ராஜபக்சே கொடுத்திருக்கிற சிக்னல்.

2ம் நூற்றாண்டு சிங்கள இளவரசனான துட்டகைமுனு, வீரத்தமிழன் எல்லாளனுடன் போரிடப் புறப்படும் முன், இதே போன்று கதிர்காமத்துக்கு வந்து வழிபட்டான் என்கிறது ஒரு கதை. இது அழகன் முருகனை வழிபடுவோர் காதில் பூ வைக்கிற கட்டுக்கதை.

கி.மு.250 முதல் கி.பி.250 வரையிலான 500 ஆண்டுகளை சங்ககாலம் என்று எடுத்துக்கொண்டால், அந்த 500 ஆண்டுகளின் பிற்பகுதியில் தமிழரின் அடையாளமாகத் திகழ்ந்தவன் தமிழ்நாட்டின் இரண்டாம் கரிகாலன். முற்பகுதியில் தமிழரின் அடையாளமாகத் திகழ்ந்தவன் ஈழத்தின் எல்லாளன். எல்லாளனின் ஆட்சிக்காலம் கி.மு.145 முதல் 101 வரை. கி.மு.101ல் துட்டகைமுனுவுடனான போரில் வீரமரணம் அடைந்தபோது, எல்லாளனுக்கு 72 வயது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

ஈழத் தமிழரின் தாய்மண்ணைப் பறித்து, அங்கிருந்து அவர்களை விரட்டினார்கள் – ஆக்கிரமிப்பாளன் விஜயனின் வழித்தோன்றல்கள். அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கெட்ட கனவாகத் திகழ்ந்தவன் எல்லாளன். அவன்தான் தமிழ்மண்ணான அநுராதபுரத்தை மீட்டவன்.

சொந்தத் தாய்மண்ணுக்காகப் போரிட்ட எல்லாளனுக்கு ‘ஆக்கிரமிப்பாளன்’ முத்திரை குத்தி, உண்மையிலேயே ஆக்கிரமிப்பாளனான துட்டகைமுனுவை தேசபக்தனாகக் காட்டும் வரலாற்று மோசடி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சிங்கள ராணுவத்தின் 20 டிவிசன்களில் 18-ஐ தமிழரின் தாய்மண்ணில் நிறுத்திவைத்த மகிந்த மிருகம், நவீன துட்டகைமுனுவாகத்தான் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றது.

வந்தேறிகள் ஈழத்துக்கு சொந்தம் கொண்டாடுவதும், அந்த மண்ணின் மக்களை அடிமையாகவே வைத்திருக்க முயல்வதும் இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாகத் தொடருகிற துயரத் தொடர்கதை.

பௌத்தமும் சிங்களமும் அந்நிய மண்ணிலிருந்து தமிழரின் தாய்மண்ணில் வந்து கடைவிரித்தவை. ஈழத்துக்கு பௌத்தமதம் இறக்குமதியாகும் முன்பே, சிவிகசாலா, சொத்திசாலா என்கிற சிவாலயங்கள் அநுராதபுரத்தில் இருந்ததாக பௌத்த சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. சிங்கத்துடன் உறவுகொண்டு கருத்தரித்த இளவரசி தான், சிங்களப் பாரம்பரியத் தாய் என்று ‘கண்ணியத்தோடு’ குறிப்பிடுகிறதே, அதே மகாவம்சம் தான் இதையும் சொல்கிறது. (கலிங்க இளவரசி பேரழகி சுப்பாதேவியின் ஒயிலைப் பார்த்ததும், காதலோடு தன் வாலை அசைத்தபடி, காதுகளைத் தாழ்த்தியபடி அவளை நெருங்கிய அந்தச் சிங்கத்தை ‘சிங்கம்-3’லாவது காட்டுங்க ஹரி!)

அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டுதான் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எல்லாளன். அநுராதபுரத்திலிருந்து ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களில் சிலர் ஆக்கிரமிப்பு மதமான பௌத்தத்தை சில நிர்பந்தங்களால் ஆதரிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையிலும், சிவ வழிபாடு உள்ளிட்ட தங்களது பழைய மத நம்பிக்கைகளை அவர்கள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரங்களை பௌத்த நூல்களிலேயே பார்க்க முடிகிறது.

ஈழத் தமிழர்களைத் தலைநிமிரச் செய்த மாமன்னன் எல்லாளனை முறியடித்து, தமிழினத்தை மீண்டும் அடிமை இனமாக மாற்றுவதுதான் துட்டகைமுனுவின் முதல் முக்கிய வேலையாக இருந்தது. தமிழினத்தை நசுக்குகிற அந்தப் பயணத்தைத் தான், கதிர்காமத்தில் அவன் தொடங்கினான் என்கிறது, இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதை. தமிழரைக் கொன்று குவிக்க, தமிழரின் முப்பாட்டன் முருகனிடம் அந்த துஷ்டன் ஆசிபெற்றான் என்பதிலிருக்கும் பிரச்சாரக் கயமையைப் புரிந்துகொள்வது அடிப்படை அறிவு உள்ள எவருக்கும் சாத்தியம்!

எல்லாளன் – துட்டகைமுனு போர் நடந்த கி.மு.2ம் நூற்றாண்டில் கதிர்காமத்தில் முருகன் கோயில் இருந்ததா என்பதே கேள்விக்குறியாக இருக்கிற நிலையில், இதற்குமேல் அதைப்பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. கதிர்காமம் இப்போது எப்படியிருக்கிறது, யார் யார் அங்கே போகிறார்கள் – என்பதைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது இப்போது!

3 மாதங்களுக்கு முன் கொழும்பில், ‘கதிர்காமத்தைத் தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்’ என்கிற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் – ‘இப்போதெல்லாம் நான் கதிர்காமத்துக்குப் போவதேயில்லை’ என்று மனம் நொந்துபோய்ப் பேசினார். ‘சித்தர்கள் சிலையெல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டு புத்தர்கள் சிலை பொருத்தப்படுகிறது. கதிர்காமம் பௌத்தமயமாகிவிட்டதைப் பார்க்கப் பொறுக்கவில்லை’ என்பது முன்னாள் நீதியரசரின் வாதம். இத்தனைக்கும் விக்கியின் குடும்பம் கதிர்காமம் தரிசனத்துக்குப் பெயர்பெற்ற குடும்பம்.

கதிர்காமம் படிப்படியாக பௌத்தமயமாகி வருவது ஊரறிந்த ரகசியம். தம்பி முருகனின் ஆலயத்துக்கு முன்புள்ள அரச மரத்தடியில், எல்லா முருகத் தலங்களையும் போலவே, அண்ணன் ஆனைமுகத்தான் தான் அமர்ந்திருந்தார். மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில்தான், பிள்ளையாருக்குக் கூட ஆபத்து வந்தது. அவரது துதிக்கையைப் பிடித்துத் தூக்கியெறிந்துவிட்டு, அரசமரத்தடியில் புத்தரை அமரவைத்து அழகுபார்த்தார்கள் ராஜபக்சேவின் தோழர்கள்.

ஐஸ்ஹவுஸ் மசூதி வழியாகத்தான் விநாயகரை எடுத்துச் செல்வோம் – என்று அடம்பிடிக்கும் ரா.கோ. வகையறாக்களுக்கு யாராவது இதை எடுத்துச் சொல்ல வேண்டும். ‘இலங்கை ஒண்ணா இருந்தால்தான் நன்னா இருக்கும்’ என்கிற நெறிமுறையற்ற அறிவுரைகளையாவது கொஞ்சகாலத்துக்கு பிரீசரில் போடுவார்கள்!

கதிர்காமம் முருகன் கோயில் பௌத்த பிக்குகளின் பிடியில்தான் இருக்கிறது….. அர்ச்சகர்களுக்குப் பதில் பிக்குகள்தான் பூஜை வைக்கிறார்கள்…… என்றெல்லாம் அதிர்வூட்டும் தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கேயிருக்கிற ஹிந்து மதத்தின் ஹோல்சேல் ஏஜென்டுகள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? சிங்கள பௌத்த பயங்கரவாதிகளால், 2000 கோயில்கள் இடிக்கப்பட்டதைப் பற்றியே கவலைப்படாத கோயில் மாடுகளாயிற்றே இவர்கள்!

இந்த பிப்ரவரியில் கதிர்காமம் முருகன் கோயிலுக்குச் செல்வதில் தெரிந்த பிசாசை முந்திக் கொண்டது தெரியாத தேவதை. ஆம், மகிந்த ராஜபக்சே கதிர்காமம் போவதற்கு 3 வாரங்களுக்கு முன், புதிய ஜனாதிபதி மைத்திரிபாலா கதிர்காமத்துக்குப் போய், தேர்தல் வெற்றிக்காக நன்றி சொல்லிவிட்டு வந்தார். திருப்பதி கோயில் கதவு மாதிரி, கதிர்காமம் கதவு மைத்திரிக்காகத் திறக்க மறுக்கவில்லை.

மைத்திரியின் வழிபாடு எப்படியிருந்தது என்பது பற்றி நமக்குத் தகவல் இல்லை. ஆனால், மகிந்த மிருகத்தின் வழிபாடு பற்றி விலாவாரியாக செய்தி வந்திருக்கிறது. சூலம் சார்த்தியதோடு நின்றுவிடவில்லை மகிந்தன். மலையடிவாரத்தில் 84000 விளக்குகளை ஏற்றிவைத்தானாம். ஒன்றரை லட்சம் உயிர் விளக்குகளை ஊதி அணைத்து எம் இனத்தை இருளில் தள்ளிய மிருகம், 84000 விளக்குகளை ஏற்றிவைப்பது கொடுமையிலும் கொடுமை.

இன்று வெள்ளிக்கிழமை. இந்தக் கட்டுரையை கணிப்பொறியில் நான் எழுதிக் கொண்டிருக்கிற இந்த நொடியில், பக்கத்து வீட்டுச் சகோதரி ஒருத்தி கந்த சஷ்டிக் கவசம் படிப்பது கேட்கிறது எனக்கு!

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்

எம் இனத்தின் முப்பாட்டன் என்கிற முறையில் கதிர்காமத்திலிருந்து திருச்செந்தூர் வரை, இயற்கை எழில் கொஞ்சும் இடத்திலெல்லாம் குடிகொண்டிருக்கிற முருகப் பெருமானிடம் இதைத்தானே வேண்டவேண்டும் நாம்.
எம் இனத்தை அழித்த மிருகத்தைக் கூர்வடிவேலால் குத்தமாட்டாயா…… அந்த மிருகத்தைச் செதில் செதிலாக ஆக்கமாட்டாயா….. அந்த மனிதகுலப் பகைவனின் முழிகள் பிதுங்கிட முட்ட மாட்டாயா…..
என்றுதான் வேண்ட வேண்டும் முருகனை!

இதையெல்லாம் செய்யத் தவறினால் நீ எப்படி இந்த இனத்தின் தலைவன் என்று கூட கோபம் கொப்பளிக்கக் கேட்கலாம், குன்று தோறாடும் குமரனை!
எம் இனத்தை ஈவிரக்கமில்லாமல் அடித்து நொறுக்கிய பொறுக்கிகளைத் திருப்பியடித்த பிரபாகரன் என்கிற நேர்மையான வீரனைத் தலைவனாக ஏற்றிருக்கும் நாம், ‘எங்கள் இதயத்தில் பாய்ச்சிய சூலத்தை உன் காலடியில் வைக்கிற மிருகத்தை கதிர்காமத்துக்குள் அனுமதித்திருக்கிறாயே, நியாயமா’ என்று ஆறுமுகனிடமே நீதி கேட்கலாம்.

இடும்பனை அழித்த இனிய வேல்முருகனை
தணிகாசலனை சங்கரன் புதல்வனை
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகனை
பழநிப் பதிவாழ் பால குமாரனை
இப்படியெல்லாம் கேட்கிற உரிமை நமக்கில்லாமல் வேறெவருக்கு இருக்கிறது!

முப்பாட்டனையே சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிற நமக்கு, கூடவே இருந்து கழுத்தறுக்கப் பார்க்கும் சுமந்திரனைக் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா இல்லையா? அந்த உரிமையுடன்தான், சுமந்திரனின் உருவப் படத்தை எரித்திருக்கிறார்கள் லண்டன் இளைஞர்கள். அது நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் மனக்குமுறல். எம் இனத்தைக் கொன்று குவித்த கொலையாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிற துரோகிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சொந்தங்களின் தன்னலமற்ற முயற்சியால்தான், இனப்படுகொலை செய்த இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக மகிந்தவுக்கோ மைத்திரிக்கோ முந்தி விரிக்கக் கூட தயங்காத சுமந்திரன்களுக்கு புலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சிதான் அச்சுறுத்தலாக இருக்கிறது. புலத்தில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக யாழ் மண்ணிலேயே பல்லாயிரம் பேர் கைகோர்த்து நீதி கேட்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டதைப் பார்த்து நடுங்குகிறார்கள், தங்கள் எஜமானர்களின் பாதங்களை நக்கக்கூடத் தயங்காத நபும்சகர்கள்.

எம் மண்ணைக் காக்க, எம் உறவுகளின் உயிரைக் காக்க, எம் சகோதரிகளுக்கு பாதுகாப்பு அரணாய்த் திகழ தங்களை அர்ப்பணித்த மாவீரர்களைப் பற்றிய தவறான சித்திரத்தை, புலம்பெயர் இளையோரிடையே இந்த மேதாவிகள் திட்டமிட்டு ஏற்படுத்தியிருந்தனர். இன்றைக்கு அந்த பொய்மைத் திரை தகர்ந்துவிட்டது. பிரபாகரனின் தோழர்களிடம் ஆயுதங்கள் இருந்தவரைதான் ஈழத்திலிருந்த தம் சொந்தங்கள் பாதுகாப்பாயிருந்தனர் என்கிற உண்மையை உணர்ந்த எம் இளையோர், பிரபாகரனின் பதாகையுடன்தான் உலக வீதியெங்கும் நீதி கேட்கத் திரளுகிறார்கள். இன்றைக்கு, தமிழனுக்கான உலக முகம் – அந்த அழகு முகம்.

தங்கள் பிழைப்பில் மண் விழப் போகிறது என்பதைப் புரிந்துகொண்டுதான், பிரபாகரன் மீது தூற்றிய புழுதியை புலம்பெயர் உறவுகள் மீது தூற்ற முயல்கிறார்கள் சுமந்திரன்கள். இப்படிப்பட்ட நயவஞ்சகத்தில் தொடர்ந்து ஈடுபடுவதை விட்டுவிட்டு, மகிந்தனுக்காகவோ மைத்திரிக்காகவோ பொன்சேகாவுக்காகவோ கோதபாயவுக்காகவோ கதிர்காமத்தில் போய் காவடி எடுக்கலாம் சுமந்திரன்! ‘வெளிப்படையாகத் தானே துரோகம் செய்கிறான்’ என்று டக்ளஸுக்கு இருக்கிற குறைந்தபட்ச மரியாதையாவது சுமந்திரன்களுக்கு மிஞ்சும்!

-தமிழக அரசியல் / 01.03.2015-
-புகழேந்தி தங்கராஜ்

Advertisements