துணிந்து நகர்வை எடுங்கள்! தமிழ் மக்கள் எப்போதும் தலைமைக்கு பின்னே வருவார்கள்

வடக்கு மாகாண சபை துணிந்து ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த நகர்வு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும். மாகாண சபையின் தீர்மானம் அந்த கட்சியின் முழு தீர்மானமாகவும் அந்த கட்சியின் தலைமையும் ஏற்றுக்கொண்ட தீர்மானமாக மாற்றப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.jaffna_protest

அடுத்த கட்டம் அந்த தீர்மானம் செயலுரு பெற வேண்டும்.  தமிழ் நாட்டில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் போல் இது ஒரு கொள்கைத் தீர்மானமாக மட்டும் இருக்க முடியாது. செயலுக்கு போக வேண்டும்.

அது செயலுக்கு போகும் போதுதான் தமிழ் மென்சக்தியின் சாத்தியக்கூறு என்ன என்பது தெரியவரும்.

எனவே மாகாண சபையின் தீர்மானம் ஒரு நல்ல தொடக்கம். இனப்படுகொலைக்ககான பரிகாரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வாதிடுவோருக்கு இது ஒரு உளவியல் பலத்தை கொடுக்கும்.

தமிழ் மக்கள் என்ன செய்யவில்லை. இயக்கங்கள் சாப்பாட்டு பார்சலை கேட்டன, கொடுத்தார்கள். நகையை கேட்டார்கள், கொடுத்தார்கள். வாகனத்தை கேட்டார்கள் கொடுத்தார்கள். வளவை கேட்டார்கள் கொடுத்தார்கள்.

தலைப்பிள்ளை தா என்று கேட்டார்கள், கொடுத்தார்கள். யாழ்ப்பாணத்தை விட்டு வா என்று கேட்டார்கள், வந்தார்கள்.

முள்ளிக்குளத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வா என்று கேட்டார்கள், கொடுத்தார்கள். எதனை கொடுக்கவில்லை. இந்த மக்கள். அற்புதமான மக்கள்.

ரிஸ்க் எடுங்கள். மக்கள் உங்கள் பின்னே வருவார்கள். ரிஸ்க் எடுக்கும் தலைமைக்கு பின்னே இந்த மக்கள் எப்போதும் வருவார்கள்.

எமது மக்கள் தமிழ் நாட்டு மக்களை போல் அல்ல. சாதி, சமயம், பிரதேசம், படிப்பு, பணம், அந்தஸ்து பார்த்து தலைவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

தென்னிந்திய திருச்சபையில் இருந்து வந்த கண்டி பேரின்பநாயகம்தான் முதலாவது மாணவர் போராட்டத்தை முன்னெடுத்தார். அவர் சைவர் அல்ல. தமிழ் மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

அதே திருச்சபையில்  இருந்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை தமிழ் மக்கள் தந்தை என்று அழைத்தார்கள். அவர் சைவர் அல்ல. தமிழ் மக்கள் சமயம் பார்த்து தலைவர்களை தெரிவு செய்வதில்லை.

ஆயுதம் போராட்டம் செய்த தியாகத்தின் பேரால் மக்கள் அதன் பின்னே சென்றார்கள். அங்கு அவர்கள் சாதி பார்க்கவில்லை.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் எந்த மாவட்டத்தில் இருந்த வந்திருக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு பிரச்சினையில்லை. அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள் என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நூல் வெளியீட்டு விழாவில் போது தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்

: அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்