சன்னதமாடும் சம்பந்தரிடமும் சுமந்திரனிடமும் 15 கேள்விகள்

இனப்படுகொலைக்கு நீதி கேட்க ஒவ்வோராண்டும் ஜெனிவாவில் திரளுகிறார்கள் எங்கள் இளைஞர்கள். எம் இனத்தின் அடையாளமான தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியபடி கம்பீரமாக வருகிறார்கள். ஐ.நா. முன்றலில் எம் தேசியக் கொடியைப் பெருமிதத்துடன் பறக்க விடுகிறார்கள். எம் தேசியத் தலைவரின் உருவப் படங்களை உயர்த்திப் பிடித்தபடி தலை நிமிர்ந்து வருகிறார்கள். இந்த எழுச்சி, சிங்களக் கும்பலின் அடிவயிற்றைக் கலக்குவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இன்னொரு கும்பலின் அடிவயிற்றையும் இந்த எழுச்சி கலக்குவதுதான் நமக்கு வியப்பளிக்கிறது. அந்தக் கும்பல், திருவாளர்.சம்பந்தன் கும்பல்.

தென்னையில் தேள் கடித்தால் பனையில் நெறி கட்டுவது மாதிரி, ஜெனிவாவில் தேசியக்கொடி பறந்தால் கொழும்பிலிருக்கும் சம்பந்தன் கும்பல் அடிமுதல் முடிவரை ஆணி அடித்ததைப் போல் அலறித் துடிக்கிறது.R Sampanthan TNA

‘தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தால் சர்வதேசம் என்ன நினைக்கும்’ – என்பது சுமந்திரன் போன்ற அதிமேதாவிகளின் கேள்வி. சாதுர்யமாகப் பேசுகிற இந்த சந்தர்ப்பவாதிகள், வேறெந்தக் கொடியை இந்த இனம் ஏந்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? ஒன்றரை லட்சம் சொந்தங்கள் முள்ளிவாய்க்காலில் சிந்திய ரத்தத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே, சம்பந்தன் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாரே – அந்த அ–சிங்கக் கொடியையா? சம்பந்தனைப் போலவே – மூளையும் உணர்வும் மரத்துப் போன நடைப்பிணங்களாக இருக்கச் சொல்கிறார்களா எம் இளையோரை?

கொழும்பு பிரஜைகளான சுமந்திரன் போன்றவர்களால் தாயக மக்களின் வலியையும் வேதனையையும் ஒரு வீதமாவது உணர முடியுமா? அதிகாரபேரங்களுக்கு அப்பால் வேறெதைப்பற்றியேனும் அவர்கள் சிந்திக்க முடியுமா? எம் இளைஞர்களிடமிருந்து எம் தேசியத்தை விலக்கிவைக்க நினைத்தவர்களையும், எம் தேசியத் தலைவர் குறித்த தவறான புரிதலை எம் இளையோரிடையே ஏற்படுத்த திட்டமிட்டு வேலை செய்தவர்களையும் நாம் அறிவோம். அவர்கள்தான், எம் தேசியக் கொடியுடனும், எம் தேசியத் தலைவரின் உருவப்படங்களுடனும் எம் இளையோர் பீடுநடை போடுவதைப் பார்த்து பொறி கலங்கிப் போய்ப் புலம்புகிறார்கள்.

புலம்புபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தாய்மண்ணின் அடையாளங்களைத் தாங்கியபடி எம் இளையோர் தலைநிமிர்ந்து வருகிறார்கள். பொய்ப் பிரச்சாரங்களூடாகவே வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சண்டியர்கள் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். எந்த இனத்தின் வரலாற்றிலும் துரோகிகள் தூக்கியெறியப்படுவதுதானே உச்சக்கட்டம்!

சொந்த இனம் தங்கள் செவுளில் அறைவதை மூடிமறைப்பதற்காக அவசர அவசரமாக எதிர் நடவடிக்கைகளில் இறங்குகிறது சம்பந்தன் கும்பல். தட்டிக்கேட்கும் அனந்தியைத் தூக்கியெறிகிறது. பிழையைச் சுட்டிக்காட்டும் சிவாஜியிடம் கேள்வி கேட்கிறது.
தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஜனநாயக முறைப்படி கட்சிக்குள் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தீர்களா அல்லது தன்னிச்சையாக முடிவெடுத்தீர்களா – என்பது அனந்தியின் நியாயமான கேள்வி. அந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் சொல்ல முடியவில்லை சம்பந்தன் கும்பலால்! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – என்பதைப் போல, கேள்வி கேட்கும் அனந்தியை நீக்குவதிலும் ஜனநாயக விரோதமாகத்தான் நடந்துகொள்கிறார்கள் சிங்கக் கொடியர்கள்!

அனந்தி கேட்டிருப்பது ஒரே ஒரு கேள்வி. உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சம்பந்தன் கம்பெனியாகவே மாற்றி விட்டிருப்பவர்களிடம் கேட்பதற்கு எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. மனசாட்சி என்கிற ஒன்று அவர்களில் எவருக்காவது இருந்தால், முதல் 15 கேள்விகளுக்காவது அவர்கள் பதில் சொல்லட்டும்.

முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எம் உறவுகளின் எண்ணிக்கை – ஒன்றரை லட்சம். பல்லாயிரம் மைல் தள்ளியிருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்” என்று உரக்கப் பேசுகிறார்கள் உறுப்பினர்கள். அவர்களில் எவரும் எமக்கு உறவில்லை, அவர்களில் எவரும் எமது இனமில்லை. அடிப்படையில் ‘மனிதர்களாக’ இருப்பது ஒன்றே அப்படிப் பேச வைக்கிறது அவர்களை! நீங்கள், எம் இனம்…! நீங்கள், எம் உறவு……! அப்படியிருந்தும் வட மாகாண சபையில் ‘இனப்படுகொலை’ என்று எவரும் மூச்சுகூட விட்டுவிடக் கூடாது என்கிறீர்களே, ஏன்? நீங்கள் தமிழர்கள் தானா – என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அடிப்படையில் நீங்கள் மனிதர்களா இல்லையா?

வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டவர்கள் மிருகங்களா? மனிதர்களா? சிங்கள இனத்தின் அந்த வெறிபிடித்த மனித வேட்டைக்கு, ‘இனப் படுகொலை’ என்பதல்லாமல் வேறென்ன பெயர்?

நடந்தது இனப்படுகொலையா இல்லையா? இது இனப்படுகொலை இல்லையென்று நீங்கள் சொன்னால், உங்கள் அகராதியில் வேறு எது இனப்படுகொலை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் – ‘எது இனப்படுகொலை’ என்பதைப் பிரகடனம் செய்யத் தயாராயிருக்கிறீர்களா?

ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது, ஐ.நா.வின் பழைய புள்ளிவிவரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கையைக் கூட மூடி மறைக்க முயற்சிக்கிறீர்களே, ஏன்?

‘ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்படவில்லை, அது பொய்யான கணக்கு’ – என்பது உங்களது மேலான கருத்தாக இருந்தால், அதை வெளிப்படையாகச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை?

ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்படவில்லை – என்று நீங்கள் உறுதியாக நம்பினால், 2009க்குப் பிறகு அவர்கள் எங்கே தலைமறைவாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவாவது முயற்சி எடுத்தீர்களா?

கொல்லப்பட்டவர்கள் நாற்பதாயிரம் பேர்தான் – என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த 40 ஆயிரம் பேரும் புலிகளாக இருக்க வாய்ப்பே இல்லையே! ‘அப்பாவித் தமிழ் மக்களில் ஒருவர் கூட போரில் கொல்லப்படவில்லை’ என்று கூசாமல் பேசுகிற சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து கும்மியடிக்க உங்களால் எப்படி முடிந்தது?

நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதில் மகிந்தவும் கோதபாயவும் அக்கறை காட்டலாம்…….. இனப்படுகொலையில் நேரடியாகப் பங்கெடுத்த மகிந்தரிலிருந்து மைத்திரிபாலா வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது அதை மூடி மறைப்பதற்கு! நீங்களும் அதை மூடி மறைக்க முயற்சிக்கிறீர்களே, என்ன காரணம்? இனப்படுகொலையில் உங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருந்ததா?

மகிந்த – கோதபாய – மைத்திரி – பொன்சேகா உள்ளிட்டவர்கள் நேரடிக் கொலையாளிகள்…. அல்லது கொன்ற இனத்தின் பிரதிநிதிகள். இது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு, கொல்லப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் நீங்கள் என்பதும் உண்மை. அப்படியிருந்தும், இனப்படுகொலை – என்கிற வார்த்தையைக் கேட்டாலே அலறி நடுங்குகிறீர்களே, ஏன்?

கொல்லப்பட்ட இனத்துக்கு நீதி கேட்பதைக் காட்டிலும், கொன்ற இனத்துக்குத் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதிலேயே நீங்கள் அதிக கவனம் செலுத்துவது எதனால்? ‘சேஃப் பாசேஜ்’ கொடுத்து குற்றவாளிகளைத் தப்ப விடுவது தொடர்பாக எவருடன் ‘டீல்’ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மகிந்தரிடமா? மைத்திரியிடமா? அல்லது இருவரிடமுமா?

ஒன்றுபட்ட இலங்கை – என்கிற உங்களது தேசபக்திக் கோட்பாட்டுடன் எங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம். இலங்கை அரசு திட்டமிட்டு செய்த இனப்படுகொலை குறித்து சுதந்திரமான – பாரபட்சமற்ற – சர்வதேச விசாரணை தேவை என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு இல்லை, மகிந்த அரசுதான் அதைச் செய்தது – என்று நீங்கள் கருதினால், குற்றவாளி மகிந்தரை சர்வதேசத்திடம் ஒப்படைக்கும்படி இதுவரை ஏன் வலியுறுத்தவில்லை?

தமிழீழம் கேட்பது தேசத்துரோகம் – என்று அரசியலமைப்பின்னடி நினைப்பதற்கான சகல உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கும் நீதி கேட்க மறுப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகள் – என்று நினைப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறதா இல்லையா?

வருகிற மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் நடக்கிற நேரத்தில், சர்வதேச விசாரணை தொடர்பான அழுத்தம் எதுவும் இலங்கைக்கு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேதாவி ஒருவர் ஜெனிவா செல்வதாகச் செய்திகள் வெளியாகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணைக்கு கால அவகாசம் தேவை – என்று தமிழர் தரப்பிலிருந்தே அந்த கனவான் வலியுறுத்துவார் என்றெல்லாம் செய்தி பரவுகிறது. அதை இன்னும் நீங்கள் மறுக்கவில்லையே, ஏன்?

நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்த முயற்சி என்ன? சர்வதேசமும் இன்றைக்கு அதுகுறித்துப் பேசுவதற்கு யார் காரணம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாகிய நீங்களா? அல்லது, தங்கள் உயிரைத் துச்சமென மதித்து முள்ளிவாய்க்காலில் போய் மூச்சை நிறுத்திக் கொண்டார்களே, அந்த ஒன்றரை லட்சம் பேரா?

தாயக மண்ணில் தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழும் வகையில் தீர்வு காண்போம் – என்கிறார் திருவாளர்.சம்பந்தன். அளவுக்கதிகமான ராணுவப் பிரசன்னத்தால் வட மாகாண மக்கள் பாலியல் அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்வதாகக் கூறுகிறார் முதல்வர் விக்னேஸ்வரன். இருவருமே ராணுவம் வெளியேறியே ஆக வேண்டும் – என்று உரத்த குரலில் பேச மறுக்கிறார்கள். பாலியல் அச்சத்துடனேயே வாழ்வதுதான் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான அஸ்திவாரம் என்று இருவருமே நம்புகிறார்களா?

நீங்கள் மனிதராகவும் இருந்து, மனசாட்சியும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். அடுத்த சில கேள்விகளுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

தமிழ் பற்றுடன்
ஸ் ரீபன் புஸ்பராஜா
நோர்வே

Advertisements