இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா?

இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும் விஞ்ஞான உலகம், எங்கள் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள வேண்டிய, தேவையும், அவர்களுக்கில்லை போலும்.Sri-Lanka-war

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது இந்த நூற்றண்டில் அல்ல, எந்த ஒரு நூற்றாண்டிலுமே எந்த ஒரு இனத்துக்குமே நடந்திருக்காத ஒரு பேரவலம்.

ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளை, உலகத்தின் அத்தனை வல்லரசு நாடுகளும் நிராகரித்து, தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று முலாம் பூசி, மாசுபடுத்தி, தமிழர்களின் தலையில் தன்னாதிக்க ஆப்பை அடித்தது சர்வதேசம்.

சர்வதேச நாடுகள் அத்தோடு நின்றுவிடாமல், சிறிலங்காவை எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை தமிழ் மக்களுக்குவெளிக்காடியவாறு, மறுபுறத்தில், சிங்கள பேரினவாத ஆதிக்க அரசுக்கு ஆலோசனைகளும், இராணுவத்திற்கு தேவையான பயிற்சி உட்பட அனைத்து ஆயுத வளங்களையும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் உட்பட அனைத்து இராணுவ உதவிகளையும் மறைமுகமாக வாரி வழங்கி, முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கு துணை போனதோடு நின்றுவிடாமல், தொடர்ந்தும் இன்றுவரை சிங்களத்திற்கு துணைபோகிறது சர்வதேசம்.

காலமெல்லாம் வலிக்கும் அளவு வலிகளை முள்ளிவாக்காலிலே தமிழினத்திற்கு கொடுத்தது சிங்கள பேரினவாத அரசு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் பயங்கரவாதம் என்ற பாரிய போர்வையினால் மூடி, பூவும், காயும் கனத்த பிஞ்சுகளுமாக அத்தனை தமிழர்களையும் கொன்றெழித்தும், அங்கவீனர்களாக்கியும், மன நோயாளிகளாக்கியும், விதவைகளாக்கியும், அனாதைகளாக்கியும், குற்றவாளிகளாக்கியும், ஒரு பகுதி தமிழர்களை நடை பிணங்கள் ஆக்கிய நிலையில், கொடிய இனவழிப்பை நடத்தி தற்காலிக முடிவுக்கு கொண்டுவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

வெளிப்படையான இனவழிப்பு முள்ளிவாய்க்காலுடன் முடிவிற்கு வந்திருந்தாலும், வெளித்தெரியாத வகையில் நாளுக்கு நாள், அடக்கு முறைகளும், நிலப் பறிப்புக்களும், ஆட்கடத்தல், கொலைகள், ஊடாக சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், மாகாணசபை, அமைச்சர்கள் இருந்தும், சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறையை தட்டிக்கேட்க நாதியற்றவர்களாக இன்று ஈழத்தமிழினம் தவிக்கிறது.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் சுதந்திரத்திற்காகப் பிறப்பெடுத்து, முப்பத்து மூன்று ஆண்டுகள் எவருக்கும் அடிபணிந்து போகாமல் விடுதலைப் போராட்டத்தை நடத்தி இலக்கை எட்டும் நிலையில் உச்சம் பெற்றிருந்த போது, இனிமேல் அழிக்க முடியாது என்ற நிலையில், விசப்பரீட்சை என்று தெரிந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்க சர்வதேசம் ஊடாக இலங்கை, இந்தியா இனவெறியர்கள் களமிறங்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க இனவழிப்பின் உச்சத்தையே கையாண்டது இலங்கை.

அதற்கு இந்தியா – நோர்வே ஊடாக துணை போனது சர்வதேசம்.

சர்வதேசத்தின் சதி வலையில் நம்பி ஏமாந்தது தமிழர்களின் விடுதலைப் போராட்டம், எழுத்து மூலம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றி, இனவழிப்பில் இருந்து தமிழர்களை பாதுகாத்துக்கொள்ளவும், தரணியில் தமிழ் மக்களை தலைநிமிரவைக்கவும், தம்மால் முடிந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்புக்களை செய்தது.

இறுதியில் ஆயுத அமைதிப்படுத்தலை அறிவித்து, போராளிகள் அனைவரையும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் முன்னால் நிராயுதபாணிகளாக நிறுத்தி, தமது இறுதி நல்லெண்ணத்தையும், சர்வதேசத்தின் மீது தாம் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் சர்வதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்தது. நிராயுத பாணிகளாக நின்ற போராளிகளை கைது செய்து, நிர்வாணமாக்கி, கண்களையும், கைகளையும் கட்டி தலையிலே சுட்டுப் படுகொலை செய்ததோடு, பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்று குவித்தது இனவெறி சிங்கள அரசு.

தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தருவார்கள் என்று கடைசிவரை சர்வதேசத்தை மலையென நம்பியவர்களை கழுத்தறுத்து மலைக் குவியல் போல் குவித்தது சர்வதேசம். சர்வதேசத்தின் கண்காணிப்பில், ஐக்கியநாடுகள் சபையின் உயர் பிரதிநிதிகள் முன்னினையில் தமிழர் இனவழிப்பே நடத்தி முடிக்கப்பட்டது.

தமக்கு எதுவுமே தெரியாதது போல் இன்று தீர்மானங்களை நிறைவேற்றி தமிழர்களுக்கு புதினம் காட்டுகிறது ஐநாவும், அமெரிக்காவும். விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்க்கடிக்கப்பட்ட, பயங்கரவாத இயக்கமாக சிறிலங்காவும், இந்தியாவும் அமெரிக்காவும் அறிவித்து மிகப்பெரிய மலையை மட்டமாக்கி தட்டாந்தரை பாலைவனமாக்கியது வரை அனைத்து துரோகங்களும் வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

அன்று காலி முகத்திடலிலே வெற்றி வேட்டுக்களை ஏவி, போர் முடிந்தது என்றும் ஒட்டுமொத்த விடுதலைப் புலிகளையும் கொன்றெழித்து விட்டோம் என்று பீரங்கிகளாலும் வெற்றி முழக்கமிட்டு கொக்கரித்த சிங்களதேசம், மீண்டும் இன்று புலிகள் புலிகள் என்று தேடுதல் வேட்டைகளை தொடங்கியுள்ளது. இதனை ஏன் என்று கேட்பதற்கு இன்று நாதியற்றவர்களாய் நிற்கும் தமிழர்களை எதுவும் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தொடரும் அவலங்களால் கண்ணீரின் தத்துப் பிள்ளைகளாக தவிக்கின்றது தமிழினம்.

ஏன் என்று கேட்க யாரும் இல்லையோ!!

பேரினவாதப் பூதத்தின் கொடிய கரங்களால் இன்னும் எத்தனை ஈழத்தாயின் பிள்ளைகள் நரபலியெடுக்கப்படுவார்களோ தெரியவில்லை. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது கொஞ்சம் நின்மதிப் பெருமூச்சு விட்டது தமிழினம். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்ட முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும், மாகாணசபைக்கான அதிகாரங்களைக் கூட கொடுக்காது சர்வதேசத்தை ஏமாற்றியவாறு, மாகாணசபையின் பொம்மை மனிதர்களாக தமிழர்களை சிங்களப் பேரினவாதம் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றதால் அவலங்களின் அத்தியாயம் தொடர்ந்து கொண்டே போகின்றது.

ஆலகால விசமுண்ட சிவபெருமானுக்கும் இலங்கைத் தீவுக்குள் இருப்பிடம் இல்லை என்று கோயில்களைக் கூட இடித்தழித்துக் கொண்டிருக்கின்றது.

எத்தகைய கொடுமைகளைச் செய்தேனும் இலங்கைத்தீவை தனிச் சிங்களத் தீவாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காக, தமிழர்களின் அடையாளத்தினை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாமல் யாரை வேண்டுமானாலும் சிறையில் தள்ளிப் பூட்டிவிடுவதற்கு அவசரகாலச் சட்டம் என்ற ஒரு கொடிய அஸ்திரத்தினை சிங்கள அரசு தமிழன் வீட்டு பிள்ளைகள் மீது ஏவி விட்டுக்கொண்டே இருக்கின்றது.

உலக நாடுகளின் சட்டப் புத்தங்கங்கள் ஒருநபர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றது. எத்தனை அப்பாவி இளைஞர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் சிறைகளிலே இன்னமும் வாடிக் கொண்டிருக்கின்ரனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலே 18 மாதங்கள் சிறையிலே அடைக்கும் அளவு அதிகாரத்தினை சிங்கள தேசத்தின் சட்டப் புத்தகத்தில் வைரைந்துள்ளது பேரினவாதம். எத்தனை ஆயிரம் இளைஞர்கள் இன்னமும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலே பல வருடங்களை சிறையிலே சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் என்று கேட்பதற்குரிய அதிகாரத்தில் இருந்த தமிழர்கள் யாரையும் சிங்கள இனவெறியர்கள் விட்டுவைக்கவில்லை.

மிக மிக அண்மையிலே தேவிகன், அப்பன், கோபி என்ற மூன்று தமிழர்களின் பெயர்களும் புலிகள் மீள் உருவாக்கம் என்ற தலைப்புகளும் ஊடகங்கள் முழுவதிலும் இடம் பிடித்திருந்தன. புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்தார்கள் என்ற குற்றமே இவர்கள் மீது பிரதானமாக சுமத்தப்பட்டிருந்தது. உலகநாடுகளின் வல்லரசுகளுக்கு சமனாக இருந்த விடுதலைப் புலிகளையே, உலகின் ஒட்டுமொத்த சக்திகளையும் தன்னகத்தே ஒருங்கிணைத்து தனது இனவெறிப் போரிலே வெற்றி கொண்ட சிங்களதேசம். தேவிகன், அப்பன், கோபி ஆகிய மூவரையும் கண்டு அஞ்சியது ஏன்?

இன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் குறித்த மூவராலும் அப்படி என்ன செய்துவிட முடியும்? சுட்டுக் கொல்லும் அளவுக்கு இவர்கள் செய்த குற்றம் என்ன?

சிங்கள தேசத்தால் தடைசெய்யப்பட்ட, பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கப்படுகின்ற விடுதலைப் புலிகள் அமைப்பினை உன்மையிலே இவர்கள் மூவரும் மீள் உருவாக்கம் செய்தார்கள் என்பது உன்மையானால், அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமற்றத்தில் நிறுத்தி அதற்கான காரணத்தினை கேட்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றம் மூலமே தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.

அத்தோடு அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எவரைக் கைது செய்தாலும் இவர்களிடம் கிடைத்த தகவல், அவர்களிடம் கிடைத்த தகவல் என்றே கூறிக்கொண்டு தனது திட்டத்தை நடைமுரைபடுத்திக் கொண்டு செல்கிறது சிங்கள இனவாதாம.

கைது செய்யப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் நீதிமன்றங்களில் முன் வைக்கப்படவில்லை, அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் உரிய முறையில் நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்படவும் இல்லை.

இனவெறியர்களிடத்தில் எப்படி ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது? பார்த்த இடத்திலே எந்த ஒரு விசாரணைகளும் இன்றி சுட்டுப் கொலை செய்யுமாறு கொலை வெறிச் சிங்கள இராணுவத்திற்கு அனுமதிகொடுத்த ஆட்சிபீடம் இது! யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சுட்டுப் படுகொலை செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஜனநாயக நாடு இது! எவருக்கும் அஞ்சாமல் படுகொலை செய்யும் இறையான்மையான நாடு இது. இந்த நிலையில் அனைவருக்கும் இறைமையுள்ள ஜனநாயக நாடு இது என்று சிங்கள இனவாதம் புகளாரம் சூடிக்கொள்கின்றது.

தேவிகன், கோபி, அப்பன் என்ற மூவரைப் போல, இன்னும் எத்தனை தமிழர்களை அழித்தொழிக்க திட்டம் தீட்டுகின்றதோ இந்த சிங்கள மேலாதிக்கம். எத்தகைய அப்பாவிகளையும் கொன்று பலி எடுத்துவிட்டு புலிகள் என்றும், அடுத்த பிரபாகரன்கள் என்றும் சயம் பூசும் சிங்கள தேசம், பிரபாகரன்களை உருவாக்கிக் கொண்டிருப்பதே தாங்கள் தான் என்பதை இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.

என்ன செய்யப் போகின்றாய் தமிழினமே!!!!!!!?

போரம்மா போரம்மா என்ற வீரமறவர்களின் வெற்றிக் கோசங்கள் ஓய்ந்து போய் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்டு, களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களில் இருந்த கல்லறைகள் இடித்தழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகளும், இராணுவ முகாம்களும், விளையாட்டு மைதானங்களும் அவரச அவசரமாகஉருவாக்கப்பட்டு வீர மறவர்களின் நினைவாலயங்களைக் கூட அழித் தொழித்து கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது சிங்களப் பேரினவாதம்.jaffna_protest

நொடிப் பொழுதிலே தன் உயிர் பறந்து போனாலும், காலமெல்லாம் தன் கல்லறைகளை தமிழ் மண் சுமக்கும் என்ற நம்பிக்கையிலே உடலிலே குண்டைக் கட்டி எதிரியின் இலக்குகளைத் தாக்கி அழித்த அந்த வீரர்களின் சிறிய ஆசையினைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாய் மாறிப்போன தமிழினமே இன்னும் எத்தனை காலம் இந்த அவலங்கள் உனக்கு.

இதில் இருந்து எப்போது மீண்டெழுவாய் ??????

எத்தனையோ போரளிகள் புணர்வாழ்வு என்ற பெயரிலே இன்னமும் வதை முகாம்களில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர், தமிழ் மண்ணின் விடிவுக்காய் போராடிய வீரப் புதல்வர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று இன்னமும் தூற்றிக் கொண்டிருக்கின்றது.

எத்தனை காலம் எங்கள் வீரர்களை இந்த இழிவுக்குள் வாழ அனுமதிப்பாய், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராளிகள் என்ற உன்மையினை எப்போது உலகின் காதுகளில் உறைக்கும்படி சொல்லப் போகின்றாய்!

கொலை கொள்ளை கற்பழிப்பு என்று உலகத்தில் உள்ள அத்தனை கொடுமைகளையும் செய்த சிங்கள இராணுவம், இன்னமும் பாதுகாப்புப் படையினர் என்று கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் தமிழின அழிப்பினை செய்த கொடுங்கோல் அரசையும் அதன் ஆதரவு சக்திகளையும் எப்போது கூட்டிலேற்றப் போகின்றாய்?

ஈழ விடுதலைப் போரையும், விடுதலைப் போராளிகளையும் வைத்து இன்னும் எத்தனை காலம் வெறும் அரசியல் செய்து கொண்டே இருப்பாய். ஒட்டு மொத்த தமிழினமே வெட்கப்படு. உன் விடுதலைக்காய் போராடிய வீரமறவர்கள் மரணித்துப் போன பின்னும், நீ அவர்களின் வெற்றுடலை காட்டி உலகத்தில் நீதி கேட்கின்றாய்.

இனவெறி அரக்கர்களால் சீரழிக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் பிணங்களாக கிடக்கும் உன் அக்கா, தங்கயரை உலகமெங்கும் காட்சிப் பொருளாய் காட்டுகின்றாய்! பருவமெய்த நாள் முதல் தன வாழ்நாளில் எதை உயிரிலும் மேலாக நினைத்து பாதுகாத்த பெண்மையினை உலகம் முழுவதும் திரையிட்டுக் காட்டி நீதி கேட்கின்றாய்!

வீழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மைதரும் என்பதைப் போல் உலகத்தின் போர்க்குற்ற விசாரணையின் சாட்சியங்களாய் வீழ்ந்து போன மறவர்களின் வெற்றுடல்ககள் சாட்சி சொல்ல வருகின்றன.

நிழலுக்கும் நியத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தமிழர்கள்??

உலகத் தமிழினமே ஈழம் என்ற பெருவிருட்சம் வீழ்ந்து போய்க் கிடக்கின்றது, அதை செதுக்கி தேராக கட்டி இழுப்பதற்குப் பதிலாக வெட்டி விறகாக்கி எரித்து விடாதே!

மகுடங்களைத் தலையிலே சூட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகளாலும், சில துரோகிகளாலும் ஈழத் தமிழினம் வீழ்ந்து போனது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லையே!

உலகநாடுகள் கேட்கும்,உலகம் நீதி சொல்லும், என்று வெறும் உலகத்தை நம்பி ஐந்தாண்டுகளை தாண்டிவிட்டோம். உலகத்தில் நீதியும், நியாயமும் இருந்திருந்தால் முள்ளிவாய்காலிலே பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்படிருப்பார்களா?

உலகம், உலகத்திற்கு அப்படி என்ன பாசம் எம்மீது செத்துப்போன பிள்ளையினை புதைத்துவிடும் நரிகளாகவும், மரத்திலே கட்டிவிடும், கழுகுகளாகவும் தான் உலகநாடுகள் இருக்கின்றன.

போர்க்குற்றம் போர்க்குற்றம் என்று ஐந்து ஆண்டுகளாக கதறியதன் பலனாக இன்று போர்க்குற்ற விசாரணைக்கு உலகநாடுகள் ஆதரவு செலுத்தி உள்ளன. அதனை ஏற்றுக் கொண்டாற் போல் தலையசைக்கும் சிலரும், ஏற்றுக் கொடோம் என்று சிலரும் வெற்றி! வெற்றி! என்று சிலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் போர்க்குற்றம் என்பது நிழல், போர்க்குற்றம் என்றால் ஒருபோர் நடைபெறும் போது போர் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மீது எதிர்த் தரப்பினரால் சுமத்தப்படும் குற்றம், போர்க்குற்றம் என்று கூறலாம், எனவே போர்க்குற்ற விசாரணை என்று ஆரம்பித்தால் இன்றய தமிழக முதல்வர் அன்று கூறியதைப் போல் போரென்று நடந்தால் ஒரு சில மக்கள் கொல்லப்படுவது இயல்பு என்பதைப் போல் போர்க்குற்ற விசாரனையும் பலனற்ற ஒன்றாக போகும்.

அது தமிழ்மக்கள் மீது, அதாவது விடுதலைப் புலிகள் மீதும் திரும்பிவிடக் கூடிய சாத்தியங்களை சிங்களம் செய்து மிடித்து, தான் தப்பித்துக் கொள்ளும் வழிகளை தேடிக்கொள்ளும். எனவே நிழலுக்கும் நியாயத்துக்கும், வித்தியாசத்தினை அறிந்து நாம் செயற்பட வேண்டும்.

போருக்கும் போராட்டத்திற்கும் வேறுபாடுகளை அறியாத உலகம்!

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அளிக்கப்பட்டதை ஐநா சபையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், மற்றைய உதவி வழங்கும் நிறுவனங்களும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. முள்ளிவாய்க்காலிலே போர் நடைபெற்றதாக யாரேனும் கூறுவார்களனால் அவர்கள் அறியாமையினை அது வெளிப்படுத்தும். காரணம் அங்கே போர் நடைபெறவில்லை என்பது தானே உண்மை, அங்கு நடைபெற்றது திட்டமிட்ட இனவழிப்பு என்பது தானே உண்மை இதனை வெளிப்படுத்த தேவையான ஆதாரங்கள் சர்வதேசத்திடம் இருந்தும் தாமதிக்கின்றன என்றால் காரணம் என்ன.??? எங்கோ ஒரு இடத்தில் தவறு நடக்கின்றது என்பதை ஏன் நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

மருந்து, உணவு, சிறு பிள்ளைகளுக்கான பால்மா, உற்பட அனைந்து அத்தியாவசிய பொருட்களையும் தடைசெய்து பட்டினிப் பேயை ஏவி தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் வன்னிக் காடுகள் எங்கும் நச்சு வாயுக் குண்டு மழை பொழிந்து இலட்சக் கணக்கான மக்களை கொன்றுகுவித்து இனவழிப்பு செய்தது சிங்கள இனவாதம்.

அங்கே நடந்தது இனப் படுகொலை, அங்கே போர் நடைபெற்றிருந்தால் தமிழினத்தின் கோபத்தீயிலே சிங்கள தேசம் எரிந்து சாம்பலாகி இருக்கும். நீதிக்கதைகள், சர்வதேச சட்ட விதிகளின்படி தற்காப்புப் போரைக் கூட நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு முள்ளிவாய்க்காலில் தமிழர்களும் தள்ளப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழினம் கோபங்கொள்ளும் உரிமைகூட இல்லாமல், இல்லாமல் போனது,

எங்கு பார்த்தாலும் அவலம், சாவு, ஒப்பாரி, பசி, தாகம், ஏக்கம், யாருக்கும் யாருடைய ஆறுதலும், அனுதாபமும் கிடைக்கவில்லை. சர்வதேசத்தில் உதவிகளுக்கு என பல நூறு அமைப்புக்கள் இருந்தும் யாரும் எமது மக்களுக்கு உதவ முன்வரவில்லை, அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டு சிறிய நிலப்பரப்பிற்குள் முடக்கி வைத்து தமிழின அழிப்பை சிங்களம் நடத்தி முடித்தது.

எனவே அங்கே போர் நடைபெறவில்லை இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும்,போராட்ட வீரர்களை சந்தித்த உலகம், போருக்கும், போராட்டதிற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள மறந்து போனது. போர் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? என்பதை உலகத்திற்கு நாம் உணர்த்த வேண்டியவர்களாக உள்ளோம், உணர்த்த வேண்டும்.

தமிழர்கள் செய்தது உரிமை மீட்புப் போராட்டம், சிங்களம் செய்தது இனவழிப்பு இதனை உலகம் எப்போது ஏற்றுக்கொள்கின்றதோ, அன்றுதான் உலகத்தில் தமிழினத்தின் கோரிக்கைகள் ஏறுக்கொள்ளப்படும். இன்று பயங்கரவதிகளாக தூற்றப்படும் வீரமறவர்களும் அன்றுதான் சுதந்திரப்போராட்ட வீரர்களாக போற்றப்படுவார்கள்.

அவ்வாறு போற்றப்படும் காலம் கனிந்துவரும் என்று எதிர்பார்ப்பில் வணக்க நிகழ்வுகளை மட்டும் செய்துகொண்டிருந்தால், மிஞ்சி இருப்பதும் இல்லாமல் போகும் நிலை ஏற்ப்படும்.

இதை உணர்ந்து இலங்கைத் தீவில், தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரனவாத அரசு நடத்தியது இனவழிப்பே என்பதை சர்வதேசத்தை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டிய தார்மீகக் கடமை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்து, அனைவரும் தம்மாலான அனைத்து வழிகளிலும் சர்வதேசம் நோக்கிய எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் உடனடி தேவை

-கதிரவன்-

Advertisements