யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால் எந்தவித அரசியல் கலப்புமில்லாமல் திட்டமிட்டபடி, ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Jaffna_protest_1இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் கோயிலின் முன்றிலில் ஆரம்பமான பேரணி நல்லூர் கோயிலில் நிறைவுற்றது.

பேரணி நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கான மகஜரை கொழும்பில் உள்ள ஐ.நா. பிரதிநிதியிடம் வழங்குவதற்காக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இந்துக் குருமார் ஒன்றியத்தின் வாசுதேவக் குருக்கள் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அறிக்கையில்,

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியாகும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை மீதான விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தி அதனை செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போட்டமைக்கு நாம் எமது ஆழ்ந்த விசனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த அறிக்கை திட்டமிட்டபடி வெளிவரவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டின் போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் அறிக்கை பிற்போடப்படுவதை தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக நாம் புரிந்துகொள்கிறோம்.

அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பையும் (யுத்தத்திற்குத் தீவிர பங்காற்றியவர்கள் உட்பட), கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத் தவறியமை தொடர்பான வரலாற்றையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்படவல்ல எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவு.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்கள பௌத்த தலைமைத்துவங்கள் தொடர்பிலான எமது நீண்ட கால அனுபவத்தில், இலங்கை ஆயுதப் படைகளைச் சார்ந்த அங்கத்தவர்கள் எந்தக் குற்றங்களுக்காகவும் உள்நாட்டில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

உள்நாட்டு விசாரணை மீதான சர்வதேச மேற்பார்வை வெறும் கால வீரியத்திற்கு மட்டுமே வழிகோலும் என்பதையும் அறிவோம். தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமை மூலம் மஹிந்தவுக்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாரிய ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேன ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஒரு மாத காலப் பகுதி தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து புதிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டது.

நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளான இராணுவ மயமாக்கம், மக்கள் தம் சொந்தக் கிராமங்களில் குடியேறல், காணாமல் போனோர் மற்றும் சட்டவிரோத தடுப்புக் காவல் சம்பந்தப்பட்டோர் பிரச்சினைகள் தொடர்பில் சிறிசேன அரசாங்கத்தால் குறிப்பிடக்கூடிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்பிரச்சினைகள் உள்ளடக்கப்படவும் இல்லை. அரசியல் தீர்வுக்கான பேச்சைக் கூட சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை.

ஆகவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இலங்கை மீதான தம் விசாரணையை, தகவல் தருவோருக்குப் போதிய பாதுகாப்பு சர்வதேச விசாரணையாளர்களால் மேற்கொள்ள இலங்கை வர அனுமதி கோரி, இதன் மூலம் ஒரு முழுமையான – முறையான அறிக்கைத் தயாரிப்பதற்கு உதவும் வகையில், ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டதையடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமாறு தங்களை வேண்டுகின்றோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டனர்.jaffna_protest

**
இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? – மன்னார் ஆயர்

இலங்கையில் உள்ளவர்களே தமிழர்கள் மீது அநீதி புரிந்தார்கள். அவர்களிடமே தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? தமிழ் மக்களாகிய நாங்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் ஐ.நா நடத்தும் ஆய்வினையும், அதன் மூலமாக வெளியிடப்படும் அறிக்கையினையும் மட்டுமே நம்புகின்றோம். என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மார்ச் மாதம் வெளிடவேண்டிய இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையினை பிற்போட்டிருக்கின்றார்கள். குறித்த அறிக்கை மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குங்கள் எனக் கேட்டும் அந்த அறிக்கை பிற்போடப்பட்டதன் ஊடாக தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை எமக்கு சர்வதேசம் புலப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் அந்த அறிக்கையினை மேலும் தாமதப்படுத்துவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே தமிழர்களுக்கான நீதியை கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். இலங்கை கூறிய உள்ளக விசாரணை என்ற பேச்சினை சர்வதேசம் நம்பியருக்கின்றது. ஆனால் அதனை நாம் ஒத்துக்கொள்ள முடியாது.

இலங்கையில் உள்ளவர்களே தமிழர்களுக்கு அநீதி புரிந்தார்கள். அவர்களிடமே சென்று நாங்கள் எப்படி நீதி கேட்க முடியும்? குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா?

பாரபட்சமற்ற வகையில் சர்வதேசம் குறிப்பாக ஐ.நா விசாரணை நடத்துவதன் ஊடாகவே தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படி 1லட்சத்து 46ஆயிரத்து 879மக்கள் இறுதிப்போரில் குறிப்பாக 8மாதங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படுகொலைகள் சூட்டுத்தவிர்ப்பு வலயங்களிலும், சூனிய வலயங்களிலுமே இடம்பெற்றிருக்கின்றன.

மக்கள், விடுதலைப் புலிகளை எதிர்த்து விடுதலைப் புலிகளிடமிருந்து வெளியே வந்துவிடவேண்டும், அப்போது தாம் யுத்தத்தை வென்றுவிடலாம் என்ற நோக்கத்திற்காகவே இந்தப் படுகொலைகளை செய்தார்கள். மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.

சூட்டு தவிர்ப்பு வலயங்கள் என அடையாளப்படுத்தி, அங்கிருந்து வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு ஒக்டோபர் மாதத்தில் மீண்டும் மீண்டும் அவ்வாறான சூட்டுத்தவிர்ப்பு வலயங்களையும், சூனிய வலயங்களையும் உருவாக்கி மக்களை அதனுள் கொண்டுவந்ததன் பின்னர் சாட்சியங்களே இல்லாமல் கொன்று குவித்தார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தின், நல்லவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் நல்லவர்களும் நீதியை நிலைநாட்டாமல் அமைதியாக இருந்தார்கள் என்பதே உண்மையாகும்.

எனவேதான் நாங்கள் கேட்கிறோம், உள்நாட்டு விசாரணையில் துளியேனும் எமக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் சர்வதேச விசாரணையினையே எதிர்பாரத்திருக்கின்றோம் என்றார்.

**chennai-un protest-002
யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!

இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி பேரணி நடத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பின்தள்ளப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை , 28வது மார்ச் மாத கூட்டத் தொடரிலே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இலங்கையின் ஆட்சிமாற்றம் காரணமாக போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை மேலும் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்
முடி­வெ­டுத்­துள்­ளதாகக் கூறப்­ப­டு­கின்­றது.

தாமதிக்கப்பட்ட நீதி தொடரும், குற்றச்செயல்களை ஊக்குவிக்கும். மேலும் இது அநீதிக்கு சமமாகவே கருதப்படும்.


யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம்[ BBC தமிழோசை ]

ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளிடக் கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணியொன்றை நடத்தியுள்ளது.சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு சாட்சியமளிக்கும் சாட்சிகளுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்தப் பேரணி கோரியிருக்கின்றது. [  full story]

தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கமும் தயங்குகிறதா?[ BBC தமிழோசை ]

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கமும் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்த் தலைவர்களை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.’…நாட்டில் ரகசிய முகாம்கள் ஏதும் இருந்தால் அவற்றை மூடிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்கமுடியும்’ என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் நியுயோர்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. [ full story

Advertisements