விஜய் ரீவி ஈழத்தமிழர்களை ஏமாற்றி விட்டதா ?

super-singer-junior-4பிறேம் கோபாலும் – ஜெசிக்காவும் விஜய் ரீவியும்…

கனடாவில் இருந்து சூப்பசிங்கர் பாடல் போட்டிக்கு சென்ற ஜெசிக்கா வாக்களிப்பில் வென்றிருக்கலாம் அதை விஜய் ரீவி இருட்டடிப்பு செய்துள்ளது என்று பலர் முக நூலில் எழுதி வருகிறார்கள்.

முன்னைய காலங்களில் வாக்களிப்பை அறிவித்த விஜய் நிறுவனம் இம்முறை மட்டும் அதை அறிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேநேரம் போட்டி முடிந்து இரண்டு மணி நேரம் கடந்தும் முடிவு வெளிவராமல் தாமதமானது, நடுவர்கள் இன்னமும் முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறார்கள் என்று அறிவிப்பாளர் பாவனா சொன்னதும் இந்தச் சந்தேகத்திற்கு உதாரணமாக இருக்கிறது.

முதலில் ஆறு கோடி வாக்குகள் என்று அறிவித்த பிரியங்கா பின்னர் தான் அதை விளையாட்டாகக் கூறியதாகவும், உண்மையான வாக்குகள் ஒன்றரைக் கோடியே என்றும் கூறியிருந்ததும் அடுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைவிட பெரிய தவறு ஒருவர் மின்னஞ்சல் மூலமாக 500 வாக்குகள் அளிக்கலாம் என்று கூறப்பட்டதாக முக நூல்களில் ஒரு பிரச்சாரம் நடந்துள்ளது.

இணையத்தில் ஒரு தனியான நிகழ்ச்சித்திட்டம் இருக்கிறது, இதன் மூலம் பல இலட்சக்கணக்கான மின்னஞ்சல்களை வேகமாக அனுப்ப முடியும்.. இதை விஜய் டி.வி நிர்வாகத்தால் பிரித்தறிய முடியுமா..?

இவைகள் தொழில் நுட்பக் கேள்விகளாகும்…

இரண்டாவது ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல் பரிசு கொடுப்பதற்கு ஏதாவது தடையிருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டியது..

முன்னர் நாளைய பிரபுதேவா நிகழ்ச்சியில் முதலிடம் வரவேண்டிய பிரேம் கோபாலை இதே விஜய் டி.வி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளியிருந்தது, அவரும் ஈழ உணர்வை தனது நடனத்தில் கொண்டு வந்திருந்தார்.

இப்போது ஜெசிக்காவும் இறுதிச் சுற்றில் அதே வேலையை செய்திருந்தார்.. எனவே முடிவில் பிரேம்கோபாலுக்கு செய்ததையே ஜெசிக்காவுக்கும் விஜய் டி.வி செய்ததா என்பது அடுத்த கேள்வி..

தற்போதைய அரசியல் உளவியலில் இந்தியாவின் கொள்கைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரத்திற்கு மேல் போகவிடக்கூடாது என்ற விதிகள் ஏதாவது இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரிய விடயமாகும்.

அதேவேளை பாடல் திறமைக்கு பரிசா இல்லை வாக்குகளை பெறக்கூடிய செல்வாக்கிற்கு பரிசா என்று பார்த்தால் பரத், ஸ்ரீஷா, அனுசியா போன்ற பிள்ளைகள் கவலையடைய வாய்ப்புள்ளது, வாக்களிப்பு திறமைக்கு சவாலாக மாறியுள்ளது.

தான் வெற்றிபெற முடியாது என்ற தளர்வு பரத்தில் காணப்பட்டது, அந்தச் சிறு பிள்ளைகளும் இத்தகைய மடைத்தனமான போட்டி முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளை இதுபோன்ற உளவியல் சிக்கலுக்குள் மாட்டுப்பட வைக்காமல் இருப்பது மிக முக்கியம், மேலை நாடுகளில் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

தென்னாசிய நாடுகளின் பாPட்சை முறை தவறு போன்றதே சூப்பசிங்கர் போட்டித் தவறுகள், மத்தியஸ்தர்களாலும் சரியாக செயற்பட முடியாது.

தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியபோது ரி.எல்.மகாராஜன் ஓடி வந்து வாழ்த்துக் கூறினார் ஆனால் அந்தப்பாடலின் முக்கியமான சொற்களை ஹரிப்பிரியா பிழையாக உச்சரித்ததை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை..

விஜய் ரீ.வி தனது இருத்தலை காக்கவே முயலும், திரை மறைவில் அதற்குள்ள அழுத்தங்கள் முகநூல்களில் தெரிய வாய்ப்பில்லை..

சில விடயங்கள் இலங்கைத் தமிழரால் இந்தியாவில் செய்ய முடியாது.. ஏன்.. “வரும் ஆனால் வராது..” என்பது போல இதை புரிவது மிகக்கடினமே..

ஒன்று பங்குபற்றக் கூடாது.. பங்குபற்றினால் இதுதான் நடக்கும் நமக்குக் கவலையில்லை என்ற உறுதியுடன் பங்கு பற்றுவது நலம் தரும்..

யாராக இருந்தாலும் இந்த விடயத்தில் பொறுப்பற்று நடந்து சிறு பிள்ளைகளின் மனங்களை சீரழித்துவிடக்கூடாது, இது அனைவருக்கும் பொருந்தும்.

இவ்வளவு கூச்சலிடும் முகநூல் நண்பர்கள் பிரேம்கோபாலை தீர மறந்துவிட்டார்களே.. எப்படி.. அதுபோலத்தான் நாளை இன்னொரு ஈழப்பாட்டு கேட்டதும் ஜெசிக்காவை மறந்துவிடும் நமது முக நூல்கள் என்பதும் தெரிந்ததே.

நம்மைப்போல மறதி கூடிய இனம் எங்காவது இருக்கிறதா..?

எண்ணெயுடன் தண்ணியைத்தான் எப்படித்தான் சேர்த்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி.. பாடல்

அலைகள் சினிமா 22.02.2015

**

முதன் முதலாக சூப்ப சிங்கர் இறுதிப்போட்டிக்கு போன ஈழத் தாரகை..

நேற்று நடைபெற்ற சூப்பசிங்கர் போட்டியில் வென்ற கனடா ஈழத் தமிழ் சிறுமி ஜெசிக்கா தனது பரிசை தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும், ஈழத்தில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கும் தாரை வார்த்திருப்பது தமிழகத்தில் கல்லான மனங்களையும் கசிய வைத்துள்ளது.

பேஸ்புக் இருப்பதால் ஜெசிக்காவை தாக்கி எழுதிய வெப்பியாரம் கொண்ட புலம் பெயர் தமிழர்கள் சிலருக்கு தகுந்த பதிலையும், இனியாவது பொறுப்பற்ற வேலைகளை செய்யாதீர்கள் என்ற சவுக்கடியையும் இந்த நிகழ்வு போட்டுள்ளதாகவும் பலர் கருத்துரைத்துள்ளனர்.

இது குறித்து தற்ஸ்தமிழில் வந்துள்ள செய்தி..

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற “ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4″ நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா.

ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்..

கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது உறுதி.

கண்ணீர் மழையில் கரைந்த இதயங்கள்: ஈழத் தமிழர்களின் தேசிய கீதமாக போற்றப்படுகிற “தோல்வி நிலையென நினைத்து” என்ற தன்னம்பிக்கை கலந்த பாடலையும், ஈழத் தமிழரின் துயரம் தோய்ந்த வலியை வெளிப்படுத்தும் “விடை கொடு எங்கள் நாடே” என்ற உருக்கமான பாடலையும் ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடி முடித்தபோது நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் உட்பட அரங்கத்தில் குவிந்திருந்த அனைவரும் கண்ணீர் மழையில் நனைந்திருந்தனர்.

உள்ளார்ந்த வலியை உணரவைத்த பாட்டு: நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருடைய பாடலுக்கு கைத்தட்டலை அளித்தனர். அப்பாடல் மூலமாக ஈழத் தமிழர்களின் உள்ளார்ந்த வலியின் தாக்கத்தினை ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விதைத்துள்ளார், ஜெசிக்கா.

தமிழர்கள் ஒன்றுதான்:

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தனுஷ், “தமிழர்கள் எல்லாரும் ஒன்றுதான். அவர்களுடைய வலிகளை நான் பிரித்துப் பார்ப்பதில்லை.

மகத்தான விஷயம்:

ஆனால், இந்த சிறுவயதில் அங்கு நின்று கொண்டு அவர்களின் வலி, வேதனை, ஓலம் பற்றியெல்லாம் பகிர்ந்துக் கொள்கிறாய். நீ எவ்வளவு பெரிய, உன்னதமான விஷயம் செய்திருக்கின்றாய் என்பது உனக்கு தெரியாது” என்று மனம் கசிந்த நிலையில் தெரிவித்தார்.

தமிழர்களை உயர்த்திய ஜெசிக்கா:

மக்களின் பலத்த கரகோஷத்திற்கிடையில் வெளியான முடிவுகளில் குட்டிக் குழந்தையாய் பாடிய ஸ்பூர்த்தி முதலிடம் பெற்றார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்து 1 கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா தமிழர்களே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வகையில் ஒரு காரியம் செய்தார்.

தமிழ்க் குழந்தைகள் வாழ்வு மலர:

தனக்கு பரிசாக வழங்கப்பட இருக்கின்ற 1 கிலோ தங்கத்தை தமிழகம் மற்றும் ஈழத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிப்பதாக தன்னுடைய தந்தை சார்பில் தெரிவித்து எல்லோரையும் உருக வைத்து விட்டார்.

முதலிடமோ, இரண்டாம் இடமோ பெரிதல்ல… அதன் பலனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில் நம்மைப் போன்றவர்களே செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை செய்து எத்தனை, எத்தனையோ கோடி உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் ஜெசிக்கா.

நாமும் வாழ்த்துவோம்:

ஜெசிக்கா என்றால் கடவுளின் குழந்தை, செல்வம் என்று அர்த்தமாம்.

அப்படித்தான் தனக்கு கிடைத்த செல்வத்தை ஏழைக்குழந்தைகளுக்கு அதுவும் கொடூரப் போரில் பெற்றோரை இழந்த ஈழத் தமிழ்க் குழந்தைகளான தன்னுடைய உறவுகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து நிஜமாகவே கடவுளின் குழந்தையாக மாறிவிட்டார் ஜெசிக்கா…

கண்கள் கலங்க…வணங்குகிறோம் ‘தமிழச்சி’ ஜெசிக்கா!

அலைகள்

Advertisements