ஐ.நா.வும் தமிழர்களுக்கான நீதியும்

தமிழ் மக்கள் காலம் காலமாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதி வேண்டி காத்திருக்கின்றார்கள். நீதி வேண்டிக் காத்திருத்தல் என்பது அதிகம் நம்பிக்கைகளினால் நிறைந்தது. ஆனால், அந்த நம்பிக்கைகள் பொய்த்து காத்திருத்தல் கொடும் கனவாக மாறிய வரலாறுகளே தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருக்கின்றன. அப்படியான தருணமொன்றை நோக்கியே தமிழ் மக்கள் நகர்த்தப்படுகின்றார்கள். இப்போது நம்பிக்கையின் அளவு அவ்வளவு அதிகமாக இல்லாததால் ஏமாற்றத்தின் அளவு அவ்வளவுக்கு பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.uno dead org

இலங்கையின் இறுதி மோதல்களின் போது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணையையும் அது தொடர்பிலான முன்னெடுப்புக்களையும் அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அந்த விசாரணையோ, அதற்கான முன்னெடுப்புக்களோ அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினால் உள சுத்தியோடு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, தமக்கு இசைவற்ற இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் கருவியாகவே அதனை முன்வைத்தன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு தமக்குச் சார்பானவர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஐக்கிய நாடுகள் விசாரணை மற்றும் அது சார்ந்த விடயங்களைக் கைவிடுவதற்கான முனைப்புக்களில் ஈடுபடுவது எதிர்பார்த்ததுதான்.

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த திங்கட்கிழமை (பெப் 16, 2015) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒத்திவைப்பானது ஒரு முறை மாத்திரமே நிகழக்கூடியதென்றும் விசாரணை அறிக்கை இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் அறிவித்திருக்கின்றார்.

‘இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம். முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க எனக்கு இது உதவும். ஐக்கிய நாடுகளின் முன்னைய மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளை அவர்களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று கூறியுள்ளனர். இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சியம் வழங்கியவர்களும் இந்த காலநீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விசயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பலமான குரலாக நாம் ஒலிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது’ என்றிருக்கிறார் ஷெயிட் ராட் அல் ஹூசைன்.

ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு தொடர்பிலான ஷெயிட் ராட் அல் ஹூசைனின் மேற்கண்ட பதில், கேள்விகளுக்கு அப்பாலானது என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் அமைந்துள்ளது. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே தாய் நாட்டினை மீட்டுத் தந்த இராணுவத்தினரையோ, தளபதிகளையோ தண்டிப்பதற்கான சந்தர்ப்பங்களை என்றைக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டுத்தான் மைத்திரிபால சிறிசேன களம் கண்டார். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்திய பொது எதிரணியும் அது தொடர்பில் தெளிவாக அறிவித்திருந்தது.

அத்தோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையொன்றுக்கு ஒத்துழைக்க முடியாது. அதற்கு இலங்கையின் இறைமை அனுமதிக்காது என்றும் அறிவித்திருந்தது. அதுபோக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் வழங்கும் உரோம் சட்டத்திலும் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை. அப்படியான நிலையில், ஷெயிட் ராட் அல் ஹூசைன் சொல்வது போன்றதொரு நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. மாறாக, விசாரணையையும், அது தொடர்பிலான அறிக்கையும் நீர்த்துப்போகச் செய்யும் வாய்ப்பையே இந்தக் கால நீடிப்பு வழங்கும் என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.

‘இலங்கைத் தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாசைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன. எமது நிலை, விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில் பலரின் உதைக்கும் எதிர் உதைக்கும், எறிவுக்கும் எதிர் எறிவுக்கும் ஆளாகி வருகின்றது.’ இது, கடந்த வாரம் வடக்கு மாகாண சபையில் ‘இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைகளே’ என்கிற தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தது. கடந்த வாரப் பத்தியிலும் இதனைக் கோடிட்டிருந்தேன். இப்போதும் அதனை கோடிடவேண்டியிருக்கின்றது. ஏனெனில், உதைபடும் பந்தாக எம்மை உணரும் சந்தர்ப்பமொன்றின் உச்ச கட்டமொன்றில் இப்போது இருக்கின்றோம். ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்தி வைப்பு அதனையே பிரதி பலிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையை வரும் மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிடப்படக்கூடாது என்பதில் இலங்கையின் புதிய அரசாங்கம் பெரும் முனைப்போடு செயற்பட்டது. அதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியையும் சந்தித்திருந்தார். அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார். ஆறு மாதங்களுக்கு அந்த அறிக்கை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், உள்ளக விசாரணைக்கான பொறிமுறை குறித்து புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தலொன்று இன்னும் மூன்று மாதத்துக்குள் வரவுள்ள நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கம் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான உள்ளக விசாரணையை முன்னெடுக்கும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதுவும், சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆணி வேரிலேயே அறுப்பைச் செய்யக் கூடிய விசாரணையொன்றை அதே சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். குற்றவாளிகளைக் காப்பாற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய கடப்பாடு இருக்கின்றது. அதுதான், அவர்களை சிங்கள மக்களிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கும். அப்படியான நிலையில், வெளிநாட்டு நிபுணர்களையோ, ஐக்கிய நாடுகளையோ நேரடியாக விசாரணைகளுக்காக களம் காண அனுமதிக்கும் வாய்ப்புக்கள் இல்லை.

இன்னொரு விடயத்தையும் அவதானிக்க முடிகின்றது. இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட்டால் அது, மஹிந்த ராஜபக்ஷ சார்ப்பு சிங்கள பௌத்த தேசியவாதிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கலாம். நியாயமான விடயங்களை விசாரணையாளர்கள் அறிக்கையில் கோடிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் அது, இலங்கையில் தாம் திட்டமிட்டு உருவாக்கிய தம் சார்ப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்திவிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கருதியிருக்கலாம். அதுவும், விசாரணை அறிக்கை ஒத்திவைப்புக்கு காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமக்கு சார்பற்ற அரசாங்கமொன்று இலங்கையில் இருந்தது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் உணர்ந்திருக்கின்றன. அப்படியான நிலையில், அவ்வாறனதொரு அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான சூழ்நிலையை எந்தவொரு தருணத்திலும் அனுமதிக்காது. அதனை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வாலின் இலங்கை விஜயமும் உணர்த்தியது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, அவர் முன்வைத்த விடயங்கள், இலங்கையின் புதிய அரசாங்கத்தை தக்க வைப்பதற்காக எவ்வளவு விட்டுக் கொடுப்புக்களையும் செய்வதற்கு அமெரிக்கா தயார் என்பதான செய்தியைச் சொல்லியிருந்தது. அப்போதே, இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படமாட்டாது என்பது தெளிவாகிவிட்டது.

ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு விடயத்தை(யும்) முன்வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும். ஏற்கெனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்து அரசாங்கம் செய்த ஊழல்களை மெல்ல மக்களுக்கு காட்டி வருகின்றது. ஊழல்களுக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்தாமல் சரியான கால இடைவெளியில் தேர்தல் காலம் நெருங்க நெருங்க அதனை வெளிப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்க நினைக்கின்றது.

அதனையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிக கச்சிதமாக முன்னெடுக்கின்றார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு நிறைவேற்று நாடாளுமன்றம் அமைக்கப்படும் போது, தனிப்பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை அமைப்பதே தன்னை நிலைபெற வைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருக்கின்றார். அதற்கான ஒத்துழைப்பையே ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பினூடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் வழங்கியிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தான், ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் என்ன கருத்தை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அல்லாடுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒத்திவைப்பு என்பது கவலையோ, மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்றிருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு மகிழ்வளிக்கவில்லை என்றிருக்கின்றார். ஆனால், அந்த கால எல்லை புதிய ஆதாரங்களை விசாரணை அறிக்கையில் சேர்க்க உதவக்கூடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, ‘விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வந்து நேரடியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.’ என்று வலியுறுத்தியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் ஓரளவுக்கு தெளிவாக இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சர்வதேச அரசியலுக்குள் சிக்கிவிட்ட தமிழ் மக்களுக்கு இலகுவாக கிடைத்துவிடாது. ஆக, இவ்வாறான சர்வதேச மாயைகளுக்குள் அதிகம் நம்பிக்கை கொள்ளாமல் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை நாமே எடுக்க வேண்டும் என்பதே அது.

-புருஜோத்தமன் தங்கமயில்

Advertisements