தனது வாழ்நாளையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த உன்னதர் வீ.கனகசுந்தரசுவாமி

வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் பிரிவு மக்களை மிகுந்த வேதனைக்குள் தள்ளியுள்ளது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.suntharasuvami

மறைந்த வீ.கனகசுந்தரசுவாமி தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி, தன்னுடைய வாழ்நாளையே சமூக சேவைக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்த ஒரு உன்னதமான செயற்பாட்டாளர் தனது இறுதிக்காலம் வரையில் கொடூர நோய்ப்பிடியின் மத்தியிலும் தளராது உழைத்த ஒப்பற்ற பணியாளர் அவர்.

கிராம அலுவலர் என்கின்ற மக்கள் பணியின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடமையாற்றிய அவருடைய நேர்மையான அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பிரதிபலனாகவே மக்கள் அவரை மாகாணசபை உறுப்பினராக்கியிருந்தனர்.

போர்க்காலங்களில் மக்கள் இடப்பெயர்வுகளின் போதும் அதன் பின்னான காலங்களிலும் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வின்றி கடமை புரிந்த ஒரு சிறந்த சமூகப் பணியாளராக விளங்கிய அவர் நியாயம் என்ற ஒன்றுக்காக துணிந்து நின்று குரல் கொடுக்கும் அசாத்திய துணிவுபெற்ற ஒருவர் என்பதை நாங்கள் நேரடியாக கண்ணுற்றிருக்கிறோம்.

வடக்கு மாகாணசபை உறுப்பினராக பதவி ஏற்ற பின்னரும் ஆடம்பரமில்லாமல் விளம்பரம் இல்லாமல் மக்களுக்காக அவர் பணியாற்றியிருந்தார். கிராம அலுவலாக இருந்த காலப்பகுதியிலும் அதன் பின்னரும் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் பல்வேறு பொது அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி செயற்பட்டதுடன் சமூகத்தின் முன்மாதிரியாகவும் விளங்கியிருக்கின்றார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாரின் துயரில் பங்கேற்பதுடன் அவர் விட்டுச்சென்ற பணியினை மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

Advertisements