அமெரிக்காவின் நகர்வு நல்லிணக்கத்துக்குச் சவால்!

கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முற்றாகவே மாற்றி அமைத்திருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கையுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான எல்லா நகர்வுகளையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.srilanka america

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விவகாரம் அல்ல.

ஏனென்றால் 2001ம் ஆண்டு பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் அமெரிக்கா எந்தளவுக்கு இறுக்கமான உறவை வைத்திருந்ததோ அதேபோன்ற ஒரு உறவுதான் இப்போதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சில ஆண்டுகளாக அமெரிக்க – இலங்கை உறவுகள் சீர்கெட்டுப் போயிருந்தன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்கள் முன் கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஒரு தடங்கலுக்குப் பின்னர் ஆற்றுநீர் எந்தளவுக்கு வேகமாகப் பாயுமோ அதுபோலவே மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஏற்பட்டுள்ள தடைகளுக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்று ஐந்து வாரங்கள் தான் நிறைவடைந்திருக்கின்றன. அதற்குள்ளாகவே அமெரிக்கா இலங்கை உறவுகளில் பெரியளவிலான திருப்பங்கள் நெருக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இது இந்திய – இலங்கை உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கத்தை விடவும் அதிகமானதாகவே காணப்படுகிறது.

மங்கள சமரவீரவின் இந்தியப் பயணம் மட்டுந்தான் இதுவரையில் இந்தியாவுடனான உறவுகளில் நடந்திருக்கிறது. இன்று தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதுடில்லிப் பயணம் நடக்கவுள்ளது.

இதன் பின்னர் தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என்பது வேறுவிடயம்.

ஆனால் அமெரிக்க – இலங்கை உறவுகளைப் பொறுத்தவரையில் அதற்கு அப்பால் இருதரப்பு பயணங்களும் நடந்திருக்கின்றன. அதுபோலவே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பல நிகழ்வுகளும் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய, ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் கலந்து கொண்டிருந்தார்.

இது சம்பிரதாயபூர்வமானதாகவே இருந்தாலும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பங்கேற்புகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆர்வம் காட்டியதும் இல்லை.

இலங்கைத் தூதரகம் அவர்களை வரவேற்பதற்கு முக்கியதுவம் கொடுத்ததுமில்லை. அதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேசியிருந்தார்.

இது இருதரப்பு உறவுகளை மேலும் நெருக்கமடைய செய்திருந்த நிலையில் கடந்த ஐந்தாம் திகதி வொஷிங்டனில் இலங்கை தூதரகத்தினால் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த வரவேற்பு உபசார நிகழ்வில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதி இராஜாங்கச் செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவி இராஜாங்க செயலர் அதுல் கெசாப் மற்றும் யு.எஸ்.எயிட் உள்ளிட்ட இலங்கையுடன் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இவர்கள் மத்தியில் இன்னொரு ஆச்சரியத்துக்குரிய அதிகாரியும் காணப்பட்டிருந்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவரான ஸ்டீபன் ஜே ராப் தான் அவர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் நிபுணரான அவர் தான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியாக இருந்து வந்தவர். அவர் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்திய சந்திப்புக்கள், மேற்கொண்ட விசாரணைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை நினைவிருக்கலாம்.

அவரும்கூட இலங்கைத் தூதரகத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது எதிர்காலத்தில் போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் விவகாரங்களில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த ஐயப்பட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை இந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் எல்லா வழிகளிலும் இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தது பொருளாதாரம் வர்த்தகம் என்று எல்லாவற்றையும் தான். அதில் மனித உரிமைகள் விவகாரத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுப்படுவதற்கான உதவியும் உள்ளடங்கியிருந்தது.

இதையடுத்து வொஷிங்டன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி உள்ளிட்ட அதிகாரிகளுடம் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசுடனும் அவர் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

இந்தப் பேச்சுக்களின் போது அவர் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை தாமதிக்குமாறு வொஷிங்கடனில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையில் கடந்தபுதன்கிழமை உரையாற்றிய போது மங்கள சமரவீர பகிரங்கமாகவே கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கை அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்பின் போதும் முன் வைக்கப்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றும் அது பற்றிய விபரங்களைப் பின்னர் தருவதாகவும் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென்பசாகி கூறியதாக இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது தகவல் வெளியாகியிருக்கிறது.

எவ்வாறாயினும் ஐ.நாவின் விசாரணை அறிக்கையைப் பிற்போடும் விவகாரத்தில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றே எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அறிகுறியைப் பிற்போடும் விடயம் தொடர்பாக , இலங்கை அரசாங்கத்துக்கு முன்னதாகவே பிரஸ்தாபித்தது அமெரிக்காதான்.

கொழும்பு வந்திருந்த போது, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

எனவே, மங்கள சமரவீரவின் கோரிக்கைக்கு ஜோன் கெரி சாதகமான பதிலைக் கொடுத்திருப்பார் என்று உறுதியாக எதிர்ப்பார்க்கலாம். இது தமிழர்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றமளிக்கும் விடயம் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இலங்கையிட்ம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

வர்த்தகம், பாதுகாப்பு, இராஜதந்திர உறவுகள் என்று விரிவானதும் பரந்துப்பட்டதுமான தளங்களில், இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், எதற்காக இலங்கையை அரவணைக்க வேண்டும் என்பதுகு றித்து அமெரிக்க ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதுசார்ந்த அமைப்புகளால் அதிகளவிலான கட்டுரைகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இவற்றில் இலங்கை மீதான அழுத்தங்களை குறைந்து புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பது உறுதியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்படுவதற்கு ஆதரவாக முழுஅமெரிக்காவும் நிற்பதாகவே ஊடகங்கள் உணர்த்தி நிற்கின்றன.

இது இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கிடைத்துள்ள சாதகமானதொரு விடயம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

புதிய அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை எந்தளவுக்கு உறுதியாகவும், நேர்மையாகவும் நம்பகமாகவும் முன்னெடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவ்வாறு நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாது போனாலும்கூட முன்னரைப் போன்று இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கம் என்று எதிர்பார்க்க முடியாத நிலையையே இப்போதைய அமெரிக்க இலங்கை உறவுகளில் போக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் தனக்குச் சாதகமாக அரசாங்கம் ஒன்றை நிறுவுவதில் தான் அமெரிக்கா ஆர்வம் காட்டியது.

அதற்காக ஒரு கருவியாகவே தமிழர்களின் பிரச்சினைகளையும், போர்க்குற்ற விவகாரத்தையும் அமெரிக்கா கையாண்டிருகிறது.

இப்போது, அமெரிக்காவுக்குச் சாதகமானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கடப்பாடு தான் அதற்கு முக்கியமானதாக – முன்னுரிமையான விடயமாகத் தெரிகிறது.

இலங்கையுடன், பரந்துப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் அமெரிக்கா, எதிர்காலத்தில் மனித உரிமை விவகாரங்களை முன்னிலைப்படுத்தி அழுத்தங்களைக் கொடுக்கும்என்ற மிகையான எதிர்பார்ப்பை தமிழர்கள் கொண்டிருக்க முடியாது.

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எந்த அமெரிக்கா, சிம்ம சொப்பனமாக விளங்கியதோ, அதே அமெரிக்காதான், இப்போது நெருங்கிய நண்பனாகவும் மாறி வருகிறது. இந்த மாற்றம் ஜெனீவாவில் நீதியைக் கோரும் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவாகவே அமையக்கூடும்.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கு உலகின் வேறு பல நாடுகளுக்கும், இலங்கையில் உள்ள சிங்கள முஸ்லிம் மக்களுக்கும், நன்மையைக் கொடுத்திருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் அநீதிகளை எதிர்கொண்ட தமிழர்களின் நீதியைத் தேடும் பயணத்திற்கு இந்த ஆட்சி மாற்றம் பாதகமாகத்தான் முடிந்திருக்கிறது என்ற கருத்தே வலுப்பெற்று வருகிறது.

இலங்கையில் நிலையான அமைதிக்கும், உறுதியான நல்லிணக்கத்துக்கும் இதுவும் ஒருவகையில் சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது.

சுபத்ரா

Advertisements