அண்மைக்கால அரசியலும் அணிதிரட்டலுக்கான அவசியமும்

வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் விடுதலைப்போரட்டத்தின் இரு பக்கங்கள், ஆனாலும் “விடுதலை” என்பது அதன் இறுதி வெற்றியாக இருக்க வேண்டும். இப்புவிதனில் பல விடுதலைப்போரட்டங்கள் நிகழ்திருக்கிறது , பல புரட்சிகள் நடந்தேறி இருக்கிறது. அவை வென்றும் இருக்கிறது, அடக்கப்பட்டும் இருக்கிறது. இது தொடர்பாக உலகுக்கு வரலாற்று ரீதியிலான பலமான பட்டறிவு இருக்கிறது. இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருந்தது மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டமை அல்லது சிறந்த தலைமைத்துவத்தால், அணிதிரட்டுனரால் அணிதிரட்டப்பட்டமை ஆகும். சமூக மாற்றங்கள், சமூக சீர் திருத்தங்கள் மக்கள் அணிதிரண்டமையால் ஏபடுத்தப்பட்டிருக்கிறது அல்லது அணிதிரட்டலால் சாத்தியமாகி இருக்கிறது. உலக சக்கரத்தில் புரட்சிகர மாற்றங்கள் யாவும் எழுச்சி கொண்ட மக்களாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.eelam_freedom

தமிழரின் உரிமைப்போராட்டம் பல உலக ஒழுங்குகளை கடந்து வந்திருக்கிறது, அதில் இரு துருவ ஒழுங்கு, ஒரு துருவ ஒழுங்கு என்பன மிகவும் தாக்கம் செலுத்திய செலுத்துகிற உலக அரசியல் முறைகளாகும். இருதுருவ ஒழுங்கின் போது உலகின் ஒரு பகுதி ஆதரவை பெற்று வளர்ச்சி பெற்ற போராட்டம் ஒரு துருவ ஒழுங்கில் 2009 ல் அடகப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை பலமிழக்க செய்ய ரஷ்ய கூட்டணியான இந்தியா தமிழர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கியது, அது இரு துருவ காலம். ஆனால் ஒருதுருவத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே போராட்டத்தை அடக்கின. 2009 இல் ஆயுத போராட்டம் அடக்கப்பட்டாலும் , தமிழர்களுக்கு அங்கிருந்து அரசியல் போராட்டதிற்கான சர்வதேச அரசியல் களம் திறக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் வரை மேற்குலகம் விடுதலை புலிகளை அழிக்க எந்தளவு முயற்சி எடுத்ததோ அதே போல் ஒரு நிலை இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்குலகம் மேற்கொள்ளவேண்டிய அரசியல் சூழல் முள்ளிவாய்க்காளுக்கு பின் ஏற்பட்டது. அது தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் அரசியல் செய்யகூடிய நிலையை, பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் தமிழ் தலைமைகள் வெளியாருகாகத் காத்திருந்து. வெளியாரால் கையாலப்படுபவர்கலாகக் காணப்பட்டார்களே தவிர இனத்தின் விடுதலை சார்ந்த அரசியலுக்கு உரிய அரசியலை செய்ய தவறி இருந்தார்கள் , அத்தோடு நின்றுவிடாது மேற்குலகம் அழிக்க நினைத்த அரசாங்கத்தைத் தமிழர்கள் தாங்களே அவர்களுக்காக அழித்தும் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல உலகின் பலமான புவிசார் அரசியலின் மையமாக காணப்படும் இந்து சமுத்திர ஆதிக்க போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் தேசிய இனமாக இருந்து, மகிந்தவை அரங்கில் இருந்து வெளியேற்றியதோடு இந்து சமுத்திர பிராந்திய அரசியலின் உலக ஒழுங்கையும் மாற்றி இருக்கிறார்கள். இது சரியா பிழையா என்பது கடந்த காலம் ? இந்த சூழலில் இருக்கும் சந்தர்ப்பங்களைப் பலமாக்கிகொள்வதில் தான் நிகழ் காலத்தின் எதிர் காலம் அடங்கி இருக்கிறது.

உள்ளூர் மட்டுமல்ல உலக அளவிலான அதிகாரப்போட்டியில் மற்றவரின் வெற்றியை தீர்மானிக்கும் பலசாலிகளாக இருக்கும் தமிழர்கள் எப்போது தமது அதிகார வெற்றிக்காக செயல்பட போகிறார்கள் ?

கள அரசியலை பொருத்தவரையில் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான உருப்படியான செயல்களையும் செய்யவில்லை அண்மையில் நிறைவேற்றிய இனப்படுகொலை தீர்மானத்தை தவிர. தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக வெளியாரின் நிகழ்ச்சி நிரலையே அவர்கள் செயல் படுத்தி வருகிறார்கள். இது ஒரு இன விடுதலைப் போரட்டத்துக்குக் கிடைத்த சாப அரசியல். ஈழத்தமிழரின் இருண்ட காலம் என்பது முள்ளிவாய்க்கால் அல்ல. அதற்கு பின்னரான ஜந்து ஆண்டுகால அரசியலே. வெளிச்சமான சந்தர்ப்பங்களைக் கைவிட்டதால் இது உருவானது.

இந்த இருண்ட காலத்திலும் மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள், அதுதான் மக்களின் எழுச்சி. காணாமல் போன உறவுகளுக்காக , தமது நிலங்களை மீட்பதற்காக , ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, வீதிகளில் இறங்கி போராடி இருகிறார்கள். போராடுகிறார்கள். அதற்காக அடியும் உதையும் , இரத்தமும் , சிறை வாசமும் பெற்றிருக்கிறார்கள். இதில் தமிழ் மக்களின் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு என்ன? எந்த போராட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அந்த மக்களுக்காக , அந்த மக்களோடு நின்று அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் வீதியில் நின்று போராடி இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி அதை செய்ய முடியாமல் போனது. இது மக்களுக்கும் மக்கள் பிரதி நிதிகளுக்குமான மிகப்பெரிய இடைவெளியை காட்டி நிற்கிறது. தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி இது தொடர்பில் சரியான குரலை பதிவு செய்திருக்கிறது. சில போராட்டங்களை ஒழுங்கமைத்து தலைமைதாங்கியும் இருக்கிறது. இப்போராட்டங்கள் வெற்றி பெறுகிறதா? என்பதற்கு அப்பால் சர்வதேச ஊடகங்களை , மனித உரிமை அமைப்புக்களை , மனித உரிமை ஆர்வலர்களை கணிசமான அளவு ஈர்த்திருக்கிறது. அதுவும் ஒரு வெற்றிதான்.

ஆனாலும் ஏன் இப்போராட்டங்கள் குறித்த கட்டத்துக்கு மேல் வளரவில்லை, எதிர்பார்க்கப்படும் அளவு இருக்கவில்லை என்றால் , அங்கே ஒரு மிகப்பெரும் பலவீனம் இருக்கிறது. அது என்னவென்றால் பாத்திக்கப்பட்ட மக்கள் மட்டுமே தமக்காக தாம் போராடுகிறார்களே தவிர மற்றவர்கள் அனைவரும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். இது ஒரு சமூகத்தின் உறங்கு நிலை. இத்தூக்கம் கலைக்கப்படவேண்டும். காணாமல் போனவர்களுக்காக அவகளின் உறவினரே போராடுகிறார்கள். நிலத்தை இழந்தவன் மட்டுமே அவனுக்காக போராடுகிறான். ஊடகவியலாளர் பாதிக்கப்பட்டால் அந்த குழுமம் மட்டுமே அவர்களுக்காக போராடுகிறார்கள். இது ஆபத்தான சமூக நோய் , இது முற்றி விட கூடாது. ஆக இந்நோய்க்கு அடிப்படையான காரணம் என்ன?

மக்கள் முறையாக அணிதிரட்டப்படாமை. ஈழமக்கள் இலட்சியத்தால் ஒன்றுபட்டவர்கள் ஏற்கனவே அணிதிரண்டவர்கள், முள்ளிவாய்க்கால் முற்றிலும் அவர்களை சிதற செய்திருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது அவர்கள் அதை வெளிப்படுத்த தவறுவதில்லை அதற்கு அண்மைய சான்றாக மாகாணசபை, மற்றும் சனாதிபதி தேர்தல் முடிவுகளை சொல்லலாம். அப்படி இருப்பினும் கட்டமைக்கப்பட்ட ஒரு தூர நோக்கு கொண்ட அரசியல் வேலை திட்ட அடிப்படையில் எந்த தலைமையாலும் அவர்கள் 2009 க்கு பின்பு அணிதிரட்டலுக்கு உள்ளாக்கப்படவில்லை. உரிமைக்காக போராடும் இனம் என்னும் வகையில் இது ஒரு மோசமான அரசியல் நிலை.

அணிதிரட்டல் என்பது புதிய சொல்லாடல் கிடையாது. ஆரம்ப காலத்தில் இருந்து மக்கள் கூட்டம், சமூக இனக்குழுமங்கள் இதை கையாண்டு வந்திருக்கிறார்கள். தனியனாக வாழ்ந்த மனிதன் என்று என்று குடும்பம் என்னும் சமூக முதல் அலகை உருவாக்கி கூடி வாழ ஆரம்பித்தானோ அன்றே அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றவும், பிரச்னையை எதிர்கொள்ளவும் ஒன்றாக சேர்ந்தனர். தாமாக அணி திரண்டனர். பின்னர் தலைவர்களால் அணிதிரட்டப்பட்டனர். பிரான்சிய புரட்சி, ரஷ்ய புரட்சி , அமெரிக்க புரட்சி , காலனித்துவத்துக்கு எதிரான சுதந்திர போராட்டங்கள் , மக்கள் அணி திரட்டலால் சாத்தியம் ஆனவை. இலக்குகளை நிறைவேற்றி கொள்வதற்காக மக்களை உணர்வூட்டி , விழிப்படைய செய்து , வலுவூட்டி , இலக்கு நோக்கிய நீரோட்டத்தில் உள்ளீர்த்து ஒன்று செற்பதையே அணிதிரட்டல் என்பதால் புரிந்து கொள்ளப்படுகிறது.

இச்செயற்பாடு மேல் இருந்து கீழ் நோக்கியதல்ல, மாறாக கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும், சமூகத்தில் அடிமட்டம் வரை இறங்கி வேலை செய்ய வேண்டும், கிராமம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் , இருக்கிற சிவில் சமூக அமைப்புகளோடு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டும். கூட்டங்கள் நாடத்தப்படவேண்டும். விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். குறித்த இலக்கை அடைவதற்காக மக்கள் பயிற்றுவிக்கபடவேண்டும். அதன் பின் மக்கள் தாமாகவே அணிதிரள்வார்கள்.

ஈழத்தைப் பொருத்தவரையில் எழுச்சிகள் ஆங்காங்கே தெட்டம் தெட்டமாக சிதறி தேங்கி கிடக்கிறது. அவை முதலில் ஒருங்கினைக்கப்படவேண்டும். அதன் பின் ஏனைய சக்திகள் ஒருங்கினைக்கபடவேண்டும். அண்மைக்காலமாக செயற்பட்டுவரும் சிவில் சமூக அமையம் தமிழ் மக்களின் சரியான பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. தமிழர்களுக்கான சிறந்த அரசியல் கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் கோட்பாடுகளோடு நின்றுவிடாது செயற்பாடுகளுக்கு முக்கியம் அளிக்க வேண்டும். அவர்கள் தங்கள் செயற்பாடுகளைக் கிராம மட்டங்களில் விரிவு படுத்த வேண்டும். களத்தில் மக்களைத் தமது பலமாக இன்னும் அதிகமாக உருவாக்கி கொள்ளவேண்டும்.

தமிழ் அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அவர்கள் மக்களை அணிதிரட்ட அஞ்சுவது அஞ்சுவது போல் ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது. அதனால் ஒரு இடைவெளியை அவர்கள் எப்போதும் பேணி வருகிறார்கள். இது ஒரு விதமான திருட்டு அரசியல் மக்களின் விருப்புகளுக்கு, அபிலாசைகளுக்கு மாறான இரட்டை தோற்ற அரசியலை செயும்போது அணிதிரட்டுவதால் தமக்கு தாமே அரசியல் வாழ்வுக்கு உலை வைப்பது போலாகிவிடும் என்னும் அச்சமே இதற்கு அடிப்படை காரணம்.

மக்களால் மக்களுக்கு என்று சொல்லப்படும் ஜனநாயக அரசியலில் மக்கள் சக்தியே மகேசன் சக்தி அவர்கள் இன்றி எதுவும் நடவாது. புரட்சிகர மாற்றங்கள் எழுச்சி கொண்ட மக்களாலேயே ஏற்படுத்தபட்டிருக்கிறது. உலக அரசியலின் ஒழுங்கு மாற்றங்களை நிர்ணயிக்கும் சக்தி பெற்ற தமிழ் மக்கள் முறையான இலட்சிய அரசியல் வேலைதிட்டதினூடாக அணிதிரட்டப்பட்டாலே ஒழிய வெளியாருக்காக காத்திருப்பதன் ஊடாக தேக்க அரசியலே மிஞ்சுமே தவிர வேறு எதையும் சாதித்து விட முடியாது.

– இளையவன்னியன்

Advertisements