தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்குமா?

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மாறி மாறி பதவிக்கு வரும் ரசாங்கங்களால் வெறுமனே கறிவேப்பிலைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்பதே பொதுவான அபிப்பிராயமாக உருவெடுத்துள்ளது.srilanka election tamils

அந்த வகையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடரபிலும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பிலும் அதிக கரிசனையை வெளியிடும் அரசியல் தலைவர்கள் தாங்கள் பதவிக்கு வந்த கையோடு அனைத்தையும் அடியோடு மறந்து விடுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களும் இவர்களை நம்பி நம்பியே ஏமாந்தவர்களாகக் காலத்தை கடத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் தமது எல்லையற்ற ஆதரவை வழங்கினர். அதுவே அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கும் காரணமாக அமைந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இதனைப் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

அவரது தோல்வியையடுத்து அவரது சொந்த இடமான மெதமுலனவுக்கு சென்ற சமயம் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழர்களும், முஸ்லிம்களுமே தன்னை தோல்வியடையச் செய்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் இல்லை. அவரது ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த சமயம் இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் வகைதொகையின்றி உயிரிழந்ததுடன் பல்வேறு மனித அவலங்களுக்குள்ளானமை சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. அந்த வடு அவர்கள் மனதில் இன்றும் மாறாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

அதேவேளை சிறுபான்மை இனங்களின் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டமை மற்றும் கடும்போக்காளர்களினால் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை என்பவை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் முன்னைய அரசின் மீதான வெறுப்புணர்விற்கு காரணங்களாக அமைந்தன. இதனை தமிழ் பேசும் மக்கள் சந்தர்ப்பம் பார்த்து தேர்தலில் சாதித்து விட்டனர். அதுவே புதிய அரசுக்கு அதிர்ஷ்டமாகவும் அமைந்து விட்டது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த யதார்த்தத்தை உணர்ந்தேனும் தமிழ் பேசும் மக்களின் நெருக்கடிகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளமையை நிராகரித்து விட முடியாது. அந்த வகையில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு விடயங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் குறைந்த பட்சம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தால் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் தீர்வை முன்வைக்க காத்திரமான முனைப்பெதனையும் காட்டவில்லை என்ற ஆதங்கம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இதனை வலியுறுத்தும் வகையிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் காணிகளைப் பறிகொடுத்தவர்கள் மீளக்குடியேற முடியாது வருடக்கணக்கில் கண்ணீர் சிந்தும் மக்கள் தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவையாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறனதோர் சூழ்நிலையில் வடமாகாண சபையில் கடந்த செவ்வாயக்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பலதரப்பட்ட விமர்சனங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றது இனப்படுகொலையே என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதனை அரசாங்கம் அவசர, அவசரமாக நிராகரித்திருந்தது.

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இனவாதத்தைப் போஷிப்பதாக அமைந்துள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். அவ்வாறு இனப்படுகொலை ஏற்பட்டிருந்தால் அதனைப் புலிகள் அமைப்பே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இறுதிக்கட்டப் போரின் போது புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியமையே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படக் காரணமென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனப்படுகொலை தொடர்பில் வடமாகாணசபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் புதிய அரசின் நல்லிணக்க செயற்பாடுகளை எந்த அளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிட முடியாது என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாக இந்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

வடமாகாணசபையைப் பொறுத்தமட்டில் மிகவும் அவதானமாகவே இந்தப் பிரேரணையை முன்நகர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவிதமான நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கில் அந்தக்கால கட்டத்தில் பிரேரணையை முன்வைக்காதது மாத்திரமன்றி புதிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் கூட்டமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளை வழமை போன்று கிடப்பில் போட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பிரேரணையை வடமாகாண சபை அரசுக்கு உணர்த்தும் வகையிலும் நிறைவேற்றியிருக்கலாம் என்ற கருத்துக்களையும் சகல ரப்பினரும் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும்.

இந்தப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல என்றும், இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான தீர்மானம் என்றும் கூறியுள்ளது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னருங் கூட தமிழ் மக்கள் எதிரநோக்கும் நெருக்கடிகளுக்கு ஆக்கபூர்வமான வகையில் எந்தவிதமான நிவாரணமும் இல்லாதிருப்பதும் தொடர்ந்தும் மக்கள் அவல வாழ்வுக்கு தள்ளப்பட்டிருப்பதுமே இந்தத் தீர்மானங்களுக்கான பிரதான காரணமென்பதையும் கூட்டமைப்பு விலாவாரியாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த பட்சம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் காணாமல் போனவர்களின் நிலைமையை தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும் . இல்லையேல் தமிழ் மக்களின் விரக்தியைப் போக்க முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும்.

உள்நாட்டு அரசியலிலும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி, தமிழ் மக்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை அடைவதையே ஒவ்வொரு தரப்பும் குறியாகக் கொண்டுள்ளன என்ற எண்ணமே தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்து போயுள்ளது. தமக்குத் தேவையான போது தமிழர் பிரச்சினையை கையிலெடுக்கும் தரப்புகள், பின்னர் தமக்குச் சாதகமாக நிலைமை மாறியதும் அதனைக் கைவிடும் போக்கையே கொண்டுள்ளன. இதற்கு வல்லரசுகளும் விதிவிலக்கல்ல. இதனால் தமிழ் சமுதாயமே பேரழிவுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

இந்த நிலைமை மாறாதவரை இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஓர் விடிவு பிறக்காது என்ற நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Advertisements