எந்தையும் தாயும் அவர் முந்தையரும் வாழ்ந்த மண்

பேரன்புக்குரிய சிங்கள மக்களுக்கு வணக்கம். உங்களையும் எங்களையும் பிரித்தாளும் இனவாத சக்திகளை முறியடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒருபோதும் நேரடியாக முரண்பட்டது கிடையாது.Sri-Lanka-war

மிக அன்னியோன்யமான உறவு இருதரப்பிட மும் இருந்துள்ளது. ஆயினும் இந்த நாட்டை ஆண்ட சிங்களப் பேரினவாதிகள் தங்களின் ஆட்சி நிலைப்பிற்காக தமிழர்களை விரோதிகளாகக் காட்டிக் கொண்டனர். அதனை நீங்களும் நம்பினீர்கள். போதாக்குறைக்கு தென்னிலங்கை ஊடகங்கள் இனவாதத்தை ஊதிப் பெருக்க வைத்தன. அரசியல்வாதிகளின் பதவி ஆசையும் ஊடகங்களின் உழைப்பும் இனவாதத்தை வளர்ப்பதன் ஊடாக அடையப்பட்டன.

இதனால் காலத்துக்குக் காலம் இனக் கலவரங் களை ஏற்படுத்தி தமிழ்-சிங்கள உறவு பிரித்தாளப் பட்டது. இத்தகையதோர் சூழ்நிலையில்தான் சிங்கள வர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தமிழ் இனம் முடிவு செய்தது. அந்த முடிவில் தமிழ் இளைஞர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். வெறி கொண்ட பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர் களை எப்படியும் கொன்றொழிக்கலாம் என்று தீர் மானித்தனர்.

அதன் விளைவு இலட்சக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் உயிரிழந்து போயினர். இத னிடையே இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையும் தமிழ் இனத்தைச் சங்காரம் செய்து தாய கம் திரும்பியது.

ஆக, இலங்கைத் தமிழ் மக்கள் இத்துணை பேர ழிவுகளைச் சந்திப்பதற்கு அவர்கள் செய்த குற்றம் தான் என்ன? தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப் புகள், சொத்தழிவுகள் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்திருப்பீர்களா? என்பது நமக்கு தெரியாதாயினும் உங்களிலும் சிலர் எங்களின் அவலம் பற்றி சிந்தித்தனர் என்ற உண்மையையும் இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும்.

எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உங்களில் பலர் அறியாமலும் இருந்திருக்கலாம். அல்லது எங் கள் இழப்புகள் பற்றி உங்களுக்கு வேறுவிதமான காட்சிகள் காட்டப்பட்டிருக்கலாம். என்ன செய்வது! உலகமயமாதல் என்பதற்குள் தமிழ் இனத்தின் விடு தலைப் போராட்டம் இருள் மயத்திற்குள் அமிழ்ந்து போக, தற்போது சம்பந்தர்; மைத்திரி என்று சொல்ல, நாங்கள் புள்ளடி போட்டு விட்டு இருக்கிறோம்.

அட, எங்களின் புள்ளடிக்கு நாங்கள் வாழ்ந்திருந்த ஆயிரம் ஏக்கர் காணியை மீளத்தருவதாக மைத் திரி ஐயா கூறியிருப்பதாக அறிகிறோம். வந்த மனுசன் ஆயிரம் ஏக்கர்களைத் தந்தார் என்று நிம்மதி அடையலாம் என்றால், அந்த ஆயிரம் ஏக்கரும் ஏற்கனவே மகிந்தனார் விடுவதற்குச் சம்மதித்த இடமாம். ஓகோ! ஜனாதிபதி மைத்திரியும் எங்களை ஏமாற்றுகிறாரோ தெரியவில்லை.

என்ன செய்வது! நம்பி ஏமாந்த தமிழினம் என் பதால், நாடு கேட்ட எங்களுக்கு எந்தையும் தாயும் அவர் முந்தையரும் வாழ்ந்த நிலத்தை தந்துவிட, எங்கள் அரசியல் தலைமைகளும் நாங்கள் கதைத் தோம்; அவர் சிரித்தார்; ஆயிரம் ஏக்கர் தருவதாகக் கூறினார்; மகிழ்ந்தோம்; இன்னும் முயற்சிப்போம். இப்படியாக எங்கள் அரசியல் தலைமை கூற, அதை நாங்கள் நம்பி காலன் வரும் வரை எங்கள் காலம் போகிறது.

அன்புக்குரிய சிங்கள மக்களே! இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவித்தது தொடர்பில் மகிந்த ராஜ பக்­ நிச்சயம் மாற்றுப் பிரசாரம் செய்வார். தன் னைப் பிரதமராக்கினால் ஆயிரத்தோடு ஐயாயிரம் சேர்த்து தமிழர்களின் ஆறாயிரம் ஏக்கர் நிலத்தை இன்னும் பிடிப்பேன் என்று மகிந்த கூறுவார். இது நடக்கும் சத்தியம் என்று விமல்வீரவன்ச முறுகுவார்.

தயவு செய்து இதை நம்பி விடாதீர்கள். சிங்களப் படை குண்டு எறிந்த போது நாங்கள் விட்டுவந்த எங்கள் வீட்டு நிலத்தை திரும்பப் பெறுவதையும் புரட்டிப் பிரசாரம் செய்வோர் மீது காறி உமிழ்ந்து விடுங்கள். அப்போது தான் தமிழ்-சிங்கள உறவு தழைக்கும்.

வலம்புரி