மகிந்த ராஜபக்சவின் மறுபக்கமே ரணில்?

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், வெளியாகிக் கொண்டு இருக்கின்ற நடவடிக்கைகள், அரசியல் மாறுதல்கள், நாட்டின் தலைவர்களின் கருத்துக்கள், இவை அனைத்தும் புரியாத புதிராகவே எம்மால் காணக்கூடிதாக இருக்கின்றது.mahinda vs ranil

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி நாம் நோக்கும் போது இது நான்றாகவே புரியக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான மக்கள் அலை வீசிய போது அரசியல் தலைமைகள் அதில் தந்தளித்துக்கொண்டு என்ன செய்வது, எந்த பக்கம் சாய்வது என்ற சிந்தனையே அவா்களிடம் மேலோங்கி இருந்தது.

அதே நேரம் சிறுபான்மை தமிழ் மக்களிடமோ, இந்த ஆட்சியில் பட்டதுயரங்கள், வேதனைகள், சோதனைகள், இழப்புக்களை இனியாவது குறைந்து வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

இதன் காரணமாக தமிழ் மக்கள் வசதி, பதவி, பட்டம், கிடைக்கும் என்று எண்ணவில்லை. வேண்டியது “நிம்மதியான வாழ்வு” “நிரந்தரமான சாமாதானம்” என்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள். இதை தமிழ் அரசியல்வாதிகள் அனுவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் இன்றுடன் 30 நாட்களுக்கும் மேல் கடந்து விட்டது. இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? ஏதோ வரும், ஆனால் வராது. நடக்கும் ஆனால் நடக்காது, கிடைக்கும் ஆனால் கிடைக்காது. என்ற பொம்மலாட்ட வித்தைகளையே அரசியல் அறிக்கை, தலைமைகளில் கருத்தாகி கொண்டிருக்கின்றது. அதையே நாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

சிங்கள தலைமைகளோ ஒன்றுப்பட்ட அவர்களின் சமூகத்திற்கு வேண்டிய ஒவ்வொரு தடைகள் இருந்ததை நிவர்த்தி செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் அரசியல் எதிரிகள் அல்லது எதிர்காலத்தின் அரசியல் பிரகாசத்திற்கான செயல்திட்டங்களில் காட்டப்படும் ஆர்வம், வாக்களித்து பிரச்சினைகளை பற்றி ஓரளவு கவனம் செலுத்துவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு வெறும் ஏமாற்றமே இன்று வரை.

இன்றும் கைதுகள் அதற்கு அரசு பக்கம் கூற அவிழ்க்கப்படாத பல கோடிகணக்கான காரணங்களும் விபரங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தயார் நிலையில் உண்டு.

இவைகள் தமிழ் மக்களுக்காகவே தயார் செய்யப்பட்டவைகளாகும் என எண்ணலாம். அதை ஏற்றுக்கொள்ளும் நிலையே எமது தலைமைகளாக இன்றும் உள்ளார்கள் மக்கள் சென்று முறையிட்டால் அதைப் பொறுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாது மக்களிடமே சட்ட விளக்கத்தை வழங்கும் நிலை இன்றும் நடந்து கொண்டு இருக்கின்றதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலையே.

தற்போதைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் யாவும் பேசும் போதும் கருத்துக்களை கூறும்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மறுநாள் அதை செய்ய முடியாமைக்கான காரணத்தை கூறும் போது வேதனை அளிக்கின்றது.

இந்த வகையில் கடந்த 30 நாட்களில் 15 நாட்கள் மகிழ்ச்சியான (ஒரு நாள் கழித்து மறுநாள்) செய்தி பிரச்சினைகள் தீர்க்கப் போகின்றது என்றும் மிகுதி 15 நாட்கள் தீர்க்கப் போகும் பிரச்சினைகளுக்கான தடையான செய்திகளும் வேதனையை அளித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

கொள்கை உரிமைக்கான அடித்தளம் சலுகை இது அரசியல் இலாபத்திற்கான அடித்தளம்.

நமது தலைமைகள் கொள்கையென ௬றும் போது நமக்கு உரிமை கிடைக்கப் போகின்றது. என எண்ணுகின்ற எண்ணம் வரும், இது அனைத்து தமிழ் இனத்திற்கானது என பெருமையடைகின்ற எண்ணம் வரும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த இருக்கும் தடையோ கால தாமதம் என்ற குழு அமைக்கும் திட்டம்.

நாம் பிரதமர் ரணிலிடம் இருந்து எதிர் பார்த்தது தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதையாவது ௬றவேண்டிய இடத்தில் ௬றுவார் என்று. ஆனால் அவரின் மௌனம் எமக்கு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துக் கொண்டு இருக்கின்றது.

இவரை நம்பி நமது கடந்த கால சகல சம்பவங்களும் ஏமாற்றம் அடைந்ததே அன்றி வேறொன்றும் இல்லை.

இன்று அதே நிலைத்தான் நமது அரசியல் தலைவர்கள் அனுபவசாலிகள்தான், சாணக்கியர்கள்தான், இதனால் என்ன பலன் பொதுமக்களுக்கு அவர்களின் மூலம் என்ன நன்மை கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

எம்மி்டம் பேசும் உணர்ச்சி மிக்க வார்த்தைகள் நாம் அவர்களை மதிக்கின்றோம், ஆதரிக்கின்றோம் ஏதோ ஓா் நல்லது நடக்கும் என்று ஆனால் இதுவரை அப்படியொரு நல்ல விடயம் நடந்ததா? தினமும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்தி கொண்டு இருக்கின்றோம்.

மனுக்களை எழுதி கொடுத்துக் கொண்டு கண்ணீரை விட்டு கதறுகின்றோம் இது தாய்மார்களின், சகோதரிகளின் அன்றாட நிகழ்வு இன்று வரை தொடா்கின்றது. அதனால் என்ன பலனை பெற்றுள்ளோம்.

காணாமல் போனவரை கண்டோமா? இழந்த சொத்துக்களை பெற்றோமா? கைதுகளை நிறுத்தினோமா? அல்லது இந்த அரசிலாவது எந்தவொரு கவன ஈா்ப்பு போராட்டத்திற்கான பதிலை கண்டோமா? இல்லை, எதுவுமே இல்லை.

நாமும் துடிக்கின்றோம், நமது தலைமைகளில் சிலரும் துடிக்கின்றார்கள். ஆனால் நமது கவனஈர்ப்பு போராட்டம் எந்த முடிவையும் இதுவரை கொடுக்கவில்லை.

நமது மக்களின் கண்ணீர், மறைந்த ஆத்மாக்களின் கருணையாலும் உலக நாடுகளில் பரந்து வாழும் உறவுகளின் துடிப்பாலும் சர்வதேசத்தின் சுய நலத்திலும் நமது பிரச்சினைகளுக்கு அனுதாபம் சிறிது சிறிதாக சிறு துளி பெரும் வெள்ளமாகும் என்ற நிலை இப்பொழுது உண்டாகி முழு உலகத்தின் கவனமும் திசையும் எம்மை நோக்கியுள்ளது.

இந்த சுப வேளையில் வரும் மார்ச் மாதம் ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணைக்கு ஓர் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை மலர்கின்ற வேளை இப்போதைய அரசு மாற்றத்தால் நமது பிரச்சினைகள் எல்லாம் மாறப் போவதாக ஏமாற்றும் வித்தையை மிகவும் கவனமாக நமது தலைமைகளை தமக்குள் வைத்துக்கொண்டே இந்த அரசு பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

இதில் மிக முக்கிய விடயமாக நான் கருதுவது என்னவென்றால், கடந்த 30 நாட்களில் அரசு அமைத்த “அதியுயர் சபை” என்ற சபையில் த.தே.கூ. மற்றும் மனோ கணேசன் இருக்கின்றார்கள்.

இவர்கள் இதுவரை ஏதாவது ஒன்றை (தமிழ் மக்களின் பிரச்சினைகளை) தீர்த்துள்ளார்கள் என்ற கேள்வி எமக்குள் தோன்றி மறைகின்றது. பதில்? இல்லை.

நாளாந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்து கூறி தீர்த்துள்ளார்களா? இல்லை.

உணர்ச்சி பூர்வமான அறிக்கையை மனோ கணேசன் வெளியிடுவதால் எந்த பிரச்சினை தீர்ந்துள்ளது. இவருக்கு மிக நெருக்கமானவர்களே ஜனாதிபதியும் இந்த பிரதமரும் 30 நாட்களுக்குள் என்ன செய்துள்ளீா்கள் ஒன்றுமே இல்லை என்பது தான் 30 நாட்களில் நீங்கள் செய்த பணி.

கடந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளிப்படுத்தினீர்கள் என்ற காரணமே நாங்கள் உங்களை நேசிப்பது. நீங்கள் ஒரு சாதனையாளர் இல்லை.

எமது பிரச்சினைகளை முன் நிறுத்தி நீங்கள் அரசியல் இலாபத்தை ஸ்தீரப்படுத்த முயற்சிக்கின்றீர்கள் என்ற ஒரு சந்தேகம்இப்பொழுது எமக்குள்தோன்றியுள்ளது. இது சம்பந்தன் ஐயாவிற்கும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பொது மக்களுக்கு பொருந்தாது.

கடந்த 30 நாட்களில் பிரதமர் ரணிலை எத்தைனை முறை சந்தித்திருப்பீர்கள். பொது மக்களின் எத்தனை பிரச்சினையை முன் நிலைப்படுத்தி தீர்த்துள்ளீர்கள்.

சிங்கள மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற நொண்டி சாக்கு போக்குகளை கூறும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு பாராளுமன்றம் செல்லவேண்டுமென்ற எண்ண வேண்டாம்.

உங்கள் மூலம் பொது மக்களுக்கு கடந்த 30 நாட்களில் என்ன நடந்தது என்பதே எமக்குள்ள நியாயமான கேள்வி?

நாம் உங்களின் அரசியல் நோக்கத்திற்கு தடையென எண்ண வேண்டாம். பல இளைஞா்கள் கைது இன்றும் தொடர்கின்றது. இதற்கு பொலிசார் கூறும் காரணங்களுக்கு நீங்களும் ஒத்து போகின்றீர்களா?

அதி உயர் சபையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி பேசப்படுகின்றது. ஆனால் அதே ஆட்சியில் நடந்த படுகொலைகள், பொய்யான வழக்குகள் போன்ற தமிழ் மக்களுக்கு நடந்ததை பற்றி வெளி கொண்டு வருவது உங்கள் கடமை அது மாத்திரமின்றி அதற்கான தீர்வும் அதில் இருக்க வேண்டும்.

நமது மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட உலக நாடுகளுக்கு புதிய அரசின் அமைச்சர்கள் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை புதிய அரசு செய்யப்போகின்றது.

அதற்கு ஆதரவாக சம்பந்தன், மனோ போன்றவர்கள் இருக்கின்றார்கள் என்று ௬ற உதவி செய்கின்றீர்களா என்ற எண்ணம் தற்பொழுது நம் மக்களிடையே வளரத்தொடங்கிவிட்டது.

முஸ்லிம் தலைவர்கள் கூட அவர்களின் காரியங்களை கச்சிதமாக செய்து வருவதை பார்க்கின்றோம்.

அவர்களின் கோரிக்கைகள் சலுகையை அடிப்படையாக கொண்டது. வியாபார நோக்கத்தை முழுமையாக கொண்டது. எரிகின்ற வீட்டில் கிடைத்தது ஆதாயம் என்ற நோக்கில் வரவு – செலவு, இலாபம் – நட்டம் என்ற நோக்கில் செயற்படுகின்றார்கள்.

அதன் மூலம் அவர்கள் இலாபத்தையே அடைந்து வருகின்றார்கள். இலாபத்தில் ஒரு சதத்தையாவது இழக்க விரும்பாதவர்கள் அந்த அரசியல் தலைமைகள் இன்றும் கிழக்கில் பெரும்பான்மை தமிழ் மக்களை கிழக்கில் சிறுபான்மையாக இருந்தும் முதலமைச்சர் பதவியை ஜனநாயக ரீதியில் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க மறுத்து தங்களின் அரசியல் இலாபத்தை பெறுகின்றார்கள்.

இந்த நிலையில் இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நமக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். ரணில் முன்னைய ஜனாதிபதியின் மறுபக்கம்.

.மகிந்தவிடம் அதை பெற்றோம். இதை பெற்றோம். என்பதில் எமக்கு அக்கறையோ அவசியமோ இல்லை. எமக்கு வேண்டியது எமது மக்களின் பொது பிரச்சினை தீர்வே. இதற்கு நீங்கள் திட்டமிட்டு செயற்பட்ட விடயங்கள் என்ன?

ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன செய்வார்கள் அதுதான் முக்கியம்.

மகிந்தவிற்கு சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ், முஸ்லிம், தலைவர்களும் ஆதரவு அளித்ததோடு அவர்களை சார்ந்தவர்களும் வாக்களித்தார்கள் என்பது உண்மை. அந்த அடிப்படையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் அவர் பெற்று தோல்வியை தழுவவில்லை.

அதேபோல் தனித்த தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவில்லை சிங்கள மக்களின் வாக்குகளுடன் தமிழ் மக்களின் வாக்குகளும் அவரின் வெற்றிக்கு அடித்தளம் இட்டது.

இந்த நிலையி்ல் இன்னும் நாம் என்ன செய்து சிங்கள மக்களின் மனதை திருப்திப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் சிங்கள பொது மக்கள்? இப்படி காலத்தை கடத்துவது சிங்கள தமிழ் அரசியல்வாதிகளேயன்றி, சிங்கள மக்கள் இல்லை.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே புதிய ஜனாதிபதிக்கு சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வாக்களித்துள்ளார்கள்.

மகிந்தவிற்கு அளித்த அத்தனை வாக்குகளும் தமிழ் மக்களுக்கு எதிரான வாக்கு என்ற பிரமையை ஏற்படுத்த வேண்டாம்.

சிங்கள மக்களில் 80 சதவீதமானோர் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க விரும்பும் மக்களே. எனவே ஜனாதிபதி அவர்களுடன் ரணில் விக்ரமசி்ங்க அவர்களும் இணைந்து செயல்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தற்போதைய ஜனாதிபதியால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவை ஏற்படுத்தலாம்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கவி ரும்பாதவர் என்பதில் முன்னாள் ஜனாதிபதியைபோல் காலத்தை வீணடித்து குறிப்பிட்ட காலவரைக்குள் தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களை அழித்து விடக்கூடிய ஆபத்து மிகுந்தவர்.

ஆகையால் இவரை ராஜபக்சவின் மறுபக்கமாகவே நாம் நோக்கவேண்டும். எனவே தமிழ்மக்கள் வாக்களி்த்து விட்டார்கள். தொடர வேண்டிய செயல்பாடுகளை அரசியல்வாதிகள் உண்மையாக உறுதியாக நேர்மையாக செய்து தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மகா

Advertisements