கூட்டமைப்பை பதிவு செய்ய ,வலுப்படுத்த வலுக்கின்றது கோரிக்கை!!

sampanthan_sumanthiran_mavaiதமிழ் தேசியக்கூட்டமைப்பினை கட்சியாகப்பதிவு செய்யவேண்டுமென்பதில் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள்ளும் குரல்கள் வலுத்துள்ளன. குறிப்பாக அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி அக்கறைகாட்டவில்லை என்று தமிழரசு கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவரும், பேராசிரியருமான சீ.கே. சிற்றம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் மூலமே தமிழ் தேசியத்துக்காக முன்னாள் தலைவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் அர்த்தமாக்கப்படும். ஆனால் இந்த விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சி அக்கறை இன்றி செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கூட்டமைப்பை பதிவு செய்யக் கோருவது ஆரோக்கியமான மாற்றம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று முன்னர் எதிர்த்தவர்கள், இப்போது பதிவு செய்யக் கோருவது ஆரோக்கியமான மாற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு அனைத்து உறுப்பினர்களும் முன்வந்துள்ளனர். இது எத்தகைய போக்கினை காட்டுகின்றது?, ஏன் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்? இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலபேருக்குள் ஏற்பட்டுள்ள கொள்கைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்புகின்றேன்.

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் ஒப்புதல் இன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒப்புதல் இன்றி சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதுடன், கட்சி சார்பான பல முடிவுகள் அவர்களினால் எடுக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எந்தவித பேச்சுமின்றி, தாங்கள் இருவரும் தனித்துவமான முடிவுகளை எடுக்கும் போக்கினை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாராளுமன்றக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தும், இருவரும் சென்றிப்பது தமிழரசுக் கட்சிக்குள் கொள்கை சம்பந்தமாக சில பிரச்சினைகளை உருவாக்கி இருக்கலாம். இந்த விடயம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளமையும் உண்மையான விடயம்.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதென்பது, ஒரு கட்டாயமான விடயம். சரியான வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை வழி நடத்த வேண்டிய தேவை வந்திருப்பதை தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களும் உணர்ந்துள்ளார்கள் என்ற அடிப்படையில் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

அண்மையில் தேர்தல் ஆணையாளரை சந்தித்திருந்த போது அவரும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய முடியும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கி தமக்கு தருமாறு கேட்டிருக்கின்றார்.

அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தரும் பொழுது, பதிவு செய்ய முடியுமென்றும், அவ்வாறு முடியாத பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கேட்பதும், தொடர்ந்து அவ்வாறு வைத்திருப்பதும் கடினமானது என்றும் தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையகத்தில் இருந்து நிர்ப்பந்தம் இருக்கின்றது. மறுபக்கத்தில் கொள்கை வழி நின்று கட்சியை அதாவது கூட்டமைப்பினை வழி நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அந்த இரண்டின் அடிப்படையில் பார்க்கும் போது, நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன், தமிழரசுக் கட்சிக்குள் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வந்திருப்பது ஆரோக்கியமான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், முன்வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம்.” என்றுள்ளார்.

**

சம்பந்தன், சுமந்திரனை விலக்கினால் கூட்டமைப்போடு இணையத் தயார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலக்கி புதிய தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணங்கியும், இணைந்தும் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபையில் இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான தீர்மானத்தை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். இதற்காக முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம்.

தமிழரின் அரசியலை முடக்க நினைக்கும் ஒரு சபையிலே, பெயருக்கு ஒரு தீர்வுத் திட்டம் என்ற நிலையில் இருந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கள் தேசிய அரசிலை ஒற்றையாட்சி முறைக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இதனை முதலமைச்சர் எவரின் அழுத்தங்களும் இன்றி எடுத்திருக்கிறார் என்பதை அவரின் உரை மூலம் உணர முடிந்தது.

எனினும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் ஒரு சந்தேகமும் உள்ளது. இன்னமும் நான்கு மாத காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இத்தகைய இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை அரசியல் நாடகம் இல்லையென நிரூபிக்க வேண்டும்.

அதுவும் எம்மைப் போன்று அவர்களுடன் கூடவே இருந்து அனுபவப்பட்டவர்களுக்கு கூறுவதாக இருந்தால் கூட்டமைப்பில் இருந்து இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் நீக்கப்பட வேண்டும். இதேபோல அவாகளின் கருத்துக்களுக்குத் தாளம் போடுபவர்களும் கூட கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவது அவசியமாகும். இந்த அப்படையில் நேர்மையாக செயற்படுகிறார்களா என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது.

இதனை புறம் தள்ளி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரிப்போம். இணைந்து செயற்படுவோம்.” என்றுள்ளார்.
– See more at: http://www.vannionline.com/2015/02/blog-post_873.html#sthash.Jt7g7ihc.dpuf

Advertisements