தமி­ழரைக் கைவி­டு­கி­ன்றது அமெ­ரிக்கா?

srilanka americaஇலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நகர்வுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்க, இந்திய, சீன நாடுகளுடனான இலங்கையின் உறவுகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் பாதிப்புகள் தமிழர்கள் மீதும் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை வலுவாக எதிர்பார்க்கச் செய்துள்ளது.

முக்கியமாக போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச சமூகம் தனது முன்னைய ஈடுபாட்டை குறைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து அண்மைய நாட்களாகவே பேசப்படுகின்றன.

ஜெனீவாவில் வரும் மார்ச் 2ம் திகதி கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா. நடத்திய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் கடுமையான முயற்சிகளின் பெறுபேறாகவே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இப்போது இந்த விசாரணை அறிக்கை- வெளியிடப்படுவதைப் பிற்போடுவதற்கு அல்லது அதன் மேல் நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமெரிக்காவே காரணமாகி விடுமோ என்ற அச்சம் தமிழர் தரப்பிடம் வலுவாக தோற்றம் பெற்றிருக்கிறது. அதாவது, தமிழர்களை அமெரிக்கா கைவிட்டு விடுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது.

புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற நெருக்கமான உறவும், அதற்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவமும் தான் இதற்குக் காரணம்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றிய சந்தர்ப்பங்களில் எல்லாமே, அமெரிக்கா தமிழர்களின் சார்பாக நடந்து கொண்டதாக எவரேனும் கருதியிருந்தால் அது தவறான நிலைப்பாடாகும்.

ஜெனீவா தீர்மானங்கள் யாவுமே, போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது ஒன்றை மட்டும் தான் நோக்கமாக கொண்டது என்று ஒருபோதும் கருத முடியாது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தமது நலன்களை அடைவதற்காக போட்ட திட்டங்களில் ஒன்று தான் இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானங்கள்.

அந்த திட்டத்தில் தமிழர்களின் நலனும் கொஞ்சம் அடங்கியிருந்தது, அவ்வளவு தான்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது, கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்காவின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்தது.

அதன் ஒரு கட்டம் தான் ஜெனீவா நகர்வுகளில் அமெரிக்கா காட்டிய அதீத ஈடுபாடு.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில், சீனாவின் செல்வாக்கு உயர்வதை கட்டுப்படுத்த முடியாது என்பதையும், அமெரிக்க, இந்திய நலன்கள் முதன்மைப்படுத்தப்படாது என்பதையும் அமெரிக்கா நன்றாக அறிந்திருந்தது.

இதனால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துதல் அல்லது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலவீனப்படுத்துவது ஒன்று மட்டும் தான், இல்ஙகையில் அமெரிக்க நலனைப் பாதுகாப்பதற்கு உள்ள ஒரே வழி என்று அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

அதன் அடிப்படையில் தான், ஜெனீவா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அதேவேளை, அந்த தீர்மானங்கள், தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முனையும் செயல் போன்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கூறுவது போலத்தான், தமிழர் நலனுக்கான தீர்மானம் என்ற போர்வையில், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராகவும் அந்தக் கல்லை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

அமெரிக்கா வீசிய கல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தி விட்டது. ஆனாலும், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகள் முடிவுற்றாலும், அந்த அறிக்கை வெளியிடப்பட்டு, மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் கட்டம் இன்னமும் உருவாகவில்லை.

இந்தச் சூழலில் தான், ஜெனீவாவில் வரும் மார்ச் மாத அமர்வில், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா- அல்லது அது தாமதிக்கப்படுமா- என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லது குறித்த காலஎல்லைக்குள் அந்த அறிக்கையை தயாரிக்க முடியாமல் போனமைக்கான நியாயமான காரணத்தை முன்வைக்க வேண்டும்.

இலங்கை தொடர்பான விசாரணைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமை தவிர, மற்றெல்லா விடயங்களிலும் விசாரணைகள் சுமுகமாகவே முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனவே, விசாரணைகள் முற்றுப் பெறவில்லை என்ற காரணத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்க முடியாது.

அதேவேளை, இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைப் பிற்போடக் கோரும் அல்லது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதன் மீதான விவாதம் மற்றும் மேல் நடவடிக்கை குறித்த விவகாரங்களைப் பிற்போடக் கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கலாம் என்ற கருத்து தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் கொழும்புப் பயணத்தின் பின்னர், கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இந்த ஊகம் இன்னமும் வலுப்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளைப் பிற்போடுவது குறித்து, நிஷா பிஸ்வால் சூசகமான முறையில் சில விடயங்களை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், அது ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதைப் பிற்போடுவதாக இருக்குமா அல்லது மேல் நடவடிக்கைகளைப் பிற்போடுவதாக இருக்குமா என்பது தெளிவற்றதாகவே உள்ளது.

எவ்வாறாயினும், ஜெனீவா களம் என்பது இலங்கைக்கு நெருக்கடி மிக்கதொரு களமாக இம்முறை அமைவதற்கு வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜெனீவாவில் இலங்கையின் கழுத்தை நெரித்துப் பிடித்து வந்த அமெரிக்கா, திடீரெனத் தன் பிடியை தளர்த்திக் கொள்ள எடுத்துள்ள முடிவுக்கு ஒரே காரணம், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்தான்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சியை அமெரிக்கா கொண்டாடுகிறது.

ஏனென்றால், அது சீன ஆதிக்கத்தின் பிடியிலிருந்து இலங்கைத் தீவு நழுவிக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கு ஆதரவான அரசாங்கம் ஒன்று உருவாகவும் காரணமாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தனது பதவிக்காலத்தின் பெரும் பகுதியை, அமெரிக்காவுடன் முட்டிமோதிக் கொள்வதிலேயே செலவிட்டிருந்தார். ஆனால், தற்போது பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், அவ்வாறானதொன்று அல்ல.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நடக்கக் கூடியது இந்த அரசாங்கம்.

இதனைப் பாதுகாத்தால் தான், இலங்கைத் தீவில் மட்டுமன்றி இந்தியப் பிராந்தியத்திலும் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அதனால், மீண்டும் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அவரது சிந்தனைகளை செயற்படுத்தக் கூடிய அரசாங்கமோ மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும்.

இப்போதைக்கு இதுவே அமெரிக்காவின் முதன்மையான கரிசனைக்குரிய விவகாரமாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

அமெரிக்கா இதனை வெளிப்படையாக கூறாது விட்டாலும், இதுவே யதார்த்தம்.

எப்படியும் வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருக்கும்.

தற்போதைய அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு, ஜெனீவா தீர்மானம் அல்லது போர்க்குற்ற விசாரணை இடையூறாக அமைவதற்கு அமெரிக்கா ஒருபோதும் இடமளிக்காது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட ஜெனீவா களம், மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை அல்லது அவருக்குச் சார்பான ஒரு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அமெரிக்க மிகக் கவனமாகவே இருக்கும்.

கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜெனீவா தீர்மானங்களையும், ஐ.நாவின் விசாரணையையும், முக்கியமான தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தியிருந்தார் மஹிந்த ராஜபக்ச.

அது தன்னையும், படையினரையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வதற்கான சதி என்று அவர் சிங்கள மக்களின் முன்பாக எடுத்துக் கூறியிருந்தார்.

வரும் மார்ச் மாத அமர்வில், ஐ.நா. விசாரணை அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டால், தன்னை தூக்கு மேடைக்கு கொண்டு செல்ல தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீண்டும் மக்களின் முன் சென்று புலம்புவார்.

ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 160 தேர்தல் தொகுதிகளில் 91 தொகுதிகளை மஹிந்த ராஜபக்சவே கைப்பற்றியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் மிககடுமையான போட்டியாகவே இருக்கும் என்ற சூழலில், ஜெனீவாவை வைத்து, மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதை அமெரிக்கா அனுமதிக்காது.

எனவே ஜெனீவா விவகாரத்தில் அமெரிக்கா கொஞ்சம் தளர்வுப் போக்கை கடைப்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, புதிய அரசாங்கமும் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறது.

அதற்கும் ஒரு காலஅவகாசத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு இருப்பதை மறுக்க முடியாது.

இவையெல்லாம், ஜெனீவாவில் இலங்கைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதையே எடுத்துக் காட்டியிருக்கிறது.

முன்னதாக, அமெரிக்க நலனும், தமிழர்களின் நலனும் ஒரே கோட்டில் எவ்வாறு பயணித்தனவோ, அதுபோலவே, இப்போது அமெரிக்க நலனும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நலனும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன.

இதனால், தமிழர்களின் நலன் இப்போது இரண்டாம் பட்சமாக மாறும் நிலை தோன்றியிருக்கிறது.

இந்தவாரம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடத்தவுள்ள பேச்சுக்கள், ஜெனீவா பற்றிய இன்னும் பல தெளிவான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும்.

இது தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு பின்னடைவாகவே இருக்கும். ஆனாலும் அது நிலையானது நிரந்தரமானது என்று கூறமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரையில் அமெரிக்கா தொடர்ந்தும் போராடும் என்று நிஷா பிஸ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அது எவ்வாறு நிகழப் போகிறது என்பது தான் கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.

சத்ரியன்

Advertisements